Tuesday, September 5, 2017

தலையங்கம்
அனிதா மரணம் தந்த பாடம்




‘சில மலர்கள் மணம் வீசும் வகையில் அழகாக மலரும்’. ஆனால், மலர்ந்த வேகத்திலேயே வாடிப்போய்விடும். அதேப்போலத்தான் மாணவி அனிதாவின் வாழ்க்கையும் முடிந்துவிட்டது.

செப்டம்பர் 04 2017, 03:00 AM

‘சில மலர்கள் மணம் வீசும் வகையில் அழகாக மலரும்’. ஆனால், மலர்ந்த வேகத்திலேயே வாடிப்போய்விடும். அதேப்போலத்தான் மாணவி அனிதாவின் வாழ்க்கையும் முடிந்து விட்டது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ்–2 மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஏறி, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அவரை உற்றுநோக்க வைத்தது. அரசு முயற்சி செய்தது, அரசியல் கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்டன. ஆங்காங்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் கிடைக்காத வெற்றி, மாணவி அனிதா தொடுத்த வழக்கில் கிடைத்து விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் அனிதாவின் வழக்குக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலைமை உருவாகியது. இது அனிதாவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் அனிதா படிப்பில் மிகவும் சுட்டியான ஒரு பெண்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தந்தை மிகவும் ஏழை. தன் மகளை படிக்கவைப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். அனிதாவுக்கு சிறுவயதில் இருந்தே, ‘‘தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும்’’ என்ற கனவு இருந்தது. பிளஸ்–2 தேர்வில் 1,200–க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றார். இவரது கட்–ஆப் மார்க் 200–க்கு 196.75 ஆகும். ஆனால், ‘நீட்’ தேர்வில் அவருக்கு கிடைத்தது 720–க்கு 86 மதிப்பெண்கள்தான். சுப்ரீம் கோர்ட்டில் வந்த தீர்ப்பாலும், ‘நீட்’ தேர்வில் அவர் எடுத்த குறைவான மதிப்பெண்ணாலும் அவருடைய டாக்டர் கனவு தகர்ந்தது என்று சோகமாக காணப்பட்டார். ‘அப்துல்கலாம்’ படித்த சென்னை எம்.ஐ.டி.யில் அவருக்கு பொறியியல் படிப்புக்கான இடம் கிடைத்தது. ஒரத்தநாடு கல்லூரியில் கால்நடை மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தது. ஆனால், இதில் எல்லாம் அவருக்கு திருப்தி கிடைக்காமல், ‘நான் டாக்டராக முடியவில்லையே’ என்ற கவலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாடு முழுவதுமே தங்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணை இழந்ததுபோல சோகக்கடலில் மூழ்கியது. கடந்த ஆண்டே சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஒரு ஆண்டுதான் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கிறோம் என்று சொன்னபிறகும், மாணவர்களிடம் வீணான நம்பிக்கையை மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் வளர்த்தது நிச்சயமாக ஏற்புடையதல்ல. முதலிலேயே மாணவர்களிடம் தெளிவாக சொல்லியிருக்கவேண்டும். கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது, கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி, ‘நீட்’ தேர்வுக்கும் அவர்களை தயார்படுத்தி இருக்கவேண்டும்.

மாநில பாடத்திட்டத்தில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற அனிதாவால், ‘நீட்’ தேர்வில் 86 மதிப்பெண்தான் பெறமுடிகிறது என்றால், நமது கல்வியின் தரம் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. இவ்வளவு புத்திசாலியான அனிதாவாலேயே ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் எடுக்கமுடியவில்லை என்றால், வேறு எந்த கிராமப்புற ஏழை மாணவர்களால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற முடியும்?. உடனடியாக பாடத்தின் தரத்தை உயர்த்தவேண்டும். ‘நீட்’ தேர்வை சந்திக்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ‘இனி ஒரு அனிதாவை இழக்க தமிழ்நாடு தயாராக இல்லை’. அனிதா மரணத்தை ஒரு பாடமாகக்கொண்டு அரசு செயல்படவேண்டும். 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு தற்கொலை உணர்வு வராத வகையில், வாழ்வில் எதையும் தைரியமாக எதிர்கொள்ள ‘‘வலுவான இதயம், எதையும் தாங்கும் இதயம்’’ கொண்டிருக்க மனநல வகுப்புகள் நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

குரு பெயர்ச்சி 2017: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்!




குரு பெயர்ச்சி 2017: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்:

கன்னி ராசியில் கடந்த ஓராண்டுகளாக சஞ்சாரித்து வந்த குரு பகவான் இன்னும் சில தினங்களில் துலாம் ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி செப்டம்பர் 12ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 6.50 மணிக்கு நிகழ உள்ளது. நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். அதனால்தான் ' குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்கிறார்கள். சக்தியும் பலமும் வாய்ந்தது குருவின் பார்வை.

குரு பெயர்ச்சியினால் சாதக பலன்கள் அதிகரித்து பாதக பலன்கள் குறைவதற்கு ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் நவக் கிரக குருவை அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் உண்டாகும். 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம்.

மேஷம்: தைரியம், வீரம், வீடு, மனை, நிலம் மற்றும் உடன்பிறப்புகளுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான 6 ஆம் இடத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார்.குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும்.

பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் மகிழ்ச்சியடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொழில் தொடர்புகள் நல்ல வருமானத்தைத் தரும். சொகுசு மிகுந்த வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிதாக வீடு, மனை, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். மாணவ மாணவிகளின் கல்வி நிலை மேன்மையடையும். தொழில் வியாபாரம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். தொழிலில் தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உங்கள் தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்களிடையே நல்லுறவு நிலவும். கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும். சமுதாயத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். குழந்தைகளினால் சந்தோஷம் அதிகரிக்கும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் மூத்த சகோதரர்களின் பொருளாதார நிலை சிறப்படையும். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குரு ஏழாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் பொதுவாக சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும். குரு மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் உண்டாகும்.


ரிஷபம் : களத்திரத்திற்கு காரகரான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான குணமும், பிறர் மனதை கவர்ந்து நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு அஷ்டம மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுநாள்வரை தங்களின் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இருந்து ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார் இந்த காலத்தில் உங்களுக்கு குரு ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டப்படும் சூழ்நிலை உண்டாகும். . தேவையற்ற கடன்கள் வாங்கி, அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களினால் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். எதிரிகளின் பலம் கூடும். அதனால் உங்கள் மனம் பாதிப்படையும் குழந்தைகளால் வருமானம் அதிகரிக்கும் மனைவியால் விரயங்கள் ஏற்படும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் தொழிலில் விரிவாக்கங்கள் செய்யும் சூழ்நிலை உண்டாகலாம். மனைவியின் செயல்படுகள் சிறந்து, செயல்கள் எல்லாவற்றிலும் கை கொடுப்பார். தந்தை வகையில் தனவரவு உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரய பாவத்தை பார்வை இடுவதால் வீட்டில் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுக்காக செலவுகள் செய்வீர்கள் வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்படும். மூத்த சகோதரர்களால் பண வரவு உண்டாகும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குரும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


மிதுனம்: கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும் வியாபாரா சிந்தனைகளுக்கும் காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு களத்திர மற்றும் ஜீவன பாவத்துக்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்து புத்திர, பூர்வ புண்ணிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார். தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் சில கஷ்டங்கள் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். நீங்கள் எதிர்பார்த்த செல்வம் சேரும். முகத்தில் அழகும் பொலிவும் கூடும், புத்திதெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கலாம். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் அதன் மூலம் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதைகளும் அதிகரிக்கும். தந்தையின் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கடவுள் அருள் உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு லாப பாவத்தைப் பார்வை செய்வதால் தொழிலில் தங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் சிறப்படையும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.


கடகம்: நல்ல மன நிலைக்கும் தாய்க்கும் காரகரான சந்திரனை அதிபதியாகக் கொண்ட நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகம் ராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம். உங்கள் இராசிக்கு ருண, ரோக, சத்ரு பாவதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குரு தைரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானமான துலாத்திற்கு மாறுகிறார்.

