Thursday, November 2, 2017


கடலூர் வெள்ள தடுப்புப் பணியில் ஊழல்: நீதிமன்றமே முன்வந்து வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை!

க.பூபாலன் எஸ்.தேவராஜன்

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள காலங்களில் நிவாரணப் பணி என்று கோடி கணக்கில் கொளையடிக்கப்படுகின்றன. இதை நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




இதுகுறித்து, "ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை என்றாலே அதிகம் பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். இதிலிருந்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு, "நிரந்தர வெள்ள தடுப்புப் பணி"க்காக ரூபாய் 140 கோடி நிதி ஒதுக்கினார். அத்தோடு, சிறப்பு நிதியாகவும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் எந்த ஒரு பணியும் முழுமையாக முடிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இப்போதுதான் கடலூர் நகரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மழைக்கு வெட்டிய வாய்க்கால்களை மழை முடிந்ததும் மூடிவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் இப்போது தோண்டுகிறார்கள். மழை வந்தால் தோண்டுவதும், முடிந்தால் மூடுவதுமாக இருக்கிறார்கள். இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வே இல்லை. இரண்டு நாள் மழைக்கே கடலூர் நகரம் தாக்குபிடிக்காமல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில், "வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கடுமையான மழை வந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்ப்படாதவாறு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.




மழை வெள்ள நிவாரணப் பணிகள், நிரந்தர தடுப்புப் பணிகள், தூர்வாருதல் என இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2015-ல் அடித்த மழை வெள்ளத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாக 100 கோடி ரூபாய் கணக்கு காட்டினார் அமைச்சர் எம்.சி.சம்பத். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிற்ப்பு கிளம்பியது. அதன்பிறகு அது ரூபாய் 40 கோடியாக குறைந்தது. இது ஒன்றுதான் வெளியில் தெரிந்தது. வெளியில் தெரியாமல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எவ்வளவு அடித்திருக்கிறார்களோ, அல்லது அடிக்கப்போகிறார்களோ என்று தெரியவில்லை. இதுகுறித்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் வெள்ளை அறிக்கை கொடுக்கவேண்டும். மழை வெள்ளம் என்றாலே பொதுமக்களுக்குத்தான் பயம். ஆனால், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அல்ல. அவர்களுக்கு கொண்டாட்டம்தான். இதுகுறித்து நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று விசாரணை செய்யவேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...