Wednesday, February 1, 2017

யாது ஊர்? யாவர் கேளிர்?

By ஆசிரியர்  |   Published on : 01st February 2017 03:00 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருக்கும் நிர்வாக முடிவால் உலகமே கொந்தளித்துப் போயிருக்கிறது. ஈரான், இராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய ஏழு முஸ்லிம் நாட்டுப் பயணிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு, அதிபர் டிரம்பின் அரசு நிர்வாக தடையாணை பிறப்பித்திருக்கிறது. எகிப்து, சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏனைய இஸ்லாமிய நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெறாததற்கு, ஒருவேளை, அந்த நாடுகளுடனான பொருளாதார நெருக்கமும், வேறு சில கட்டாயங்களும் காரணமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாகவோ என்னவோ, இத்தனை நாளும் இல்லாமல் பாகிஸ்தான் பயந்து போய் மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான முக்கியக் குற்றவாளி ஹபீஸ் சையதையும் அவரது நான்கு கூட்டாளிகளையும் காலவரையின்றித் தடுப்புக் காவலில் வைத்திருக்கிறது. எத்தனையோ அழுத்தங்களுக்கு செவிசாய்க்காத பாகிஸ்தான் இப்போது விரைந்து செயல்பட்டிருப்பதிலிருந்து, அடுத்து தானும் அதிபர் டிரம்பின் வெறுப்புப் பட்டியலில் இடம் பெற்றுவிடக் கூடாது என்கிற அச்சம் மட்டுமே காரணமாக இருக்கக்கூடும்.
அடுத்த 120 நாள்களுக்கு, அதாவது நான்கு மாதங்களுக்கு, அகதிகள் அமெரிக்காவில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, சிரியா அகதிகளுக்கான எல்லா திட்டங்களும் முடக்கப்படுகின்றன. அதிபர் டிரம்பின் உத்தரவு வெளிநாட்டில் மட்டுமல்லாமல், அமெரிக்காவிலேயே மிகுந்த புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த முடிவுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க தகவல் தொலைத்தொடர்பு, திரைப்படம், கல்வி, மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் தொழிலதிபர்களும் இந்தத் தடைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்கா எப்படி உருவானது என்கிற சரித்திரம், அந்த நாட்டின் அதிபரான டொனால்ட் டிரம்புக்குத் தெரியாமல் இருக்காது. இப்போது குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் மூதாதையரே ஒரு காலத்தில் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். 1540 முதல் 1924 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் பூர்வ குடியினரான செவ்விந்தியர்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்து, ஐரோப்பாவிலிருந்து குடியேறிய வெள்ளையர்கள் அமெரிக்காவைத் தங்களது நாடாக மாற்றிக் கொண்டார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.
பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களில் கணிசமானவர்கள், அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் என்பதுதான் அதைவிட விசித்திரம். இணையத்தில் காணப்படும் சாண்ட் க்ரீக் மாசக்கர் உள்ளிட்ட அமெரிக்க இந்தியப் போர்கள் பற்றிய தகவல்களைப் படித்துப் பார்த்தால், அமெரிக்கப் பூர்வ குடியினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான இனப் படுகொலை குறித்துத் திடுக்கிடும் தகவல்கள் தெரியும்.
அதிபர் டிரம்புக்குத் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொழிலாளர்களும், நடுத்தர, அடித்தட்டு அமெரிக்கர்களும் அவரது அதிரடி முடிவை உணர்ச்சி மிகுதியால் வரவேற்கலாம். ஆனால் இந்த முடிவு அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைக்கக் கூடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்துமே குடியேறியவர்களின் அறிவாலும், திறமையாலும், உழைப்பாலும்தான் அமெரிக்காவை உலக வல்லரசாக வைத்திருக்கின்றன.
கடந்த எட்டு ஆண்டுகளில், அமெரிக்காவில் எந்தவொரு பெரிய தீவிரவாதத் தாக்குதலும் நடைபெறாத நிலையில் அதிபர் டிரம்ப் எடுத்திருக்கும் முடிவு, தீவிரவாதிகளை அமெரிக்காவைக் குறிவைக்கத் தூண்டும் என்பதுடன், அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையிலுள்ள இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மூளைச் சலவை செய்து அணி சேர்க்கவும் உதவக்கூடும். இஸ்லாமியத் தீவிரவாதத்தின் பிடியில் ஒரு சில நாடுகள் சிக்கிக் கொண்டிருப்பதால், அந்த நாட்டிலுள்ள அத்தனை பேருமே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது அமெரிக்கா போன்ற ஒரு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது.
அதிபர் டிரம்பின் முடிவு, அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றுகூடத் தோன்றுகிறது. 1965-இல் இதேபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டபோது, எவர் ஒருவருக்கும் இடம், பால், குடியுரிமை, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நுழைவு அனுமதி மறுக்கப்பட முடியாது என்று நீதிமன்றத்தால் அமெரிக்க அதிபரின் ஆணை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நியூயார்க், வர்ஜீனியா, மஸாஸýசெட்ஸ் ஆகிய மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்கள், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி இருக்கின்றன.
அதிபர் டிரம்பின் முடிவால் பிற தரப்பினரைவிட அதிகமாக பாதிக்கப்படப் போவது அமெரிக்காவாகத்தான் இருக்கும். அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிபர் டிரம்பிடம் காணப்படும் மனநிலை காணப்படுகிறது என்பதுதான் வேதனை. சிறுபான்மையினரின் அச்சம் என்பது போய், பெரும்பான்மை மக்கள், குடியேற்றத்தின் காரணமாகத் தங்களது பெரும்பான்மை போய்விடுமோ, கலாசாரப் பண்பாடுகளும், மதமும் பாதிக்கப்படுமோ என்று அச்சப்படுவதன் விளைவுதான் இந்த மனநிலை.
இனத்தையும் மதத்தையும், மொழியையும் மீறி, சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார் கூறியதுபோல, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்கிற மனநிலை ஏற்பட்டாலொழிய இந்த நோய்க்கு மருந்து இருப்பதாகத் தெரியவில்லை!

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...