Sunday, December 1, 2019

ரூ.1,000 பொங்கல் பரிசு 5.70 லட்சம் பேருக்கு ஆர்வம் இல்லை

Updated : டிச 01, 2019 00:21 | Added : நவ 30, 2019 22:23

தமிழக அரசு, கூடுதல் அவகாசம் வழங்கியும், சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்ற, 4.50 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் குடும்பங்களில், நான்கு உறுப்பினர்கள் இருந்தால், மாதம், 20 கிலோ அரிசியும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

பாமாயில்

மேலும், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் பாமாயிலும் வழங்கப்படுகின்றன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி கிடையாது. மாறாக, 5 கிலோ சர்க்கரை உட்பட, மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கல் பரிசு, இலவச திட்டங்கள் போன்ற சலுகைகள், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களின் ஓட்டுகளை கவர, அவற்றையும் அரிசி கார்டுகளாக மாற்ற, நவ., 19ல் இருந்து, 29ம் தேதி வரை, அரசு அவகாசம் வழங்கியது. பொங்கலுக்கு, அரிசி கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும், 4.50 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள் மட்டுமே, அரிசி கார்டுகளாக மாற்ற விண்ணப்பித்து உள்ளனர்.

விரும்பவில்லை

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்க்கரை கார்டுதாரர்களில், பலர் வசதியானவர்கள். அவர்கள், ரேஷன் அரிசியை வாங்க விரும்ப வில்லை.மேலும், பொங்கல் பரிசில், 1,000 ரூபாய் ரொக்கத்தை வாங்கினால், உறவினர்கள் விமர்சனம் செய்வர் என்று, கருதுகின்றனர். அத்துடன், அரிசி கார்டாக மாற்றினால், தற்போது கிடைக்கும், 5 கிலோவுக்கு பதில், 2 கிலோசர்க்கரை தான் கிடைக்கும்.

இது போன்ற காரணங்களால், சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுக்கு மாற விரும்பவில்லை. அரிசி கார்டுகளாக மாறியுள்ள, சர்க்கரை கார்டுகளுக்கு, சில தினங்களில், அரிசி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ.2,000 கோடிக்கு 500 ரூபாய் நோட்டுகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை வாங்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்து உள்ளது.

தமிழக அரசு ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, இரண்டு கோடி அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை, முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இருப்பினும், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு, எந்த தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது என்ற விபரம், இதுவரை, அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப் படவில்லை.

பயனாளிகளுக்கு வழங்கும் சமயத்தில், 500 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, அதை, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொங்கல் பணம் வழங்க, 2,000 கோடி ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள் தேவை. கூட்டுறவு துறையின் கீழ், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அந்த வங்கிகளில், மக்களின் டிபாசிட், அவர்கள் அடகு வைத்த நகைகளுக்கு வட்டி செலுத்துவது, நகைகளை மீட்பதுபோன்றவற்றின் வாயிலாக, தினமும், பல கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

இதனால், 1,000 ரூபாய் வழங்க ஏதுவாக, தேவையான தொகைக்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு வங்கிகளில், இருப்பு வைக்குமாறு, மாவட்ட இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும், அதிக தேவை இருப்பதால், 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிகிறது. எனவே, 2,000 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 500 கோடி ரூபாய்க்கு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...