Sunday, August 4, 2019


மறக்க முடியாத திரையிசை: கவிதையா, திரைப் பாடலா?




பி.ஜி.எஸ். மணியன்

வரிகள் காதில் பாய்ந்ததுமே அதை எழுதிய கவிஞனின் முகமும் பெயரும் மனத்திரையில் ஒளிர்வது சிலருக்கு மட்டும்தான். ‘பாட்டுக்கு ஒரு பட்டுக்கோட்டை’ எனப் போற்றப்படும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம் மனங்களில் பதிந்துபோனது அப்படித்தான்.

இவர் பெயரைச் சொன்னாலே, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ ‘சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா’ போன்ற எளிமையான வார்த்தைகளில் பாமரரின் மனத்தைக் கவர்ந்தவர் என்று சுலபமாக அடையாளம் சொல்லிவிட முடியும். ஆனால், இலக்கிய நயம் நிறைந்த அற்புதமான பாடல்களையும் எளிமையான வார்த்தைகளில் தரவல்லவர் என்பது இவரது கூடுதல் சிறப்பு. இதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டாக இன்றும் நம் செவிகளை வருடி மனதை ஆக்கிரமிக்கும் பாடல் ஒன்றை நினைவுகூரலாம். காதல் வயப்பட்ட வாலிபன் அவன். இரவு நேரத்தில், நீரோடை சார்ந்த எழில் கொஞ்சும் இடத்தில் அமர்ந்திருக்கிறான்.

வானத்தில் தவழ்ந்தபடியிருக்கும் முழுமதி அந்த இடத்தையே தனது ஒளியில் முழுக்காட்டிக்கொண்டிருக்கிறது. பொதுவாகக் காதல் என்று வந்துவிட்டாலே காணும் பொருள்களில் எல்லாம் காதலியைக் காண்பது கவிதை மனநிலையில் காணப்படும் இயல்பு போன்ற திரிபுதானே..! அந்த வகையில் முழு நிலவில் தன் மனம் கவர்ந்தவளின் சாயலைக் காண்கிறான் அவன்.

இந்த நிலவு அவள் முகத்தைப் போலவே இருக்கிறதே.. அவள்தானா இது? இல்லை இல்லை. அவள் அந்த நாட்டின் இளவரசி அல்லவா! அப்படி என்றால் அவள் சாயலில் இருக்கும் இந்த நிலவு மங்கை அவளது சகோதரியாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்த மறுகணம் அடுத்த சந்தேகம் வந்துவிடுகிறது. சகோதரி என்றால் இளையவளா அல்லது மூத்தவளா?
எதற்குக் குழப்பம்? இந்த நிலவிடமே கேட்டுத் தெரிந்து கொண்டால் போயிற்று என்று முடிவெடுத்தவன், நிலவு நங்கையைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்.

‘என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே..’
நிலவைச் சுற்றி வான வீதியில் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் ஒளியைச் சிந்தி மின்னிக்கொண்டிருக்கின்றன. அதேபோல் அவனது மனம் கவர்ந்த இளவரசியைச் சுற்றி அவளது காவலுக்கும் எத்தனையோ பணிப்பெண்களும் இருக்கிறார்களே! ஆகவே, அந்த நிலவு மங்கையைப் பார்த்துத் தனது கேள்வியைத் தொடர்கிறான்.

‘கண்சிமிட்டும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே..’
இப்படிக் கணக்கில் அடங்காத தாரகைகள் காவலோடு இருக்கும் நிலா மங்கையின் முகத்தில் காயம் ஏற்படுத்த வேண்டும் என்றால், அது அவளது காதலனால் மட்டுமே முடியும். மனம் கவர்ந்த அவனை மட்டுமே அவள் தன்னைத் தீண்ட அனுமதித்திருப்பாள் அல்லவா? ஆகவே

‘கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே’ என்று கேட்கிறான்.
இப்படி நிலவைப் பார்த்து அவன் வருணிப்பது, பரிதாபப்படுவது எல்லாம் எதற்காகத் தெரியுமா? ஒரு காரணத்துக்காகத்தான்! கள்ளம் கபடம் எதுவுமே அறியாத அவனது இதயத்தை அந்த மங்கை கவர்ந்து கொண்டுவிட்டாளே?
அவளிடம் சென்று அந்த இதயத்தை வாங்கி வந்து அவனிடமே தந்து விடவேண்டும் என்பதற்காகத்தான்!

