Monday, November 13, 2017

கடன் அட்டை இனி கடந்த காலம்?


By DIN  |   Published on : 13th November 2017 12:00 AM  | 
credit

கடன் அட்டை, பற்று அட்டை என்கிற கிரெடிட்-டெபிட் கார்டுகள் பயன்பாடு பரவலாகி வருகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் இந்த "அட்டை' முறை காணாமல் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
 இன்னும் நான்கு ஆண்டுகளில் டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்காது என தெரிகிறது. மொபைல்போன் வாயிலாகவே நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு விடுவதால் இந்த நிலை விரைவில் ஏற்படவுள்ளதாக நீதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
 இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளும், 88 கோடிக்கும் மேலான டெபிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இதுதவிர, பொது, தனியார் துறை வங்கிகளுக்குச் சொந்தமாக 1 லட்சத்துக்கும் அதிகமான ஏடிஎம்கள் மக்களின் வசதிக்காக மாநகரங்களில் மட்டும் வீதிக்கு வீதி நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது ஆறாவது விரலாக அனைவரின் கைகளில் ஒட்டிக் கொண்டே இருப்பது மொபைல்போன். இதனை பயன்படுத்தி நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போக்கு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்தே அமிதாப் காந்த் இந்த கருத்தை கூறியிருக்கிறார் என்பது புலனாகிறது.
 அமெரிக்கா, ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்கும் கீழானவர்கள். 2040ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பாவில் பெரும்பான்மையான சதவீதத்தினர் மத்திய வயதைக் கடந்த இளம் வயோதிகர்கள்தான். இந்தநிலையில், இளம் தலைமுறையினர் அதிக அளவில் நம்முடன் இருப்பது பெரும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. உலக சராசரியுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் ஏராளமான மொபைல்போன் பயன்பாடும், வங்கி கணக்குகளும், கோடிக்கணக்கான பயோமெட்ரிக் பதிவுகளும் உள்ளன. இந்த நிலையில், அதிக நிதி பரிவர்த்தனைகளும் மொபைல்போன் மூலமாகவே செய்து முடிக்கும் பழக்கம் இளம் வயதினரிடையே கணிசமாக அதிகரித்து வருகிறது. இது, மேலும் விரிவடையும்பட்சத்தில், அடுத்த 3-4 ஆண்டுகளில் டெபிட், கிரெடிட், ஏடிஎம்களுக்கான தேவை சுருங்கிவிடும். அது முற்றிலும் வழக்கொழிந்து போக வாய்ப்புள்ளதா என்றால் அப்படியும் கூற முடியாது. அவற்றுக்கென ஒரு சில பயன்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஸ்மார்ட்போன் யுகத்தில் அட்டை, ஏடிஎம்கள் ஓரங்கட்டப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது!

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...