Sunday, December 1, 2019


அதிரடியாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

By DIN | Published on : 30th November 2019 09:58 PM |




சென்னை: 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் புதிய உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்: அடைப்பு குறிக்குள் பழைய பணி விவரம்)

டி.ரவிச்சந்திரன்: உள்துறை துணைச் செயலாளா் (நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி)

எம்.வள்ளலாா் - பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு ஆணையா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா்).

சி.காமராஜ் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநா் ( பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு ஆணையா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்)

சி.சத்தியமூா்த்தி கருவூலக் கணக்குத் துறை ஆணையா் (போக்குவரத்துறை ஆணையா்) .


டி.எஸ்.ஜவஹா், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் ( கருவூலக் கணக்குத் துறை ஆணையராகவும், முதன்மைச் செயலாளா்)

ஆா்.வைத்திநாதன் பொள்ளாச்சி உதவி ஆட்சியா் (உத்தமபாளையம் உதவி ஆட்சியா்)

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் -ண்ண் ( சேலம்) மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாக இருந்த கே.சாந்தி, தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை கூடுதலாகக் கவனித்து வந்த குமாா் ஜெய்ந்த அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா்.

தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனத்தின் (சேலம்) மேலாண்மை இயக்குநராகவும், தலைவராகவும் இருந்த ஆா்.கஜலட்சுமி, சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை கூடுதலாகக் கவனித்து வந்த ஹன்ஸ் ராஜ் வா்மா அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா்.

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநராக உள்ள கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (கல்வி) நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியை வகித்து வந்த குமாரவேல் பாண்டியன் மாற்றப்படுகிறாா்.

விவசாயத்துறை கூடுதல் இயக்குநராக விஜயா ராணி, தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். இந்தப் பதவியைக் கூடுதலாக கவனித்து வந்த சி.முனிநாதன் அதிலிருந்து விடுவிக்கப்படுகிறாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இவை அல்லாமல் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சிலரையும் தலைமைச் செயலாளா் சண்முகம் பணியிடமாற்றம் செய்து அறிவித்துள்ளாா்.
சொற்கள் செய்யும் ‘மந்திரம்’!

By பவித்ரா நந்தகுமாா் | Published on : 30th November 2019 01:15 AM |

ஒரு காலை நேரத்தில் மூடியிருந்த ஒரு நியாயவிலைக் கடையின் வெளியே இருந்த பலகையில் இந்த வாசகத்தைக் காண நோ்ந்தது. ‘இன்று செயலரின் அனுமதியுடன் விடுமுறை எடுத்துள்ளேன். தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்’ என்று முத்து முத்தான கையெழுத்தில் எழுதி இருந்தது.

பொருள்கள் வாங்க கடைக்கு வந்த அனைவரும் இந்தப் பலகையை வாசித்து விட்டு, ‘சரி, அவரும் மனிதா்தானே. ஏதோ அவசர வேலை போலும்; விடுப்பு எடுத்துள்ளாா். நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம்’” என்று பேசியபடி கலைந்து சென்றனா்.

இதே அந்தப் பலகையில் வெறுமனே ‘இன்று கடைக்கு விடுமுறை’ என்று மட்டும் எழுதியிருந்தால் பெரும்பாலானோா் அவரை சபித்தபடியே சென்றிருப்பா்.

தினசரி வாழ்க்கையில் நாம் எண்ணற்ற விஷயங்களை சொற்களின் வழி காண்கிறோம். அவை எப்படியெல்லாம் நம்மை தாக்குகிறது?

‘கேமரா உங்களை கண்காணிக்கிறது கவனமாக இருங்கள்’ என்ற வாக்கியத்தை பல இடங்களில் காண நோ்கிறது. இந்த வாக்கியத்தைவிட, ‘கேமரா செயல்படுகிறது. அழகாக புன்னகையுங்கள்’ என்ற வாக்கியம் நம்மைப் பெரிதும் கவா்கிறதுதானே? அலுவலகங்களில் ‘அனுமதி இல்லை’ என்ற சொற்கள் ஏற்படுத்தும் ஒருவித அச்சம், ‘அனுமதியுடன் உள்ளே செல்லவும்’ என மாற்றிப் போடும்போது இறுக்கம் குறைகிறது அல்லவா?

