Thursday, November 6, 2014

கதவுகள் இல்லாத கிராமம்! கூரை இல்லாத ஆலயம்...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கமுதி செல்லும் வழியில், அபிராமம் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி 4 கி.மீ தொலைவில், பாப்பனம் கிராமத்தில் அமைந்திருக் கிறது ஒரு கோயில். இந்தக் கோயிலின் விசேஷமே, கோயிலுக்குக் கதவுகள் இல்லை என்பதுதான்.
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்த மக்கள், பஞ்சத்தின் காரணமாக ஊரை விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது, அதுவரை அவர்கள் வழிபட்டு வந்த முனியப்ப சுவாமி கோயிலில் இருந்து ஓர் அசரீரி, ''என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்'' என்று ஒலித்ததாம். அப்படியே முனியப்ப சுவாமியையும் தங்களுடன் எடுத்துக்கொண்டு புறப்பட்ட மக்கள் வந்து சேர்ந்த இடம்தான் இந்த பாப்பனம் கிராமம்.
பாப்பனம் கிராமத்துக்கு வந்ததும் மக்கள் செய்த முதல் வேலையே, தாங்கள் வழிபட்டு வரும் முனியப்ப சுவாமிக்கு ஒரு கோயில் கட்டியதுதான். கோயிலைக் கட்டி முடித்துக் கதவு வைக்க இருந்தபோது மறுபடியும் ஓர் அசரீரி, ''என் கோயிலுக்கு கதவு வைக்க வேண்டுமானால் தங்கத்தில்தான் வைக்க வேண்டும்'' என்பதாகக் கேட்டது. கோயிலுக்குத் தங்கத்தில் கதவு வைக்க யாரால் முடியும்? எனவே, கோயிலுக்குக் கதவுகள் வைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். சுவாமியின் கோயிலுக்கே கதவு இல்லாதபோது தங்களுடைய வீட்டுக்கு மட்டும் கதவு எதற்கு என்று நினைத்த மக்கள், தங்கள் வீடுகளுக்கும் கதவுகள் வைக்காமலேயே விட்டுவிட்டனர். இருந்தும், எந்த அசம்பாவிதமும் இங்கே நிகழாமல் காத்து வருகிறார் முனியப்பசாமி.
இந்தக் கிராமத்து மக்கள் யாரும் கட்டிலில் உறங்குவது இல்லை. மண் தரையில்தான் உறங்குகிறார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் இந்த ஊருக்கு வந்தால், அவர்களும் தரையில்தான் உறங்கவேண்டும்.
அறுவடைக் காலத்தில், முதலில் கொஞ்சம் அறுவடை செய்து முனியப்ப சுவாமிக்குக் காணிக்கை செலுத்திய பிறகே அறுவடையைத் தொடர்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.
வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்துகொண்டு முனியப்ப சுவாமியை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடுவதாகவும் பரவசத்துடன் கூறுகிறார்கள்.
முனியப்ப சுவாமி கோயிலுக்கு அருகிலேயே  அரியநாச்சிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு கூரை இல்லை. மக்கள் பலமுறை இந்தக் கோயிலுக்கு கூரை அமைத்தும், கூரை இடிந்து விழுந்துகொண்டே இருந்தது. அதனாலேயே இன்று வரை அக்கோயில் கூரை இல்லாமல்தான் இருக்கிறது. இந்த அரியநாச்சி அம்மனுக்கு மார்கழி மாதம் பொங்கல் வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்கிறார்கள்.

கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை

தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே

சொல்

பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?

மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது

கைந்நிறையப் பூக்கள்

இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?


வாழ்க்கையோடு
உடன்பாடு

மனிதரோடுதான்
முரண்பாடா?

மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி


  • கவிஞர் : வைரமுத்து

சென்னை, புறநகர் பகுதிகளில் மக்களை அலறவைக்கும் வெறிநாய்கள்


ஆவடி, நவ.6:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெறிநாய்களால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், பூந்தமல்லி, மதுரவாயல், போரூர், செங்குன்றம், புழல், மாதவரம், திருவொற்றியூர், எண்ணூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பாஸ்ட் புட் மற்றும் இறைச்சி கடைகளில் கிடைக்கும் மிச்சம் மீதியுள்ள மாமிச கழிவுகளை சாப்பிடும் தெரு நாய்கள் நாளடைவில் கிருமிகளால் தாக்கப்பட்டு வெறிநாய்களாக மாறி விடுகிறது. இவை இரவு பகல் பாராமல் தெருக்களில் வெறி கொண்டு திரிகின்றன. இரவு நேரங்களில் வேலை முடிந்து இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. கடைக்கு செல்லும் பெண்கள், முதியோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் நாய்களின் தொல்லைக்கு ஆளாகின்றனர். தொல்லை தரும் நாய்களை ஊசி மற்றும் விஷம் வைத்து கொல்லக் கூடாது என மிருகவதை சட்டம் உள்ளது. அதையும் மீறி கொன்றால் புளுகிராஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மூலம் இனப்பெருக்கத்தை தடுக்கிறார்கள்.

அப்படி இருந்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. கடந்த 2009ல் நாய்க்கடிக்கு 9 பேர், 2010ல் 12 பேர், 2011ல் 21 பேர், 2012ல் 28 பேர், 2013ல் 33 பேர், 2014ல் இதுவரை 36க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி, நகராட்சிகளில் புகார் செய்தாலும் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை வந்து லாரியில் நாய்களை பிடித்து செல்கின்றனர். பின்னர் அவற்றை காட்டு பகுதிகளில் விட்டு விடுகின்றனர். இந்த இடைவெளியில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதால் அவை முன்பைவிட வெறி கொண்டு அலைகின்றன. இதனால் மக்களை விரட்டி கடிக்கின்றன.

மாநகராட்சி, நகராட்சி சுகாதார மையங்களில் நாய்க்கடி, பாம்புக் கடிக்கு ஊசி மருந்து இல்லை. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் ஏழை மக்களுக்கு பணம் அதிகம் செலவாகும் என்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன.

அவற்றை அவ்வப்போது பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். வருடத்துக்கு 60,000 நாய்களுக்கு மேல் கருத்தடை ஆபரேஷன் செய்கிறோம் என்றனர்.

எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொல்லை தரும் வெறிநாய்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்க்கடி, பாம்புக் கடிக்கு சுகாதார மையங்களில் ஊசி மருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

நெருங்குகிறது சபரிமலை சீசன் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் புக்கிங்

அந்தக் காலத்து படம் மாதிரி இல்லபா



பொங்கல்னா ஜல்லிக்கட்டு. தீபாவளின்னா சினிமா டிக்கெட்டு’அப்படினு ஊர்ல பெரியவங்க சொல்லுவாங்கோ. ‘அதான் தீபாவளி முடிஞ்சு போச்சுல அதுக்கு இப்ப இன்னா?’ அப்படிங்கிறீங்களா? தீபாவளிதான் முடிஞ்சுபோச்சே. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் இன்னும் ஓடிக்கிட்டுத்தானே இருக்கு. கூல் ட்யூட், ஓகே… ஓகே… ஐ வில் கம் டூ த பாயிண்ட்...

இன்னைக்கு தீபாவளின்னா புது ட்ரெஸ், பார்ட்டி, பீச், அப்படி இப்படினு ப்ரெண்ட்ஸோட பயங்கரமா செலிபிரேட் பண்ணியிருப்பீங்க. 20 வருஷத்துக்கு முன்னாடி இன்னாதான் இருந்தாலும் சினிமாதான் ஸ்பெஷல். இப்ப எல்லாம் முன்னாடியே ரிசர்வ் பண்ணி, போட்டிருக்க சட்டைல சின்ன மடிப்புக்கூட கசங்காம படம் பார்த்துறோம்.

