DINAMANI
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
ஐந்தாண்டு பட்ஜெட் வருவாயில் இரண்டாண்டு பட்ஜெட் ஆட்சி செய்வோரின் கஜானாவுக்கு எந்தெந்த வழிகளிலோ போய்விடுகிறதே என்பதைப் பற்றி...
ஆர். நடராஜன் Updated on: 05 ஜனவரி 2026, 3:30 am
இவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான். அதேநேரம் பணம் குறித்துக் கவலைப்படாமல் என்ன விலை கொடுத்தாலும் அந்தப் பொருளை டஜன் கணக்கில் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள். பணம் என்னய்யா பணம், வாங்கிப் போடு எல்லாவற்றையும் என்பவர்கள் ஆளும்கட்சியினர். இதுதான் நம் ஜனநாயகத்தில் பதுங்கியுள்ள பண நாயகம்.
மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது என்று கவலைப்படுகிறார்கள் வர்த்தகர்கள். அரசின் புள்ளிவிவரங்களோ பொய்களுக்கு உண்மை முலாம் பூசி பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறது.
சரி, மக்களிடம் புழங்காத பணம், மக்கள் வரியாகச் செலுத்தும் பணம், எங்குதான் போகிறது? "நாங்கள் உங்கள் சேவகர்கள்' என்று கூறும் வெள்ளைச் சட்டைகளுக்குள் கருப்புப் பணமாக நிரம்பி வழிகிறது. அது ஆட்சி செய்வோரிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது என்பது உள்ளத்தைச் சுடும் உண்மை.
அந்தப் பணம் சில்லறைகளாகத் தேர்தல் காலத்தில் தலைகாட்டுகிறது. தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் ஒளித்து வைத்திருந்த கருப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சம் வெள்ளையாகத் தலைகாட்டுகிறது. அதுவும்கூட அதிகம் அல்ல. யானை தன் துதிக்கையால் எடுத்து வாயில் பிடித்துக் கொண்ட பெரிய சோற்று உருண்டையிலிருந்து சில பருக்கை கீழே விழுந்தால் அது பல எறும்புகளுக்கு உணவாகும். அதுபோலவே, வரிப் பணத்தை சாப்பிட்டவர்களிடமிருந்து கிடைக்கும் சில பருக்கைகளே தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் பணமும், பரிசுப் பொருள்களும்.
ஐந்தாண்டு பட்ஜெட் வருவாயில் இரண்டாண்டு பட்ஜெட் ஆட்சி செய்வோரின் கஜானாவுக்கு எந்தெந்த வழிகளிலோ போய்விடுகிறது. அது மாயப் பணம், நம் கண்களில் படுவதில்லை. ஒரு குடும்பத்தின் செலவு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று குடும்பத் தலைவனோ, தலைவியோ நினைக்கிறார்கள். வரவுக்குள் செலவை அடக்க வேண்டும் என்பதற்காக சிக்கனமாக வாழ்கிறார்கள்.
மாநிலமே தங்கள் குடும்பம் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் வரவுக்குள் செலவை அடக்குவதில்லை. அது முடியாதோ என்று கேட்டுவிட வேண்டாம். முடியும்; நிச்சயம் முடியும். வரவு முழுவதையும் வழியில் யாரும் மடக்கிவிடாமல் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
அரசு கஜானாவிலிருந்து மக்கள் நலத் திட்டத்துக்காக செலவிடும் தொகை அந்தத் திட்டங்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். பொய்க் கணக்கு, இல்லாத கணக்கு எழுதி குறுக்குசால் ஓட்டக் கூடாது. இப்படி மக்கள் பணம் சிக்கனமாக பொய்க் கணக்கு எழுதப்படாமல் செலவிடப்பட்டால் வெளியே கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏதோ ஒரு அவசரத்துக்காக ஒரு குடும்பத் தலைவன் வெளியே கடன் வாங்கினால் அதை அடைக்கும் வரை கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறான். எல்லாவற்றிலும் சிக்கனத்தை நாடுகிறான். தேவைகளைக் குறைத்துக் கொள்கிறான். ஆனால், அரசு கடனுக்கு மேல் கடன் வாங்கி வட்டித் தொகையைச் செலுத்தவும் கடன் வாங்குகிறது. கடன் வாங்கியது குறித்துக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. புதிய செலவுகளை மேற்கொண்டு மேலும் மேலும் கடன் வாங்கப் பயப்படுவதில்லை. அதுதான் விசித்திரமாக இருக்கிறது.
