Saturday, August 16, 2025
சுதந்திரம் சரி, ஜனநாயகம்?
சுதந்திரம் சரி, ஜனநாயகம்?
முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சொன்னதைப்போல், 'மக்களாட்சியான ஜனநாயகத்தின் தாய் இந்தியா' என்பதை நம்முடைய அரசியல்வாதிகள் மறந்துவிடக் கூடாது.
கோப்பிலிருந்து
டி.எஸ்.ஆர். வேங்கடரமணா Published on: 16 ஆகஸ்ட் 2025, 4:56 am
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; ஆனால், எதிரிக்கு பதவி ஆசை என கூறிக் கொண்டே, தன் பதவிக்காகப் போராடும் தலைவர்கள், தொலைக்காட்சி வாயிலாக நம் வீட்டுக் கூடத்துக்குள் வந்து பொய்யுரை ஆற்றுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆளுநர் பதவியை வைத்து தங்களை வேவு பார்ப்பதாக சொன்ன கட்சிகள், இன்று ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளுநரை வைத்து ஆளும் மத்திய அரசு சித்து வேலைகளைச் செய்கிறது.
இன்று கூட்டணிக் கட்சிகளை பாஜக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்று சொல்லும் காங்கிரஸ்தான், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலான 1952-இல் முழுமையாக பலம் இல்லாமல் உழவர் உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி இரண்டையும் அகஸ்திய மாமுனிவர் வாதாபியை ஜீரணித்ததுபோல் ஜீரணித்து விட்டது. காங்கிரஸின் அசுரப் பசிக்கு பலியான மாநிலக் கட்சிகளும், சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரிவுகளும் ஏராளம். இந்திய அரசியலில் ஆளும் கட்சி என்ற ஒன்று நிரந்தரமாக இல்லை. ஆளுங்கட்சி தோற்று எதிர்க்கட்சியாகி, எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகும் அரசியல் ராட்டினம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது இந்திய ஜனநாயகத்தின் வெற்றிதான். ஆனால், பதவிக்கு வருபவர்கள் நாட்டைக் குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர்போல் செயல்படுவது துரதிருஷ்டம்.
தேர்தல் என்றால் வாக்குச் சீட்டுதானே பிரதானம். இந்திரா காந்தி வென்றால் ரஷிய மை என இந்திய வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதும்; இந்திரா காந்தி தோற்றவுடன் ஜனநாயகத்தின் வெற்றி எனக் கொண்டாடுவதும் நகை முரண். அந்த எதிர்க்கட்சிகள் கையில் கிடைத்த ஆட்சியைத் தக்கவைக்க முடியாமல், மீண்டும் இந்திராவிடமே ஆட்சியை ஒப்படைத்தார்கள்.
1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி இந்திரா காந்தி அவசர நிலையைக் கொண்டு வந்தார் என 50 ஆண்டுகளாக லாலி பாடும் கட்சிகள், அவர்தான் 1977-இல் தேர்தலைக் கொண்டு வந்து, தோல்வியைச் சந்தித்தார் என்பதையும், ரஷிய மையின் உதவியில்லாமல் மீண்டும் 1980-இல் ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதையும் காங்கிரஸ் உள்பட அனைவரும் மறந்தது துர்பாக்கியம்தான்.
தேர்தல் ஆணையத்தின் விருப்பப்படி, வாக்கு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ். படித்தவர்கள் அதிகமுள்ள மாநிலமான கேரளத்தில் நடைபெற்ற பரவூர் இடைத்தேர்தலில், இந்த இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் உபயோகப்படுத்தப்பட்டன. இதை இந்திராவின் சதியென கம்யூனிஸ்ட் தோழர்கள் எதிர்த்தார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்து, கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றார். சும்மா இருப்பார்களா காங்கிரஸ்காரர்கள்? தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். வாக்குப்பதிவு இயந்திரம் சரியானது என சாட்சி சொன்னது யாரென்று தெரியுமா? தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த நவீன எழுத்தாளர் சுஜாதா. வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப்போல், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது காங்கிரஸ். அவர்களின் கெட்டிக்கார வழக்குரைஞர் வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்காமல், தேர்தல் நடைமுறைச் சட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி சொல்லப்படவில்லை; தேர்தல் என்பது வாக்குச்சீட்டுகளால் மட்டுமே நடத்தக்கூடியது என்ற விதியை சுட்டிக்காட்டி வாதத்தை முன்வைக்க, அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தேர்தல் சட்டத்தை திருத்தாமல் நடைமுறையை மாற்றக் கூடாது எனத் தேர்தலை ரத்து செய்தது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைக் கண்டு பயந்த மம்தா வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கடுமையாகச் சாடினார். ஜனநாயகம் பல விந்தைகளை உள்ளடக்கியதுதானே; தேர்தலில் மம்தா அமோக வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை.
சட்டப்பேரவை, நாடாளுமன்ற நிகழ்வுகளில் கேள்வி நேரமும் மற்றும் உடனடிக் கேள்வி நேரமும் (ஜீரோ ஹவர்) மிக முக்கியமானது; இவைதான் உறுப்பினர்களின் உண்மையான நேரம். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற பேதம் இல்லாமல் அனைவரும் அரசு நிர்வாகத்தை எதிர்த்து (ஆளும் கட்சியை அல்ல) கேள்வி கேட்கலாம். அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
கேள்வி நேரத்தில் பதிலுக்குப் பிறகு, குறுக்குக் கேள்வி என்று அமைச்சரையும், அவருக்கு உதவும் அதிகாரிகளையும் கேள்வி கேட்டுத் திணற வைக்கலாம். கிட்டத்தட்ட உடனடிக் கேள்வி நேரம் வழக்கொழிந்து போய்விட்டது. அவை கூடியவுடனேயே கேள்வி நேரத்தின் மாண்பும், மதிப்பும் தெரியாமல் அதை ஒத்திவைத்து விட்டு, தாங்கள் எழுப்பும் பிரச்னையை உடனே விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூச்சலிடவும், ஆளும் கட்சி அதைவிடக் குழப்பங்கள் விளைவிக்க அவை ஒத்திவைக்கப்படுகிறது. கூச்சல், குழப்பம் காரணமாக ஒவ்வொரு முறையும் அவையில் ஜனநாயகப் படுகொலை நடைபெறுகிறது.