‘கள்ளமில்லா என் இதயம்
வெண்ணிலாவே - ஒரு
கன்னியிடம் இருக்குதடி
வெண்ணிலாவே - அந்த
வஞ்சிதனை நீ அறிவாய்
வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே..’
அதெப்படி? 
 
முன்னே பின்னே தெரியாத ஒரு பெண்ணிடம் போய், ‘வனாந்தரத்தில் உன்னை நினைத்துத் தவித்துக்கொண்டிருக்கிறான் ஒரு வாலிபன். அவனது இதயம் உன்னிடம் இருக்கிறதாம். தயவுசெய்து அதைக் கொடுத்துவிடு’ என்று நிலா மங்கைப் போய்க் கேட்டுவிட்டால் உடனே அவள், ‘இந்தா பிடி’ என்று கையில் தூக்கிக் கொடுத்துவிடுவாளா என்ன?ஆகவே, எப்படி வாங்கி வரவேண்டும் என்று அவனே சொல்லிக்கொடுக்கிறான்.

“வெண்ணிலா மங்கையே. அவள் உன்னுடைய கெஞ்சலுக்கெல்லாம் மசிபவள் அல்ல. ஆகவே அவள் கேட்காமலே நீ பறித்துக்கொண்டு வந்துவிடு. பயப்படாதே.. அவள் என்னைக் கேட்காமலே அல்லவா என் இதயத்தைக் கவர்ந்து கொண்டாள்? ஆகவே, அவள் கற்றுக் கொடுத்த பாடத்தை அவளுக்கே திருப்பிக் கற்றுக்கொடுப்போம்." என்று வெண்ணிலாவை அனுப்புகிறான் அவன்.

‘கெஞ்சினால் தரமாட்டாள்
வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை
வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே’

கவிதையா திரைப் பாடலா எனப் பகுத்துப் பார்க்க முடியாதபடி எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் 1961-ல் வெளிவந்த ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்துக்காகப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது. இல்பொருள் உவமை அணி நயம் மிகுந்த இப்பாடலை அதன் இலக்கிய நயம் சிறிதும் குறையாமல் அருமையாகக் கல்யாணி ராகத்தைக் கையாண்டு இசை அமைத்தவர் டி.ஜி. லிங்கப்பா.

பாடல் வரிகளையும் இசையையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் மனநிலையைக் கேட்பவர் துல்லியமாக உணரும் வண்ணம் பாடிய பெருமைக்குரிய பாடகர் டி.எம். சௌந்திரராஜன். இன்று கேட்டால் கூட நம்மை அப்படியே கட்டிப்போடும் ஒரு ரசவாதம் நிறைந்த இந்தப் பாடல் அடைந்த வெற்றியின் வீச்சு காலத்தை கடந்த ஒன்று.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com

படங்கள் உதவி: ஞானம்
ஆகஸ்ட் 12-ம் தேதி பக்ரீத்: அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு



சென்னை

ஆக.2-ம் தேதி பின்னேரம் பிறை தென்பட்டதால், ஆக.12-ம் தேதி பக்ரீத் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அயூப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

துல்கஃதா மாதம் 29-ம் தேதி, ஆங்கில மாதம் ஆக.2-ம் தேதி மாலை, துல்ஹஜ் மாத பிறை திருநெல்வேலி மேலப் பாளைத்தில் காணப்பட்டது.

எனவே, ஆக.3-ம் தேதி சனிக் கிழமை அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை எனறு ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள் ளது.

ஆகையால், ஹஜ்ஜுப் பெரு நாளான பக்ரீத் ஆகஸ்ட் 12-ம் தேதி என்று தெரிவித்துள்ளார்.
முதல் பார்வை: தொரட்டி 




கிடை போட்டுப் பிழைக்கும் இளைஞனின் கூடா நட்பு அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதைச் சொல்லியிருக்கும் படமே 'தொரட்டி'.

ராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க அழகு தன் மனைவி, மகனுடன் ஒரு கிராமத்துக்கு வருகிறார். ஆடுகளை வைத்துக் கிடை போடும் தொழிலைச் செய்து வரும் அவர் தன் மச்சானிடம் உதவி கேட்கிறார். ஊர் தலைவரின் சம்மதத்துடன் அவர் நிலத்தில் கிடை போட, அழகுவின் மகன் ஷமன் மித்ரு தடதடவென வேலைகளைச் செய்கிறார். கிடை போடும் மாமன் மகள் சத்யகலாவுக்கு மித்ருவைப் பிடித்துவிடுகிறது. இதனிடையே ஆட்டுக்குட்டியைக் களவாட முயலும் 3 பேரும் மித்ருவைத் தாக்குகின்றனர். எந்த ஆட்டுக்குட்டியைத் தர மாட்டேன் என்று மறுக்கிறாரோ அதே ஆட்டுக்குட்டியை மது போதையில் கழுத்தறுத்துக் கொன்று அந்த 3 களவாணிகளுக்குக் கறி விருந்து படைக்கிறார். அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார். அந்தக் கூடா நட்பு மித்ருவுக்கு பல்வேறு சோதனைகளை ஏற்படுத்துகின்றன.


திருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்குச் செல்லும் மணப்பெண்ணின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் களவாணிகள் 3 பேரும் வழிப்பறி செய்து பறிக்கின்றனர். இதனால் போலீஸில் சிக்கி சிறை தண்டனை அனுபவிக்கின்றனர். தண்டனை முடிந்து வெளியே வரும் 3 களவாணிகளும் சத்யகலாவைப் பழிவாங்கப் புறப்படுகின்றனர். அவர்கள் சத்யகலாவைக் கொல்ல முடிவெடுத்த காரணம் என்ன, மித்ரு களவாணிகளைப் புரிந்துகொண்டாரா, மித்ருவின் மனைவி சத்யகலா என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.




1980களின் தொடக்கத்தில் கிடை போடும் தொழிலில் ஈடுபட்ட மனிதர்களின் வாழ்வியலை எந்த சமரசமும் இல்லாமல் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் மாரிமுத்து. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை வலுவாக காட்சிப்படுத்தியுள்ளார்.

மாயன் கதாபாத்திரத்தில் ஷமன் மித்ரு சரியாகப் பொருந்துகிறார். திருடர்களிடம் அடி வாங்குவது, அப்பாவை தலையாரி அடித்த பிறகும் திருப்பி அடிக்காமல் சாதுவாகவே இருப்பது, சத்யகலா மீதான காதலில் கிறங்குவது, போதையின் பாதையில் திரிவது, நல்லவர்களா கெட்டவர்களா என்ற எந்த ஆராய்ச்சிக்கும் செல்லாமல் திருடர்களுடன் பழகுவது, என்ன நடந்தாலும் அடிக்கடி ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்துச் சென்று கறி விருந்துக்குக் கொடுப்பது என வெள்ளந்தி மனிதரின் இயல்புகளைக் கண் முன் நிறுத்துகிறார்.




சத்யகலா தமிழ் சினிமாவின் நல்வரவு. கிராமத்துப் பெண்ணின் துடுக்குத்தனத்தையும் தைரிய குணத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறார். அடம் பிடித்து மித்ருவைக் கட்டிக்கொள்ளும் அவர் கணவனிடம் மட்டும் கண்களால் பேசுவதும், களவாணிகளிடம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உறுதியுடன் பேசுவதும் ரசனை. கணவன் மீதான கண்டிப்பையும் காதலையும் ஒருசேரக் காட்டும்போது தேர்ந்த நடிப்பால் மனதில் நிறைகிறார்.

அடியாள் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்த அழகு இதில் அன்பான அப்பாவின் உணர்வைக் கடத்துகிறார். 3 களவாணிகளும் கதாபாத்திரத்துக்கான தேவை உணர்ந்து நடித்துள்ளனர்.

குமார் ஸ்ரீதர் தென் மாவட்டத்தின் வறட்சியை, கிடை போடும் சூழலை அப்படியே அசலாகப் பதிவு செய்துள்ளார். வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் உயிரை உருக்குற பாடலும், சவக்காரம் பாடலும் ரசிக்க வைக்கின்றன. ஜித்தின் ரோஷனின் பின்னணி இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது.



