Tuesday, February 5, 2019


2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...!!

🙏 *வருமான வரித்தகவல்கள்*🙏

📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். *[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]*

📘நிலையான கழிவு *(Standard deduction) ரு.40,000/-* ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan பிடித்தம் செய்பவர்கள் *HRA கழிக்கக் கூடாது.


📘மாற்றுத்திறன் ஆசிரியர்கள் *தொழில்வரி செலுத்தத் தேவையில்லை.* மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை *Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.*
மேலும் *80U படி - 75,000/-* (40%க்கு மேல்) *1,25,000/-* (80%க்கு மேல்) அரசு மருத்துவரின் மருத்துவ சான்றின் அடிப்படையில் கழித்துக் கொள்ளளாம்.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக *Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்*.

📘housing loan - அசல் தொகையை *80c ல் கழித்துக் கொள்ளலாம்.*

📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c படிவம் வைக்க வேண்டும்.*

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய *CPS தொகையில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.*

📘School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)*

📘LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. *(LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).*

📘80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
*10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று* பெற்று இணைக்க வேண்டும்.

📘மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் *NHIS தொகையை 80D* ல் கழித்துக் கொள்ளலாம்.

📘கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய *வட்டியை முழுவதும் 80E* ல் கழித்துக் கொள்ளலாம்.

📘நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் *நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G* ல் கழித்துக் கொள்ளலாம்.

📘வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
10,00,001 - மேல் : 30%

📘வருமான வரியில் *ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம்* செய்ய வேண்டும்.

📘Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் *ரூ.2500/- ஐ 87A ல்* கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
👍🌷👍

Posted by SSTA
அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? -

 The Hindu தலையங்கம்....!!

அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.

அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும், திட்டமிடுதலும், நிதி ஒதுக்குதலும் மட்டுமே அரசின் உயர்மட்டத்தில் நடைபெறுகின்றன. அமல்படுத்தும் முழுச் சுமையும் ஊழியர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது. உதாரணமாக, சுகாதாரத் துறையில் பல்வேறு அடுக்குகள் இருந்தபோதும், இறுதியாக ஒரு பகுதியைச் சுகாதாரமாக வைத்திருப்பது அங்குள்ள குப்பைகளையும், சாக்கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களே. அந்தப் பணியைச் செய்யவில்லை என்றால் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கண்காணித்தல் என்கிற எந்த அடுக்கினாலும் பலன் இல்லை.

ஊழியர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் தேவையின்றி இருப்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு நாட்டின் மக்கள்தொகைக்கும் ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே அந்த நாடு மேம்பட்ட சேவையை வழங்குகிறதா என்பதற்கான அளவுகோல். 2011-ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 1,622.8 அரசு ஊழியர்கள் பணிசெய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கக் கூடும். 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 7,681 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். மத்திய அரசுப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 2011-ம் ஆண்டு 24.63 லட்சம் பேர். மாநில அரசு ஊழியர்கள் 72.18 லட்சம் பேர். இந்த எண்ணிக்கையில் ரயில்வேயில் பணிபுரியும் 14 லட்சம் பேரும் அடங்குவர். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.
சமூக மாற்றத்தில் அரசின் சேவையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் திறன் மிக முக்கியமானது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்ட நாடுகள் அல்லது மாநிலங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால், அவற்றின் ஊழியர் விகிதம் அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ 8 கோடி. தமிழகத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். அதாவது, ஒரு லட்சம் பேருக்கு வெறும் 1,500 ஊழியர்கள் மட்டும்தான்.

நேரடியாக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமானால் மாநிலங்களின் வளர்ச்சி, மனிதவளக் குறியீடு இவை உயர்ந்துவிடும் என்பதல்ல இதன் பொருள். அதேசமயம், இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது. அரசின் அறிக்கைகள் பல நேரங்களில் மக்களைத் தூண்டும் வகையிலும், படித்தவர்களைக்கூடத் திசைதிருப்பும் வகையிலும் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, போராட்டங்கள் நடைபெறும்போது கொடுக்கப்படும் புள்ளிவிவரங்கள், போராடுபவர்களுக்கு எதிரான பகையையும், வன்மத்தையும் உருவாக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்படுகின்றன.

பொய்ப் பிரச்சாரம்

தமிழ்நாடு அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் 71% ஊழியர்களின் சம்பளத்துக்கே கொடுக்கப்படுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. உண்மையில், இந்தத் தொகை 50%-க்கும் குறைவாகும். 7-வது ஊதியக் குழு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-மாவது இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதியன்று அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வர் பழனிசாமி புதிய சம்பள விகிதத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,000-த்திலிருந்து ரூ. 15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.77,000-லிருந்து ரூ.2,25,000ஆகவும் உயரும் என்றும் அறிவித்தார்.

