Friday, August 10, 2018

மாவட்ட செய்திகள்
 
கருணாநிதி மறைவு: திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை

கருணாநிதி மறைவு: திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை
 
கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை.
திருவாரூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது.

நேற்று 2-வது நாளாக திருவாரூர் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப் பட்டது. ரெயில்கள் இயங்கிய போதும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவர் படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். திருவாரூர் கமலாலயம் கிழக்கு கரையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில் கட்சியினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் வர்த்தகர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். பின்னர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். பூக் கடைகள், பிளக்ஸ் போன்ற கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

திருவாரூர் பஸ் நிலையம், கடைவீதி போன்ற முக்்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

நன்னிலம், கங்களாச்சேரி, ஆண்டிப்பந்தல், பனங்குடி, சன்னா நல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அதேபோல கருணாநிதியின் மறைவையொட்டி கோட்டூர், பெருகவாழ்ந்தான், களப்பாள், விக்கிரபாண்டியம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

கருணாநிதியின் மறைவையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...