எளிமையான கதை, நேர்த்தியான திரைக்கதையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் மாரிமுத்து. நகைச்சுவையைத் தள்ளி வைத்துவிட்டு அசல் வாழ்வை மட்டும் அப்படியே பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. கிடை போடும் விதம், மேய்ச்சலுக்கு விடுவது, தொரட்டி வைத்துக் கொண்டு ஆடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, மண் வீடு உருவாக்கி குடியிருப்பது, திருமணச் சடங்கு முறை என ஒவ்வொன்றையும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அசர வைக்கிறது.

மாயன் கதாபாத்திரம் சூது வாதில்லாமல் இருந்தாலும் தன்னுடன் இருக்கும் களவாணி நண்பர்களை ரொம்ப நம்புவது படத்தின் பலவீனம். களவாணி நண்பர்களில் மூவரில் இருவர் மட்டுமே விபரீத செயலுக்குத் திட்டம் தீட்டுகின்றனர். தூங்குவது போல் நடிக்கும் ஒருவர் கடைசி வரை எதுவுமே செய்யாமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை.

வஞ்சகம், துரோகம், பாசம், வீரம், அன்பு என்று கிராமத்து வாசத்தை வீச வைத்ததில் 'தொரட்டி' கவனிக்க வைக்கிறது.

முதல் பார்வைதொரட்டி விமர்சனம்தொரட்டிமாரிமுத்துஷமன் மித்ருசத்யகலா
அத்திவரதரை தரிசிக்கச் செல்வோர் செய்ய வேண்டியதும்; செய்யக் கூடாததும்!
By வாணிஸ்ரீ சிவக்குமார் | Published on : 03rd August 2019 06:22 PM




அத்திவரதர் பெருவிழாவின் 34-ஆவது நாளான சனிக்கிழமை அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற ஜரிகையுடன் பச்சை நிறப் பட்டாடையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அத்திவரதர் பெருவிழாவின் 34-ஆவது நாளை முன்னிட்டு பெருமாள் 3-ஆவது நாளாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதிவரை நின்ற கோலத்தில் காட்சியளிக்கவிருக்கிறார்.


அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு காத்திருக்கும் மக்களின் வசதிக்காக சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

தரிசன முறைகள்
அத்திவரதரைக் காண பொது தரிசன வழியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

அதில்லாமல், முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக் குழந்தையோடு வருவோர், மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடக்க முடியாத முதியவர்களுக்கு என சக்கர நாற்காலிகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது.

மூன்றாவதாக, காலையில் ரூ.500 செலுத்தி சகஸ்ரநாம அர்ச்சனை தரிசனமும், மாலையில் ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனமும் செய்யலாம். இதற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தினமும் காலை 10 மணிக்கும், 11 மணிக்கும் இதற்கான முன்பதிவுகள் தொடங்குகின்றன. இப்படியும் முன்பதிவு செய்து சிறப்பு தரிசன வரிசையில் சென்று சுவாமியை தரிசிக்கலாம். இந்த தரிசன முறைகளுக்கும் சில மணி நேரங்கள் ஆகின்றன.

செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்
உங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் நிச்சயம் உங்களிடம் இருக்க வேண்டும். கோயிலில் அன்னதானம் அளிக்கப்பட்டாலும், வரிசையில் காத்திருக்கும் போது தொய்வடையாமல் இருக்க நிச்சயம் உங்களிடம் உணவு அல்லது பிஸ்கட், பழம் போன்றவை இருப்பது அவசியம். அதே சமயம், ஒரு போதும் பட்டினியாகவோ, விரதம் இருந்தோ அத்திவரதரைக் காண வரிசையில் காத்திருக்கக் கூடவேக் கூடாது.

குடிநீர்.. இது எல்லோருக்குமே தெரியும்.
ஒவ்வொருவரும் வரிசையில் காத்திருக்கும் முன் நம் கையில் ஒரு லிட்டர் குடிநீர் நிச்சயம் இருக்க வேண்டும். வரிசையில் ஆங்காங்கே காவல்துறையினரும் குடிநீரை வழங்குகிறார்கள். தேவைப்பட்டால் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

பேருந்தில் செல்வோர், கோயிலுக்குச் செல்லும் முன்பே, பேருந்தின் அருகிலேயே எங்கேனும் ஓரிடத்தில் காலணியை விட்டுச் செல்வது அவசியம். கோயில் அருகே காலணியை கழற்றிவிட்டால், மீண்டும் நீங்கள் வெறுங்காலுடன்தான் பேருந்து ஏற வேண்டியது இருக்கும்.