அரசு வாங்கும் கடனை விமர்சிக்கும் எதிர்த்தரப்பும் ஆட்சிக்கு வந்தவுடன் கூடுதலாகவே கடன் வாங்குகிறது. இந்தியக் குடிமகன் கடனில் பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனிலேயே மரிக்கிறான். குடும்பத்தின் பெரியவர் தன் மனைவியையோ, மகனையோ பார்த்து, " வரவுக்குள் செலவு செய், கடன் வாங்காதே, உன் பிள்ளைக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, கடனில் தள்ளிவிடாதே' எனக் கூறுவது உண்டு. இது தனி மனித வாழ்க்கை. பொது வாழ்வில் நீதியும், நிதியும் மாறுபடுகின்றன. இந்த நிலையை மாற்ற முன்வரும் அறநெறி அரசியல் இன்று வரை இங்கு உருவாகவில்லை.
உண்மையுடன் நம்மவர்கள் எப்போதும் கூட்டணி வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கள்ளப் பணத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே கூட்டணி உண்டு. தெலங்கானாவில்-ஆந்திரத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இதே நிலை நிலவுகிறது. உளவுத் துறை சொல்லியிருப்பதாகத் தெரியவரும் தகவல்படி பேதாபேதமில்லாமல் தமிழக வாக்காளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பதற்காக ஆங்காங்கே கல்லாக்கள் திறக்கப்பட்டதாகப் பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது புதிதல்ல. ஒரு பழைய சம்பவத்தைப் பார்ப்போம். அது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செலுத்திய காலம். அப்போது ராமேசுவரம் நகரின் மொத்த மக்கள்தொகை இருபதாயிரம்தான். அதில் சுமார் கால்வாசியினர்தான் வாக்காளர்கள். ஏனெனில், அப்போதைய வாக்குரிமை வயது 21. அப்போது காங்கிரஸ் கட்சி வாக்காளர்களுக்கு தலா இரண்டு ரூபாய் கொடுத்தது. காங்கிரûஸ எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கோடூர் ராஜகோபால சாஸ்திரி. நேர்மையான அந்தப் பிரமுகர் யாருக்கும் ஒரு காசு கொடுக்கவில்லை. ஆனாலும், அவரே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அடுத்த தேர்தலிலும் கை சுத்தமான அந்த சாஸ்திரியே வென்றார். வாக்காளர்களுக்குக் கொடுத்த பணம் வாக்குகளில் எதிரொலிக்கவில்லை. மூன்றாம் முறையும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால சாஸ்திரியே வெற்றி பெறுவார் என்ற நிலை வந்தபோது அவரின் வாய்ப்பைத் தடுக்கும்படியாக அப்போதைய காங்கிரஸ் அரசு ராமேசுவரத்தின் நிர்வாகத்தை நகரியமாக (டவுன்ஷிப்) மாற்றி மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆட்சிக்குக் கொண்டுவந்தது. அதனால், தேர்தல் நடைபெறவில்லை.
அது பணம் வெற்றி பெற முடியாத காலம், இது பணம் மட்டுமே வெற்றி பெறும் காலம். அப்போது இரண்டு ரூபாய், இப்போது இரண்டாயிரம் ரூபாய். வாக்காளர்களின் மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்திருக்கிறது, பெருமைப்பட வேண்டாமோ? இப்போது நம் ஜனநாயகத்தில் பணம் உள்ளே, ஜனம் வெளியே.