குருவின் பார்வை பலன்கள்: குரு ராசிக்கு நான்கில் வந்த போது தான் தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். எனவே நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது. பண இழப்பு உண்டாகலாம், குடும்பத்தில் நிம்மதி குறையும் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும். தொழில் உத்தியோகத்தில் சிக்கல்களும், வருமானக் குறைவும் ஏற்படும். குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும். மன கஷ்டங்கள் மன அழுத்தங்கள் மறையும். பயம் விலகி மன பலம் உண்டாகும். இது வரை இருந்து வந்த. தடைகள் விலகி மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும். குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக முடங்கிய தொழில்கள் மேன்மை நிலையை அடையும். தொழில் உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும். பதவி உயர்வு கிடைக்கும் வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். சுகமான நித்திரைக்கு எவ்விதக் குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றி கிடைக்கும்.

சிம்மம்: அப்பாவுக்கும் ஆத்மாவுக்கும் தொழில் உத்தியோகத்திற்கும் காரகரான சூரியனை அதிபதியாகக் கொண்ட தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவர்களும் ,தன்னம்பிக்கை மிக்கவர்களுமான சிம்மம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருபெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள்ஸ்தானாதிபதியுமான குரு தன பாவத்திலிருந்து தைரிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு பகவான் பொதுவாக நற்பலன்களை அள்ளி வழங்கினார். இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும்.பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே நல்லது உடன் பிறப்புகளால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வில் தடை, தாமதங்கள் உண்டாகும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தை பார்வையிடுவதால்,திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன உறவுகள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதியஇடமாற்றங்கள் ஏற்படலாம். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்லும் நிலை உண்டாகும் அப்பாவின் ஆரோக்கியம் சிறப்படையும். கடவுள் அருள் அதிகரிக்கும். குரு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு இலாப பாவத்தைப் பார்ப்பதால் இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம்ஏற்படும்.

கன்னி: புத்தி காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட நற்குணமும் இரக்க குணமும் கொண்ட கன்னிராசி அன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயரச்சி தரும்பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு சுகம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குரு ஜென்ம ராசியிலிருந்து தன, குடும்ப ஸ்தானமான துலாம் இராசிக்கு மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் சிறப்பான காலம் ஆரம்பமாகிவிட்டது. வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் விரயங்கள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் உண்டாகும். தொழில் உத்தியோகம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் சீரான முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும் அம்மாவின் உடன் பிறப்புக்களுக்கு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும். தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் நிரந்தரமாக சரியாகும். மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஜீவன பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

துலாம்: அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை பேச்சும், வாசனை பிரியரும், ஜாலியான குணமுள்ளவர்களான துலாம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சிதரும் பலன்களைப் பார்ப்போம். துலாம் ராசிக்கு தைரிய வீரிய, ருண ரோக பாவங்களுக்கு அதிபதியான குரு தங்கள் ஜன்ம இராசியில் சஞ்சரிக்கவிருக்கிறார். துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு என அலைந்து திரிய நேரிடும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வேண்டிய அளவுக்கு பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். பெண்களால் அவப் பெயர் ஏற்படலாம். செலவுகளினால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. அடிக்கடி மன குழப்பங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை உண்டாகும் தூக்கமின்மையின் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஆன்மீகப் பெரியோர்களை சந்தித்து, அவர்களின் அருளாசி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர பாவத்தை பார்வை செய்வதால் மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் நொடியின் பாதிப்புகள் குறையும். சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், தொழில் கூட்டாளிகளிடையே நல்லுறவு சிறப்படையும். கணவன், மனைவி இடையே அன்னியோன்னிய உறவு ஏற்படும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் கோவில் திருப்பணிகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவீர்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள் மேம்பாடு அடையும். இலாபமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்: தைரியம் வீரம் ஆகியவற்றுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். விருச்சிகம் இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு விரய பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே முடிக்க முடியும். எவ்வளவு பண வரவு வந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். .சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தொலை தூரப் பயணங்கள் காரணமாக செலவுகள் தவிர்க்க முடியாததாகும்.தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். .சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். தொழிலில் தேவையற்ற பகை உண்டாகும். மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். சிலர் பதவி இழக்க நேரும். தொழில் உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நிலம் வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வீடுகட்டுவீர்கள் புதிய கல்வி கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயார், வீடு, சுகம் போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள் ஏற்படும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகளின் எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும். குரு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். அஆன்மீகப் பயணங்களால் பணவிரயங்கள் அதிகரிக்கும். கோர்ட் வழக்குகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள் நடைபெறும். கடன் உதவிகள் கிடைக்கும்.

தனுசு: தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், தனவான் என போற்றப்படும் நாணயமும், நியாயமும் மிக்க தனுசு ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். உங்கள் ஜென்ம இராசிக்கும் , சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு இலாப பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார் அதிகாரப் பதவி, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். நவீன வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் பணம் பல வழிகளிலும் சேரும். கையில் பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இது வரை தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஒற்றுமையுடன் பழகுவார்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும் அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்கள் சேரும். வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். செல்வ நிலையை உயரும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். உயர் கல்வியில் மாணவர்களின் அறிவு விருத்தியாகும். . சகோதர வகையில் முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும், குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார்.அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும்.பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் பண வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சந்தோஷம் நிலவும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக தம்பதிகளிடையே சந்தோஷம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத் தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபார சம்பந்தமான வெளிநாட்டு பிராயாணங்கள் ஏற்படும்.

மகரம்: ஆயுளுக்கும் ஜீவனத்திற்கும் காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட அனைவருக்கும் உதவுபவர்களுமான மகரராசிஅன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குரு ஜீவன பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக அனைத்துக் காரியங்களுக்கும் பிறர் தயவையே நாடவேண்டியிருக்கும். சிலருக்கு இதுவரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இது வரை வகித்துவந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மாசினும் எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள்விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல்சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம்,தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள் அதிகமாகி உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது. வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். மாணவர்கள் கல்வியில் மேன்மை நிலை அடைவார்கள். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

கும்பம்: ஆயுள் மற்றும் தொழிலுக்கு காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத்தில் நாட்டமுடையவருமான கும்பராசி அன்பர்களே! உங்கள்இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப பாவத்திற்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து உங்கள் இராசியை 5ம் பார்வையாக பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள்சமயோசித புத்தியால் சரியாகிவிடும். நல்ல யோகமான காலமாதலால்அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுவவீர்கள், சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இது வரை இருந்து வந்த சிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் மறையும். கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் எதிர் பார்த்திருந்த உயர் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும் அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எல்லாவகையிலும் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். அந்தஸ்து உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.சமூகத்தில் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்து தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் பெயரும் புகழும் அதிகரிக்கும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள் அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். தொழில் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வேலையின்றி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்பார்த்திருந்த செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக குடும்பத்துடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு உண்டாகும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்.

மீனம்: தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான்,கெட்டிக்காரர், இரக்கமுள்ள, மீனம் ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். உங்கள் ஜென்ம இராசிக்கும் ஜீவன பாவத்திற்கும் அதிபதியான குரு உங்கள் ராசிக்கு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும்.பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள். தொழில்துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கைசந்தோஷமாகக் கழிந்திருக்கும். குருவின் தற்போதைய இட மாற்றத்தால் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். மனக் கஷ்டங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.. காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். பொருளாதாரச் சிக்கல்கள் உண்டாகும். சிலர் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும்.

குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தைப் பார்ப்பதால்,செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். தன வரவு அதிகரிக்கும். பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாக்க் கிடைக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் உண்டாகும் வீடு கட்டும் ஆசை நிறைவேறும்.

Dailyhunt

அல்லல்கள் போக்கும் ஆலங்குடி குரு பகவான்

!