தளர்வான ஆடைகளை அணிந்திருப்பது அவசியம். கோயிலுக்குச் செல்கிறோமே, பட்டுடுடுத்தி அத்திவரதரை தரிசிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். உள்ளே லட்சக்கணக்கான மக்களுடன் வரிசையில் காத்திருக்கப் போகிறோம். எனவே தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

மேற்கு கோபுரம் வழியாகச் செல்லும் போது 22 கொண்டை ஊசி வளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த கொண்டை ஊசி வளைவுகளுக்கான வரிசை தொடங்கும் போது, முடியும் போது என கோயிலுக்குள் இரண்டு இடங்களில் மொபைல் டாய்லெட் எனப்படும் கழிவறைகள் உள்ளன. எனவே, அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்படா விட்டாலும் கூட.

ஒரு வேளை அந்த வரிசையைத் தாண்டி கோயிலின் உள் கோபுரங்கள் வழியாக வரிசையைக் கடக்கும் போது உங்களுக்கு கழிவறை வசதி தேவைப்பட்டால் நிச்சயம் கிடைக்காது. எனவே அதுதான் கடைசி பிரேக்கிங் பாயிண்ட் என்பதை நினைவில் கொள்ளவும்.

அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
கிழக்கு கோபுர நுழைவு வாயில் வழியாகவும், மேற்கு கோபுர வாயில் வழியாகவும் அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்கள் தெற்கு கோபுர வாயில் வழியாக வெளியேற்றப்படுகிறார்கள்.

கிழக்கு கோபுர நுழைவு வாயில் என்பது பேருந்து நிலையங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அருகில் இருப்பதால் எப்போதும் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் கூட்டம் நிரம்பி வழியும்.

எனவே, மேற்கு கோபுர வாயில் வழியாக சுவாமியை தரிசிக்கச் செல்வது, அதிகப்படியான இடிபாடுகளில் சிக்குவதை விரும்பாதவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.

அதே சமயம், கிழக்கு கோபுர நுழைவு வாயிலின் வெளியில் இருக்கும் வரிசையில் இருக்கும் வசதிகளை விடவும், மேற்கு வாயிலில் இருக்கும் வரிசையில் மின் விசிறி வசதி, கழிப்பறை வசதிகள் சிறப்பாக இருக்கிறது.

அதிக சுமையைக் கொண்டு செல்வதைத் தவிருங்கள். ஏன் எனில் நீங்கள் கொண்டு செல்லும் சுமையை நீங்களே சுமந்துகொண்டுதான் செல்ல வேண்டும். எங்கும் வைக்க முடியாது. சிலர் கையில் இரண்டு பைகளோடு சுவாமி தரிசனம் செய்யும் போது, கையெடுத்துக் கும்பிட கூட முடியாமல் திணறுவதையும் பார்க்க முடிகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் முதுகில் மாட்டும் பைகளைப் பயன்படுத்தலாம்.

வரிசையில் நிற்கும் போதும் சரி, நடக்கும் போதும் சரி, உங்களுக்கு முன்னே செல்வோருக்கும் உங்களுக்கும் இடையே சற்று இடைவெளியை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரிசை நீண்ட நேரம் நிற்கும் போது உங்களுக்கான இடம் உங்களுக்குக் கிடைக்கும். பின்னால் இருப்பவர்கள் நெருக்கினாலும் இது உங்களுக்கு உதவும்.

ஒரு குழுவாகச் செல்லும் போது, எல்லாவற்றையும் உடன் வந்திருப்பவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைக்காமல், உங்களிடம் உங்களுடன் வந்தவர்களின் செல்போன் எண், எங்கு வாகனத்தில் ஏற வேண்டும் என அனைத்தையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒன்றாகவே சென்று ஒன்றாகவே சுவாமி தரிசனம் செய்வது என்பது சற்று கடினமான விஷயம்தான்.