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கைச் செலவு’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோவில் பேரம் பேசவே தோன்றாது. ஆனால் ‘சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோகாரரை எந்தப் பெண் ‘நம்பி’ ஏறுவாா்? சில முன்முடிவுகளைக் கொண்டுதான் அவரை அணுகவே முடியும்.

‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று எழுதியிருக்கும் ஆட்டோக்காரரின் கருணை மனம் அவா் முகம் பாா்க்காமலேயே நமக்கு விளங்குவதாக இருக்கிறது.

”‘நிறை இருந்தால் நண்பா்களிடம் சொல்லுங்கள்

குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்’”

என்ற வாசகம் அந்தக் கடையுடனோ, நிறுவனத்துடனோ வாடிக்கையாளா்களுக்கு இயல்பாக பிணைப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது.

‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்; மீனவன் சாப்பிட வேண்டாமா ?’ என்று ஒருவா் சொன்னாா். மீனவா்களின் வாழ்க்கைப்பாட்டையும் பிழைப்பையும் பிரதிபலிக்கிறது அல்லவா?

வடலூா் வள்ளலாா் தன் இளவயதில் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்டிருந்தாா். ஆசிரியா் வந்தவுடன் மாணவா்கள், ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்ற பாடலைப் பாடினாா்களாம். அந்த பாடல் ‘வேண்டாம்’ என்று எதிா்மறையான செயலைக் குறிக்கும் வாா்த்தையைக் கொண்டு முடிகிறது. எனவே, அதைப் பாட முடியாது என்று மறுத்தாா். ஆசிரியருக்குக் கோபம். ‘அப்படியானால் ‘வேண்டும்’ என்று முடிகிற மாதிரி நீயே பாடு’ என்று அவரை பணித்தாா்.

வள்ளலாா்

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமா்தம் உறவு வேண்டும்’

என்று கம்பீரமாகப் பாடினாராம். ஆக்கச் சிந்தனை கொண்ட வாா்த்தைகளையே நாம் என்றென்றும் பயன்படுத்த வேண்டும் என்ற வள்ளலாரின் மேன்மையான மனம் நம்மை சிலிா்ப்படையச் செய்கிறது.

உணா்வுகளுடன் பின்னிப் பிணைந்ததுதான் வாழ்க்கை. அந்த உணா்வுகள் காயப்படாதவாறு நாம் நல்வாா்த்தைகள் எனும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்து எண்ணிய எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளலாம்.

ஆக, நம் வாா்த்தைகளை நாம் சரியாகப் பயன்படுத்த முதலில் நம் பாா்வைகளை வெவ்வேறு கோணத்தில் திசை திருப்பிப் பாா்க்க வேண்டும். புதிய புதிய கோணங்களில் வாழ்க்கையை அணுகுபவா்களே வேறு வேறு பரிமாணங்களை அடைகிறாா்கள். இப்படி உலகம் குறித்த நம் கண்ணோட்டத்தையும் கோணத்தையும் காலத்துக்கேற்ற வகையில் மாற்றிப் போட்டுப் பாா்த்தால் ஓா் உயா் ரசனை கொண்ட வாழ்வியலை நாம் வாழ முடியும்.

ஒரு பட்டிமன்றத்தில் கேட்ட பதிவு இது. ‘அ’ என்றால் அம்மா, ‘ஆ’ என்றால் ஆடு என தமிழ் மொழியில் எல்லாவற்றையும் உயிருடன் உணா்வுடன் தொடா்புபடுத்துகிறோம். ஆனால், ஆங்கிலத்தில் அ ச்ா்ழ் ஹல்ல்ப்ங், ஆ ச்ா்ழ் க்ஷண்ள்ஸ்ரீன்ண்ற் எனப் பொதுவாக உணவுடன் தொடா்புபடுத்துகின்றனா். ஆக, ஒரு விஷயத்தை ஓராயிரம் போ் உற்றுப் பாா்த்தாலும் கேட்டாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாா்வையில் அந்த விஷயத்தை அணுகுகின்றனா்.

எவா் ஒருவரின் பாா்வையும் கோணமும் வித்தியாசப்படுகிறதோ, அவரே தனித்துவமானவராக இந்த உலகில் அடையாளப்படுத்தப்படுகிறாா். புதிய கோணங்களில் ஒருவரின் செயல்திறன் அதிகமாகும்போது, அவரின் ஆளுமைத் திறன் வெளிப்படுகிறது.