ஞான தட்சிணாமூர்த்தியாக குருபகவான் காட்சி தந்து அருளும் திருத்தலம் ஆலங்குடி. அப்போதைய தஞ்சை மாவட்டத்திலும் இப்போதைய திருவாரூர் மாவட்டத்திலும் அமைந்து உள்ளது ஆலங்குடி குரு பகவான் திருக்கோயில்.

நவக்கிரக திருத்தலங்களில் இது குரு பகவானுக்கு உரிய திருத்தலம். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். இங்கே, குரு தட்சிணாமூர்த்தி, கல்வியும் ஞானமும் புத்தியில் தெளிவும் தந்து அருள்பாலிக்கிறார்.

சுந்தரர் பெருமான் இங்கே உள்ள சிவபெருமானைத் தரிசிக்க வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளப் பெருக்கை ஏற்படச் செய்து சுந்தரரைச் சோதித்தார் ஈசன்.

வெள்ளப்பெருக்கை அடுத்து ஆற்றின் மறுகரையில் நின்று தவித்தார் சுந்தரர். அப்போது ஓடத்தைச் செலுத்தி வந்தவர், அவரை ஏற்றிக் கொண்டு கோயில் இருக்கும் கரையில் விடுவதாக அழைத்து வந்தார். வழியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. தண்ணீரில் தத்தளித்தது ஓடம். எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம்.

அந்த நிலையிலும் சிவத்தையே தொழுதார் சுந்தரர். இதில் நெகிழ்ந்து மகிழ்ந்த சிவனார், அவருக்குக் காட்சி தந்தார். ஓடக்காரராக வந்தது தாமே என உணர்த்தினார்.

அப்போது சுந்தரர் பெருமானுக்கு, ஞானகுருவாக இருந்து உபதேசித்து அருளினார் தென்னாடுடைய சிவனார். இங்கே குருப்பெயர்ச்சி நன்னாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அல்லல்கள் அனைத்தையும் போக்கி அருளும் ஆலங்குடி ஞானகுருவை தரிசியுங்கள்.

உங்களுக்கு அருகாமையில் இது போன்ற ஆலயங்களை கண்டறிய, MyTemple'ன் இந்த லிங்க்'ல் க்ளிக் செய்யுங்கள்: https://goo.gl/13k94a
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்



திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

செப்டம்பர் 03, 2017, 04:00 AM
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற கோவிலாகவும் இது விளங்குகிறது. நவகிரகங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குருபகவானுக்கு உண்டு. இதனால் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டாயிற்று. எல்லா சிவாலயங்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை. சிறப்பு வாய்ந்த குருபகவான் ஆண்டிற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம். இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு நேற்றுகாலை 9.31 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.

திட்டையில் குருபகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். இதில் நவநீதகிருஷ்ணன் எம்.பி., இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி, தக்கார் முரளிதரன், ஆய்வாளர் மனோகரன், செயல்அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் எளிதாக குருபகவானை தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சிறப்பு வழி, பொது வழி என 2 வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குருபெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற 8-ந் தேதி லட்சார்ச்சனையும், 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை சிறப்பு குரு பரிகார ஹோமமும் நடக்கிறது. இதில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம் ஆகும். விழாவையொட்டி தஞ்சையில் இருந்து திட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மருத்துவமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டது.
சேலம் அருகே சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது


சேலம் அருகே சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 02, 2017, 05:30 AM

தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள வனவாசி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சீனிவாசன் (வயது 48). எம்.பி.பி.எஸ். படித்த இவர் சர்க்கரை நோய் சிகிச்சைக்கான பட்டய படிப்பும் முடித்துள்ளார்.

தாரமங்கலத்தில் உள்ள சங்ககிரி மெயின் ரோட்டில் பழைய சந்தைபேட்டை அருகே டாக்டர் சீனிவாசன் சொந்தமாக ஆஸ்பத்திரி கட்டி கடந்த 15 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்த நிலையில் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டியை சேர்ந்த 28 வயது இளம்பெண் காய்ச்சலுக்காக நேற்று முன்தினம் இரவு டாக்டர் சீனிவாசனின் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது சிகிச்சை அளிப்பதாக கூறி அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும், டாக்டர் சீனிவாசனை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், டாக்டர் சீனிவாசனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையே, அந்த இளம்பெண் தனக்கு டாக்டர் சீனிவாசன் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இது தொடர்பாக டாக்டர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் நேற்று ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலி டாக்டர் நடத்திய மருந்து கடைக்கு சீல் மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை


சேலம் அருகே போலி டாக்டர் நடத்திய மருந்து கடைக்கு கலெக்டர் ரோகிணி ‘சீல்‘ வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

செப்டம்பர் 04, 2017, 04:30 AM

சேலம்,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கண்டர்குலமாணிக்கம் கிராமத்தில் கலெக்டர் ரோகிணி, டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது டெங்கு தடுப்பு பணியில் மெத்தன போக்கை கடைபிடித்து வந்ததாக கண்டர்குலமாணிக்கம் ஊராட்சி செயலாளர் செந்திலை உடனடியாக இடமாற்றம் செய்ய கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.

ஆய்வு பணியின்போது மகுடஞ்சாவடிக்கு கலெக்டர் ரோகிணி வந்தார். அங்கு பஸ் நிறுத்தம் அருகில் ‘சுகம் மெடிக்கல் ஸ்டோர்‘ என்ற பெயரில் மருந்து கடை இருந்தது. அந்த கடையில் கலெக்டர் ரோகிணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

அப்போது கடையில் வேலை பார்க்கும் 10–ம் வகுப்பு வரை படித்துள்ள கார்த்திகேயன்(வயது32) என்பவர் இருந்தார். மருந்து கடையின் உள்ளே ‘கிளினிக்‘ அமைத்து, அதில் படுக்கை ஒன்றும் போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அவரிடம் விசாரித்தபோது, கன்னந்தேரியை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) என்பவர் கடை உரிமையாளர் என்பதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. அந்த சமயத்தில் பாஸ்கர் அங்கு இல்லை. பாஸ்கர், ‘‘பி.எச்.எம்.எஸ்.‘‘ என்னும் ஓமியோபதி மருத்துவம் படித்தவர் என்பதும், எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் போல அலோபதி மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு ஊசி மருந்து போட்டு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. மேலும் கார்த்திகேயனும் போலி டாக்டர் போல நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார்.

இதையடுத்து கார்த்திகேயன் போலி டாக்டர் என்பதை உறுதி செய்த கலெக்டர் ரோகிணி, அவர் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்திய அறையில் உள்ள மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் உதவியுடன் பறிமுதல் செய்தார்.

அத்துடன் மருந்து கடைக்கும் கலெக்டர் ரோகிணி பூட்டு போட்டு ‘சீல்‘ வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்க சங்ககிரி உதவி கலெக்டர் ராம.துரைமுருகனுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மருந்துகடை உரிமையாளர் பாஸ்கர், கார்த்திகேயன் ஆகியோர் மீது மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பிடிபட்ட கார்த்திகேயனை கைது செய்தனர்.
சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் சேர 1122 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு


தமிழகத்தில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான மருத்துவ கலந்தாய்வு சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 05, 2017, 04:30 AM

சென்னை,

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி முடிவடைந்து நேற்று வகுப்புகள் தொடங்கின. பல் மருத்துவ இடங்களை பொருத்தவரை , அகில இந்திய ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடத்தப்பட்டுஅதில் உள்ள மீதம் 2 இடங்கள் வந்ததால் அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 87 இடம் இருந்தன .அந்த இடங்கள் நிரம்பி விட்டன. சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 18 உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து அரசு ஓதுக்கீட்டுக்கு 1198 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 715 ஆகும்.

சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 714 பேர் அழைக்கப்பட்டதில் 650 பேர் வரவில்லை. 64 பேர்தான் கலந்துகொண்டனர். 64 பேர்களில் 31 பேர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3 பேர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான கல்லூரி கிடைக்காதால் அவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியே போதும் என்று தெரிவித்தனர். 30 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

சுயநிதி பல் மருத்துவ இடங்களுக்கான அரசு ஓதுக்கீட்டு இடங்கள் 441 உள்ளன. மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 681 இருக்கின்றன. இந்த இடங்களுக்கு இன்று (செவ்வாய்க் கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளையும் கலந்தாய்வு நடைபெறும்.