அடுத்து, சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்ததும், நீங்கள் நினைக்கும் திசையில் உங்களால் பயணிக்க முடியாது, அதுவும் காவல்துறையினரால் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது கோயில் வாயில்களை ஒட்டிய சாலைகளுக்கு அடுத்திருக்கும் சாலைகளில் மட்டுமே வெளியேற முடியும். அது கிட்டத்தட்ட 2 கி.மீ. அளவுக்கு தூரம் கொண்டது. எனவே அதை நடந்துதான் கடக்க வேண்டும். ஆட்டோ கிடைத்தால் அதிர்ஷ்டசாலிகள்தான்.

சொந்த வாகனத்தை கிடைக்கிறதே என்று எங்கேயாவது நிறுத்திவிட்டுச் செல்லாதீர்கள். வாகன நெரிசல் ஏற்பட்டு, திரும்பி வரும்போது உங்கள் வாகனத்தை எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.

முதலும் கடைசியுமாக ஒரு விஷயம்.. நீங்கள் சொந்த அல்லது வாடகை வாகனங்களில் அத்திவரதரை தரிசிக்கச் சென்றிருந்தால், உங்கள் வாகனம் எங்கே நிற்கிறது, அதன் பதிவெண் என்ன, வாகன ஓட்டுநரின் செல்போன் எண் என அனைத்தையும் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல, வாகனத்தில் இறங்கிய பிறகு, அங்கிருந்து எத்தனை வலது, இடது பக்கங்களில் திரும்பி, எத்தனை சந்துகளைக் கடந்து வருகிறோம் என்பதையும் எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வரும் போது அது மிகவும் முக்கியம்.

என்னடா இப்படியெல்லாம் டிப்ஸ் கொடுக்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். சுவாமி தரிசிக்கும் முன்பும், பின்பும், அந்த மனமகிழ்வோடு வீடு திரும்ப வேண்டும் என்றால், நிச்சயம் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இவையெல்லாம் தான் கவனத்தில் இருக்கும். அத்திவரதரை மறந்தேப் போவோம்.

மிக முக்கியமான குறிப்பு.. இரும்புக் கம்பிகளால் ஆன கொண்டை ஊசி வளைவு வரிசைகளைக் கடந்து பிறகு கூட்டத்தினர் மூன்று வரிசைகளில் பிரிக்கப்படுவார்கள். அதில் எவ்வளவு கூட்டம் நிரம்பி வழிந்தாலும் முதல் வரிசையில் செல்லுங்கள். பொதுவாக அனைத்துக் கூட்டமும் மைய வரிசையில்தான் அனுப்பப்படும். ஆனால் நீங்கள் சுதாகரித்துக் கொண்டால் முதல் வரிசையில் செல்லலாம். அதுதான் சுவாமியை மிக அருகில் தரிசிக்கும் வழியாகும். சுவாமியை தரிசிக்கும் முன் கூட எங்கு வேண்டுமானாலும் இந்த முதல் வரிசைக்கு உங்களால் மாற முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்களின் நல்ல நண்பர் யார்?
By பா.போற்றி ராஜா | Published on : 03rd August 2019 01:29 AM

இந்தியாவில் உலக நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. மற்ற எல்லா உறவுகளையும்விட தனித்துவமானது நட்பு என்பதை ஞாயிற்றுக்கிழமையன்று (ஆக.4) அனைவரும் நினைவில் கொள்வது நல்லது.
காரணம், நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாச் சொந்தங்களும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை. ஒரு குழந்தை பிறக்கப் போகிறதென்றால், இன்னார்தான் அந்தக் குழந்தையின் தாய்மாமன் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஆனால், நட்பு அப்படியல்ல; இன்னார்தான் இன்னாரோடு நண்பராகப் போகிறார் என்று யாரும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகமும் சதையும் ஆக இருந்த நண்பர்களின் வாரிசுகள் நண்பர்களாக இருப்பதில்லை.
ஒரு நல்ல நட்பை யாசகமாகவோ, மிரட்டியோ, பணத்தாலோ பெற்றுவிட முடியாது. நட்புக்கு ஆண்-பெண் என்ற பாலின வேறுபாடோ அல்லது இளைஞர்-முதியவர் என்ற வயது வேறுபாடோ கிடையாது. எதேச்சையாக ஒருவரிடம் அறிமுகமாகி நீண்ட காலம் பழகி அவரின் அன்பால், பண்பால், செயலால் ஈர்க்கப்பட்டு அவரிடம் உரிமையோடு அன்பு செலுத்தி, அவரின் குறைகளை நேருக்கு நேர் பளிச்சென்று கூறி, நிறைகளை மற்றவரிடம் சொல்வதே உண்மையான நட்பு.

