Thursday, September 24, 2015

வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



இருசக்கர வாகனத்துடன் சேர்த்து தரமான 2 ஹெல்மெட்களை வாகன தயாரிப்பாளர்களே வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியது தொடர்பான அறிக் கையை அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹெல்மெட் அணியாததால் ஜூன் மாதம் 582 பேர், ஜூலை மாதம் 498 பேர், ஆகஸ்ட் மாதம் 571 பேர், செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை 289 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, ஜூலை மாதம் மட்டும் ஹெல்மெட் கட்டாய உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவ்வாறு அமல்படுத்தப் படவில்லை என்று தெரிகிறது.

நகரங்கள், சிறிய நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். கிராமப்புறங்களில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு சரிவர அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் கட்டாய உத்தரவை மாநிலம் முழுவதும் அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

ஹெல்மெட் வடிவமைப்பு, தயாரிப்பு தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 138 (எப்)-ன்படி இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாகனத்துடன் சேர்த்து ஹெல்மெட் தரவேண்டும். பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால், இந்திய தர நிர்ணய அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துடன் கூடிய 2 ஹெல்மெட்டுகளை வாகனத்துடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இதன்மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தரமற்ற ஹெல்மெட் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். ஹெல்மெட்டை வைத்து பூட்டுவதற்கான வசதியுடனேயே இருசக்கர வாகனங்களை தயாரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் விபத் தில் சிக்கி அரசு மருத்துவமனை களுக்கு கொண்டுவரப்பட்டு இறந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க உத்தரவிடும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கண்ட தகவல்களை தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

முன்னதாக விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், ‘‘ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்பு தொடர்பான வீடியோ காட்சிகளை ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது காண்பிக்கலாம். ஹெல்மெட் விழிப்புணர்வு முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஹெல்மெட் கட்டாயம் என்பதை மக்கள் இயக்கமாகவே மாற்ற வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...