அண்மையில் உளவுத் துறை தகவலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தலா இரண்டாயிரம் என்றால் ஒரு தொகுதிக்கு ரூ. 40 கோடி செலவாகும்; 234 தொகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவாகும்; இது வாக்காளர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் தொகை. வேட்பாளர்களின் பிரசார செலவுகளைச் சேர்த்தால் அது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆகலாம்.
இந்தப் பணமெல்லாம் ஊழல் முறைகேடுகளில் ஆட்சி செய்த, ஆளும் கட்சிகள் சேர்த்து வைத்துள்ள மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 10 % எனக் கணக்கிட்டால் அவர்களிடம் பதுங்கி இருக்கும் 90% தொகையை கணக்கிட முயன்றால், எந்த கால்குலேட்டரும் பளு தாங்காமல் உடைந்துவிடும்! யாரேனும் மனக்கணக்குப் போட முன்வந்தால் அவர்களுக்குத் தலை சுற்றும். இதை வாக்காளர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.
எது எப்படியோ போகட்டும் என்ற மக்களின் பொதுவாழ்வு விலகல் தன்மையே இதற்குக் காரணம். அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல, மெத்த படித்தவர்களும்கூட விலகித்தான் இருக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலையே ஜனநாயகம் பணநாயகமாக மாற உதவுகிறது.
நம் தேசத்தில் தனி மனித நிதி நிர்வாகத்துக்கும் அரசு நிதி நிர்வாகத்துக்கும் நீதிநெறி அளவில் பெருத்தளவில் வேறுபாடு இருக்கிறது. இதை பல சமூக அமைப்புகளும் கண்டும் காணாமல் செல்கின்றன. வாக்காளர் என்ற திருமகன் திரு இல்லாத வெறு மகன் ஆகிறான். இதற்கெல்லாம் விடிவுகாலம் உண்டா? எப்போது, எப்படி?.
"யாருடைய பணமாக இருந்தால் என்ன, எடுத்துக் கொள், அனுபவி ராஜா அனுபவி' என ஏழேழு தலைமுறைக்கும் சேர்த்துக் கொள்வதே நம் ஜனநாயகத்தின் நிதி நிர்வாகம். வலுவான, ஒழுக்கமான, குடியரசுத் தலைவரின் முழுக் கட்டுப்பாட்டில் மத்திய அரசு இயங்க வேண்டும். அந்த மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளைக் கண்காணிக்க நேர்மையான ஒரு நிதித் தணிக்கைக் குழு இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற ஆட்சி ஓரளவுக்கு சாத்தியம்.
இப்படிச் சொன்னால் அது மறைமுகமான சர்வாதிகாரமாகாதோ என்கிற கேள்வி எழலாம். நேர்மையான, ஊழலற்ற ஆட்சி நடக்குமானால் பொதுமக்களைப் பொருத்தவரை தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காத கட்டுப்பாடான சர்வாதிகாரத்தை வரவேற்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஜனநாயகம் என்கிற பெயரில் தற்போது நடக்கும் அராஜகத்தையும், ஊழலையும், அடாவடித்தனங்களையும் பார்க்கும்போது, மனிதாபிமானத்துடன் கூடிய நேர்மையான சர்வாதிகாரமே மேல் என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
களத்தில் பிரசாரம் செய்யும் ருத்ராட்ச பூனைகளின் மியாவ், மியாவ் குரல்களுக்கு செவிசாய்ப்பவர்களாகவும், தேர்தல் அறிக்கைகளில் வீசப்படும் இலவசங்கள் என்கிற தூண்டில் புழுக்களுக்கு மயங்குபவர்களாகவும் வாக்காளர்கள் இருந்தால் அறநெறி சார்ந்த ஆட்சியை எதிர்பார்ப்பது கானல் நீரைப் போன்றதுதான்.
கட்டுரையாளர் : அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
.jpg)