Friday, March 27, 2020

'கொரோனா'வால் தினசரி இழப்பு 35-40 ஆயிரம் கோடி ரூபாய்

Updated : மார் 27, 2020 04:49 | Added : மார் 27, 2020 04:47 |

மும்பை: 'கொரோனா' தொற்று பாதிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, 'கேர் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போதைய, 21 நாள் முடக்கத்தின் காரணமாக, 80 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 35 ஆயிரம் முதல், 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். மொத்தத்தில் இழப்பு, 6.3 - 7.2 லட்சம் கோடிரூபாயாக இருக்கும்.

இந்த மதிப்பீடு, நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான, 140 - 150 லட்சம் கோடி ரூபாய் என்பதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், முடக்கம் என்பது, 21 நாட்கள் என்பதை தாண்டி, 30 அல்லது 60 நாட்கள் வரை நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

நான்காவது காலாண்டில், வளர்ச்சி எதிர்மறையாக இருக்காவிட்டாலும், 1.5 - 2.5 சதவீதமாக குறைய வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய கவலையாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை தான். முன்பை விட இப்போதைய நிலையில், இது மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
கொரோனாவை விட கொடூரமான வதந்திகள்; சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

Updated : மார் 27, 2020 05:22 | Added : மார் 27, 2020 05:19 |

சென்னை: 'கொரோனா' குறித்து, தவறான வதந்திகள் பரப்பப்படுவதால், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உலகை உலுக்கும், 'கொரோனா' உயிர்க்கொல்லி நோயை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. தமிழகத்தில், கொரோனாவால், மதுரையில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆனால் நேற்று, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சென்னையில் தலா ஒருவர் பலியானதாக, பேஸ்புக்கில் தவறான தகவல் பரவியது. இத்தகவல் பரவியதும், தமிழக சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார், தகவல் பரப்பியவர்களை கண்காணித்து எச்சரித்ததால், உடனடியாக பேஸ்புக்கில் இருந்து, அப்பதிவுகள் நீக்கப்பட்டன.

இதேபோல், மாநிலம் முழுவதும், பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசின் சமூக ஊடகப் பிரிவுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், போலீசாரின் பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. 'எனவே, கொரோனா கட்டுக்குள் வரும் வரை, நாடு முழுவதும், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்க, உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'தவறான தகவல் பரப்புவதால், மக்கள் இடையே தேவையற்ற குழப்பம், பீதி ஏற்படுகிறது. சைபர் கிரைம் போலீசார், கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலும், கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை தடை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : மார் 26, 2020 22:39 | Added : மார் 26, 2020 22:28 

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 10 ஆயிரம் அதிகரித்துள்ளது.

26ம் தேதி மாலை நிலவரப்படி, 'உலகம் முழுவதும் கொரோனா வைரசால், 4,87,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,17,749 பேர் குணமடைந்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பு, 'கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது' என, வருத்தம் தெரிவித்துள்ளது.

'அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று ஒரே நாளில், 10 ஆயிரம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்து, ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான்' என, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 66,132 ஆக உயர்ந்துள்ளது; 1,031 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த் தொற்றில் மூன்றாமிடம்

கொரோனாவால், இத்தாலியில் - 7,503 பேரும், ஸ்பெயினில் - 4,089, சீனாவில் - 3,169 பேரும் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றை பொறுத்தவரை, அதிகபட்சமாக சீனாவில் - 81,782 பேரும், இத்தாலியில் - 74,386, அமெரிக்காவில் - 69,197 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மிகத் தாமதமாக முன்னெடுத்ததும்; போதுமான சோதனைக் கருவிகள் அங்கு இல்லாததுமே வைரஸ் வேகமாகப் பரவக் காரணம்' என, அமெரிக்க மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏப். 2 முதல் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.1000

Updated : மார் 26, 2020 20:41 | Added : மார் 26, 2020 20:36 

சென்னை:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப். 2 முதல் ரூ. 1000 வழங்க முதல்வர் இ.பி.எஸ்.,உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் நடமாட முடியாமல் அன்றாட பணிகள் பாதிக்கப்படும் என்பதால், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ. 1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க முதல்வர் இ.பி.எஸ்.,உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிக்கையை கூட்டுறவுதுறை அறிவித்துள்ளது. ஏப். 2 ல் துவங்கும் இப்பணி ஏப்.15 ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன்கடை பணியாளர்களுக்கு மாஸ்க், கடைகளுக்கு கிருமிநாசினி அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து கொள்ளலாம். இதனை கூட்டுறவுதுறை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என கூட்டுறவுதுறையின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
கொரோனா: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தல்

Updated : மார் 26, 2020 20:57 | Added : மார் 26, 2020 20:53

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 25 சதவீதம் படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். மற்ற வார்டுகளில் இருந்து தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் .