அப்படிப்பட்ட உண்மையான நண்பர்களை நாம் தேர்ந்தெடுக்கும் முன்பு நன்றாக யோசிக்க வேண்டும். ஆனால், தேர்ந்தெடுத்து நட்பு பாராட்டிய பின்னர், அவர்களைச் சந்தேகிப்பது நம்மை மீள முடியாத துன்பத்தில் தள்ளி விடும். நல்ல நட்பை எப்படி ஆராய்ந்து அறிவது, நல்ல நண்பர்களை அடையாளம் காண்பது எப்படி எனக் கேள்வி எழுவது இயல்பானது.
இதற்குப் பதில் தருகிறது ஒரு பழைமையான பாடல். நண்பர்களை பனை மரம், தென்னை மரம், வாழை மரம் என அது மூன்று வகையாகப் பிரிக்கிறது. முதலாவது, பனை மரம். அது யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல; பனம் பழத்தைத் தேடி எடுத்து யாரும் மண்ணுக்குள் விதைப்பதில்லை; அது தனக்குக் கிடைத்த நீரைக் குடித்து தானாகவே முளைக்கிறது; தன் உடலையும், ஓலையையும், நுங்கையும் மனிதகுலத்துக்கு அளிக்கிறது; பிறரிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் உதவும் நண்பர் பனை மரம் போன்றவர். இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பது மிக அரிது.
தென்னை மரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றினால்தான் நமக்குப் பலன் தரும்; அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நம்மிடம் நண்பனாக இருப்பவர் தென்னை மரம் போன்றவர். 

மூன்றாவது வாழை. அதற்கு நாம் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும்; இல்லையென்றால் அது பலன் தராது. அதே போன்று நம்மிடம் தினமும் உதவி பெற்றுக்கொண்டு வாழும் நண்பரை வாழைக்கு ஒப்பிடலாம்.
நாம் அனைவரும் இந்த மூன்று மரங்களில் நமக்கு கிடைக்க வேண்டிய நண்பர் பனை மரம் போன்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அப்படித்தான் நம் நண்பர்களிடமும் எதிர்பார்ப்பு இருக்கும். எனவே, முதலில் நாம் பனை மரம் போன்று ஒரு நல்ல, உற்ற நண்பனாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.அப்போதுதான் நமக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

சரி. ஒரு நல்ல நண்பரை எப்படி ஆராய்ந்து அறிவது? ஒருவரிடம் பழக ஆரம்பித்த உடனே நம்மைப் பற்றிய அனைத்து அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது முற்றிலும் தவறு. எடுத்த எடுப்பிலேயே ஒருவரை நண்பராகக் கருதி நாம் சொல்லும் உண்மைகளை, கூட்டத்தில் அவர் கேலியாகச் சொல்லி சிரிக்கும்போது ஆழ் மனதில் ஈட்டி இறங்கியது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். நீங்கள் நம்பிச் சொல்லிய உண்மைகளை அவர் பிறரிடம் கேலியாகச் சொன்னால், அவரின் நட்பை நீங்கள் உடனே துண்டிக்கலாம். அதில் தவறேதுமில்லை.

இரண்டாவது, நீங்கள் ஏதேனும் தவறு செய்திருப்பின் உங்களின் முகத்துக்கு நேரே அதைச் சுட்டிக் காண்பிக்கிறாரா அல்லது முதுகுக்குப் பின்னால் சென்று பிறரிடம் வசைபாடுகிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருவேளை, அவர் முதுகுக்குப் பின்னால் பேசும் குணம் உடையவர் என்பதை நீங்கள் உறுதி செய்தால், உங்களின் நட்பை அந்த விநாடியிலேலே முறித்துக் கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