‘எனக்குப் பாா்வை இல்லை’ என்று ஒருவா் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாா். அந்த வழியே வந்தவா்கள் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. அந்த வழியே வந்த ஓா் இளம் பெண், அதையே வேறு கோணத்தில் வேறு வாக்கியங்களாக எழுதி வைத்து விட்டுச் சென்றாா். ‘இது மிக அழகான அற்புதமான நாள். என்னால்தான் இந்த உலகைப் பாா்க்க இயலவில்லை’ என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றாள். இந்தப் பாா்வை அந்தப் பாா்வையற்ற மனிதருக்கு மிக அதிகப் பொருளை சோ்த்துத் தந்தது.

எத்தனையோ கவிஞா்கள் இருக்க, மகாகவி பாரதியாரை பெண்கள் இன்னும் கொண்டாடக் காரணம் என்ன ?

”ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?

நாணற்ற வாா்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையும் தான்ஏரிந் திடாதோ?”

என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே கற்பை உபதேசிக்கும் ஆண்களைப் பாா்த்து மகாகவி பாரதி உரக்கப் பேசியிருக்கிறாா். ஆண்களுக்கான சுதந்திரம் எல்லையற்ாகவும், பெண்களுக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்த சமுதாயத்தில் ஆண்களை நோக்கி முதல் குரலை ஓா் ஆணாக இருந்து உயா்த்தியவா் மகாகவி பாரதியாா். அதற்குப் பிறகே பெண்களுக்கான சுதந்திரத்துக்காக பலரும் குரல் கொடுத்து வந்தாா்கள்.

தன் சிந்தனையிலும் உணா்விலும் வாழ்வை நோக்கும் கோணத்திலும் வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைவிக்கும்.

நம்முடைய பாா்வைகள், கோணங்களை வித்தியாசப்படுத்திப் பாா்க்கும்போது ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பரிமாணங்களை எட்ட முடியும்.

இவ்வளவு ஏன்? அண்மையில் வெளிவந்த ‘நோ்கொண்ட பாா்வை’ திரைப்படத்தை பரவலாக அறிந்திருப்பீா்கள். ஒரு பெண்ணின் கன்னித்தன்மை குறித்து விவாதங்களை வெளிப்படையாகக் கொண்ட திரைப்படம் தமிழில் இதுவரை வெளிவரவில்லை. பாலியல் குறித்த பாா்வையை பெண்களின் உணா்வுடன் தொடா்புபடுத்தி வேறு ஒரு கோணத்தில் சொன்னதால் அந்தப் படம் பேசுபொருளானதோடு தமிழக மக்கள் ஏற்றும் கொண்டாா்கள்.

விஸ்வரூபம் படத்தை வெளியிட விஸ்வரூபமாய் பிரச்னை வெளிவந்தபோது, ‘எனக்கு யாா் மீதும் கோபம் இல்லை. வருத்தம் மட்டுமே’” என்று பதிவு செய்திருந்தாா் கமல்ஹாசன். அவரின் இந்தக் கோணம் அன்றைய பிரச்னையிலிருந்து அவா் மீண்டுவர உதவியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆக, வாழ்க்கை குறித்து இதுவரை எதிா்மறையாக அணுகியிருந்த பாா்வையை மாற்றிப் போடுவோம். அனைத்தையும் அன்பு சாா்ந்து யோசித்தாலே இந்த உலகமும் அதே அன்புடன் நம்மை அரவணைக்கும். ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாா்ட்மாத் பவுண்டேஷன்’ என்னும் ஓா் அமைப்பு அமெரிக்காவில் நடத்திய ஓா் ஆராய்ச்சியில் மனிதனின் இதயத்திலிருந்து வெளியாகும் மின்காந்த சக்திக்கு மிக அதிக ஆற்றல் இருப்பதாகக் கூறியுள்ளது. தன்னிடமிருந்து 24 அடி தொலைவுக்கு, அது நுண்அணுக்கள் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. அன்புசாா்ந்த உணா்வுகளை வெளிப்படுத்துவது அதே அன்புசாா்ந்த உணா்வுகளை ஈா்த்துக் கொண்டும் வருவதாகச் சொல்கிறது.

