Wednesday, January 9, 2019


சாதனை முகங்கள் 2018

Published : 30 Dec 2018 10:14 IST




சுயத்திலும் சுற்றத்திலும் மாற்றம் ஏற்படுத்த பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து தடம்பதித்த பெண்கள் பலர். அந்தவகையில் இந்த ஆண்டு சாதனைபடைத்த பெண்களைப் பற்றிய தொகுப்பு இது.

விருதால் கிடைத்த அங்கீகாரம்

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுப் பட்டியலில் 14 பெண்கள் இடம்பெற்றிருந்தார்கள். பத்ம விருதுகளில் பெண்களுக்கான தனிப் பிரிவுகள் இல்லை என்றபோதும் தங்களுடைய திறமையால் இவர்கள் சாதனைபடைத்திருக்கிறார்கள். அவர்களில் பிஹார் நாட்டுப்புறக் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியை நானம்மாள், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், 500-க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளைக் கண்டறிந்த கேரளத்தைச் சேர்ந்த மூலிகைப் பாட்டி லட்சுமி குட்டி, கர்நாடக மாநிலத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தேவதாசிகளைத் தன்னுடைய ‘மாஸ்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் மீட்டெடுத்த சித்தவ்வா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


விருது பெற்றுத்தந்த மயானம்

பெரும்பாலும் ஆண்களே நிறைந்திருக்கும் மயானப் பணிகளில் பெண் ஒருவர் பணியாற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ‘சவாலான துறையில் சாதித்த முதல் பெண்’ என்ற தேசிய விருது சென்னையைச் சேர்ந்த பிரவீனா சாலமனுக்கு வழங்கப்பட்டது.


அங்கீகாரம்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றிவந்த திருநங்கைகள் நேயா, செல்வி ஆகியோருக்குத் தமிழக அரசு இந்த ஆண்டு நிரந்தப் பணி வழங்கியது. அரசு வேலைக்கான வயது வரம்பை இவர்கள் கடந்திருந்தாலும் திருநங்கைகளை ஊக்குவிக்கும்வகையில் இவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது.



‘அழகு’க்கு விருது

சிவங்ககை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகு, மத்திய அரசின் மகிளா கிஸான் விருதுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்வதுடன் மாடு, ஆடு, கடக்நாக் கோழி போன்ற வற்றை வளர்த்தும் வருகிறார். ஆவின் முகவராக இருப்பதுடன் டீக்கடையும் நடத்திவருகிறார்.

முதன்மை அதிகாரி

சென்னையைச் சேர்ந்த திவ்யா சூரியதேவரா அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பெண் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

தாய் மண்ணே வணக்கம்

ஏழை மாணவர்களின் கல்விக்காக உலக அளவில் பிரச்சாரம் நடத்திவரும் மலாலா யூசஃப்சாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டு பல்வேறுகட்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தவர் மலாலா. சிகிச்சைக்குப் பிறகு லண்டனில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்த மலாலா, பாகிஸ்தானுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.



மாற்றத்தின் அடையாளம்

பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்த இவரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை விஜியும் பார் கவுன் சிலில் பதிவுசெய்தார்.

செய்திகள் வாசிப்பவர்...

பாகிஸ்தானின் உள்ளூர் செய்தி சேனலான கோஹினூர், மார்வியா மாலிக் என்ற திருநங்கையைச் செய்தி வாசிப்பாளராகப் நியமித்து உள்ளது. அந்நாட்டிலேயே முதன்முறையாகத் திருநங்கை ஒருவரைப் பணியமர்த்திய பெருமை இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. மார்வியா மாலிக், ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.



தலைமைப் பொறுப்பு

அரசியல் கட்சிகளில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அரிதாகவே உள்ளது. இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக இம்முடிவு எடுக்கப்பட்டது. கட்சியில் பிரேமலதா வகிக்கும் முதல் பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பெண்கள்



உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசை இந்த ஆண்டு மூன்று பெண்கள் பெற் றுள்ளனர். இயற்பியலுக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்டு பெற்றிருக்கிறார். 55 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்ற பெண் என்ற அங்கீகாரம் டோனாவுக்குக் கிடைத்துள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ஃபிரான்செஸ் அர்னால்ட் பெற்றிருக்கிறார். ஈராக் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் உரிமைக்காகவும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகவும் போராடிவரும் 23 வயதான நாதீயே மூராத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.



