Friday, February 24, 2017

கேந்த்ரிய வித்யாலயாக்களில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: வரும் கல்வியாண்டில் அறிமுகம்

By புதுதில்லி  |   Published on : 24th February 2017 07:36 AM  | 
நாடு முழுவதும் உள்ள கேந்த்ரிய வித்யாலயாவில் (கே.வி) மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் கல்வியாண்டு (2017-18) முதல் ஆன்லைனில் (இணையதளம்) பூர்த்தி செய்து சமர்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
தில்லியின் புறநகர்ப் பகுதியான ஷாதராவில் புதிய கேந்த்ரிய வித்யாலயாவுக்கான (கே.வி) அடிக்கல்லை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வியாழக்கிழமை நாட்டினார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ஜாவடேகர் பேசியதாவது: அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம்தான் சிறந்த குடிமக்களை திடமான குணநலன்களுடன் உருவாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என பெற்றோர் காணும் கனவை நனவாக்கும் வகையில் கேந்த்ரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன.
கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்களை ஈடுபடுத்தி உடல் ரீதியாகவும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கடின உழைப்பையும் கூட்டாக போதிக்கும் முயற்சியிலும் கேந்த்ரிய வித்யாலயாக்கள் ஈடுபட்டுள்ளன.
கேந்த்ரிய வித்யாலயாக்களை பெருநகரங்களில் கட்டுவதற்கு தற்போது வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிகள் தடங்கலாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, ஆறு பெருநகரங்களில் கேந்த்ரிய வித்யாலயாக்களை கட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள நான்கு ஏக்கர் நிலத்துக்குப் பதிலாக 2.5 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என்றும், எட்டு ஏக்கர் நிலம் தேவை என நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் ஐந்து ஏக்கர் இருந்தாலே போதும் என்றும் திருத்தம் கொண்டு வரப்படும்.
கேந்த்ரிய வித்யாலயாவில் சேருவதற்கு விண்ணப்பங்களை பெறவும் பின்னர் அவற்றை சமர்ப்பிக்கவும் பெற்றோர்கள் திண்டாடும் நிலையைத் தவிர்க்க வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கேந்த்ரிய வித்யாலயா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ’ஆன்லைன்' மூலம் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
கேந்த்ரிய வித்யாலயாக்களில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக கூடுதலாக 6,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
இந்நிகழ்ச்சியில் வடகிழக்கு தில்லி மக்களவை உறுப்பினர் மனோஜ் திவாரி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...