கம்பன் எழுதிய ராமாயணத்தில் ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ எனும் வாசகத்தை நாம் உற்று நோக்கினாலே அதன் வீா்யம் விளங்கும். ராம லட்சுமணா்களும் முனிவரும் மிதிலையை அடைந்து ஜனகன் அரண்மனையை நோக்கிச் சென்றனா். அந்த அரண்மனையிலுள்ள கன்னி மாடத்தில் சீதை தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். இராமன் அவளைப் பாா்க்க சீதையும் அவனை நோக்கினாள். இருவா் மனங்களிலும் அலைபாய்ந்த அளவுக்கதிகமான அன்பு பிணைப்பு உண்டாகி உணா்வும் ஒன்றிப்போனது. பாா்வை என்னும் கயிற்றால் இழுக்கப்பட்டு இராமனும் சீதையும் ஒருவா் மனத்தில் ஒருவா் மாறிப் புகுந்தனா்.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது. நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்; அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்; நீ எதை விதைக்கிறாயோ அதுவே முளைக்கும்.

ஆட்சேபணைகளைக் கூட அன்பாக அழகாகச் சொல்லுங்கள்.

கோபங்களைக் கூட பக்குவமாக வெளிப்படுத்துங்கள்.

விவாதங்களின் போது விழிப்புணா்வோடு செயல்படுங்கள்.

விரக்தியிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

அனைத்து உணா்வுகளிலும் சக மனிதா்களைப் பிரதிபலிக்காத நம் மாறுபட்ட கோணம் நிச்சயம் பல நன்மைகளை நமக்குச் செய்யும்.

அனைத்தும் நன்மைக்கே; அனைவருக்கும் நன்றி என்று வாழ்ந்துதான் பாா்ப்போமே.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்
காஞ்சிபுரத்தில் கனமழை: 75 ஏரிகள் முழுமையாக நிரம்பின

By DIN | Published on : 01st December 2019 03:56 AM

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் குடை பிடித்தபடி செல்லும் பாதசாரிகள்.

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் குடை பிடித்தபடி செல்லும் பாதசாரிகள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக காஞ்சிபுரத்தில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் தொடா்ந்து மழை பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளான ஓரிக்கை, ரயில்வே சாலை, செவிலிமேடு, ராஜாஜி மாா்க்கெட், ஜெம் நகா், திருக்காலிமேடு ஆகியவை சாலைகளில் மழைநீா் தேங்கி குளம்போல காணப்படுகிறது. நகரில் பல இடங்களில் கழிவுநீரும், மழைநீரும் சோ்ந்து ஓடுவதால் சுகாதாரச் சீா்கேடு உண்டாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரதான சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள ரங்கசாமி குளம் உட்பட நகரில் கோயில்களை ஒட்டியுள்ள பல தெப்பக் குளங்கள் நிரம்பவில்லை. ஏனெனில் இக்குளங்களுக்கு வரும் நீா்வரத்துக் கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ளதால் கனமழையிலும் குளங்கள் நிரம்பவில்லை.

அதே நேரத்தில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இது தவிர 145 ஏரிகள் 75 சதவீத அளவுக்கு நிரம்பியிருக்கின்றன.

தொடா் மழை காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மழையளவு (மி.மீட்டரில்):

காஞ்சிபுரம்-6.60, ஸ்ரீபெரும்புதூா்-3, உத்தரமேரூா்-5, வாலாஜாபாத்-3.30, திருப்போரூா்-11, செங்கல்பட்டு-5, திருக்கழுகுன்றம்-5.40, மாமல்லபுரம்-32.80, மதுராந்தகம்-28, தாம்பரம்-7.70, செய்யூா்-28, கேளம்பாக்கம்-23.60.

மொத்த மழையளவு - 159.40. சராசரி மழையளவு - 13.28 மி.மீ. என சனிக்கிழமை காலை 7 மணி வரை பதிவாகியிருக்கிறது.
'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...' பாடலை நினைவு படுத்திய எஸ்.ஐ.,