போர்ப் பறவைகள்

இந்திய போர் விமானத் துறையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி. இவர் Mig-21 Bison என்ற போர் விமானத்தைத் தனியாக ஓட்டிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருடன் மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோரும் போர் விமானப் படைப் பிரிவில் சேர்ந்துள்ளனர்.
20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் 'பவர்புல்' பாலகிருஷ்ண ரெட்டி சிக்கியது எப்படி?- ‘இந்து தமிழ்’ நாளிதழ் கணிப்பு பலித்தது

Published : 08 Jan 2019 08:40 IST

ஓசூர்





இரா.வினோத் / எஸ்.கே.ரமேஷ்

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 20 ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு குறித்து கடந்த 9.4.2016 இந்து தமிழ் நாளிதழில், ''ஓசூரில் 'வழக்கு' வேட்பாளர்'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் வழக்கின் பின்னணி தகவல்களை குறிப்பிட்டு, பாலகிருஷ்ண ரெட்டியை ஓசூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவித்திருப்பதால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜீமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ரெட்டி.

பாஜகவை சேர்ந்த இவர் 1998 ஏப்ரலில் அதே ஊரை சேர்ந்த பட்டியல் வகுப்பினரான‌ முனியப்பன் என்பவர் சாராயம் விற்பதாக புகார் கொடுத்தார். இந்த புகாரை போலீஸார் விசாரித்து வந்த நிலையில் கோவிந்த ரெட்டி தனது உறவினர்களுடன் சேர்ந்து முனியப்பன் மகள் சரஸ்வதியை மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து சரஸ்வதி போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, கோவிந்த ரெட்டி மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை வழக்கின் கீழ் புகார் அளித்தனர். இதில் போலீஸார் முனியப்பனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கோவிந்த ரெட்டி தரப்பு கோபமடைந்தனர். மேலும் கோவிந்த ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் 30.6.1998 அன்று பாகலூரில் போலீஸார் சாராய விற்பனைக்கு துணை போவதாக கூறி,

மறியலில் ஈடுபட்டார். இதில் ஜீமங்கலத்தைச் சேர்ந்த தற்போதைய அதிமுக அமைச்சரும், அப்போதைய பாஜக பிரமுகருமான பாலகிருஷ்ண ரெட்டி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது கோவிந்த ரெட்டி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அங்கிருந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் உட்பட 5 காவலர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் போலீஸ் ஜீப் (டி.என்.29 ஜி 0043), காவல் ஆய்வாளரின் பைக் (டி.என்.01 7461), 3 டிரக்ஸ் வண்டிகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர். சாலையில் நின்றிருந்த அரசு பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கினர். இதில் போலீஸார் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து 108 பேர் மீது பாகலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி 94-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனிடையே பாஜகவில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி 2001-ல் அதிமுகவில் இணைந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் ஆரம்பத்தில் கே.பி.முனுசாமி ஆதரவாளராக இருந்தார்.

2011-ல் ஓசூர் நகராட்சி தலைவரானார். பின்னர் தம்பித்துரை ஆதரவாளராக மாறி 2016-ல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். 22,964 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இவருக்கு, ஜெயலலிதா அமைச்சர் பதவி வழங்கினார். ஓசூர் தொகுதி உருவாக்கப்பட்டு 64 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக அமைச்சர் பதவி பெற்றவர் என்பதால் 'பவர்புல்' மனிதராக வலம் வந்தார்.

பெங்களூருவை ஒட்டியிருப்பதால் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ரியல் எஸ்டேட் தொழில் மும்முரமாக நடந்து வருகிறது.

பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சரான க‌டந்த 3 ஆண்டுகளில் அவர் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் எழுந்துள்ளன. இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் உடந்தையோடு கோயில் சொத்துக்களை அபகரிப்பது, வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியோடு பொது சொத்துக்களுக்கு ஆவணங்கள் தயாரிப்பது என புகார்கள் வந்தன.

தனியார் கட்டிடங்கள், நிலங்களும் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பினரால் மிரட்டி பிடுங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓசூரைச் சேர்ந்த அஞ்சனா ரெட்டி என்பவர் தனது 32.87 ஏக்கர் நிலத்தை பாலகிருஷ்ண ரெட்டி மிரட்டி அபகரித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் இருப்பதால், அடுத்த சிக்கலும் பாலகிருஷ்ண ரெட்டிக்கு காத்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக அவரது உதவியாளர் சத்யா(எ) சத்தியநாராயணன்(42) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மசாஜ் நிலையம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சொந்தமானது என அப்போது கூறப்பட்டது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்காக போலீஸாருக்கு லஞ்சம் தந்து உதவி செய்ததாக பாலகிருஷ்ண ரெட்டி மீது டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் தனது அரசியல் பலத்தால் சாமர்த்தியமாக சமாளித்து வந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 21 ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தண்டனையால் இதுவரை பதவி இழந்தவர்கள்

மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி சிறை தண்டனை பெற்றால், எம்.பி., எம்எல்ஏ என மக்கள் பிரதிநிதிகளின் பதவி தானாகவே பறிபோய்விடும். அந்தவகையில், சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழகத்தில் முதலில் பறிக்கப்பட்டது திமுக எம்பியான செல்வகணபதியின் பதவியாகும். 2014 ஏப்.19-ல் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், செல்வகணபதி எம்பி பதவியை இழந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2014 செப்.27ல் எம்எல்ஏ மற்றும் முதல்வர் பதவியை இழந்தார்.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவான அசோக் ஆனந்த் மீதான வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், சிபிஐ நீதிமன்றம் கடந்த நவ. 8-ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

இவர்களைத்தவிர, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத யாதவ் உள்ளிட்ட மேலும் பலர் வடமாநிலங்களில் நீதிமன்ற தண்டனையால் பதவியை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சியால் தனது அந்தஸ்தை இழந்தது விழுப்புரம் மாவட்டம்
By DIN | Published on : 08th January 2019 03:34 PM |



சென்னை: தமிழகத்தில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானதால், பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வந்த விழுப்புரம் அந்த அந்தஸ்தை இழந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தோடு சேர்த்து ஆற்காடு மாவட்டத்தின் ஒரு அங்கமாக விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பிறகு இது கடலூரில் இருந்து பிரிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உதயமானது.


விழுப்பரையர் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசித்ததால் விழுப்புரம் என்ற பெயரை இப்பகுதி பெற்றதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. இதனை விழிமா நகரம் என்றும் அழைப்பர்.

விழுப்புரம் மாவட்டம் 13 தாலுகாக்களைக் கொண்டிருந்தது. விழுப்புரம், திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், விக்ரவாண்டி, வானூர், ஜிஞ்ஜி, மரக்காணம், மேல்மலையனூர், கண்டச்சிபுரம் ஆகியவையாகும்.

இது கள்ளக்குறிச்சியோடு சேர்த்து 7,194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், ஆரணி என 2 மக்களவைத் தொகுதிகளையும், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டிருந்தது.

தற்போது விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் பழனிசாமி பேரவையில் இன்று அறிவித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமானது.

திருவாரூருக்கும் ரூ.1,000 உண்டு

Added : ஜன 08, 2019 23:43


சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அம்மாவட்டத்தில் உள்ள, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அம்மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க, அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் உள்ள, 3.92 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், தலா, 1,000 ரூபாய், பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லுாரிகளுக்கு 9 நாள் தொடர் விடுமுறை

Added : ஜன 08, 2019 23:17


சென்னை: பொங்கலுக்கு முந்தைய நாளான, 14ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை, வரும், 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான, 14ல், போகி அன்று விடுமுறை கிடைத்தால், சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, வரும், 14ம் தேதி திங்கள்கிழமை, அரசு விடுமுறை என்றும், அதற்கு பதில், பிப்., 9ம் தேதி, சனிக்கிழமை வேலை நாள் என்றும், அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இடையில், 18ம் தேதி மட்டும், வேலை நாளாக உள்ளது.அதாவது வரும், 11ம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிகள் முடிந்தால், மறுநாள் சனிக்கிழமை, தேசிய இளைஞர் தினம் விடுமுறை; 13ம் தேதி, ஞாயிறு; 14ல், அரசு விடுமுறை; 15ல், பொங்கல்; 16ல், திருவள்ளுவர் தினம்; 17ல், உழவர் திருநாள் விடுமுறை.இதையடுத்து, வரும், 18ம் தேதி, வெள்ளிக்கிழமை மட்டும், பள்ளி, கல்லுாரிகளுக்கு வேலை நாளாகும். 19 மற்றும், 20ம் தேதி, சனி, ஞாயிறு என்பதால், 21ம் தேதி தான், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.இந்த நாட்களில், 18ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும், மாணவர்கள் விடுமுறை எடுத்தால், ஜன., 12 முதல், 20 வரை தொடர்ச்சியாக, ஒன்பது நாட்களுக்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.அதனால், சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பரிசு தொகை வழங்க ரிசர்வ் வங்கியில் ரூ.180 கோடி

Added : ஜன 08, 2019 21:27

ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 180 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு துறை வாங்கியுள்ளது.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பொங்கல் வைக்கும் பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கத்தை, பரிசாக வழங்குகிறது. இவற்றின் வினியோகம், ரேஷன் கடைகளில், 7ம் தேதி துவங்கியது.அன்றைய தினம் கடைகளுக்கு, குறித்த நேரத்தில், போதிய அளவு பணம் அனுப்பவில்லை.இதனால், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வந்த பலரும், கடைகளில், பல மணி நேரம் காத்திருந்து, வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 180 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு துறை வாங்கியுள்ளது.கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொங்கல் பரிசு சப்ளை துவங்கிய முதல் நாள் காலையில், வங்கிகளில் இருந்து பணம் எடுத்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பொருட்களும், பணமும் வாங்க, மக்கள் சிரமப்பட்டனர்.இந்த பிரச்னை ஏற்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 180 கோடி ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள்பெறப்பட்டு, மாநில கூட்டுறவு வங்கி கருவூலத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இது, சென்னையில் உள்ள, 19.30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்.இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை வங்கிகளிடம் இருந்து, 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், தினமும், 4 லட்சம் ரூபாய் வரை அனுப்பப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.எனவே, நெரிசலில் சிக்காமல், ரேஷன் கார்டுதாரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