அவையில் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு, ஆளும் கட்சியை எதுவும் செய்ய முடியாது என்ற நிலை இருக்கும்போது முறையான விவாதங்களை அனுமதிக்க மக்களவைத் தலைவர் மறுப்பது முறையல்ல. பஹல்காம் படுகொலையின்போது வெளிநாட்டிலிருந்து பிரதமர் உடனே இந்தியா திரும்பியது முறை என்றால், அவர் அவைக்கு வராமல் பிகார் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றது முறையல்ல.
கூச்சல், குழப்பம் இருந்து 14 மணி நேர விவாதத்தின்போது உண்மைகள் மறைக்கப்பட்டன. இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் படிப்பறிவு இல்லாதவர்கள்; ஆனால் அவர்கள் முட்டாளோ, ஊமைகளோ அல்லர்.
முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சொன்னதைப்போல், 'மக்களாட்சியான ஜனநாயகத்தின் தாய் இந்தியா' என்பதை நம்முடைய அரசியல்வாதிகள் மறந்துவிடக் கூடாது.
கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
Wednesday, August 13, 2025
தமிழ்நாடு தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்
தமிழ்நாடு தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்
தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
13 ஆகஸ்ட் 2025, 2:48 am
தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு மாணவர் சோக்கை இல்லாத 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நீலகிரி- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்-12, சென்னை, ஈரோடு, மதுரை தலா 10 என்ற எண்ணிக்கையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களைச் சோக்க கல்வித் துறைக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் பூ.ஆ.நரேஷ் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 37,595 அரசுப் பள்ளிகள், 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 12,929 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், 65 மத்திய அரசுப் பள்ளிகள் பள்ளிகள் என மொத்தம் 58,924 பள்ளிகள் வருகின்றன. இவற்றில் மொத்தம் 1,21,22,814 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 42,54,451-ஆகவும், அரசு உதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 13,51,972-ஆகவும் உள்ளது.
பிறப்பு விகிதம் தொடா்ந்து குறைவு: தமிழகத்தில் நிகழாண்டில் 208 அரசுப் பள்ளிகள் (தொடக்க, நடுநிலை), 114 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 11 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், மத்திய அரசின் இரு பள்ளிகள் என மொத்தம் 1,204 பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 2020 ஜூலையில் வெளியிட்ட இந்திய மக்கள் தொகை மதிப்பீடு (2011-2036) குறித்த தகவல்கள் தமிழகத்தில் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2011-இல் 0-1 வயதில் 10.74 லட்சமாக இருந்த மக்கள்தொகை 2016-இல் 10.45 லட்சமாகவும், 2021-இல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டைப் பொருத்தவரை அது 8.78 லட்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழக பொது சுகாதாரத் துறை கடந்த 2024-இல் வெளியிட்ட விவரங்களின்படி 2023-இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9,02,718 எனவும், 2024-இல் 6.2 சதவீதம் குறைந்து 8.46 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 % தனியாா் பள்ளிகள்... நிகழாண்டு மாணவா் சோக்கை நிகழாத பள்ளிகளில் 72 சதவீதப் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகள் ஆகும். அரசுப் பள்ளி, தனியாா் பள்ளி என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் மாணவா்கள் சோகை குறைவுக்கு தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதே மிக முக்கிய காரணம். மூடப்பட்ட 207 பள்ளிகளில் புதிய மாணவா் சோக்கை தேவை ஏற்பட்டால் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் கிராமம் மற்றும் தொலைவில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பள்ளியில் சேரும் தகுதியான 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் யாரும் இல்லை. மேலும், தனிநபா் பொருளாதார வளா்ச்சி அதிகரித்ததால் தங்களின் பிள்ளைகள் தனியாா் பள்ளியில் சோவதைப் பெருமையாக ஒரு சில பெற்றோா் கருதுவதால், தனியாா் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்வியைத் தொடருகின்றன.
மேலும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக தங்கள் குடும்பங்களுடன் நகர்ப்புற மற்றும் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்கின்றனர். இதன் விளைவாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, மாணவர்களே இல்லை.
கூடுதலாக 1.75 லட்சம் மாணவர்கள்... இதுவரை, தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 4,07,379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சமீபத்திய தரவுகளின்படி, தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் 1,75,660 மாணவர்கள் அதிகமாகப் படிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 61,49,337 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 59,73,677 மாணவர்களும் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர்களைச் சேர்ப்பதிலும், சேர்க்கை பெற்ற மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தப்படும். என்றும் அவர் கூறினார் .
Subscribe to:
Comments (Atom)
-
Chennai lockdown news: Today's updates from your city TIMESOFINDIA.COM | Apr 3, 2020, 07.59 AM IST Amid prevalent chaos an...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்! நமது நிருபர் நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்... தவறான வா...






























.jpg)