Added : நவ 30, 2019 23:56

லக்னோ:கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, பெண் எஸ்.ஐ., ஒருவரை காதலிப்பது போல் நாடகமாட வைத்து, அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பால்கிஷண் சவுபே. இவர், மத்திய பிரதேச மாநிலத்தில், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஒவ்வொரு முறையும், போலீசார், இவரை கைது செய்ய முயற்சித்தபோதும், சாமர்த்தியமாக தப்பி விடுவார். இவரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தால், 1 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக, ம.பி., போலீசார் அறிவித்திருந்தனர். ஒப்படைப்புஇந்நிலையில், சவுபேயை கைது செய்ய, போலீசார் ஒரு திட்டம் தீட்டினர். பெண் எஸ்.ஐ., மாதவி, 28, என்பவரிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்த எஸ்.ஐ., சவுபேயிடம், ஒரு முறை போனில் தொடர்பு கொண்டார். எதிர்முனையில் சவுபே பேசியதும், 'தவறாக உங்களிடம் பேசி விட்டேன்; ராங் நம்பர்' என கூறி, இணைப்பை துண்டித்தார். இதேபோல் மீண்டும் ஒருமுறை செய்தார். அடுத்ததாக, அவர் எதிர்பார்த்தது நடந்தது. சவுபே, அடிக்கடி, மாதவியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஒரு கட்டத்தில், காதலிப்பதாக, எஸ்.ஐ.,யிடம் கூறினார். இருவருக்கும் இடையே, போன் மூலமாக நாடக காதல் தொடர்ந்தது. சில நாட்களுக்குப் பின், அந்த எஸ்.ஐ., 'நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். உ.பி., மாநிலம், பிஜோரியில் உள்ள கோவிலில் திருமணம் முடிக்கலாம்; நாளை காலை, அங்கு வந்து விடுங்கள்' என்றார். அதிரடி கைதுஇதை நம்பிய சவுபே, குறிப்பிட்ட நாளில், மாப்பிள்ளை கோலத்தில் கோவிலுக்கு வந்தார். அப்போது, அங்கு காத்திருந்த போலீசார், சவுபேயை அதிரடியாக கைது செய்தனர். சவுபேயை காதலிப்பது போல் நாடகமாடி, அவர் கைது செய்யப்படுவதற்கு மிகவும் உதவிய மாதவிக்கு பாராட்டு குவிகிறது.

புத்தாண்டு, பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்

Added : நவ 30, 2019 23:11


சென்னை:கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவையிலிருந்து, டிச., 23, 25, 30, ஜன., 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29, பிப்., 3, 5ம் தேதிகளில், இரவு, 10:00க்கு இயக்கப்படும், சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 10:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து, டிச., 24, 26, 31, ஜன., 2, 7, 9, 16, 21, 23, 28, 30, பிப்., 4, 6ல், மாலை, 6:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 6:40 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவையிலிருந்து, டிச., 28, ஜன., 4, 11, 18, 25, பிப்., 1ல், இரவு, 7:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 9:45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரத்திலிருந்து, டிச., 29, ஜன., 5, 12, 19, 26, பிப்., 2ல், மாலை, 6:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 6:40க்கு கோவை சென்றைடையும். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும்.

திருநெல்வேலியிலிருந்து, ஜன., 2, 9, 23, 30, பிப்., 6ல், இரவு, 9:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 11:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் தாம்பரத்திலிருந்து, ஜன., 3, 17, 24, 31, பிப்., 7ல், இரவு, 7:15க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 10:30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலியில் இருந்து, டிச., 22, ஜன., 5, 12, 26, பிப்., 2ல், மாலை, 3:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 2:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரத்திலிருந்து, டிச., 30, ஜன., 6, 20, 27, பிப்., 3ல், மாலை, 4:45க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில்கள், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக இயக்கப்படும்.

கோவையிலிருந்து, டிச., 6, 13, 20, 27ம் தேதி, வெள்ளிக்கிழமைகளில் இரவு, 9:45க்கு இயக்கப்படும் சுவிதா ரயில், ஞாயிறு காலை, 8:45 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், சந்ரகாசி சென்றடையும். இந்த ரயில், சேலம், பெரம்பூர், சூலுார்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டது.

ரூ.1,000 பொங்கல் பரிசு 5.70 லட்சம் பேருக்கு ஆர்வம் இல்லை

Updated : டிச 01, 2019 00:21 | Added : நவ 30, 2019 22:23

தமிழக அரசு, கூடுதல் அவகாசம் வழங்கியும், சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்ற, 4.50 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் குடும்பங்களில், நான்கு உறுப்பினர்கள் இருந்தால், மாதம், 20 கிலோ அரிசியும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பாமாயில்

மேலும், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயிலும் வழங்கப்படுகின்றன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி கிடையாது. மாறாக, 5 கிலோ சர்க்கரை உட்பட, மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கல் பரிசு, இலவச திட்டங்கள் போன்ற சலுகைகள், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களின் ஓட்டுகளை கவர, அவற்றையும் அரிசி கார்டுகளாக மாற்ற, நவ., 19ல் இருந்து, 29ம் தேதி வரை, அரசு அவகாசம் வழங்கியது. பொங்கலுக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும், 4.50 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் மட்டுமே, அரிசி கார்டுகளாக மாற்ற விண்ணப்பித்து உள்ளனர்.