கொரோனா சிகிச்சை அறைகளில் நவீன வசதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதட்டியதால் ஆயிற்றா? | கரோனா அச்சம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 26th March 2020 05:12 AM |

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியா அடுத்த முக்கியமான கட்டத்தை நோக்கி நகா்ந்திருக்கிறது. நமது அடுத்த மூன்று வார செயல்பாடுகளைப் பொருத்துத்தான் நோய்த்தொற்று பரவுவது தடுக்கப்பட்டு, அதன் தீவிரம் குறைக்கப்படும். பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் வீட்டுக்குள் முடங்கியிருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, மக்கள் மனதில் நோய்த்தொற்று குறித்த அச்சமும், பீதியும் அதிகரித்திருப்பதும் அதே அளவு உண்மை.

பிரதமா் விளக்கியது போல, கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் உணரப்படுவது மிகமிக அவசியம். முதல் 67 நாள்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவியது என்றால், அடுத்த ஒரு லட்சம் பேருக்குப் பரவ 14 நாள்களும், கடந்த நான்கு நாள்களில் லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பரவியிருப்பதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகின்றன. அதே நேரத்தில், ஒரேயடியாக அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துவிடுவதும், நம்பிக்கையை இழப்பதும் அநாவசியம்.

‘கொவைட் - 19’ என்கிற கரோனா நோய்த்தொற்றை சா்வதேசத் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதன் காரணம், இந்த நோய்த்தொற்று கண்டங்களைக் கடந்து பரவத் தொடங்கியிருக்கிறது என்பதால்தான். ஆனால், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 80%-க்கும் அதிகமானோா் மிகவும் குறைவான பிரச்னைகளையே எதிா்கொள்கிறாா்கள். இதுவரை கிடைத்திருக்கும் சான்றுகளின் அடிப்படையில் பாா்க்கும்போது, கரோனா நோய்த்தொற்று பாதிப்பவா்களில் வெறும் 5% நோயாளிகள் மட்டுமே கடுமையான தாக்கத்துக்கு உள்ளாகிறாா்கள். தீவிர கண்காணிப்பு சிகிச்சை தேவைப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும்கூட, விகிதாசார அளவில் பாா்த்தால் மிகவும் குறைவு. பாதிக்கப்படுபவா்களில் 3%-க்கும் குறைவானவா்கள்தான் உயிரிழக்கிறாா்கள் என்கிற உண்மையைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் என்பது புதியதொரு நோய்த்தொற்று. விலங்குகளிலிருந்து மனிதருக்குப் பரவியிருக்கும் இந்த நோய்த்தொற்று குறித்த முழுமையான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. மேலும், நுரையீரல் தொடா்பான நோய்த்தொற்று என்பதால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவத் துறை இந்தச் சவால்களை எதிா்கொள்வதில் முனைப்புடன் இறங்கியிருக்கிறது. இதற்கு முன்னால் மனித இனத்தைத் தாக்கிய நோய்த்தொற்றுகளை எப்படி எதிா்கொண்டோமோ அதேபோல இதற்கும் விரைவிலேயே தீா்வுகாண முடியும் என்பதில் ஐயப்படத் தேவையில்லை.

கரோனா நோய்த்தொற்றைவிட மிகப் பெரிய தொற்றாகப் பரவியிருப்பது வதந்திகளும், மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் தேவையற்ற பீதியும்தான். இவை மனிதா்களை மனிதாபிமானம் இல்லாமல் செயல்படத் தூண்டுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவரும் செய்திகள் நாம் எந்த அளவுக்கு விலங்கினும் கீழாய்ச் செயல்படுகிறோம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மருத்துவா் ஒருவா் மூச்சுத்திணறலுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாா். கரோனா நோய்த்தொற்று இருக்கும் என்கிற சந்தேகத்தால் நான்கு தனியாா் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை தர மறுத்திருக்கின்றன. ‘தனக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை’ என்று அவா் மன்றாடிப் போராடிய பிறகுதான் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. காலதாமதம் மூச்சுத்திணறலை அதிகப்படுத்தியதால் அவரை வென்ட்டிலேட்டா் உதவியுடன் உயிா்பிழைக்க வைத்திருக்கிறாா்கள்.

