Wednesday, February 19, 2020

எமனாக வருகிறது எல்.எஸ்.டி போதை... பெற்றோர்கள் மிக மிக மிக ஜாக்கிரதை!
கோவையை உலுக்கும் சைக்கோடேலிக் பார்ட்டிகள்

கோவையை உலுக்கும் சைக்கோடேலிக் பார்ட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில் கோவை சரவணம்பட்டி மற்றும் அவிநாசி சாலைப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்றதாக, சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். `எல்.எஸ்.டி’ எனப்படும் போதை மருந்து தடவிய போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இன்னபிற போதை மருந்துகள்தான் அவை.

‘எல்.எஸ்.டி-யை நாக்கில் வைத்தால் போதும்... கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, அடுத்த எட்டு மணி நேரத்துக்கு அவர்கள் வேறு உலகுக்குச் சென்றுவிடுவார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் குறுகியகாலத்திலேயே உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். தற்போது கோவையில் கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள், பெண்கள் எனப் பலரும் எல்.எஸ்.டி-யைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றெல்லாம் தகவல்கள் கிடைக்க, கவலை கலந்த அதிர்ச்சியுடன் விசாரணையில் இறங்கினோம்.

ஸ்டாம்ப் வடிவிலான போதைப்பொருள்

ஆப்பிரிக்கா டு கோவை

இதுதொடர்பாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘எல்.எஸ்.டி போதைப்பொருள், உகாண்டாவில் தயாரிக்கப்பட்டு பிற ஆப்பிரிக்க நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவில் கோவாதான் இதற்கான ஹப். இரண்டாவது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு எல்.எஸ்.டி விவகாரத்தில் சென்னையில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அதன் பிறகு ஆங்காங்கே எப்போதாவது எல்.எஸ்.டி-க்காக கைது சம்பவம் நிகழும். ஆனால், கோவையில் எல்.எஸ்.டி-க்காக தொடர் கைது சம்பவங்கள் நிகழ்வது இதுவே முதன்முறை.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பலரும் கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் கோவை வருகின்றனர். அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்னை உள்ளது. அதற்காக அவர்கள் கையில் எடுத்திருப்பது தான் எல்.எஸ்.டி போன்ற போதைப்பொருள் விற்பனை. தற்போது, இதில் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுகிறார்கள். ஒரு போதை ஸ்டாம்ப், சராசரியாக 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஸ்டாம்ப் அட்டையில் 20 முதல் 25 ஸ்டாம்ப்கள் வரை இருக்கும். இதில் பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

எல்.எஸ்.டி விலை உயர்ந்தது என்பதால் பெரும்பாலும் ‘சைக்கேடேலிக் ராக்’ மற்றும் ‘ரேவ்’ எனப்படும் போதை விருந்து கொண்டாட்டங்களில்தான் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது ஏற்கெனவே மிதமான போதையில் இருப்பவர்களை உச்சபட்ச போதைக்கு அழைத்துச் செல்வதுதான் சைக்கேடேலிக். தமிழில் இதற்கு `மாயத்தோற்றம்’ என்று பெயர். போதை ஏற ஏற, இசையின் ஒலியை ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். இசை ஒலிக்குத் தகுந்தாற்போல் போதையும் ஏறிக்கொண்டே இருக்கும்.

சைக்கேடேலிக் பார்ட்டி

சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சி சேத்துமடை அருகில் சைக்கேடேலிக் பார்ட்டி நடத்திய விவகாரத்தில், 150-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டார்கள். அந்த ஒரு விஷயம் மட்டும்தான் வெளியில் வந்தது. ஆனால், புறநகர் பகுதிகளில் வார இறுதி நாள்களில் பண்ணைவீடுகள், சர்வீஸ் அப்பார்ட்மென்ட்கள் இங்கெல்லாம் அடிக்கடி போதை விருந்து கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இவை வெளியே தெரிவதில்லை.

இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு இன்ஸ்டாகிராமைத்தான் தகவல் பரிமாற்றத்துக்காக அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதற்காகவே இன்ஸ்டாகிராமில் பிரத்யேகமாக குழு ஆரம்பிக்கின்றனர். அதில், பார்ட்டி குறித்து தகவல்கள் விழுந்துகொண்டே இருக்கும். கடைசி நிமிடத்தில்தான் பார்ட்டி நடக்கும் இடத்தின் தகவல், இதர விவரங்கள் சொல்லப்படும்.

வார இறுதியை போதைக் களிப்பில் அனுபவிக்க வேண்டுமென நினைக்கும் பெரும்சம்பளக்காரர்கள், வசதி படைத்த மாணவர்களிடையே இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே இதை ஒருங்கிணைக்கிறார்கள். எல்.எஸ்.டி-யால் ஏற்படும் பாதிப்புகுறித்து அறியாமல் பலரும் இதைப் பயன்படுத்துவது வேதனையளிக்கிறது’’ என்றனர் அக்கறையுடன்.


“எல்லாமே கலர்ஃபுல்!”

