Saturday, November 1, 2014

மாற்று கட்சியினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம், அரசியலில் நாகரிகத்தை மேம்படுத்தி, தேவையற்ற வெப்பத்தையும், கசப்பு உணர்வுகளையும் மாற்றமுடியும். எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எதிரி கட்சிகளாக இருக்க தேவையில்லை.


திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று உலகம் முழுவதிலும் சொல்லும் வழக்கு மொழி உண்டு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ, இல்லையோ, குடும்பங்களில் உறவுகள் வலுப்படும் இடமாக திருமணங்கள் இருப்பதுபோல, அரசியல் கட்சிகள் இடையே புதிய நட்புகள் உருவாகும் இடமாகவும், ஏன் கூட்டணிகள் உருவாவதற்கு அச்சாரம் போடும் இடமாகவும் மாறிவிடுகிறது. அதை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வு சென்னையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேத்தி சம்யுக்தா சவுமியா அன்புமணி–ப்ரித்தீவன் பரசுராமன் ஆகியோரின் திருமண வரவேற்பின்போதும், திருமணத்தன்றும் நடந்தது.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பார்கள். ஆனால், தமிழக அரசியல் ஒரு வித்தியாசமான நிலையில் தற்போது உள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும், கூட்டணிகள் மாறுபடும். அப்போது, புதிது புதியதாக கூட்டணிகள் உருவாகும். நேற்றுவரை நண்பர்களாக இருந்து, நட்புக்கு இவர்கள்தான் அடையாளம் என்ற வகையில், பாசப்பிணைப்பில் ஒருவரிடம் ஒருவர் அன்பு ஒழுக பழகுவார்கள், பேசுவார்கள். அதேபோல, எதிர் முகாமில் இருப்பவர்கள் அடுத்த முகாமில் உள்ள கட்சியினரை பரமஎதிரிகளாக கருதுவார்கள்.

ஏதோ ஜென்மபகை இருப்பதுபோல, ஒருவரை ஒருவர் நேருக்கு சந்திப்பதையே பாவம் என்று நினைப்பார்கள். ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் மற்றொருவர் கலந்து கொள்ள அழைப்பதும், கலந்து கொள்வதும் தீண்டத் தகாதவையாக நினைப்பார்கள். ஆனால், அடுத்த தேர்தலில் கூட்டணி மாறும்போது, இந்த நிலைமை தலை கீழாக மாறிவிடும். நேற்றுவரை பரம எதிரிகளாக இருப்பவர்கள், உயிர் நண்பர்களாக மாறிவிடுவார்கள். அன்பான நண்பர்களாக இருந்தவர்கள், மீண்டும் எதிரிகளாக மாறிவிடுவார்கள். ஆனால், டெல்லியில் இப்படியொரு நிலைமையே கிடையாது.

பாராளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்குவார்கள், அவைக்கு வெளியே வந்தவுடன் ஒன்றாக உட்கார்ந்து டீ சாப்பிடுவார்கள், ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து நட்பை வலுப்படுத்தி விடுவார்கள். கடந்த பாராளுமன்ற தொடரின்போது, சோனியாகாந்தி தன் காருக்காக காத்திருந்த நேரத்தில், எல்.கே.அத்வானி என் அறைக்கு வாருங்கள்... ஒரு டீ சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று அழைத்தவுடன், அவர் மகிழ்ச்சியுடன் டீ அருந்திவிட்டு சென்றார்.

இதுபோன்ற நிலைமை தமிழக அரசியலிலும் வராதா? என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், தமிழக அரசியலிலும் முன்பு எல்லாம் இதுபோன்ற நிலைமை இருந்தது. 1975–ல் மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் முக்கிய விருந்தினராக வந்து கலந்து கொண்டு மணமக்களை மனப்பூர்வமாக வாழ்த்திவிட்டு சென்றார்.

1977–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியாக வெற்றிபெற்று, திருநாவுக்கரசர் துணை சபாநாயகராக இருந்தார். அவர் திருமணத்துக்கு, மறைந்த புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியையும் நேரில் அழைத்து வரச்சொல்லி, அதுபோல திருமணத்திற்கு கருணாநிதியும் வந்து வாழ்த்தினார். இதுபோல, அரசியல் கட்சித்தலைவர்கள் அரசியலில்தான் எதிரிகளாக இருந்தார்களே தவிர, அதைத்தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் நட்புடன்தான் இருந்து வந்தார்கள்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணி ராமதாசும் தங்கள் இல்ல திருமணத்திற்கு அரசியல் கட்சி மாச்சாரியங்களை கடந்து, அனைவரையும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்கள். அதுபோல, கட்சி வேறுபாடு இல்லாமல் தி.மு.க. தலைவர் கருணாநிதி கண் வலியோடு சென்றதும், பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பதற்கு ஏற்ப அவரும், டாக்டர் ராமதாசும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தங்கள் நட்பின் வலிமைபற்றி பெருமையாக பேசியதும், எதிரும் புதிருமாக இருந்த மு.க.ஸ்டாலினும், வைகோவும் ஒருவரையொருவர் தேடிச்சென்று பேசியதும், அமையப்போகும் கூட்டணியில் ம.தி.மு.க.வும் இடம் பெறும் என்ற சூசகமான தகவலை சமுதாயத்திற்கு எடுத்து காட்டியதும் ஒரு மகிழ்ச்சியான அரசியலை எடுத்து காட்டும் வகையில் இருந்தது. நிச்சயமாக, இதுபோன்ற மாற்று கட்சியினரின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம், அரசியலில் நாகரிகத்தை மேம்படுத்தி, தேவையற்ற வெப்பத்தையும், கசப்பு உணர்வுகளையும் மாற்றமுடியும். எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எதிரி கட்சிகளாக இருக்க தேவையில்லை.

மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், இன்று முதல், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.



புதுடில்லி : கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்.,மில், மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே இனி, இலவசமாக பணம் எடுக்க முடியும். மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், இன்று முதல், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தியா முழுவதும், 1.6 லட்சம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. தற்போது, பெரும்பாலான மக்கள், ஏ.டி.எம்.,கள் மூலமாகத் தான் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம்., பராமரிப்பு பணிகள் அதிகரித்துள்ளதால், அவற்றிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தும்படி, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி, சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இதுவரை, வாடிக்கையாளர்களின் கணக்கு உள்ள வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில், மாதத்துக்கு ஐந்து முறை மட்டுமே, கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இன்று முதல், ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதேபோல், கணக்கு இல்லாத பிற வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில், இதுவரை, ஐந்து முறை கட்டணமின்றி இலவசமாக பணம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. இன்று முதல், மூன்று முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். மூன்று முறைக்கு மேல், பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த நேரிடும்.டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Friday, October 31, 2014

"கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்''



"கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை" படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.

எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.

கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.

1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.

`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.

இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:

"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.

பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.

எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.

அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.

சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.

"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.

என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.

என் இரண்டாவது படத்தை, மணிவண்ணன் டைரக்ஷனில் தயாரித்தேன். "இளமைக் காலங்கள்'' என்பது, படத்தின் பெயர். மோகனும், சசிகலாவும் நடித்தார்கள்.

18-8-1983-ல் படம் வெளிவந்தது. இந்தப் படமும் வெற்றிப்படம்தான். 200 நாட்கள் ஓடியது.

இரண்டாவது படமும் வெற்றிப்படமாக அமைந்ததால், கலைத்துறையில் எனது ஈடுபாடு அதிகமாகியது. அடுத்த படத்தைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' டைரக்ட் செய்து பெரும் வெற்றியடைய வைத்த டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் சிவகுமார் - அம்பிகா ஆகியோரை வைத்து "நான் பாடும் பாடல்'' என்ற படத்தைத் தயாரித்தேன். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் என்ற ஊரில் எடுத்தோம். இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளை சுந்தர்ராஜன் வைத்திருந்ததால் எதை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் ஏற்பட்டது.

எந்த "கிளைமாக்சை'' வைத்துக் கொள்வது என்று நானும் சுந்தர்ராஜனும் கடும் விவாதம் நடத்திக் கொண்டிருந்தோம். கதாநாயகி அம்பிகா இறப்பது போல அமைந்தது ஒரு கிளைமாக்ஸ். சிவகுமார் தொட்டு பொட்டு வைத்த நெற்றியை அம்பிகாவே நெருப்புக்கட்டையை எடுத்து சூடு வைத்துக் கொள்வது போல மற்றொரு கிளைமாக்ஸ்.

இரண்டு கிளைமாக்ஸ்களில் எதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதால், ரீ ரிக்கார்டிங் செய்யும்போது இசையமைப்பாளர் இளையராஜா முடிவிற்கே விட்டு விடுவோம் என்று இருவரும் தீர்மானித்தோம்.

அப்படி இளையராஜா தேர்ந்தெடுத்த கிளைமாக்ஸ்தான் `நான் பாடும் பாடல்' கிளைமாக்ஸ். சிவகுமார் பொட்டு வைத்த நெற்றியை அம்பிகா - தானே சுட்டுக்கொள்வது போன்ற இந்த கிளைமாக்ஸ் காட்சியால் படம் சக்கை போடு போட்டு பிரமாண்ட வெற்றி பெற்றது. படம்

தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றிகரமாக ஓடியதால் திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, மதர்லேண்ட் பிக்சர்ஸ் பெயர் மிகவும் பிரபலமடைந்தது.

இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.''

சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு


சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா'' பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்'' பாடலும் தருவார்.

காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்'' படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா''வும் தருவார்.

நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்'' படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'' பாடலும் தருவார்.

புரியாத மொழியில் `ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா'' பாடலை எழுதியதும் இவரே.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே'' பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி'' படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.

இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.

1939-ல் வெளிவந்த "மாரியம்மன்'' படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து "புலவர்'' பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.

பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?

கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-

அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

சுதந்திரம் கிடைத்த பிறகு "சுதந்திர போராட்ட தியாகி'' என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு `வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.

ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி'', ''ஓர் இரவு'' போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.

இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'' படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக "வெச்சேன்னா வெச்சதுதான்'' என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.

அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் "மச்சரேகை'' நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.

இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த "பாதாள பைரவி'', "மிஸ்ஸியம்மா'', "மாயாபஜார்'' போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.

அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.

ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் "அமரதீபம்'' படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, "நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க'' என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், "வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே'' என்று கலக்கமாய் கூறியவர், "வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க'' என்று கேட்டிருக்கிறார்.

அப்பாவும் உடனே தமாஷாக, "ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா'' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

"இதுக்கு என்ன அர்த்தம்?'' என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, "கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு "டப்பாங்குத்து பாடலாசிரியர்'' என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த "குறவஞ்சி'' படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி "எந்நாளும் `தண்ணி'யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா.... ரா...'' என்று எழுதினார்.

சினிமாவில் `கேட்டது கிடைக்கும்' என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது "தங்கரத்தினம்'' படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் "உதயசூரியன்'' என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் "எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு'' என்று எழுதிக் கொடுத்தார்.

அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது "மாலையிட்ட மங்கை'' என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த `பிஸி'யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.

அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்' வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.

பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்''

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

காலமே என்னைக் காப்பாற்று

காலமே என்னைக் காப்பாற்று

அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும் -

நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் -

தென்னைமரத்தில்
அணில்வேடிக்கைபார்க்கும்
குழந்தை நிமிஷத்தில்
அலறும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் -

ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை
தலைமறைவாகித் தொலைக்கும் பேனாவிலிருந்தும் -

விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி
முனிவன்போல் புலனடக்கித்
தும்பிபிடிக்குமொரு பொற்பொழுதில்
தொழிலைக் கெடுக்கும் தும்மலிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
ஒரே ஒரு புத்தகம்படித்த
'அறிவாளி'யிடமிருந்தும் -

சிநேகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும் -

எல்லாரும் கதறியழ
எனக்குமட்டும் கண்ணீர்வராத
இழவு வீட்டிலிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

பயணியர்விடுதிக்
கொசுவிடமிருந்தும் -

முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை
உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்
உலோபியிடமிருந்தும் -

கை கழுவ அமர்ந்த
சாப்பாட்டு மேஜையில்
கைகுலுங்க வரும்
கைகளிலிருந்தும்...


நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்-

நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும் -

மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும் -

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *

எனதுபக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -

வருமானம் எல்லாம் தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -

என்னைப் பகையாய் எண்ணும் வாசலில்
பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -

இல்லையென்றொருவன்
தவிக்கும்பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
சக ரயில் பயணியின்
அரட்டையிலிருந்தும்
அரட்டை முடிந்ததும்
குறட்டையிலிருந்தும்

காலமே
என்னைக்
காப்பாற்று

* * * * *
தீதும் நன்றும் பிறர்தர வாரா
என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்

என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே

காலமே
என்னைக்
காப்பாற்று

  • கவிஞர் : வைரமுத்து

பெங்களூர்: பெங்களூர் நகரின் பெயர் நாளை முதல் பெங்களூரு என்று அதிகாரப்பூர்வமாக மற்றப்பட்டு அமலுக்கு வருகிறது.

பெங்களூர்: பெங்களூர் நகரின் பெயர் நாளை முதல் பெங்களூரு என்று அதிகாரப்பூர்வமாக மற்றப்பட்டு அமலுக்கு வருகிறது. அதேபோல மைசூர் என்ற பெயரும் மைசூரு என்று மாற்றப்படுகிறது. இவை மட்டுமல்ல கர்நாடகத்தின் 12 முக்கிய நகரங்களின் பெயர்களும் பழைய கன்னட பெயர்களுக்கே நாளை முதல் மாற்றம் பெறுகின்றன.

இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் முறைப்படி கொடுத்து விட்டது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் நாளை ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது கர்நாடக மாநிலத்தின் பிறப்பு தினமாகும் இது. நாளை 68வது ராஜ்யோத்சவா ஆகும். இதையடுத்து நாளை முதலே இந்த பெயர் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

 இதுகுறித்து பழம்பெரும் கன்னட நடிகரான கிரிஷ் கர்னாட் கூறுகையில், இது உண்மையில் பெயர் மாற்றம் அல்ல. ஸ்பெல்லிங் மாற்றம்தான். நாங்கள் எப்போதுமே பெங்களூரு என்றுதான் அனைத்து மொழிகளிலும் சொல்லி வருகிறோம். உள்ளூர் மக்களும் கூட பெங்களூரு என்றுதான் பேசி வருகிறார்கள். மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறியதை இதனுடன் ஒப்பிட முடியாது. அது முற்றிலும் பெயர் மாற்றமாகும். ஆனால் பெங்களூரு என்பது வெறும் ஸ்பெல்லிங் மாற்றம் மட்டுமே என்றார் அவர். ஆனால் இந்த ஸ்பெல்லிங் மாற்றத்திற்கு சற்று அதிருப்தியும் இருக்கத்தான் செய்கிறது. ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறுகையில், பெங்களூரு என்பதிலிருந்து பெங்களூர் என்று மாறி பல காலமாகி விட்டது. ஐடி துறையில் நாங்கள் இன்னும் சற்று மாறி, 'Bangalored' என்றும் அழைக்கிறோம். பெங்களூர் என்ற பெயரில் எந்த அடிப்படைத் தவறும் இருப்பது போலத் தெரியவில்லை. அப்படி இருக்கையில் அதையே பின்பற்றுவதிலும் தவறில்லை. உலகம் முழுவதும் பெங்களூர் என்றுதான் பிரபலம். எனவே அதை மறுபடியும் பெங்களூரு என்று மாற்றுவது சரியானதாக தெரியவில்லை. இப்போது இதனால் நேரம், பணம், முயற்சி எல்லாமே விரயமாகும். குழப்பமே மிஞ்சும் என்றார் அவர். பெங்களூர், மைசூர் தவிர நாளை முதல் மாற்றம் பெறும் பிற நகரங்கள் விவரம்.

 பெல்காம் -பெலகாவி, மங்களூர்- மங்களூரு, குல்பர்கா- கலபுராகி, ஹூப்ளி- ஹுப்பள்ளி, ஷிமோகா - சிவமோகா, சிக்மகளூர் - சிக்கமங்களூரு, பெல்லாரி - பல்லாரி, பீஜப்பூர்- விஜபுரா அல்லது விஜயபுரா, ஹோஸ்பேட் - ஹொசப்பேட்டை, தும்கூர்- தும்மகூரு. ரைட்டு.. நாளை முதல் மாத்தி பேசலாம், எழுதலாம்!

ஒரு முதல்வரின் மனைவி பணியில் இருக்கும் சிறப்பு வேறு எவருக்கும் கிடைக்காத ஒன்று



மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கும் பாஜவின் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா, தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். ஒரு முதல்வரின் மனைவி பணியில் இருக்கும் சிறப்பு வேறு எவருக்கும் கிடைக்காத ஒன்று. நாக்பூரில் உள்ள அந்த தனியார் வங்கியின் கிளையில் இணை துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார் அம்ருதா. பட்னாவிஸ் முதல்வராகப் பொறுப்பேற்பதால், தலைநகர் மும்பைக்கு இடமாற்றம் கோரியுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த டாக்டர் தம்பதியின் மகளான அம்ருதாவுக்கும், பட்னாவிசுக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திவிஜா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளார். நாக்பூரில் உள்ள பள்ளியில் கே.ஜி. படித்து வருகிறார். திருமணத்தின்போதும் வங்கியில் பணிபுரிந்த அம்ருதா, அதைத் தொடர்கிறார். தனது கணவர் முதல்வராகப் பொறுப்பேற்பதால், பணியில் இருந்து விலகப் போவதில்லை என்று கூறியுள்ள அவர், மும்பைக்கு இடம் மாறுதல் கோரியுள்ளார். இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவுக்காக விடுமுறையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அம்ருதா கூறியதாவது: பட்னாவிஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தோம்.

பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அவர் முதல்வராகப் பொறுப்பேற்பதால் மும்பைக்கு செல்ல வேண்டும். எனது வேலையை விட்டுவிடும் எண்ணம் எதுவுமில்லை. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். குழந்தை தற்போது படித்து வருவதால், மும்பைக்கு இடம்பெயர்வது குறித்து கணவருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார். இதனிடையில் பேத்தி திவிஜாவுக்காக மும்பைக்கு செல்லவிருப்பதாக பட்னாவிசின் தாயார் சரிதா கூறியுள்ளார். திவிஜாவுக்கு எப்போதும் வீட்டில் யாராவது இருக்க வேண்டும். மும்பையில் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா, மிகவும் பெரிய இடம். அதனால் திவிஜா தனிமையை உணரக் கூடாது என்பதால் நானும் மும்பை செல்ல உள்ளேன் என்றார் சரிதா.

NEWS TODAY 31.01.2026