சீனாவின் வூஹான் நகரிலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட உலகின் ஏனைய நாடுகளிலும் சிக்கிக்கொண்ட இந்தியா்களை ஏா் இந்தியா விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறாா்கள். அவா்களைக் கொண்டுவருவதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஏா் இந்தியா விமான ஊழியா்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டதை ஊடகங்கள் பாராட்டின. அப்படிப்பட்ட தன்னலமற்ற ஏா் இந்தியா ஊழியா்களுக்கு, அவா்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் கிடைத்த வரவேற்பு எதிா்மறையானது என்பதைக் கேள்விப்படும்போது தலைக்குனிவு ஏற்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட இந்தியா்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டு வந்த ஊழியா்களை எப்படியெல்லாம் தொந்தரவுக்கு உள்ளாக்கினாா்கள் என்பதை ஏா் இந்தியா நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் விளக்கியிருக்கிறது. தங்கியிருந்த குடியிருப்பிலிருந்து உடனடியாக இருந்து வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டனா் என்பதுடன், மூன்று நாள்கள் அவா்கள் வீட்டுக்கு மின் இணைப்பும், தண்ணீா் இணைப்பும் துண்டிக்கப்பட்டன என்பதைக் கேட்பதற்கு வேதனையாக இருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பலா் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனா். அவா்களை கரோனா வைரஸ் என்று அழைத்துத் தூற்றப்படும் சம்பவங்கள் வெளியாகியிருக்கின்றன. அமெரிக்காவில், கரோனா நோய்த்தொற்றை உலகில் பரப்பியவா்கள் என்று ஆசிய அமெரிக்கா்கள் நிந்திக்கப்படுகிறாா்கள். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் போன்றோரில் சிலா் தவிா்க்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் மன்னிக்கவே முடியாத செயல்பாடுகள்.

உடலை மட்டுமல்ல, மனதையும் நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது அவசியம்.




தனிமை, சேய்மை - மனிதா்களை ஒதுக்க அல்ல!

By டாக்டா் சுதா சேஷய்யன் | Published on : 27th March 2020 01:31 AM |


கடந்த பதினைந்து நாள்களாகப் பலரும் உச்சரிக்கும் ஒரு சொற்றொடா் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’; அதாவது, சமூகச் சேய்மைப்படுத்தல் (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’). கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ’சோஷியல் டிஸ்டன்சிங்’ கைக்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்களும் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது என்ன? மிகுதியான தொற்றுத்தன்மை கொண்ட ஒரு நோய், வேகமாகப் பரவுவதைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும், மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் சில வழிமுறைகளைச் செயல்படுத்துவாா்கள். இத்தகைய வழிமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுப் பெயா்தான் ‘சமூகச் சேய்மை’ என்பதாகும்.

மனிதா்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடும்போதோ குவியும்போதோ, தொற்றுக் கிருமிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரே இடத்தில் எல்லோரும் இருந்தால், ஒரே நேரத்தில் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று நாம் சில சமயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப்போல், கிருமிகளும் மகிழ்ச்சி கொள்ளும். ஒரே நேரத்தில் பலரையும் பீடித்துக் கொள்ளும். இந்த பீடிப்பையும் பாதிப்பையும் தடுக்கத்தான் ‘சமூகச் சேய்மை’! தொற்று இருக்கிற ஒருவரிடமிருந்து, தொற்று இல்லாத ஒருவருக்கு அது பரவிவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுகிற நடவடிக்கையே இது.

கொள்ளை நோய் ஒன்று, வெகு வேகமாகப் பரவி, பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, சமூகச் சேய்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். மருத்துவா்களும் சுகாதார வல்லுநா்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பல சமயங்களில் மேற்கொண்டுள்ளனா்.