அதாவது, உயரதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத ஊதிய உயர்வு, கீழ்நிலையில் உள்ள 15.4 பேரின் உயர்வுக்குச் சமமாகும். அதேபோல கீழ்நிலையில் உள்ள ஒருவரின் மாதச் சம்பளத்தைப் போல, மேல்நிலையில் உள்ள ஒருவருக்குக் கிடைத்த மாத உயர்வு மட்டும் 9.42 மடங்காகும். இந்த ஒரு உதாரணம் மட்டும் ஒட்டுமொத்த நிலைமையை உணர்த்துவதாக இருக்கும். ஆரம்ப நிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும், உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும் 1:14.33 என்ற விகிதத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுதான் ஒட்டுமொத்தமான சம்பள விகிதம் மிக அதிகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதைப் பயன்படுத்தியே அதிகாரப் பணி நிலையில் உச்சத்தில் இருப்பவர்கள், கீழ்மட்டத்தில் இருப்பவரது நியாயமான கோரிக்கைகளை மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அந்தச் சம்பள உயர்வில் குறிப்பிட்ட பகுதியை மறுப்பது ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும்போது ஜெயலலிதா தொடங்கியது. இதைத்தான் வழக்கம் என்று சொல்லி அமைச்சர் ஜெயக்குமார் நியாயப்படுத்துகிறார். ஊதிய உயர்வு அளிப்பது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு, ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுவாக அறிவித்துவிட்டு, பல மாதங்கள் அந்த உயர்வுக்கான பணத்தைச் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குக் கொடுக்காமல் இருப்பது ஏமாற்றமாகும். ஆரம்பத்தில் தனியார் முதலாளிகள் செய்த இத்தகைய நடவடிக்கையை வேடிக்கை பார்த்த அரசுகள் இப்போது தாங்களும் அதே காரியத்தைச் செய்வது கொடுமையானது.

மறுக்கப்படும் நிலுவைகள்

கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்போது 12 மாதங்கள் அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையைத் தர மறுத்த அரசாங்கம், அதே நடைமுறையை இந்த முறை 21 மாதங்களுக்கு நீட்டித்து நியாயப்படுத்தவும் செய்கிறது. ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் இந்த 33 மாத நிலுவைத் தொகையையும் பெற்றுவிட்டார்கள். தனியார் நிறுவனங்கள் போதுமான சம்பளம் தரவில்லை என்பதைத் தட்டிக்கேட்டுச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கம், அவர்கள் குறைவாகக் கொடுக்கிறார்கள், நாங்கள் அதிகமாகத் தருகிறோம் என்ற வாதத்தை முன்வைக்கிறது. போராடும் ஊழியர்களுக்கு எதிராகப் பொதுமக்களையும், இதர வேலை தேடும் பிரிவினரையும் தூண்டிவிடுகிறார்கள்.

இப்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், இதற்கு முழுக் காரணம் அரசு மட்டும்தான். உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களோடு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். மாநில அரசின் இன்றைய நிதிநிலைக்குக் காரணம் மத்திய அரசு வரிவருவாயைப் பெரும் பகுதி அள்ளிக்கொண்டு போனதுதான். அதைக் கேட்பதற்கும், பெறுவதற்கும் செய்யாமல், அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

Posted by SSTA
‘ரஹ்மான் எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’- இளையராஜா; ‘உங்களோட ஒருபடம் பண்றதே பெருமை சார்’ – ஏ.ஆர்.ரஹ்மான்

Published : 03 Feb 2019 19:52 IST

வி.ராம்ஜி




ஏ.ஆர்.ரஹ்மான், எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’ என்று இளையராஜா, ரஹ்மானை வைத்துக்கொண்டு சொல்ல, 'உங்களோட ஒரு படம் பண்றதே பெருமை சார்’ என்று நெகிழ்ந்து போனார் ரஹ்மான்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நேற்றும் இன்றுமாக நடைபெற்று வருகிறது. இளையராஜாவின் கலை நிகழ்ச்சி மற்றும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா என இரண்டு நாள் விழாவாக நடைபெற்று வருகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.

விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ரஹ்மான் கீபோர்டு வாசிக்க, ராஜா சார் பாடவேண்டும் என்றார்.

இதையடுத்து, இளையராஜா, மணிரத்னம் இயக்கிய ‘மெளனராகம்’ படத்தின் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார். உடனே ரஹ்மான் கீபோர்டு வாசித்தார்.

அப்போது இசையில் ஏதோ விட்டுவிட்டார் ரஹ்மான். உடனே இளையராஜா, ‘ஏன் இப்படி வாசிக்கிறே? உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே?’ என்றார்.

