Wednesday, November 22, 2017


இறுதி கட்டத்தை எட்டியது வழக்கு : தி.மு.க., 'மாஜி' மந்திரி கலக்கம்


Added : நவ 21, 2017 22:16

ஐநுாறு கோடி ரூபாய், வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெகத்ரட்சகன் மீதான விசாரணை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க., சார்பில், மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தவர், ஜெகத்ரட்சகன். அவர், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, 2016 ஜூலையில், வருமான வரித்துறையினர், அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான மருத்துவ கல்லுாரி, பொறியியல் கல்லுாரிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்கள்...
சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள வீடு, அலுவலகம், தி.நகரில் உள்ள அவரது நட்சத்திர ஓட்டல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 'எலைட்' மதுபான ஆலை என, 35க்கும் மேற்பட்ட இடங்களில், சோதனை நடந்தது. அதில், கோடிக்கணக்கில் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம், 400 கோடி ரூபாய்க்கு அதிகமான, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை, வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். தற்போது, அந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை தொடர்பாக, வாக்குமூலம், விசாரணை போன்ற நடைமுறைகள் முடிந்தன.
அதைத் தொடர்ந்து, இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அது, தற்போது, வரி மதிப்பீட்டுக்காக, சென்னையில் உள்ள புலனாய்வுப் பிரிவின், மத்திய பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள், இறுதி அறிக்கையை மதிப்பீடு செய்து வருகின்றனர். விரைவில், மத்திய பிரிவினர் மதிப்பீடு அறிக்கையை தயாரித்து முடிப்பர். பின், அது தொடர்பான, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யக் கூறி, ஜெகத்ரட்சகனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும். அவர் ஆஜராகி அளிக்கும் பதிலை பொறுத்து, வழக்கின் திசை தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் நோக்கமா? : வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: அரசியல் பின்னணி காரணமாக, சோதனைகள் நடத்துவதாக, வருமான வரித்துறையினர் மீது, சில அரசியல் கட்சியினர் புகார் கூறுகின்றனர். நாங்கள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., என, பிரித்து பார்ப்பதில்லை. அதனால் தான், தி.மு.க., பிரமுகரான ஜெகத்ரட்சகனின் வீடுகளில் சோதனை நடத்தினோம்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, முன்னாள் அமைச்சர், விஸ்வநாதன் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கெல்லாம், பல நுாறு கோடி ரூபாய் ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆதாரம் இல்லாமல், நாங்கள் சோதனை நடத்துவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026