Friday, August 3, 2018

தலையங்கம்

தேர்வுத்தாள் திருத்துவதில் முறைகேடா?




மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது.

ஆகஸ்ட் 03 2018, 03:00

மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது. நீதி தேவதைபோல கையில் துலாக்கோலை வைத்துக்கொண்டு, விடைத்தாளை துல்லியமாக மதிப்பிட வேண்டிய கடமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரி படிப்பில் ஆசியாவில் முன்னணியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில், 13 உறுப்புக் கல்லூரிகளும், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவையில் மண்டல மையங்களும் இருக்கின்றன. இதுதவிர, 593 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில், பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டு முதல் இதுவரை தேர்வு எழுதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள் என்று ஏற்கனவே புகார் வந்தது. இப்போது, 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மறுமதிப்பீட்டில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில், 73 ஆயிரத்து 733 மாணவர்கள் பாஸ் மார்க் பெற்றுள்ளனர். 16 ஆயிரத்து 636 மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்றதாக அறிவிக்கப்பட்ட மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஆக, 90 ஆயிரத்து 369 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில், பெரிய முறைகேடு லஞ்சஒழிப்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாணவர், தான் தேர்வில் பெற்ற மதிப்பெண் திருப்தியில்லாமல் மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.300 பணம் கட்டி முதலில், குறிப்பிட்ட விடைத்தாளின் போட்டோ காப்பியை பெறவேண்டும். அதில், மதிப்பெண் குறைவாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால், மீண்டும் ரூ.400 கட்டி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மறுமதிப்பீடு செய்வதற்காக, அமைக்கப்பட்ட மையத்தில்தான் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. லஞ்சஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக முன்பு பணியாற்றிய பேராசிரியை ஜி.வி.உமா உள்பட 10 ஆசிரியர்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பேராசிரியர்கள் மத்தியிலும், இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு பெரிய மவுசு உண்டு. கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை விட, பணம் கொடுத்து சரியாக படிக்காத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக விடைத்தாள் திருத்தும் முறை, மறுமதிப்பீட்டு முறையில் ஒரு கண்டிப்பான நடைமுறையை கொண்டுவர வேண்டும். மறுமதிப்பீட்டில் சிறிதும் தவறு ஏற்படக்கூடாது. மறுமதிப்பீட்டில் பெரிய மாற்றம் இருந்தால், ஏற்கனவே விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதை செய்யாவிட்டால் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது நம்பிக்கை இழந்து, இங்குவந்து கேம்பஸ் இண்டர்வியூ நடத்த தயங்கிவிடுவார்கள். இது மாணவர்களின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...