பின்னர், ‘மூன்றாம் பிறை படத்திலிருந்து ரஹ்மான் என்னிடம் வேலை பார்த்தார். கிட்டத்தட்ட ஒரு 500 படமாவது என்னிடம் வேலை பார்த்திருப்பார்’ என்று சொன்னார் இளையராஜா.

உடனே ரஹ்மான், ‘உங்களிடம் ஒரு படத்துக்கு வேலை பார்ப்பதே பெரியவிஷயம் சார்’ என்று ரஹ்மான் நெகிழ்ந்து சொன்னார்.

மொத்தக் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது

’ராஜா சார்கிட்ட இருக்கிற கெட்டபழக்கம்!’ – ஏஆர்.ரஹ்மான் ஓபன் டாக்

Published : 03 Feb 2019 20:32 IST

வி.ராம்ஜி





இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரையுலகினர், ரசிகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நேற்று 2ம் தேதியும் இன்று 3ம் தேதியும் என இரண்டு நாள் விழா இது. நேற்றைய விழாவை, நடிகைகள் சுஹாசினியும் கஸ்தூரியும் தொகுத்து வழங்கினார்கள்.

அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடைக்கு வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான் ராஜா சாரிடம் பணியாற்றிய காலங்களை மறக்கவே முடியாது. அவரிடம் நான் மூன்றாம் பிறை படத்தில் இருந்துதான் பணிக்குச் சேர்ந்தேன். அவருடைய ரிக்கார்டிங் ரூமிற்குச் செல்லும் போது, ஒரு ஹெட்மாஸ்டர் அறைக்குள் செல்வது போல் நான் உணர்ந்திருக்கிறேன்.

அவ்வளவு விஷயங்களை நான் அவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ராஜா சாரிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம்… பொதுவாகவே இசைமைப்பாளர்கள் என்றாலோ திரையுலகினர் என்றாலோ கெட்டபழக்கங்கள் இருக்கும். ஆனால் ராஜா சாரிடம் எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. இதில் நான் ரொம்பவே இன்ஸ்பையர் ஆனேன். இந்த நல்லப் பழக்கத்தை ராஜா சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். ராஜா சாருக்கும் எனக்கும் இருக்கிற ஒரே கெட்டப்பழக்கம் இசைதான்!

அதேபோல் இன்னொன்றையும் சொல்லவேண்டும். நான் விருது பெற்றதும் ராஜா சார் எனும் மேதை என்னைப் பாராட்டினார். அதில் நான் ரொம்பவே நெகிழ்ந்து போனேன். யார் வேண்டுமானாலும் பாராட்டிவிடலாம். பாராட்டுக்கா இங்கு பஞ்சம். ஆனால் ஒரு இசைமேதையிடம் இருந்து வருகிற பாராட்டு, ஆத்மார்த்தமானது. ஆகவே ராஜா சார் பாராட்டியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இவ்வாறு ரஹ்மான் தெரிவித்தார்.

அப்போது சுஹாசினி, ‘சின்னப்பையனா பாத்த ரஹ்மான் பத்தி சொல்லுங்க சார்’ என்று இளையராஜாவிடம் கேட்டார்.

அதற்கு இளையராஜா, ‘அவரோட அப்பாகிட்ட இருந்த நேரத்தைவிட, எங்கூட இருந்த நேரம்தான் அதிகம். என்ன, சரியா?’ என்று ரஹ்மானிடம் கேட்டார். ‘ஆமாம் சார்’ என்றார் ரஹ்மான். ‘இதெல்லாம் நீதான் சொல்லணும். நீ சொல்லவேண்டியதையெல்லாம் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்’ என்று இளையராஜா சிரித்துக்கொண்டே சொல்ல, ரஹ்மான் உட்பட மேடையில் இருந்தவர்களும் அரங்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் கரவொலி எழுப்பினார்கள்.
விஜய் மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை செயலர் உத்தரவு

Published : 04 Feb 2019 22:03 IST

பிடிஐ  லண்டன்



வங்கிக்கடன் மோசடி உள்ளிட்ட நிதிமோசடிகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் உத்தரவிட்டுள்ளார்.

இப்போது இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா அங்கு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய 14 நாட்கள் அவகாசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு பதில் அளிப்பதற்கான போதிய விவகாரங்கள் அவர் மீது எழுப்பப்பட்டுள்ளதை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 10. 2018-ல் ஏற்றுக் கொண்டது.

நாடுகடத்தல் ஒப்பந்த நடைமுறைகளின் படி தலைமைநீதிபதியின் உத்தரவு உள்துறை செயலருக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்தான் இது குறித்த உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் உடையவர்.

