Tuesday, December 23, 2014

சிரிக்க மறந்த கதை

இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.

கவலையின் அளவு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால், எல்லாருமே பிரச்னைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.

சென்னை போன்ற நகரங்களில் மின்சார ரயிலில் தினந்தோறும் 30 கிலோமீட்டர் பயணிக்கும் ஒரு பயணி, அருகில் அமர்ந்திருப்போரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் சிந்தனையிலேயே அமர்ந்திருப்பார்.

தான் தினமும் கடந்து செல்லும் பாதையில் பிரபல உணவகம் ஒன்று அமைந்திருக்கும். ஆனால், அதைப் பற்றி அவருக்கு சுத்தமாகத் தெரிந்தே இருக்காது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவ மாணவர்கள் கபடி, கிட்டிப்புள்ளு, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் என பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும், விளையாடச் செல்லலாம் என்ற முனைப்பில் இருப்பர்.

இன்று அப்படியல்ல. விடியோ விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே முக்கியப் பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களாகவே சிரித்துக் கொள்வதைத்தான் காண முடிகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே அரிதான விஷயமாக உள்ளது.

"மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு' என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்தளவுக்கு வாழ்க்கை வெறுமையாகி விட்டது என நாம் நினைக்கிறோம்.

வேறு சிலருக்கோ, "சே, என்னடா வாழ்க்கை இது' என்ற சலிப்பு. வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறு கூறலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரே இவ்வாறு கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.

பிரச்னையையே வாழ்க்கையாக எதிர்கொள்ளும் இளைஞன், நாளடைவில் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். அது அவனது எதிர்காலத்தையே பாழாக்குகிறது.

சிரிப்பை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏதாவது ஒரு விஷயத்தை மனதில்போட்டு குழப்பிக் கொள்கிறோம். சிரிப்பைத் துரத்தியடிக்கும் ஓர் ஆயுதமாக கவலை நம்முன் நிற்கிறது.

கவலைகளை மறப்பதற்கு இன்று பலரும் பல்வேறு வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர். அதில் ஒன்று யோகக் கலை. யோகக் கலையில் பல்வேறு ஆசனங்களைச் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது.

அதுபோல, தொடர்ந்து சில நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் மனசு லேசாகிறது. யோகா வகுப்புகளில் இது ஒரு பாடமாகவும் கற்றுத் தரப்படுகிறது.

கவலைகளை மறப்பதற்காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, சிரிப்பு மூட்டும் செய்திகளைக் கூறி மகிழ்கின்றனர்.

சிரிப்பு என்பது மனித குணநலன்களின் ஒன்று. சிரிப்பை நிர்ணயிப்பது மூளை. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன் சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது. ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான்.

நமது மனத்துக்குள் எழும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது சிரிப்பு. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். ஆனால், சிரிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.

சிரிப்பில் பல வகைகள் உள்ளன. புன் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு இப்படி. சிரிப்பு ஒருவரின் மனத்தையும், உடலையும் வலிமைப்படுத்தி, அவரைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

"நைட்ரஸ் ஆக்ûஸடு' என்ற ஒரு வேதிப்பொருளுக்கு "லாஃபிங் கேஸ்' (சிரிப்பு வாயு) என்று பெயர். இது ஒரு நிறமற்ற வாயு. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கைகொடுக்காத நிலையில், இந்த வாயு ஓர் அருமருந்தாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதாவது, மன அழுத்தத்துக்கு உள்ளானோருக்கு சிறந்த மருந்தாக விளங்குவது சிரிப்பு என்று தெரிவிக்கின்றனர்.

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பு நமது சிரிப்பில் நாம் நம்மைக் காண்போமே!

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...