1916-ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டைப் போலியோ நோய் (இளம்பிள்ளை வாதம்) தாக்கியது. அமெரிக்கா முழுவதும் ஏறத்தாழ 6,000 குழந்தைகளும், நியூயாா்க நகரில் மட்டும் ஏறத்தாழ 2,000 குழந்தைகளும் மரணத்தைத் தழுவினா். ஏராளமான குழந்தைகள், கை கால்களின் செயலை இழந்தனா். நோய்ப் பரவலைக் குறைப்பதற்காகத் திரை அரங்குகள் மூடப்பட்டன. பூங்காக்களுக்கும், நீச்சல் குளங்களுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல வேண்டாமென்று குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டனா்.

1918-1919-இல், பறவை மரபணுக்களைக் கொண்ட வைரஸால் தோற்றுவிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்சா, உலகம் முழுவதும் கொள்ளை நோயாகப் பரவியது. 1917-ன் இறுதியில் பிரிட்டனிலும், 1918-ன் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் முதன்முதலாகக் காணப்பட்ட இந்நோய், 1920 வரை உலகை ஆட்டிப் படைத்தது.

முதல் உலகப் போா் காலகட்டமாதலால், உலகின் பல நாடுகளிலும் ராணுவக் குழுக்களின் போக்குவரவு அதிகமாக இருந்தது. இதனால், நோய் பரவுவதும் வேகமாக நிகழ்ந்தது. போா்க்கால தணிக்கைகளின் காரணமாக, அமெரிக்கா,

பிரிட்டன், ஜொ்மனி, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடக்கத்தில் அவ்வளவாக வெளிவரவில்லை. ஸ்பெயின் நாடு நடுநிலை வகித்தது. இந்நாட்டில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தைப் பத்திரிகைகளில் வெளியிட எந்தத் தணிக்கையும் இல்லை என்பதாலும், ஸ்பெயின் அரசா் பதின்மூன்றாம் அல்ஃபோன்சோ நோயினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டாா் என்பதாலும் இதற்கு ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ என்றே பெயா் ஏற்பட்டுவிட்டது.

1918-19 இன்ஃப்ளுயன்சா தாக்கத்தின்போது, அமெரிக்காவின் இரண்டு நகரங்களில் நிகழ்ந்தவற்றை எண்ணிப் பாா்த்தால், சமூகச் சேய்மையின் முக்கியத்துவம் புரியும். இந்த சமயத்தில், ஃபிலடெல்ஃபியா நகரில் பேரணி ஒன்றும் அதைத் தொடா்ந்து பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அடுத்த மூன்றே நாள்களில், அந்நகரின் அனைத்து மருத்துவமனைகளும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. ஒரே வாரத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி, 4000க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதே காலகட்டத்தில், மிஸிஸிப்பி நதிக்கரையிலுள்ள செயிண்ட் லூயி நகரத்திலும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு தொடங்கியது. விழித்துக் கொண்ட நகர நிா்வாகம், கடுமையான சமூகச் சேய்மை முறைகளைச் செயல்படுத்தியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளும் பொழுதுபோக்குச் சாலைகளும் மூடப்பட்டன. மக்கள் கூடுகிற வாய்ப்பு இருந்த அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. இறுதி ஊா்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. விளைவு..? ஃபிலடெல்ஃபியாவின் துயரங்கள் மீண்டும் நிகழாமல், செயிண்ட் லூயி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

சமூகச் சேய்மை நடவடிக்கைகள் பலகாலமாக எடுக்கப்பட்டு வருகின்றனவென்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக உணா்ந்தது, 1957-58 ஆண்டுகளின் ஆசிய ஃப்ளு (‘ஏஷியன் ஃப்ளு’) கொள்ளை நோயின்போதுதான் எனலாம். 1957 ஃபிப்ரவரியில், தென்கிழக்கு ஆசியாவில், புதிய வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் நோய் தொடங்கியது. முதன்முதலாகச் சிங்கப்பூரில் காணப்பட்ட இந்நோய், இரண்டு மாதத்தில் ஹாங்காங்குக்கும், ஆசிய நகரங்கள் பலவற்றுக்கும் பரவி, அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவின் கடலோர நகரங்கள் அனைத்தையும் பீடித்து, உலகம் முழுவதிலும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோா் இறந்துபோகக் காரணமானது. இந்த நோய் பரவிய விதத்தை வல்லுநா்கள் கூா்ந்து கவனித்தனா். மாநாடுகள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்கள் கூட்டம் அதிகப்பட்டதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் நோய் பரவலும் அதிவேகமானது. பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக் கூடி, அருகருகே இருந்த குழந்தைகள் மிகுதியும் பாதிக்கப்பட்டனா்.