மிகுந்த சிரமத்துக்குப் பிறகு எல்.எஸ்.டி நெட்வொர்க்கைச் சேர்ந்த ஒருசில கல்லூரி மாணவர்களிடம் பேச முடிந்தது. அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாட்ஸப் காலில் தயக்கத்துடன் பேசினார்கள். ‘‘ப்ரோ... இத நாங்க யூஸ் பண்ணதில்ல. ஆனா, இத யூஸ் பண்றவங்களை நல்லா தெரியும். அதை வெச்சுதான் சொல்றோம். எல்.எஸ்.டி-யை நாக்குல வெச்ச எட்டு மணி நேரத்துக்கு செம ஆக்டிவா, செம பவரா இருக்கும். ஏதாவது பண்ணிட்டே இருக்கணும்போல இருக்கும். சிலர் இதைப் போட்ட அப்புறம் `எல்லாமே கலர்ஃபுல்லா தெரியுது’னு சொல்வாங்க. சிலர் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. சிலர் அவங்களோட மூக்கே அவங்களுக்கு ரொம்பப் பெருசா தெரியுதுனு சொல்லிச் சிரிப்பாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரியான மனநிலை இருக்கும். ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு இப்ப பொண்ணுங்களும் இதை யூஸ்பண்றாங்க. அதுலயே நிறைய வெரைட்டி கிடைக்குதுன்னும் சொல்றாங்க’’ என்றனர்.

கண்டுபிடிப்பது கடினம்!

கோவை போதை தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-யான வின்சென்ட்டிடம் பேசினோம். ‘‘கஞ்சா விற்பனையை பெருமளவுக்குத் தடுத்துவிட்டோம். இப்போது, எல்.எஸ்.டி போன்ற போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகம் பரவிவருகிறது. மாநில எல்லைகளில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. சமீபத்தில், தென் மண்டலத்தில் உள்ள அனைத்து போதை தடுப்புப் பிரிவு போலீஸாரும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். அதை தொடர்ந்து எங்களுக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதை விற்பவர்கள், வாங்குபவர்கள் அனைவருமே 35 வயதுக்குட்பட்டவர்கள்தான்.

கோவையை உலுக்கும் சைக்கோடேலிக் பார்ட்டிகள்

எல்.எஸ்.டி-யைப் பயன்படுத்துபவர்களுக்கு, கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும். நரம்புமண்டலம் பாதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பர். இளமையிலேயே முதுமைத்தோற்றம் வந்துவிடும். எல்.எஸ்.டி-யில் என்ன பிரச்னை என்றால், இது போதைப்பொருள் என்று பலருக்கும் தெரியாது. பார்ப்பதற்கு ஸ்டாம்ப் போன்று இருப்பதால், பெற்றோரோ கல்லூரி நிர்வாகமோ இதைக் கண்டறிய முடியாது. எங்கேயாவது மறைத்து வைத்தால் கண்டுபிடிப்பதும் கடினம். இதனால், இது எந்த வழியில் இங்கு வருகிறது என்பதும் சரியாகத் தெரியவில்லை.

எல்.எஸ்.டி நெட்வொர்க் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்.

கொடைக்கானலில் போதை விருந்து நடத்தியதற்காக 270 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோவையில் கைது செய்யப்பட்டவர்கள், அந்த போதை விருந்துக்கும் எல்.எஸ்.டி சப்ளை செய்யவிருந்தனர். அதற்குள் நாங்கள் அவர்களை கைதுசெய்துவிட்டோம். இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால், பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

‘‘மனப்பிறழ்வு ஏற்படுத்தும்!’’

சேலத்தைச் சேர்ந்த போதை மறுவாழ்வு நிபுணர் மற்றும் மனநல மருத்துவரான மோகன வெங்கடாஜலபதியிடம் பேசினோம். ‘‘எல்.எஸ்.டி போன்றவை சைக்கேடேலிக் போதை மருந்துகள் (மனதில் வித்தியாசமான உணர்வுகளை ஏற்படுத்தும் மருந்துகள்) வகையில் வரும். அதாவது, உளவியல்ரீதியாக வித்தியாசமான அனுபவங்களை ஏற்படுத்தும். காதில் வித்தியாசமான ஒலிகள் கேட்கும். இல்லாத ஒரு பிம்பம் தெரியும். இதை `மாயத்தோற்றம்’ என்போம். ஒருமுறை பயன்படுத்தினாலே அடிமைப்படுத்தக் கூடிய ஆற்றல்கொண்டவை. `மெய்ம்மறந்த இன்பம்’ (Ectacy) என்று சொல்லப்படும் உணர்வை இந்த போதைமருந்து ஏற்படுத்தும்.

இதுபோன்ற போதைமருந்துகள் இங்கு கிடைக்கின்றன என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை இந்த மருந்து பயன்பாட்டின் தொடக்கக்காலம் இதுவாக இருக்கலாம். நீண்ட ஆண்டுகள் அதீத தொடர் மதுப்பழக்கம் தரும் மனரீதியான பாதிப்புகளை சில மாதப் பயன்பாட்டிலேயே இதுபோன்ற போதைமருந்துகள் ஏற்படுத்திவிடும். நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு, மனப்பிறழ்வு ஏற்படும். எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. இறுதியில் அது தற்கொலைக்கும் தூண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதுபோன்ற போதைமருந்துகளை முற்றிலுமாகத் தடுப்பதுடன், அதற்கு அடிமையானவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டியதும் அவசியம்’’ என்றார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...