Tuesday, August 13, 2019

பவுர்ணமி கிரிவலத்துக்கு நேரம் அறிவிப்பு

Added : ஆக 13, 2019 02:31

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மலையையே, சிவனாக பாவித்து, பக்தர்கள் வழிபடும் இடம், திருவண்ணாமலை. இங்கு, பவுர்ணமி தோறும், 14 கி.மீ.,க்கு, பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.இதில், ஆடி மாத பவுர்ணமி திதி, நாளை மாலை, 4:35 முதல், 15ம் தேதி மாலை, 6:16 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டில்லியில் சித்தா மருத்துவமனை

Added : ஆக 13, 2019 02:25

வேலுார்:டில்லியில் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துக்காக, எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என, மத்திய அமைச்சர், ஸ்ரீபத் யசோ நாயக் கூறினார்.

வேலுார் அடுத்த திருமலைக்கோடியில், 5 கோடி ரூபாய் செலவில், நாராயணி சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவமனை துவக்க விழா, நேற்று நடந்தது.மத்திய, பாதுகாப்புத் துறை மற்றும் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா துறைகளின் இணை அமைச்சர், ஸ்ரீபத் யசோ நாயக், மருத்துவமனையை திறந்து வைத்தார்.நிருபர்களிடம், அவர் கூறியதாவது:சித்தா, ஆயுர்வேத மருத்துவம், நாடு முழுவதும் உள்ள, அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும், 150 மாவட்டங்களில், 150 சித்தா, ஆயுர்வேதா மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. டில்லியில் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துக்காக, எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.வெளிநாட்டு நோயாளிகள், இந்திய இயற்கை வழி மருத்துவத்தை நாடி வருகின்றனர்.தற்போது, ஜம்மு - காஷ்மீரில், 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் அங்கு, அமைதி நிலை திரும்புகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
சேலம் எக்ஸ்பிரஸ் ரத்து

Added : ஆக 13, 2019 00:52

சென்னை:சேலம் - சென்னை எழும்பூர், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், சேலத்தில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, இரவு, 9:20க்கு இயக்கப்பட வேண்டிய, சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ரத்து செய்யப்பட்டுஉள்ளது.மேலும், மழையால், மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டதால், சென்னை எழும்பூரில் இருந்து, நேற்று சேலத்துக்கு இயக்கப்பட வேண்டிய, சூப்பர் பாஸ்ட் ரயில் ரத்து செய்யப்பட்டது. இன்றும், ரத்து செய்யப்பட்டுள்ளது.


டிப்ளமா நர்சிங் படிப்பு 26 முதல் விண்ணப்பம்

Added : ஆக 13, 2019 00:51

சென்னை:'டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, வரும், 26ல் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 8,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, வரும், 26ல் துவங்குகிறது. விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்டம்பர், 4க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தர வரிசை பட்டியல், செப்., 9ல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அத்தி வரதர் வைபவம் ஆக., 16ம் தேதியுடன் தரிசனம் நிறைவு

Updated : ஆக 13, 2019 01:07 | Added : ஆக 12, 2019 23:48 |

காஞ்சிபுரம் : ''அத்தி வரதர் வைபவம், 17ம் தேதியோடு முடிவடைகிறது; அதில் எந்த மாற்றமும் இல்லை. 16ம் தேதியுடன், பக்தர்கள் தரிசனம் முடிகிறது,'' என, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெறும் அத்தி வரதர் வைபத்திற்கு, ஜூலை, 1ம் தேதி முதல், தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர். நேற்று, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினரும், ஆந்திரா மாநில, எம்.எல்.ஏ.,வும், நடிகையுமான, ரோஜா தரிசித்தனர்.
நேற்றைய தரிசனத்தின்போது, 13 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி, மயக்கமடைந்தனர். அவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல், வி.வி.ஐ.பி., வரிசையில் சென்ற பக்தர்களிடையே, வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில், இரு பக்தர்கள் காயம் அடைந்து, அங்குள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், அத்தி வரதர் வைபவ நாட்கள் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து, கலெக்டர், பொன்னையா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர், இ.பி.எஸ்., கூறியபடி, 17ம் தேதியோடு, அத்தி வரதர் வைபவம் முடிகிறது. கால நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இல்லை.