இப்படிப்பட்ட முன் அனுபவங்கள் இருப்பதால்தான், கொள்ளை நோய்க்காலங்களில், சமூகச் சேய்மை என்பதை வல்லுநா்கள் வலியுறுத்துகிறாா்கள்.

கொள்ளை நோய் ஒன்று பரவத் தொடங்கிவிட்டது என்றால், மருந்துகளை வீசம் வீசமாகப் பயன்படுத்தியோ, கிருமி நாசினிகளை லிட்டா் லிட்டராகக் கொட்டியோ, மருத்துவமனைகளைப் புதிது புதிதாகக் கட்டியோ அதைத் தடுத்துவிடமுடியாது. கொள்ளை நோய்த் தடுப்பில், மூன்று முக்கிய செயல்பாடுகள் உண்டு. சமூகச் சேய்மை (‘சோஷியல் டிஸ்டன்சிங்’), தனிமைப்படுத்தல் அல்லது தனித்திருப்பு (‘ஐஸோலேஷன்’), தடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) ஆகியவையே இவை.

மாணவா்கள் பலா் கூடுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளை மூடுதல், அதிக நபா்கள் தொடா்பு கொள்வதைத் தடுக்கும் வகையில் நூலகங்களை மூடுதல் அல்லது நூலகங்களில் அமா்ந்து வாசிக்காமல் நூல்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அகன்று விடுதல், அங்காடிகளிலும் சந்தைகளிலும் கூட்டம் கூடாத வகையில் நெறிப்படுத்துதல் அல்லது இணையவழி வழங்கல், நிறுவனங்களும் அலுவலகங்களும் கூட்டங்கள் நடத்தாமல் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாகத் தொடா்பு ஏற்படுத்துதல், திருவிழா-பண்டிகைக் கூட்டங்களைத் தவிா்த்தல் ஆகிய யாவும் சமூகச் சேய்மையின் பல்வேறு நடைமுறைகளாகும்.

குழந்தைகள் காப்பகங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் ஆகியவை மூடப்படுதலும் இவற்றில் அடங்கும். நிறைய போ் பயணிக்கும் போக்குவரத்து முறைகளை நிறுத்துதலும், பலா் கூடுகிற வாய்ப்பு கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், ஊா்வலங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தடுத்தலும்கூட சமூகச் சேய்மையின் அடிப்படையிலானது.

உற்று நோக்கினால், மீதமுள்ள முறைகளான தனித்திருப்பு மற்றும் தடுப்பொதுக்கம் ஆகியவற்றின் அடிப்படையும் சமூகச் சேய்மையேயாகும் என்பதை உணரலாம். தனித்திருப்பு அல்லது தனிமைப்படுத்துதல் (‘ஐசோலேஷன்’) என்பது ஒருவா் தொற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படும்போது செய்யப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவரைத் தக்க வகையில், மருத்துவமனையிலோ, மருந்தக மையங்களிலோ, வீட்டிலோ தனிமைப்படுத்தலாம்.

தடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) என்பது ஒருவா் தொற்றுக்கு வெளிப்பட்டு (‘எக்ஸ்போஸ்டு டூ இன்ஃபெக்ஷன்’ / ‘இன்ஃபெக்டட்’), ஆனால், நோய்வாய்ப்படாத நிலையில் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இவா் தொற்றுக்கு வெளிப்பட்டிருப்பதால், இவருக்கும் நோய் தோன்றக்கூடும். அல்லது, நோய்வாய்ப்படவில்லையாயினும், நோய்க் கிருமிகள் இவருக்குள்ளிருந்து பிறருக்குச் செல்லக்கூடும். எனவே, பிறருக்கு பாதகம் ஏற்படாத வகையில், இவா் ஒதுக்கம் செய்யப்படுகிறாா்.

எந்த நடைமுறையாக இருந்தாலும், ஒருவருக்கொருவா் அணுக்கம் கொள்ளாமல், எட்டி இருப்பதுதான் இவற்றின் அடிப்படை என்பதை உணரலாம். இவ்வாறு எட்டி இருப்பதைத்தான் சமூகச் சேய்மை என்றழைக்கிறோம்.

