Saturday, January 16, 2021

இது உங்கள் இடம்: வாழ்த்துக்கள் ஜெயலட்சுமி

இது உங்கள் இடம்: வாழ்த்துக்கள் ஜெயலட்சுமி

Updated : ஜன 16, 2021 03:28 | Added : ஜன 16, 2021 03:26 



உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

வெ.தனசேகரன், மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தன் கிராமத்தில், 126 வீடுகளுக்கு கழிப்பறை கட்ட காரணமாக இருந்த மாணவி ஜெயலட்சுமியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. அரசு பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். கடந்த ஆண்டு, தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, நாசாவிற்கு செல்ல தேர்வானார். சிதைந்த ஓட்டு வீடு, சிறு வயதிலே கைவிட்டுச் சென்ற தந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட தாய் என, வறுமையில் வாடிய ஜெயலட்சுமியால், நாசா செல்வதற்கான கட்டணத்தை செலுத்த முடியவில்லை.அப்போது மாவட்ட நிர்வாகமும், பல தனியார் நிறுவனங்களும், அவருக்கு நிதியுதவி அளித்தன.

இந்நிலையில், 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம், ஜெயலட்சுமி நாசாவுக்கு செல்ல உதவுவதாக கூறியுள்ளது. ஆனால் ஜெயலட்சுமி, 'போதிய நிதி சேர்ந்து விட்டதால், எனக்கு எந்த உதவியும் வேண்டாம். என் கிராமத்தில் கழிப்பறை இல்லாமல், பெண்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். முடிந்தால், கழிப்பறை கட்டித் தாருங்கள்' என, கோரிக்கை விடுத்துள்ளார்.இதனால் வியந்த தொண்டு நிறுவனம், ஆதனங்கோட்டையில் கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்தது. அதன்படி, 126 வீடுகளில், தலா, 20 ஆயிரம் ரூபாய் செலவில், கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளது. இதுவரை இயற்கை உபாதைக்காக, 2 கி.மீ., காட்டு பகுதியை கடந்து சென்று வந்த பெண்கள், தற்போது வீட்டருகில் கட்டிய கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.


ஜெயலட்சுமி வறுமையில் தான் வாடுகிறார். வீட்டில் சமையல் உட்பட அனைத்து வேலைகளையும், அவர் தான் செய்கிறார். கூலி வேலைக்குச் சென்றபடியே, கல்வியும் கற்றுக்கொள்கிறார். ஒற்றை ஆளாய் தன் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் ஜெயலட்சுமி.இந்நிலையில் தான், தனக்கென ஏதும் கேட்காமல், ஊரின் சுகாதாரத்திற்காக உதவி கோரியுள்ளார்.ஜெயலட்சுமிக்கு பாராட்டுகள். அவரின், ஐ.ஏ.எஸ்., கனவு நிறைவேறவும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

NMC removes population rule for new medical colleges

NMC removes population rule for new medical colleges  SEAT EXPANSION  TIMES NEWS NETWORK  29.04.2026 Ahmedabad : The National Medical Commis...