செப்டம்பர் மாதம் விசேஷங்கள்

செப்டம்பர் மாதம் விசேஷங்கள்
செப்டம்பர் 05 (செ) ஆசிரியர் தினம்
செப்டம்பர் 06 (பு) தினமலர் இதழுக்கு 67 வது பிறந்த தினம்
செப்டம்பர் 06 (பு) மகாளய பட்சம் ஆரம்பம்
செப்டம்பர் 11 (தி) பாரதியார் நினைவு நாள்
செப்டம்பர் 19 (செ) மகாளய அமாவாசை
செப்டம்பர் 21 (வி) நவராத்திரி ஆரம்பம்
செப்டம்பர் 29 (வெ) சரஸ்வதி பூஜை
செப்டம்பர் 30 (ச) விஜயதசமி

Monday, September 4, 2017

1176 மதிப்பெண் 197.50 கட் ஆஃப். நீட்டால் பிரதீபாவிற்கு கனவாகிப்போன மருத்துவம் #NEET

பி.ஆண்டனிராஜ்




பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான சாத்தை பாக்கியராஜ் தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு ஒரு தாயும் மகளும் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கட்சியினர் அல்லாத ஒருவர் திடீரென வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால், அவர்களிடம் கட்சியினர் விசாரித்தனர். அப்போது அவர்களும் இதே விஷயத்துக்காக கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவரம் தெரிய வந்தது. பிரதிபா என்ற அந்த மாணவி 1176 மார்க் எடுத்த நிலையில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ வாய்ப்பு பறிபோய் இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.



இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, 10-வது வகுப்பில் 495 மதிப்பெண் பெற்று உள்ளார். அதனைத் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வில் தமிழ் மொழியில் படித்து 1176 மதிப்பெண் பெற்றுள்ளார். 197.50 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற அவர், நிச்சயமாக மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைக்கும் என நம்பினார். ஆனால், திடீரென நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அவரால் அதில், 200 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்துள்ளது. இதனால் அவரது மருத்துவக் கனவு தகர்ந்தது.

மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற அவருக்கு பல் மருத்துவப் படிப்புக்குத் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளது. கூலித் தொழிலாலியின் மகளான தன்னால் பணம் கட்டி தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாததால் கல்லூரியில் சேராமல் உள்ளார். தனது மதிப்பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகளில் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டார். அதனால் தற்போது வேதனையில் உள்ளார். பின்னர் பிரதிபாவும் அவரது தாய் விஜயலட்சுமியும் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து தங்களின் வேதனையைச் சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

கொடிது கொடிது முதுமையில் தனிமை! - முதியோர் உடல், உள நலம் பேணுவது எப்படி?

இரா.செந்தில் குமார்


மும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ். அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர். இவரது தாயார் ஆஷா ஷகானி, மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக தனது தாயுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த ரித்துராஜ், கடந்த மாதம் தனது தாயைக் காண்பதற்காகச் சொந்த ஊரான மும்பைக்கு வந்தார். பலமுறை காலிங் பெல் அடித்தும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால், அருகில் இருந்த பூட்டுக்கடைக்காரரின் உதவியோடு கதவைத் திறந்து பார்த்த ரித்துராஜுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. தாய் ஆஷா ஷகானி இறந்த நிலையில் எலும்புக்கூடாகக் கிடந்தார். ரித்துராஜ் உடைந்து போய்க் கதறினார். ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை... இது என் சொந்த முடிவு’ என்று ஆஷா எழுதியிருந்த கடிதம் அந்த அறையின் ஒரு பக்கம் கிடந்தது.



இது மும்பையில் நடந்த சம்பவம்தானே என்று எளிதாகக் கடந்து போக முடியாது. சில வருடங்களுக்கு முன்னர், இதே மாதிரி ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலும் நடந்தது. அழுகிய வாடை அடிக்கவே, பக்கத்து வீட்டினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வயதான பாட்டி ஒருவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார்.

‘பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்

சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்...’

என்று `சிவாஜி’ திரைப்படத்தில் `பல்லேலக்கா...’ பாடலில், தமிழர்களின் வாழ்வியலை அழகாகச் சொல்லியிருப்பார் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் . அப்படிப் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் அண்டை வீட்டுக்காரர்களுடனும் கூட்டுக் குடும்பம்போல ஒற்றுமையாக, வாழ்ந்துவந்தவர்கள்தான் நம் மக்கள். ஆனால், இன்று நிலைமை ஏன் இப்படி மாறி இருக்கிறது?

இதற்கு என்ன காரணம் ?

தற்போது உள்ள சூழ்நிலையில், வேலைவாய்ப்புகள் வெளியூரிலும், வெளிநாடுகளிலும்தான் அதிகமாக உள்ளன. அதிலும், குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால், ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும், பெருநகரங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கிராமங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், தங்களின் பெற்றோரை சொந்தக் கிராமத்தில் விட்டுச் செல்கின்றனர். அவர்களை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், உற்றார் உறவினர்கள் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தனியாகவிடப்படும் பெற்றோர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபம்.

பெரிய பெரிய அபார்ட்மென்ட்கள்தான் முதியவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு என்று நினைத்து, அபார்ட்மென்ட்களில் அவர்களை விட்டுச் செல்கின்றனர். ஆனால், அபார்ட்மென்ட் வாழ்க்கை முறை சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதுகூட தெரியாமல்தான் பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதைப் பெருமையாகவும், பாதுகாப்பாகவும் கருதுபவர்களும் உண்டு. இதனால்தான் இது போன்ற மரணங்கள் உண்டாகின்றன. அது மட்டும் அல்ல... இது போன்று முதுமையில் தனியாக வாழ்பவர்கள் பல்வேறு மனநலப் பாதிப்புகளுக்கும் உண்டாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

இது பற்றி மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம். “வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்று. தங்களின் குடும்ப முன்னேற்றத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தேவை உண்டாகியிருக்கிறது. அப்படிச் செல்பவர்களில் சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு முறையான பாதுகாப்புகளைச் செய்யாமல் தனியாக விட்டுச் செல்கின்றனர். அபார்ட்மென்ட்களில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன்கூடப் பேசாமல் தனிமையிலேயே பொழுதைக் கழிப்பதால், அவர்களுக்குத் தூக்கமின்மை, மனஅழுத்தம், மனப் பதற்றம் ஆகியவை உண்டாகின்றன. அதேவேளையில் பிள்ளைகள் சில நேரங்களில், அதிகமான வேலைப்பளுவின் காரணமாக தங்களின் பெற்றோர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான போக்கு.

வயதான பலருக்கு (Fear of falling) கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயம் இருக்கும். இதற்குப் பயந்து வெளியில் கோயிலுக்கோ, மற்ற இடங்களுக்கோகூடச் செல்ல மாட்டார்கள். ஏன், வீட்டுக்குள் நடப்பதையேகூட விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புக்கள் உண்டாகும். அவர்களுக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டியது பிள்ளைகளின் கடமை.



வயதானவர்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய வியாதி டிமென்ஷியா. அன்றாடம் ஒவ்வொரு வேளையும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைக்கூட சில முதியவர்கள் மறந்துவிடுவார்கள். சில நேரங்களில் சாப்பிட மறந்துவிட்டு மாத்திரையை மட்டும் உட்கொள்வார்கள். இதனால், பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு உள்ளாவார்கள்.

இத்தகைய பெற்றோர்களின் பிள்ளைகள், அடிக்கடி பெற்றோருடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும். தினமும் ஒரு முறையாவது போனில் அழைத்துப் பேசி விடவேண்டும். மேலும், நண்பர்கள், உறவினர்கள் இப்படி தங்களுக்கு நெருக்கமானவர்களை வாரம் ஒரு முறையாவது, தங்களுடைய பெற்றோர்களைச் சந்திக்கச் சொல்ல வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களுக்காகவாவது ஊருக்கு வந்து பெற்றோருடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும்.

எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் ?

உதவிக்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும், வெளியே செல்வதற்கு ஆட்டோ டிரைவரின் போன் நம்பர்... இப்படி அனைத்தையும் ஒரு டைரியில் எழுதி வைத்து, அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அதுபோல அக்கம்பக்கத்து வீட்டினரிடம் பேசி, தங்கள் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

அபார்ட்மென்ட் என்றால், அதன் செகரெட்டரியிடம் சொல்லிப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். பொருளாதாரரீதியாகவும்,

மருத்துவரீதியாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே முதியவர்களின் பாதுகாப்பை ஓரளவுக்கு நாம் உறுதி செய்யமுடியும்’’ என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மேலும், இதுபற்றி முதியோர் நல மருத்துவர் நடராஜனிடம் பேசினோம்... “பெரும்பாலும் இது மாதிரியான மரணங்கள் ஏற்படுவது இல்லை. ஓரிரு சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் நடக்கக் கூடாது என்பதே நம் விருப்பம். வெளிநாடுகளுக்குச் செல்லும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் தேவையான பொருளாதார வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துவிடவேண்டும்.

நண்பர்களிடம், உறவினர்களிடம் சொல்லி கவனித்துக்கொள்ளச் சொல்லலாம். அதுபோல வீட்டுக்கே சென்று மருத்துவம் செய்யும் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நியமித்து, வாரம் ஒரு முறை பெற்றோரின் ஆரோக்யத்தைக் கவனித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வரும் பிள்ளைகள், இங்கே இருக்கும்போது நேரம் முழுவதையும் தங்கள் பெற்றோருடனே கழிக்க வேண்டும். வெளியில் எங்காவது சுற்றுலா சென்றால், அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் நடராஜன்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தங்களுடன் பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்வதே சாலச்சிறந்தது. முடியாத பட்சத்தில் அவர்களுடன் தினமும் தொடர்பிலேயே இருப்பது நல்லது. நாம் குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்காகச் செலவழித்த நம் பெற்றோர்களை, அவர்களின் வயதான காலத்தில் மிகச் சிறப்பாக பார்த்துக்கொள்வது நம் கடமை.

“அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்திருக்கிறார் அனிதா!” குமுறும் ஊடகவியலாளர்கள் #RIPAnitha
சே.த.இளங்கோவன்

கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி சிகிச்சைப் பார்க்க வேண்டிய மலரின் கழுத்தை தூக்குக் கயிறு சுருக்கியுள்ளது. ‘அனிதா’-வின் மரணம் ஒட்டுமொத்த ஈர நெஞ்சங்களின் இதயங்களையும் நொறுக்கிவிட்டது. வசதியானவர்களால் எளிதில் நிரப்பக்கூடிய மேற்படிப்பை, தனது சிந்தனையைப் பட்டை தீட்டியதன் மூலம் எட்டத் துணிந்த ஏழை கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. வானத்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்து அண்ணாந்து பார்த்தாலே போதும், ஆங்காங்கே உடைந்த ஓடுகளின் வழியாக வானம், நட்சத்திரங்களாய் சுடும். இரவிலோ, அதிலும் குறிப்பாக மழைக் காலத்தில் ஒழுகும் ஓடுகள் வழியாக வீட்டுக்குள் நுழையும் மழைக்கீற்றுகள், வீட்டையே குளமாக மாற்றிவிடும்.



இந்த இடர்பாட்டுக்கு மத்தியிலும் தனது போராட்டப் பயணத்தின் மூலம் கல்வித் தாமரையாக மலர்ந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அனிதாவுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவர் பிறந்த குழுமூர் குக்கிராமத்தின் முதல் மருத்துவராக மலர்ந்திருப்பார். ஆனால், இந்தச் சமூக நீதியெல்லாம், ஒரே கொள்கை, ஒரே தேர்வு என்ற 'நீட் '-டின் பார்வையில் படுமா என்ன? இதோ நீட்-டால் தன் மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்று தன்னையே சுருக்குக் கயிற்றில் இறுக்கிக் கொண்டுவிட்டார் ஏழை மாணவி அனிதா.

'தாமரை இலை'-களின் தந்திர திணிப்பால், எங்கள் கிராமத்து மலரின் கனவு சிதைக்கப்பட்டுவிட்டதே' என்று உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர். தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கும்விதமாக, நீட்-டுக்கு விலக்குக் கேட்டு களமாடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், வீதிக்கு வர இயலாதவர்கள், தமக்கான தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், செய்திகளை மக்களுக்குக் கடத்தும் பாலமாக இருக்கும் பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் செய்தியைக் கடந்தும் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மூத்த ஊடகவியலாளரான கவிதா முரளிதரன் மற்றும் சோனியா அருண்குமார் குரலைக் கேளுங்கள்..

கவிதா முரளிதரன் :

"தமிழகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு சமூக அநீதிக்கு அனிதா பலியாகியிருக்கிறார். எளிய பின்னணிகளிலிருந்து வரும் கிராமப்புற மாணவர்களை மருத்துவக் கல்லூரி வளாகங்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பேரவலமும் ஆகப்பெரிய அநீதியும்தான் நீட் என்பதை தனது உயிரைக்கொடுத்து உணர்த்தியிருக்கிறார். கழிப்பறை இல்லாத ஒரு வீட்டில் பிறந்து மருத்துவராகும் கனவை எட்டிப்பிடிக்க அவர் எவ்வளவு தூரம் போராடியிருக்க வேண்டும்? கைக்கெட்டும் தூரத்தில் அந்தக் கனவு நிற்கும்போது இன்னொரு போராட்டம் அனிதா மீது திணிக்கப்படுகிறது.

போராளி என்று விகடன் அவரை அடையாளம் காட்டுகிறது. குழுமூரிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை நீள்கிறது அவரது போராட்டம். ஆனால், அதிகார மையங்களுக்கு எதிரான போராட்டத்தில் அந்தச் சின்னப் பெண் என்ன வெற்றியை பெற்றுவிட முடியும்? அவர் இன்னும் இரண்டுமுறை தேர்வு எழுதியிருக்கலாம், இன்னும் தன்னம்பிக்கையோடு அணுகியிருக்கலாம் என்றெல்லாம் சொல்பவர்கள், இந்த அரசுகள் இவ்வளவு பெரிய அநீதியை அவர் மீதும் அவர் போன்ற எண்ணற்ற எளிய மாணவர்கள் மீதும் திணிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அனிதா ஒரு போராளியாகதான் இறந்திருக்கிறார். அவரது மரணம், சமூக நீதிக்கு விடப்பட்ட சவால். எந்த சமத்துவமின்மைக்கு எதிராக அனிதா போராடி வந்தாரோ அந்த சமத்துவமின்மையை ஒன்றுமே செய்ய முடியாது என்று உணர்ந்து அதன் மீது தனது குருதியை சிந்திச் சென்றிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நாம், நீட் பற்றி மௌனமாக இருப்பதன் கையாலாகாதனத்தின் மீது காறி உமிழ்ந்திருக்கிறார்.

அவரது மரணம், ஒரு சமூகமாக நமக்கு மிகப்பெரிய அவமானம்".

