Thursday, September 10, 2015

ஒரே பதவி; ஒரே பென்ஷன்

logo


மத்திய அரசாங்க பணியில் இப்போது 48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், ஓய்வுபெற்ற பிறகு பென்ஷன் பெறுகிறவர்களின் எண்ணிக்கை 55 லட்சம் ஆகும். இதேபோல, ராணுவத்தில் இப்போது 13 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், 24 லட்சத்து 25 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரும், 6 லட்சம் போர் விதவைகளும் பென்ஷன் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கடந்த 42 ஆண்டுகளாக பெரிய மனக்குறை இருந்தது. பொதுவாக மத்திய அரசாங்க ஊழியர்கள் 60 வயதுவரை பணியாற்றிய பிறகுதான், பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்கள். ஆனால், ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றுபவர்கள் 35 வயதில் இருந்து 37 வயதுக்குள் ஓய்வுபெற்றுவிடுகிறார்கள். அவர்களில் கமிஷன் பதிவு பெறாத அதிகாரிகளாக அல்லது இளநிலை கமிஷன் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுபவர்கள் மட்டும் 40 வயது முதல் 45 வயதுவரை பணியாற்றமுடியும். ஆனால், 10 சதவீத சிப்பாய்களால்தான் இந்த பதவி உயர்வை பெறமுடியும். இதற்குமேல் உள்ள பதவியில் உள்ளவர்களும் 50 வயது முடிந்து ஓரிரு ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். தலைமை பதவிக்கு செல்பவர்களால் மட்டுமே 60 வயதுவரை பணியாற்ற முடியும்.

இப்படி குறைவான காலமே பணியாற்றுவதால் அவர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்காமல், அதன் தொடர்ச்சியாக சம்பளத்தைக் கணக்கிட்டு வழங்கப்படும் பென்ஷனும் குறைவாகவே இருக்கிறது. இதுதவிர, மற்றொரு குறையும் அவர்களுக்கு இருந்தது. 1973–ம் ஆண்டுவரை ராணுவத்தினருக்கு அவர்கள் கடைசியில் வாங்கிய சம்பளத்தில் 70 சதவீதம் பென்ஷனாக கிடைத்தது. பிறகு 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதுபோல, பல்வேறு மாற்றங்கள், சம்பள மாற்றங்கள் போன்றவற்றால் ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் பென்ஷன், அவர்கள் ஓய்வுபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் ஒருவர் கூடுதலாகவும், அதே பதவியில் இருந்த மற்றவர் குறைவாகவும் பெற்றனர். இந்த பாகுபாட்டை நீக்கும் வகையில், இப்போது கொள்கை அளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். அதாவது, ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், அவர்கள் எந்த ஆண்டில் ஓய்வுபெற்றிருந்தாலும், ஒரே பென்ஷன் தொகையை இனி பெறுவார்கள். ஆனால், ஏற்கனவே ஆண்டுக்கு 74 ஆயிரத்து 896 கோடி ரூபாயை பென்ஷன் வழங்குவதற்காக செலவழிக்கும் மத்திய அரசாங்கம், இப்போது ராணுவத்தினர் பென்ஷன் சீரமைப்புக்காக கூடுதலாக 8 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை செலவழிக்க வேண்டியது இருக்கும். நிச்சயமாக இது நிதி பற்றாக்குறையில் இன்னும் விரிசலை ஏற்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல், எல்லை பாதுகாப்பு படை போன்ற அமைப்புகளும், மத்திய–மாநில அரசு ஊழியர்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினால் நிச்சயமாக கூடுதல் நிதி தேவைப்படும். அந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்த நிலையில், நேற்று மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை வரஇருக்கிறது. அதிலும், 16 சதவீத சம்பள உயர்வு, பென்ஷன் உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆகும் கூடுதல் செலவுகளை புதிதாக வரிகளை உயர்த்தி மக்கள் தலையில் சுமத்தாமல், நிதி திரட்ட வேறு செலவுகளை குறைத்தோ, வேறு வழிகளில் நிதியை உருவாக்கவோ முயற்சி எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...