'பிக் பஜார்' பொருட்கள் : டாக்டர்கள் எச்சரிக்கை - காலாவதி பொருட்களால் உடல் நலத்துக்கு கேடு

Added : ஜன 08, 2019 21:26 |  dinamalar

'பிக் பஜார் நிறுவனத்தில், விற்பனை செய்யப்படும் காலாவதியான பொருட்களை உட்கொண்டால், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட, பல நோய்கள் ஏற்படும்' என, வாடிக்கையாளர்களை, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில், ஜன., 1 முதல், ஒருமுறை பயன்படுத்தி, துாக்கி எறியக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஓட்டல்கள், மளிகை கடைகளில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன

.சென்னை மாநகராட்சியின், சுகாதாரத் துறை சார்பில், மண்டலம் மற்றும் வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை, பெரம்பூரில் உள்ள, 'பிக் பஜார்' பல்பொருள் அங்காடியில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், பிளாஸ்டிக் சோதனை நடத்தினர்.அப்போது, காலாவதியான, 'சிப்ஸ், பிஸ்கட், பிரட், கூல் டிரிங்க்ஸ்' போன்றவை, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, 55 கிலோ எடையுள்ள உணவு பொருட்களை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், 'காலாவதியான உணவு பொருட்களை உட்கொள்வதால், வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படும்' என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:காலாவதியான உணவு பொருட்களை உட்கொள்வோருக்கு, வயிற்று உபாதைகள், வாந்தி, மயக்கம், தோல் நோய், நீர்சத்து குறைபாடு ஏற்படும்.எனவே, பிக் பஜார் போன்ற பல்பொருள் அங்காடியில், பொருட்கள் வாங்குபவர், உற்பத்தி தேதி, பயன்படுத்த வேண்டிய தேதி போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மூடி மறைக்கும் மர்மம்!பிக் பஜாரில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அந்த பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.ஆனால், 'அந்த பொருட்கள், விற்பனைக்காக அல்ல; சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பவே, கடையில் வைக்கப்பட்டிருந்தன' எனக்கூறி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த விவகாரத்தை, மூடி மறைக்கின்றனர்.இதுகுறித்து, தமிழக உணவு பாதுகாப்பு துறை கமிஷனர், அமுதாவிடம் கேட்ட போது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.மாநகராட்சிக்கும் தடை!மாநகராட்சி சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிளாஸ்டிக் சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை தான், மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர். உடன், உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிக் பஜார் நிறுவனத்தை காப்பாற்றுகின்றனர்.

 இந்த விவகாரத்தில், பிக் பஜார் மீது நடவடிக்கை எடுத்து, வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை.சென்னையில், சுகாதாரமற்ற மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் இருந்தால், பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டோர் மீது, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், திடீரென, எங்களை சோதனை செய்ய வேண்டாம் என, கூறி விட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.மாணவர்களுக்கு மிரட்டல்!'பிராஜக்ட்' செய்ய வரும் கல்லுாரி மாணவர்களிடம், பிக் பஜார், சட்ட விரோதமாக வேலைவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்லுாரி மாணவர் ஒருவர் கூறியதாவது:சென்னை, பாண்டி பஜாரில் உள்ள, பிக் பஜாரில், ஒரு மாதம் காலம், செய்முறை பயிற்சி பெற அனுமதி கேட்டேன். என் வேலை, பிக் பஜார் ஊழியர்களின் சேவை, வாடிக்கையாளர்களின் திருப்தி குறித்து, வரும் வாடிக்கையாளர்களிடம் கேள்வி கேட்டு,'பிராஜக்ட் நோட்' தயார் செய்வது தான்.அதற்கு பதிலாக, விற்பனை செய்வது குறித்து, மூன்று நாட்கள் பயிற்சி அளித்து விட்டு, பின், என்னை வேலை வாங்கினர். சில நேரங்களில், பொருட்களை துாக்கவும் பயன்படுத்தினர். இதுகுறித்து, அவர்களிடம் கேட்டால், 'பயிற்சி சான்றிதழ் தர மாட்டோம். ஒரு மாதம் வரை, நாங்கள் சொல்வதை செய்யுங்கள்' என, மிரட்டினர். அவர்கள் தரும் சான்றிதழுக்காக, கொடுத்த வேலையெல்லாம் செய்ய வேண்டியதாகி விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


NEWS TODAY 24.08.2026