சோனியா அருண்குமார்:

" 'ஒரு குலத்துக்கு ஒரு நீதி' என்ற ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகத்தான் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய

கிராமப்புற, ஏழை, எளியவர்கள் கைக்கு, 'கல்வி' கிட்டியது. இன்று அதையும் பறிக்கும் செயலை 'நீட்' செய்கிறது. ஒரு படிப்புக்குத் தேவையான கல்வியை ஏற்கெனவே ப்ளஸ் டூ -வில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், எதற்காக மீண்டும் இன்னொரு தகுதி தேர்வு எழுத வேண்டும்? அப்படியென்றால் ஏற்கெனவே படித்த ப்ளஸ் டூ-வை படிப்பாக மதிக்கவில்லையா? இந்த நீட் திணிப்புக்குப் பின், வசதியானவர்கள், உயர் வகுப்பினர்கள் நலன் மட்டுமே இருப்பதாக சந்தேகங்கள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, ஒரு பெண்ணாகவும் கல்வியால் உயரப் பறக்க வேண்டிய ஒரு பறவையை, நீட் நிர்மூலமாக்கிவிட்டதே. ஏனெனில், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைச் சங்கிலியை உடைக்கும் அற்புதக் கருவிகளில் கல்வி முதன்மையானது. அப்படி, மருத்துவராக அனிதா மலர்ந்து வந்திருந்தால், பெண் குலத்துக்கும் எவ்வளவு பெருமை. அனைத்தையும் பொசுக்கி விட்டார்களே! இதில், மற்றொரு கொடுமை, ஒருசிலர், அனிதா தற்கொலை செய்து கொண்டது சரியா? என்று விவாதிக்கின்றனர். எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. அழுத்திச் சொல்கிறேன், நான் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் திரும்பத் திரும்ப இதை மட்டுமே பேசுவதன் மூலம் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி ஆக்கும் செயலை செய்துவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதன் பின்னுள்ள நுட்பமான அரசியலையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தற்கொலை சரியா? தவறா? என்ற விவாதத்தின் மூலம், பிரச்னையின் மூல காரணத்திலிருந்து கவனத்தைத் திசை திரும்புகின்றனர். எனவே, அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய காரணிகளைக் களைந்து நிரந்தரத் தீர்வுக்காகப் போராட வேண்டும். அனிதாவின் தற்கொலை, ஏனைய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கனவுகள், நனவாவதற்கான திறவுகோலாக அமையட்டும்." என்கிறார்.

தனது மரணத்தின் மூலம், மருத்துவர் கனவைச் சிதைத்த அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்திருக்கிறார் அனிதா! 'நீட்' நிரந்தர விலக்குக்கான போராட்டங்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது அனிதாவின் மரணம்.
விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது’ - அனிதா இறுதிசடங்கில் நெகிழ்ந்த மக்கள்!

எம்.திலீபன் கே.குணசீலன்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். இது கட்சி நிகழ்ச்சி. அந்த வகையில் நேற்றுவாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனிதாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதாக இருந்துள்ளார் கேப்டன். ஆனால் அங்கிருந்து அவர் கிளம்பவே நேரமாகயிருக்கிறது.




சில நிர்வாகிகள் விஜயகாத்திடம், ”இங்கேயே மணி 7 ஆகிவிட்டது இனிமேல் சென்றால் அங்கு செல்லமுடியாது நீங்கள் போவதற்கு அந்திநேரமாகிவிடும். நாளை அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லிகொள்ளமே” என்று சொல்ல, அதற்கு விஜயகாந்த் ”என்ன ஆனாலும் பரவாயில்லை. வண்டியை எடு அனிதாவை பார்த்துவிட்டு வருவோம் எப்படியும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் அரியலூர் வந்த போது பார்த்தசாரதி அரியலூர் மாவட்டசெயலாளர் ராமஜெயவேலிடம் விஜயகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதற்கு அவர் ”அனிதாவின் உடலை எடுத்துவிட்டனர்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் “ டாக்டர் ஆகமுடியவில்லையே என்று மனவிரக்தியில் இறந்திருக்கும் சிறுமி அனிதாவை பார்க்காமல் சென்றால் நாம் எல்லாம் என்ன தலைவன். ஆயிரகணக்கான அனிதாக்களின் மனகுமுறலை வெளிபடுத்தியிருக்கிறார் இந்த அனிதா. இறுதி ஊர்வலத்திற்கு செல்லாமல் இருந்ததால் எப்படி. அவுங்க தூக்கினா தூக்கிட்டு போகட்டும் சுடுகாட்டிலாவது அஞ்சலி செலுத்திவிட்டு போவோம்” என்று சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

பின்பு அனிதாவின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துவந்து எரிப்பதற்கான வேலைகளும் தொடங்கிகொண்டிருந்த நேரத்தில் சரியாக 10.45 க்கு குழூமுர் வந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் சத்தமிட ”டேய் சும்மா வாங்க எங்க வந்திருக்கோம்னு தெரியாதா” என்று விஜயகாந்த் சொல்ல அந்த இடமே கப்சிப் ஆனது.

பின்பு அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு அனிதாவின் முகத்தையே மூன்று நிமிடம் கண் அசராமல் பார்த்த போது அவரது கண்கள் கலங்கியது. பின்பு அவர் திரும்பிகொண்டு அவரது கண்ணை துடைத்துகொண்டு வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர் ”நான் இந்த இடத்தில் பேசவில்லை” என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். அங்கிருந்த மக்கள் விஜயகாந்தின் செய்கையை பார்த்து ”விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது” என்று நெகிழ்ந்துள்ளனர்.

பிஸியாக இருப்பவர்கள்! மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்!
2017-08-31@ 15:25:51




நன்றி குங்குமம் டாக்டர்

‘நான் ரொம்ப பிஸி...’ என்று ‘சூரியன்’ கவுண்டமணி மாதிரி உதார் விடாமல், நிஜமாகவே பிஸியாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. பிஸியாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கொஞ்சம் குழம்புகிறர்வகளுக்காக, ஆராய்ச்சியை மேற்கொண்ட சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவின் தலைமை ஆய்வாளரான கிரிஸ்டோபர்ஹிசி நான்கு காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அந்தக் காரணங்களைத் தெரிந்துகொண்டால் இனி சும்மா இருக்கவே விரும்ப மாட்டீர்கள் என்பது நிச்சயம்.மன நிறைவு அடிப்படையில் மனிதன் ஒருபோதும் தன் ஆற்றல் வீணாவதை விரும்பாதவன். அதனால், பரபரப்பாக வேலை செய்வது உளவியல் ரீதியாகவே ஒருவருக்கு தன்னிறைவைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது, அதற்கான தொடர் சிந்தனையில் இருக்கும்போது உங்கள் மூளையும் சுறுசுறுப்படைகிறது. ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் உழைத்துக் கொண்டிருப்பது உளவியல்ரீதியாக மகிழ்ச்சியையே தரும்.

வார இறுதிநாட்களிலும்கூட நீண்ட தூக்கம், சினிமா, பார்ட்டி என்று நேரத்தை வீணடிக்காமல் மளிகைப் பொருட்கள் / காய்கறிகள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்டப்பராமரிப்பு என பயனுள்ள வகையில் அந்த நாளை செலவிடும்போதும், அதன்பிறகு அதை நினைத்துப் பார்க்கும்போதும் உங்களுக்கே பெருமையாக இருக்கும். முன்னேற்றம்‘வியாபார முன்னேற்றத்துக்கான சிந்தனை, வேலை சார்ந்து புதிதாகக் கற்றுக்கொள்வது, சமூக பங்களிப்பு அல்லது உடற்பயிற்சிகள் செய்வது’ என எப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றே பொருள்.

இப்படி பிஸியாக இருப்பதன் மூலம் உங்களை அறியாமலேயே உங்கள் மூளையானது, இந்த வேலையை இன்னும் எவ்வளவு வேகமாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும் என்பதற்கான வழிகளை சிந்திக்க தொடங்கிவிடுகிறது. இதனால் உங்கள் செயல்திறன் மேலும் மெருகேறும்.
தன்னம்பிக்கை கற்றலும், முன்னேற்றமும் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தொடர்ந்து ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பதால் கற்றல் மற்றும் செயல் வளர்ச்சி உண்மையிலேயே உயர்ந்த நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.

வாழ்க்கையின் பல அனுபவங்களைக் கற்றுக்கொள்ளும் நீங்கள், உங்கள் வேலைகளை மற்றவர்களின் வேலைகளோடு ஒப்பிட்டுப்பார்த்து மேலும் எப்படி திறமையாக செய்ய முடியும் என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் வளரும். நேர்மறை அணுகுமுறை வேலையில்லாமல் இருக்கும்போதுதான் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். சுறுசுறுப்பாக இருந்தால் மற்றவைகளைப்பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை நல்லவிதமாக செய்வதையே சிந்தியுங்கள். முக்கியமான விஷயம்... எப்போதும் பிஸியாக இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு சூப்பர்மேன்/சூப்பர் உமன் இமேஜ் உருவாகும் என்பது உங்களுக்கு எக்ஸ்ட்ராகிஃப்ட்!