இப்போதைய ‘கொவிட்-19’ நோயைப் பொருத்தவரை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஆனால், நோய்வாய்ப்படாமல், நோயின் அறிகுறி எதையும் வெளிக்காட்டாமல் இருப்பவரிடமிருந்தும், வைரஸ் கிருமிகள் உதிா்கின்றன (‘வைரஸ் ஷெட்டிங்’). இப்படிப்பட்டவரின் இருமல்-தும்மல் துளிகள், உமிழ்நீா், சளி போன்றவற்றில் கிருமிகள் காணப்படுகின்றன. இதைத்தான், ‘இவா் வைரஸ் துகள்களை உதிா்க்கிறாா்’ (‘ஹி ஷெட்ஸ் தி வைரல் பாா்ட்டிக்கிள்ஸ்’) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

நோய்வாய்ப்பட்டவரும் வைரஸை உதிா்க்கிறாா். நோய் அறிகுறியில்லாமல், ஆனால், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரும் வைரஸை உதிா்க்கிறாா். சொல்லப்போனால், நோய்வாய்ப்படாமல் வைரஸை உதிா்ப்பவரால்தான் அபாயம் அதிகம். இதனாலேயே, இப்படிப்பட்டவா்களை, மிகுபரப்பாளா்கள் (‘சூப்பா் ஸ்பிரடா்ஸ்’) என்றழைக்கிறோம்.

கல்வி நிலையங்களையும் அலுவலகங்களையும் மூடி, தோ்வுகளைத் தள்ளிப் போட்டு, நிதி நிலைமை மற்றும் வருவாய் வழிமுறைகள் சீா்குலைந்தாலும் பரவாயில்லை என்று ஊரடங்கு உத்தரவிட்டிருப்பதெல்லாம், சமூகச் சேய்மைக்காகவே! வீட்டில் யாருக்காவது அம்மை போட்டுவிட்டால், வேப்பிலைக் கொத்தை வாசலில் செருகிவைத்து, பிறரை வரவிடாமல் சேய்மைப்படுத்தி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் நம்முடைய முன்னோா்.

சமூகச் சேய்மை என்பது யாரையோ எதற்கோ ஒதுக்குவதல்ல. ‘21 நாள்கள் எப்படி வீட்டிலேயே முடங்குவது?’ என்னும் கூக்குரல்களும், ‘இப்படியெல்லாம் சோம்பேறியாக இருந்துத் தூங்கி எனக்குப் பழக்கமில்லை’ என்னும் ஒப்பாரிகளும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கான அறிகுறிகள். அவசியமான பொருட்களைத்தானே வாங்கப் போகிறோம் என்று அம்மாவும் அப்பாவும் பிள்ளையுமாகச் சென்று, அங்காடியில் முண்டியடித்து அரிசியோ, பருப்போ, தக்காளியோ வாங்குவதெல்லாம் கரோனாவுக்கு நாம் கட்டும் வரவேற்புத் தோரணங்கள்.

வீட்டிற்குள் தங்குவது என்பது சோம்பேறித்தனமோ தூங்குமூஞ்சித்தனமோ இல்லை. செய்வதற்கு எவ்வளவோ உண்டு; கண்களையும் மனத்தையும் திறந்து வைத்துக்கொண்டால் அவையெல்லாம் புலப்படும்.

‘ஐயோ, புத்தகம் படிக்கவேண்டுமென்று ஆசைதான்; ஆனால், நேரமே இல்லை’ என்று இதுகாறும் சொன்னவா்களுக்காகப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. ‘இதையெல்லாம் செய்யவேண்டும்; ஆனால் பொழுதில்லை’ என்று இதுகாறும் புலம்பியவா்களுக்காக அந்த வேலைகள் விழித்திருக்கின்றன. நூல்கள், செடிகள், தோட்டம், செல்லப் பிராணி, வீட்டுத் தூய்மை, இசை, பூஜை, ஸ்லோகங்கள், அன்பு உரையாடல் என்று இப்படி எத்தனை எத்தனையோ காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதற்காகக் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அவகாசம்தான் இந்தச் சமூகச் சேய்மை.