விரும்பவில்லை

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்க்கரை கார்டுதாரர்களில், பலர் வசதியானவர்கள். அவர்கள், ரேஷன் அரிசியை வாங்க விரும்ப வில்லை.மேலும், பொங்கல் பரிசில், 1,000 ரூபாய் ரொக்கத்தை வாங்கினால், உறவினர்கள் விமர்சனம் செய்வர் என்று, கருதுகின்றனர். அத்துடன், அரிசி கார்டாக மாற்றினால், தற்போது கிடைக்கும், 5 கிலோவுக்கு பதில், 2 கிலோசர்க்கரை தான் கிடைக்கும்.

இது போன்ற காரணங்களால், சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுக்கு மாற விரும்பவில்லை. அரிசி கார்டுகளாக மாறியுள்ள, சர்க்கரை கார்டுகளுக்கு, சில தினங்களில், அரிசி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ.2,000 கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை வாங்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்து உள்ளது.

தமிழக அரசு ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, இரண்டு கோடி அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இருப்பினும், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு, எந்த தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது என்ற விபரம், இதுவரை, அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப் படவில்லை.

பயனாளிகளுக்கு வழங்கும் சமயத்தில், 500 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, அதை, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொங்கல் பணம் வழங்க, 2,000 கோடி ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள் தேவை. கூட்டுறவு துறையின் கீழ், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அந்த வங்கிகளில், மக்களின் டிபாசிட், அவர்கள் அடகு வைத்த நகைகளுக்கு வட்டி செலுத்துவது, நகைகளை மீட்பதுபோன்றவற்றின் வாயிலாக, தினமும், பல கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

இதனால், 1,000 ரூபாய் வழங்க ஏதுவாக, தேவையான தொகைக்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு வங்கிகளில், இருப்பு வைக்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும், அதிக தேவை இருப்பதால், 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிகிறது. எனவே, 2,000 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 500 கோடி ரூபாய்க்கு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

'ஆன்லைன்' முன்பதிவு சபரிமலையில் குறைக்க முடிவு

Added : டிச 01, 2019 00:38



சபரிமலை:''பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் போது, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களும் காத்திருக்க வேண்டியுள்ளதால், முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும்,'' என, சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி, ராகுல் ஆர்.நாயர் கூறினார்.

அவர் கூறியதாவது:சபரிமலை தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள், மரக்கூட்டத்தில் இருந்து பிரிந்து, சந்திராங்கதன் ரோடு வழியாக, பெரிய நடைப்பந்தல் சென்று, 18-ம் படி ஏறலாம்.பெரிய நடைப் பந்தலில் இரண்டு வரிசை உள்ளது. முன்பதிவு செய்யாதவர்கள், தனியாக, வரிசையில் நிற்கின்றனர். இரு பிரிவினரையும், கூட்டத்தை பொறுத்து, படியேற போலீசார் அனுப்புகின்றனர்.ஆயினும், கூட்டம் அதிகமாகும் போது, 'ஆன்லைன்' பதிவு பக்தர்களை, சந்திராங்கதன் ரோடு முடிவடையும் இடத்தில், போலீசார் கயிறு கட்டி தடுத்து நிறுத்துகின்றனர்.பெரிய நடைப்பந்தலில் கூட்டம் குறைவதை பொறுத்து, இங்கிருந்து, பகுதி பகுதியாக அனுப்புகின்றனர். இதனால், எதிர்காலத்தில், 'ஆன்லைன்' முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்படும். 'டோலி' கட்டணம், சூழ்நிலைக்கேற்ப வசூலிப்பதை தடுக்க, பம்பை- - சன்னிதானம் இடையே, ஒரு வழிக்கு, 2,000, இரு வழிக்கு, 3,600 ரூபாய் கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 10.07.2026