- உஷா நாராயணன்

மீன் குழம்பு, சட்ட புத்தகங்களுடன் சிறைவாசத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன்

Published : 04 Sep 2017 11:48 IST

செளம்யா தாஸ்கொல்கத்தா




நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி, சிறை வாசத்தை அனுபவித்து வரும் முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது மகிழ்ச்சியான மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, ''கர்ணன் சக கைதிகளாலும் சிறை அதிகாரிகளாலும் மரியாதையாக நடத்தப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவி வருகிறது.

கர்ணன் சட்டக்கல்லூரி மாணவராக இருந்த தன்னுடைய ஆரம்பகட்ட நாட்களுக்குள் சென்றுவிட்டார். தற்போது சட்ட புத்தகங்களையும், தீர்ப்புகளையும் வாசித்து வரும் கர்ணன், விடுதலைக்குப் பிறகு வழக்கறிஞராகத் தொடர்வார்'' என்றார்.

பெங்காலி உணவுகளுக்குப் பழகிவிட்ட முன்னாள் நீதிபதி கர்ணன், தென்னிந்திய மற்றும் பெங்காலி உணவான சாதம் மற்றும் மீன் குழம்பை ரசித்து உண்கிறார்.

பின்னணி:

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஜூன் 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே போலீஸார் கர்ணனை கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் ஜூன் 20-ம் தேதி அன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் பரவும் புதிய ஆட்கொல்லி: ‘ப்ளூவேல்’ அட்மினை நெருங்க முடியுமா? - தொடரும் புரியாத புதிர்கள்

Published : 02 Sep 2017 11:50 IST

மதுரை

(



உலகின் புதிய ஆட்கொல்லியாக உருவாகியுள்ள ‘ப்ளூவேல்’ சேலஞ்சிங் ஆன்லைன் விளையாட்டு, தற்போது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது.

சமீபத்தில் கேரளாவில் ‘ப்ளூவேல்’ ஆன்லைன் விளையாட்டை விளையாடிய ஆஷிக் என்ற மாணவர் இறந்தார். மேலும், சில கல்லூரி மாணவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அம்மாநில போலீஸாரால் தற்போது வரை ‘ப்ளூவேல்’ சேலஞ்சிங் விளையாட்டின் அட்மின்களை கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்களை பெற முடியவில்லை. அவர்களை நெருங்கவும் முடியவில்லை.

நடவடிக்கைகளில் வித்தியாசம்

இந்நிலையில், தற்போது மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கலைஞர் நகரில் சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட பேக்கரி மாஸ்டர் ஜெயமணி என்பவரின் மகன் விக்னேஷ்(19) ‘ப்ளூவேல்’ விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மாணவர், சமீப காலமாக நள்ளிரவு நேரத்தில் யாருமே இல்லாதபோது வீட்டு மாடியில் நின்று செல்பி எடுப்பது, ப்ளூவேல் என்று ப்ளேடால் கைகளில் கீறிக் கொள்வது, ரத்தத்தில் எழுதுவது, குடிப்பழக்கத்துக்கு அடிமையானது என்று அவரது நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்துள்ளது.

ஆனால், இந்தளவுக்கு தற்கொலை வரை கொண்டு போய்விடும் என்பது, அவரது பெற்றோருக்கு தெரியவில்லை. இறந்த மாணவன் விக்னேஷூடன் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுவது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டுக்கு தடை

இதுகுறித்து கணினி தொழிநுட்ப வல்லுநர்களிடம் பேசியபோது, அவர்கள் கூறியது:

உலகளவில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த ‘ப்ளூவேல்’ ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதமாகத்தான் இந்தியாவில் ‘ப்ளூவேல்’ பற்றிய விளையாட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விளையாட்டுக்கான ‘லிங்’ சமூக வலைதளங்களில் வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. இந்த விளையாட்டு கணினி தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் பின்னணியில் உலகளவில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாக கூறப்படுகிறது.

அழித்துவிட கட்டளைகள்

தற்போது இறந்த விக்னேஷின் ஸ்மார்ட் போனை பறிமுதல் செய்த போலீஸார், அதில் ‘ப்ளூவேல்’ விளையாட்டு விளையாடியதற்கான ஆதாரங்களை பெற முடியவில்லை. விக்னேஷ் இறப்பதற்கு முன் போனில் உள்ள எல்லா தகவல்களையும் அழித்துவிட கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.

மீண்டும் வர வாய்ப்புள்ளது

இணையத்தில் குறிப்பிட்ட சினிமா படங்களையோ, வெப்சைட்டுகளையோ பதிவிறக்கம் செய்வதை தடை செய்திருந்தாலும், அதில் சிறு மாற்றங்களை செய்து கட்டுப்பாடுகளை உடைத்து, அடுத்த லெவலுக்கு சென்று பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். அதனால், அப்படியே இந்த ‘ப்ளூவேல்’ விளையாட்டுக்கான லிங்கை தடை செய்தாலும், அது வெறொரு வடிவத்தில் மீண்டும் வர வாய்ப்புள்ளது. மேலும், இந்த விளையாட்டு வெப்சைட்டாக இல்லை. லிங்க்காக வைத்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் தற்போது கிடைக்கவில்லை.

கேள்விக்குறி

‘ப்ளூவேல்’ விளையாட்டை ஆரம்பித்தவுடனேயே, முதல் நிலையிலே யார் கட்டளையிட்டாலும் உடனே கையை வெட்டி கொள்வார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு முன் எதுவும் நிலை உண்டா? எங்கிருந்தோ மிரட்டுவதற்கெல்லாம், சாதாரணமாக யாராவது தற்கொலை செய்துவிடுவார்களா? உள்ளிட்ட கேள்விகள் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

ரஷ்யாவில் நவ. 2015- முதல் ஏப். 2016 வரை இந்த விளையாட்டால் 130 பேர் வரை இறந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இந்த விளையாட்டால்தான் இறந்துள்ளார்களா? என்பது பற்றி அந்நாட்டு அரசிடம் உறுதியான, அதிகாரப்பூர்வ தகவல், ஆதாரம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாணவர்களையும், இளைஞர்களையும் காக்க, அந்த விளையாட்டை தேர்ந்தெடுக்கவோ, நெருங்கவிடாமல் தடுக்கவோ விழிப்புணர்வு என்ற தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம் நிறுத்தப்பட்டது: விருதுநகர் அருகே பரபரப்பு - சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் நிர்பந்தம்

Published : 02 Sep 2017 11:51 IST

விருதுநகர்



ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.


ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.




ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் இரு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). இவர் படிக்கவில்லை என்பதால் ஆடு மேய்த்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.


இவருக்கு கலைச்செல்வியின் மகள் பி.காம்., பட்டதாரியான ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகள் காயத்திரி(20) என்பவரையும் வரும் 4-ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், காயத்திரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், ஒரு இளைஞர் ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ராமூர்த்தியின் மாமாவும், மணமகள் ரேணுகாதேவியின் தந்தையுமான அழகர்சாமி மற்றும் உறவினர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்தை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ராமமூர்த்தித்துக்கு ரேணுகாதேவியைதான் திருமணம் செய்து வைக்க இருந்தோம். ஆனால் அவருக்கு இருதார தோஷம் இருப்பதாக ஜோசியர் கூறியதால் முதலில் மனநலம் பாதித்த காயத்திரிக்கு தாலி கட்டிய பிறகு ரேணுகாதேவிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த இருந்ததாகவும், தோஷம் கழிப்பதற்காகவே இருவருக்கு தாலி கட்டி திருமணம் செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டும் திருமணம் நடத்துவது என மற்றொரு பத்திரிகையை அச்சடித்து வந்து விளக்கக் கடிதத்துடன் கொடுத்தனர். அதைப் பெற்ற சமூக நலத் துறை அலுவலர் ராஜம், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

ராமமூர்த்திக்கு திருமணம் நடைபெறும்போது அங்கு சென்று கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக சமூக நலத் துறை அலுவலர்களும், போலீஸாரும் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய அரசு வழக்கறிஞர் கஜேந்திரன் கூறுகையில், இரு மணப்பெண்களும், குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தாலும் சட்டப்படி இத்திருமணத்தை பதிவு செய்ய முடியாது. இது குறித்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மத்ய கைலாஷ் பகுதியில் சோதனை.   -  கோப்புப் படம். | எம்.வேதன்.
வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இம்மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தது. கடந்த 1-ம் தேதி நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மோட்டார் வாகனச் சட்டத்திலேயே இம்மாதிரியான கட்டாயம் வலியுறுத்தப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். மேலும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உரிமத்துக்கு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பேற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு காலக்கெடு அளிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்காத சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற அரசு உத்தரவு மீதான புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை.
மேலும் இது தொடர்பான பொதுநல மனு மற்றும் ரிட் மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
எனவே செப்டம்பர் 6 முதல் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

neet issue

clip
அனிதாவின் தற்கொலையைக் கோழைத்தனம் என்பவர்களுக்கு ஈரோடு மகேஷ் அளித்துள்ள பதில்!