அனந்தசரஸ் குளத்திற்கு, அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ம் தேதி ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தரிசனம் செய்ய, 16ம் தேதி கடைசி நாளாகும். பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருவதால், மூன்று இடங்களில், பிரமாண்ட தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வந்தவாசி, உத்திரமேரூரிலிருந்து வரும் வாகனங்கள், கீழ்கதிர்பூரில் உள்ள, பி.ஏ.வி., பள்ளிக்கு அருகில் வாகனங்களை நிறுத்தலாம். சென்னை, அரக்கோணம், வேலுார் ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள், கீழ்கதிர்பூரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பங்க் அருகில் நிறுத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வாலாஜாபாதிலிருந்து வரும் வாகனங்கள், பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்குமிடம் அருகில், வாகனங்களை, 'பார்க்கிங்' செய்யலாம். நிறுத்துமிடங்களில், உணவு, குடிநீர், கழிப்பறை, 'டிவி' உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், பஸ் மூலம், கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படுவர். பஸ்சில் செல்ல கட்டணமா அல்லது இலவசமா என, பின் தெரிவிக்கப்படும். பாதுகாப்பு பணியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 80 லட்சம் பக்தர்களுக்கு மேல், அத்தி வரதரை தரிசித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

போக்குவரத்து துறை முதன்மை செயலர், ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் அமைந்துள்ள, பெரியார் நகர், ஓரிக்கை உள்ளிட்ட இடங்களில், நேற்று பார்வையிட்டார். அத்தி வரதர் தரிசனத்திற்கு கூடுதல் பஸ்கள் முறையாக இயக்கப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து, ஆய்வு செய்தார்.
வருமான வரி கணக்கு 17 லட்சம் பேர் தாக்கல்

Added : ஆக 13, 2019 06:26 |

தமிழகத்தில், ஜூலை வரை, 17.10 லட்சம் பேர், 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளனர்
.
கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிகிறது.

நடவடிக்கை

ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, கடந்த ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.இந்நிலையில், ஜூலை வரை, கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை, வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.ஜூலை வரை, நாடு முழுவதும், 2.67 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துஉள்ளனர்.
இது, 2017 - 18ம் நிதியாண்டில், 3.43 கோடியாக இருந்தது. 76 லட்சம் பேர், கடந்த நிதியாண்டை விட, குறைவாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில், ஜூலை வரை, 17.10 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, 2017 - 18ல், 24.68 லட்சமாக இருந்தது. கடந்த நிதியாண்டை விட, 7.58 லட்சம் பேர், தற்போது குறைவாக தாக்கல் செய்துள்ளனர்.

அவகாசம்

தமிழகம் மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும், 2017 - 18ம் நிதியாண்டை விட, பல லட்சம் பேர், குறைவாகவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்துஉள்ளனர்.கடந்த நிதியாண்டுபோல, நடப்பு நிதியாண்டிலும், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நமது நிருபர் -
தேர்வு கட்டணம் உயர்வு விளக்குகிறது சி.பி.எஸ்.இ.,

Added : ஆக 13, 2019 01:48

புதுடில்லி:தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக, நேற்று விளக்கம் அளித்து உள்ள, சி.பி.எஸ்.இ., 'பிற கல்வி முறையில் வசூலிக்கும் அளவுக்குத் தான், தேர்வுக் கட்டணம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களின் தேர்வு கட்டணத்தை மாற்றிஅமைத்துள்ளது. அதன்படி, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், ௨௪ மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் நேற்று, 'மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் - சில உண்மைகள்' என்ற தலைப்பில், சி.பி.எஸ்.இ., சில விளக்கங்களை அளித்துள்ளது.அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:l கட்டணங்கள் மாற்றம், டில்லிக்கு மட்டும் என, சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவறு. நாடு முழுமைக்கும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் கட்டண மாற்றம் பொருந்தும்l கட்டணம், பிற கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்துக்கு இணையாக உயர்த்தப்பட்டுள்ளதுl கடந்த ஐந்தாண்டுகளாக, கட்டணங்கள் உயர்த்தப்படாத நிலையில், இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளதுl சி.பி.எஸ்.இ., சுயநிதி கல்வி நிறுவனம். லாபம் சம்பாதிப்பது, அதன் நோக்கமல்ல; அதே நேரத்தில் நஷ்டத்தையும் ஏற்க முடியாது.இவ்வாறு, தெரிவித்து உள்ளது.

NEWS TODAY 24.4 2026