இந்நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட பிரிட்டனின் மூத்த பாகிஸ்தான் வம்சாவளி அமைச்சர் சாஜித் ஜாவித் கையெழுத்திட 2 மாத கால அவகாசம் இருந்தது.

பிரிட்டன் உள்துறை அலுவலகம் இன்று கூறும்போது பல விஷயங்களையும் பரிசீலித்த பிறகு அமைச்சர் இன்று மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதி அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

“இந்தியாவில் விஜய் மல்லையா மீது மோசடி சதி வழக்கு, மற்றும் நிதிமோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பிப்ரவரி 3ம் தேதி உள்துறை அலுவலகம் இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனமாகப் பரிசீலித்து விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க கையெழுத்திடப்பட்டது.

இப்போது விஜய் மல்லையா இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

என்னை விடவும் கமலுக்கு நல்ல பாடல்களை அளித்துள்ளீர்கள்: ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில்!


By எழில் | Published on : 04th February 2019 04:37 PM |




தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய 'இளையராஜா -75' விழாவை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமையன்று தொடங்கிவைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், 'இளையராஜா -75' என்ற விழா மலர் வெளியிடப்பட்டது. ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், பால்கி உள்ளிட்ட பிரபலங்களும் திரையுலகினரும் ராஜா ரசிகர்களும் பெரும்திரளாக இந்த இருநாள் விழாவில் கலந்துகொண்டார்கள்.


இந்த விழாவில் இளையராஜாவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் 15, 16 படங்கள் வெளியாகும். அதில் 12 படங்களுக்கு ராஜா தான் இசையமைத்திருப்பார். எத்தனையோ தயாரிப்பாளர்களுக்குப் பணம் வாங்காமல் இசையமைத்துள்ளார். இப்போது ஒரு படத்தின் பின்னணி இசைக்கு 30 நாள்கள் ஆகின்றன. ஆனால் இளையராஜா 3 நாள்களில் முடித்துவிடுவார்.

முதலில் அவரை ராஜா சார் என்றுதான் அழைப்பேன். பேண்ட் சட்டையிலிருந்து வேட்டி, ஜிப்பாவுக்கு மாறிய பிறகு சாமி என்றுதான் அழைக்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் சாமி என்றுதான் அழைத்துக்கொள்கிறோம். மன்னன் படத்தில் 6 வரிகள் பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது. என்னை விட கமலுக்கு நல்ல பாடல்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றார் ரஜினி.

அதற்குப் பதில் அளித்த ராஜா, இதையே கமலிடம் கேட்டால், ரஜினிக்குத்தான் நல்ல பாடல்களை வழங்குகிறீர்கள் என்பார். ஏன் ராமராஜன், மோகனுக்கு நல்ல பாடல்களை நான் வழங்கவில்லையா? எந்த நடிகருக்கும் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவருடைய படங்களுக்கும் ஒன்றுபோலத்தான் நான் இசையமைத்தேன் என்றார்.
பிப்.9 இல் ஆந்திரத்துக்கு ஆன்மிக சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ஏற்பாடு


By DIN | Published on : 31st January 2019 10:36 AM




ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் சார்பில், வரும் பிப்.9-ஆம் தேதி ஆந்திரத்துக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வேயின் ஒரு சுற்றுலா பிரிவாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், பாரத தரிசன சுற்றுலா ரயில் என்னும் தனி ரயிலில் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

அந்தவகையில், தற்போது, ஆந்திரத்தில் உள்ள சக்தி பீடங்கள் மற்றும் கோயில்களை தரிசிக்க சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு யாத்திரை பிப்ரவரி 9-ஆம்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக துவாரக திருமலாவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, பெனுகுண்டாவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீபீமேஸ்வர சுவாமி மாணிக்யம்பா தேவி சக்தி பீட தரிசனம், புருஹூதிகாதேவி சக்தி பீட தரிசனம், ஸ்ரீகூர்மத்திலுள்ள கூர்மநாத சுவாமி, சிம்மாச்சலத்தில் உள்ள வராக லஷ்மி நரசிம்ம சுவாமி, அரசவல்லியில் உள்ள சூரியநாராயண சுவாமி, அன்னாவரத்திலுள்ள ஸ்ரீ சத்யநாராயண சுவாமி மற்றும் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா ஆகிய கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் சென்று தரிசனம் செய்யலாம்.

5 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,160 கட்டணம். இதில், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரைச் சுற்றி பார்க்க வாகன வசதி, தங்கும் இடவசதி, சுற்றுலா மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை அடங்கும்.

இது குறித்து கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு செய்ய 9003140680/ 681 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம். இந்தத்தகவல் ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 24.05.2026