By பவித்ரா முகுந்தன் | Published on : 04th September 2017 02:25 PM |

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தனது மருத்துவர் கனவு பறிபோனதை எண்ணி தற்கொலை முடிவெடுத்த மாணவி அனிதாவை கோழை என்று விமர்சிப்பவர்களுக்குத் தமிழ் பேச்சாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஈரோடு மகேஷ் அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இன்று காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் பலரது கேள்விகளுக்கான பதில்களைக் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

“அன்பு தங்கை அனிதாவுடைய மரணம் அனைவராலும் தாங்க முடியாத ஒரு மிகப் பெரிய இழப்பு. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் யார் இந்த மரணத்திற்குக் காரணமோ அவர்களே இதற்கு அழுவதும், புலம்புவதும்தான் பெரிய கொடுமை நமது நாட்டில். ஒரு கட்சி சின்னத்தைக் காப்பாற்ற போராடிய உங்களால், ஒரு கட்சியை காப்பாற்றப் போராடிய உங்களால், எம்எல்ஏ-க்களை காப்பாற்றப் போராடிய உங்களால், ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாதா?

தற்கொலை செய்வது கோழைத்தனம் என்று கூறும் அத்தனை பேருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், என்றாவது வாழ்க்கையுடைய கனவா இருந்த ஒன்று கிடைக்காமல் போன சோகம் உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? மழை அதிகமா பெய்தாலே அந்த வீடு இடிந்து விழுந்துவிடும், அந்தக் குழந்தை அதில் படித்திருக்கா. ஒவ்வொரு பாடத்திற்கும் அத்தனை டியூஷன் வெச்சு படித்த மாணவர்களே 800, 900 மதிப்பெண்களைத் தாண்டுவதில்லை, ஆனால் இந்தக் குழந்தை 1176 மதிப்பெண் எடுத்திருக்கு, எப்படி அந்தக் குழந்தையால் இந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியும்?

ரொம்ப அழகா சொன்னார் டாக்டார்.அப்துல் கலாம் அவர்களுடைய அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள், மத்திய அரசு நடத்துற ஏய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு தேவை இல்லையாம், மாநில அரசுக்குத்தான் தேவையாம், ஏனா இங்க மாநில அரசு ஒண்ணுமே இல்லை பாத்திகளா, அதனால் இங்கதான் தேவையாம்.

இங்க பாருங்க நீங்க நீட் தேர்வு வையுங்க நான் வேண்டாம்னே சொல்லலை, ஆனால் எங்கள் குழந்தைகள் எந்தக் கல்வியில் படிக்கிறதோ அந்த அடிப்படையில் வினாத்தாள்கள் தயார் செய்யுங்கள், குழந்தைகள் எழுத போராங்க. தமிழகத்தில் இருந்து நல்ல மருத்துவர்கள் வரக்கூடாது என்பது உங்களது லட்சியம், ஏழைகள் மருத்துவர்கள் ஆகக் கூடாது என்பது உங்களது லட்சியம் அவ்வளவுதான? இதற்கெல்லாம் நாங்கள் சும்மாவே இருக்க மாட்டோம்.

நீங்க அடிப்பதற்கும், அழ வைப்பதற்கும் ஆட்கள் நாங்கள் கிடையாது. கண்டிப்பா ஒரு மிகப் பெரிய போராட்டம் வெடிக்கத்தான் போகிறது. அடுத்த முறை நீட் தேர்வு வராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் நாம் செய்ய வேண்டும் நண்பர்களே. இது நம் தங்கையினுடைய இழப்பு, இது நம் வீட்டுப் பெண் பிள்ளையினுடைய இழப்பு.


அந்தக் குழந்தை ஒரு வீடியோ பண்ணியிருப்பா, கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் பேசியிருப்பா, அந்த வீடியோவை பாருங்கள், அந்தக் குழந்தையோடு கண்களில் எப்படியாவது மருத்துவ படிப்பை படிப்பதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துவிடும் என்கிற ஒரு ஆசை, இலக்கை அடைந்து விடுவோம் என்கிற நம்பிக்கை தெரியும். வருத்தமா இருக்கு, இப்படியொரு மானங்கெட்ட தேசத்தில் இருக்கோமேனு வருத்தமா இருக்கு.

இப்போது அத்தனை பேரும் அறிவிக்கிறார்கள் இந்த உதவி, அந்த உதவி, இவ்வளவு நஷ்டயீடு அப்படி இப்படினு, ஏன் எத்தனையோ அரசியல்வாதிகளுடைய மருத்துவக் கல்லூரி இங்க இருக்கே, அதுல யாராவது ஒருத்தர் ஒரு சீட் கொடுத்திருக்கலாமே? உங்களுக்குத் தேவை என்றால் சட்டத்தை மாற்ற முடியும் என்றால், எங்களுக்குத் தேவை என்றாலும் நீங்கள் சட்டத்தை மாற்ற வேண்டும். இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!!”



வானமே இடிந்து விழுந்தாலும் பதிவை நீக்க மாட்டேன்; அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்: பால பாரதி

By DIN  |   Published on : 04th September 2017 04:41 PM  |   
balabharathi
Ads by Kiosked

சென்னை: டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்தது தொடர்பான தனது பதிவை வானமே இடிந்து விழுந்தாலும் நீக்க மாட்டேன் என்று முன்னாள் எம்எல்ஏ பால பாரதி கூறியுள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரிலேயே மருத்துவச் சீட்டு கிடைத்ததாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தனது பேஸ்புக்கில் இன்று காலை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. 
இது குறித்து சட்டப்பேரவையில் நடந்த ஒரு உரையாடலை அவர் பதிவிட்டிருந்தார்.
அதில், 
சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப்பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள.. டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜையில் அமர்ந்து சிரித்தது.
இப்படி புறவாசல்வழியாக உதவியைப்பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக, அதிமுக வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் மேலும் ஒரு பதிவை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதாவது, "டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நான் நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன்.
உள்ளே இருக்கும் உளவுத்துறைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கிருஷ்ணசாமியை அடக்கி வாசிக்கச்சொல்லுங்கள்..." என்று பதிவிட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தலித் மாணவி, கடும் போராட்டத்துக்குப் பின் தனது மருத்துவர் கனவு கலைந்ததால், மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையால் தமிழகமே அமைதி இழந்தது. ஆனால், அவரது மரணத்துக்குப் பின்னால் சிலர் இருப்பதாக, அரசியல் ரீதியான கருத்துகளைக் கூறியதால், கிருஷ்ணசாமிக்கு எதிராக சமூக தளங்களில் ஏராளமானோர் கடும் விமரிசனத்தை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில், எளிமைக்கு உதாரணமாகக் கூறப்படும் முன்னாள் எம்எல்ஏ பால பாரதி, குறைந்த மதிப்பெண் எடுத்த  தன் மகளுக்கு முதல்வரின் சிபாரிசின் பேரில் மருத்துவ சீட்டு வாங்கிய கிருஷ்ணசாமி குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பது, அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...