மூன்றாவது, உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும். முகஸ்துதி பாடுவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு. அதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் செயலை ஊக்கப்படுத்தி விட்டு, நீங்கள் இல்லாதபோது பிறரிடம் உங்களை புகழ்ந்து பேசி, மற்றவர் உங்களைக் குறை கூறும்போது உங்களை எவர் ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களானால் உங்களின் உயிர் நண்பரை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
தன் நண்பர் தீய பழக்கங்கள் உடையவராக இருந்தாலும்கூட, அதில் ஈடுபடக் கூடாது என அவரிடம் உரிமையோடு கூறுபவரே நல்ல நண்பர்; மாறாக, மது குடிக்க வற்புறுத்தும் நண்பராக இருந்தால், அது நட்பே கிடையாது; அதற்குப் பெயர் கூடா நட்பு. அப்படிப்பட்ட நட்பை துணிந்து துண்டிக்க வேண்டும்.நண்பருக்காக ஒரு தடவை என்று பிறர் சொல்வதை ஒருவர் செய்வாரேயானால் அது கெடுதலாகும்.

எனவே, ஒரு நண்பரை தேர்ந்தெடுக்கும் முன்பு பல முறை யோசிக்க வேண்டும். ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பரைப் போன்றது. ஒரு நல்ல நண்பர், ஒரு நூலகத்துக்கு ஒப்பானவர் என்பார் பெரியோர். நம் உள்ள உணர்வுகளை கொட்டித் தீர்க்க, மனபாரங்களை இறக்கி வைக்க, மகிழ்ச்சியைக் கொண்டாட, துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள எல்லோருக்கும் ஒரு நல்ல நண்பரோ, தோழியோ அவசியம். 

காலமெல்லாம் நம்முடன் பயணிக்க இருக்கும் அந்தச் சக பயணியை கொஞ்சம் நிதானமாகத் தேர்ந்தெடுக்கலாம். நட்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் என்னவோ, நட்புக்கு மட்டும் நட்பு , நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்களை திருவள்ளுவர் படைத்துள்ளார்.
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழாகொடியேற்றத்துடன் துவங்கியது

Updated : ஆக 04, 2019 04:49 | Added : ஆக 04, 2019 03:46




திருநெல்வேலி:சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதியம்பாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணராக கோமதியம்பிகைக்கு காட்சியளித்த ஸ்தலம். சைவமும், வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் கோயிலாகும். சங்கரன்கோவில் சங்கரநாராயணர், கோமதியம்பாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சைவமும், வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் கோயிலாகும். ஆடித்தபசு திருவிழாவையொட்டி நேற்று கோமதிஅம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. 

விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் , இரவில் சுவாமி அம்மாள் வீதி உலாவும் நடக்கிறது.முக்கிய விழாவான தேரோட்டம் ஆக. 11 காலையில் நடக்கிறது. ஆடித்தபசு திருவிழா ஆக.13 மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.
மருத்துவமனைகள் உரிமம் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

Added : ஆக 04, 2019 



சென்னை:தமிழகத்தில், மருத்துவமனைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, உரிமம் வழங்குவதற்கான, இறுதி வாய்ப்பாக, நவ., 30 வரை கால நீட்டிப்பு வழங்க, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுகின்றன; இவற்றிற்கு உரிமம் பெறுவது அவசியம். அதை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பிக்க வேண்டும்.இந்த நடைமுறைகளுக்கு, மார்ச், 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், 80 சதவீத மருத்துவமனைகளும், கிளினிக்களும், அந்த காலக்கெடுவுக்குள் உரிமம் கோரி விண்ணப்பிக்கவில்லை. இதனால், மே, 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 24 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகள் புதிதாக பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்தன.இந்நிலையில், அனைத்து மருத்துவமனைகளும் உரிமம் பெறுவதற்கான இறுதி வாய்ப்பாக, நவ., 30 வரை கால நீட்டிப்பு வழங்க, மருத்துவ சுகாதார சேவைகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, மருத்துவ சுகாதார சேவைகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:பதிவு உரிமம் கோரிய, மருத்துவமனைகளில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு, உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்பட உள்ள, வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து மருத்துவமனைகளும், உரிமம் கோரி விண்ணப்பிக்கும் என, எதிர்பார்க்கிறோம். நவ., 30க்குள் பதிவுக்கு விண்ணப்பிக்காத மருத்துவமனைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

NEWS TODAY 14.02.2026