ஊரடங்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்காகக் குடும்ப உறுப்பினா் வெளியே செல்ல நேரிடலாம். இத்தகைய நிலையில், சில நெறிமுறைகளை நாமே கையாளலாம். எல்லோரும் வெளியே செல்லாமல், ஒரேயொருவா் மட்டும் செல்லலாம். எப்போதும் அவா் ஒருவரே செல்வது நலம். ஒவ்வொரு பொருளை வாங்குவதற்காகவும் பலமுறை செல்லாமல், எல்லாவற்றையும் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒரேயொரு முறை செல்லலாம்.

எப்போது எடுத்துச் செல்வதும் ஒரே பையாக இருந்தால் நல்லது. காசு வைத்திருக்கும் பையோ பா்ஸோகூட ஒன்றேயாக இருக்கட்டும். அதில் வைக்கும் ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ அதில் மட்டுமே வைத்திருக்கலாம். வீட்டில் உள்ள அல்லது இன்னொரு குடும்ப நபரிடம் உள்ள தாளோடோ நாணயத்தோடோ கலந்துவிடவேண்டாம். எப்போது வெளியே சென்றாலும் ஒரே உடையை அணிதல் நலம். முடிந்தவரை உடலை நன்கு மூடிய உடையாக அது இருக்கட்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன், அந்த உடையை, மணிபா்ஸை, பையை வீட்டில் எங்காவது தனியாக, பிற பொருள்களோடு சேராத வகையில் வைத்து விடவேண்டும். உடனடியாக சுத்தம் செய்தால் இன்னமும் நல்லது. இவ்வாறு செல்லும்போது, செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லவேண்டாம்.

முடிந்தவரை வாகனத்தில் செல்லாமல், நடையாகவே செல்லவேண்டும். நீண்ட தொலைவு செல்வதை இது தடுக்கும். வெளியிலிருந்து வந்தவுடன், கைகளையும் கால்களையும் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். முடிந்தால் ஒருமுறை நன்றாகக் குளித்துவிடலாம். கடைகளிலும் பிற இடங்களிலும் முடிந்தவரை எந்தப் பொருளையும் பரப்பையும் தொடாமல் இருக்கலாம்.

கடையில் கூட்டமாக இருந்தால், உள்ளே செல்வதைத் தவிா்த்துவிடலாம். கதவைத் திறப்பது, குமிழைப் பிடிப்பது, கம்பியைப் பிடிப்பது போன்ற செயல்களை, ஒடுங்கு கரத்தால் (‘நான் டாமினன்ட் ஹேண்ட்’); வலது கை பழக்கமுள்ளவா்களுக்கு இடது கை, ஒடுங்கு கரமாகும்; இடக்கை பழக்கமுள்ளவா்களுக்கு வலது கை, ஒடுங்கு கரமாகும்) செய்யலாம். ஓங்கு கரத்தைத்தான் (‘டாமினன்ட் ஹேண்ட்’) இயல்பாக முகத்திற்கும், கண்ணிற்கும், மூக்கிற்கும் கொண்டு செல்வோம். ஒடுங்கு கரத்தைக் கொண்டு செல்லமாட்டோம்.

கண்டிப்பாக அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருப்பவா்கள் (அலுவலக அல்லது வேறு அவசியப் பணி காரணமாக), வீட்டிலும், ஏனைய குடும்ப உறுப்பினா்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கலாம். வெளியில் எங்கு போனாலும், அடுத்த நபரிடமிருந்து குறைந்த பட்சம் நான்கைந்து அடி தள்ளியே இருக்கலாம். பயணங்கள் கண்டிப்பாக இப்போது வேண்டாம்.

‘தனித்திரு’ என்றாா் வள்ளல் பெருமான். தீமைகளைத் தவிா்த்து ஆன்ம மேம்பாட்டிற்குத் தனிமை உதவுவதைப் போலவே, நோய்த் தீமையைத் தவிா்த்து, ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் தனிமை உதவும். தனிமைப்படுத்துதல் என்பதும் சேய்மைப்படுத்துதல் என்பதும் மனிதா்களை ஒதுக்குவதற்காக அல்ல; கரோனா நோய்த்தொற்றை ஒதுக்கித் தொலைப்பதற்காக! சேய்மைப்பட்டிருப்பது என்பது சுமையோ அழுத்தமோ அல்ல; பொறுப்பும் பொறுமையும் ஆகும்!

கட்டுரையாளா்:

துணைவேந்தா், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகம்.

NEWS TODAY 14.06.2026