ஆனா முன்னாடி அப்படி இல்ல. அதுலயும் ரஜினி, கமல் படம் ரிலீஸ் ஆச்சுன்னா போதும். சும்மா ஏரியாவே பட்டையைக் கிளப்பும். காலைல சன் எல்லாம் வர்றதுக்குள்ளே ப்ரெஷ், பேஸ்ட், டவல் எடுத்துகிட்டு தியேட்டருக்குப் போயிருவாங்க. போலீஸ் எல்லாம் வந்தாலும் ஃபேன்ஸ் அடங்க மாட்டாங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் ஏறி ஒரு வழியா டிக்கெட் எடுத்துருவாங்க.

டிக்கெட் கிடைக்காம வீட்டுக்குப் போறவங்களும் உண்டு. ஜல்லிக்கட்டுல காளைய அடக்குற மாதிரி தீபாவளி ஃபர்ஸ்ட் ஷோல டிக்கெட் எடுக்குறது. டிக்கெட் எடுத்தாலே மாஸ்தான். படம் எப்படியிருந்தா இன்னா? டிக்கெட் கெடச்ச சேடிஸ்பேக் ஷன்ல திரும்பி வந்துருவாங்க.

இன்னொரு முக்கியமான பாயிண்ட் அப்போ சினிமான்னா ‘ஒரு கதை’ சொல்வாங்க. ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் இருப்பாங்க. அப்பா, அம்மா எல்லாம் இருப்பாங்க. நம்ம ஊர் மாதிரி ஒரு ஊர் இருக்கும். ஆளுங்க இருப்பாங்க. அப்புறம் ஒரு வில்லன் இருப்பான். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சண்டை வரும். கடைசில ஹீரோ ஜெயிப்பார். ஹீரோயின மேரேஜ் பண்ணுவார்.

இல்லனா வில்லன் அபேஸ் பண்ண ஹீரோவோட சொத்தை வில்லன ஜெயிச்சு வாங்கிருவார். போலீஸ் கடைசி சீன்ல வந்து, “யூ ஆர் அண்டர் அரஸ்ட்’’ அப்படி சொல்லி வில்லன கைது பண்ணிக் கூட்டிட்டுப் போவாங்க. இல்லன்னா ஹீரோவின் ப்ரெண்ட், துரோகம் பண்ணி செகண்ட் ஆஃப்ல எனிமியா மாறுவான். கடைசில ஹீரோ நண்பன ஜெயிச்சு அவர திருத்துவான்.

இது மாதிரி ஏகப்பட்ட ஸ்டோரீஸ். இன்னாதான் சொன்னாலும் அந்தக் காலத்துப் படத்துல ஒரு ஸ்ட்ரெயிட்டான கதை இருக்கும். மேட்டர் இன்னான்னா, குறியீட்டுப் படம், அம்பு போட்ட படம்லாம் அப்போ இல்ல. அதான் அந்தக் காலத்து பெருசுங்க இப்ப உள்ள எந்தப் படம் பார்த்தாலும், “அந்தக் காலத்து படம் மாதிரி இல்லபா” அப்படிம்பாங்க.

இப்ப ஸ்டோரி இல்லாத படம் எடுக்குறதுதான் டிரெண்ட். சோடா தெளிச்சி, தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிற மாதிரி. கதை இன்னான்னு தெரியாத மாதிரி எடுக்கணும். அதான் இப்ப சேலஞ்ச். அப்படியே ட்ரை பண்ணாலும் பார்க்க முடியாது. அது வேற மேட்டர். இன்னாபா ஒண்ணும் புரியல அப்படினு எவனாது கேட்டா ‘பின் நவீனத்துவப் படம்’ அப்படிங்கணும். ஃபுல் எனர்ஜியையும் போட்டுப் படம் பார்த்தாலும் புரியாது; புரியக் கூடாது.

இப்ப புதுசா இன்னொரு குரூப் கிளம்பியிருக்கு. படத்தைப் ப்ரேம் பை ப்ரேம் பிரிச்சு மேஞ்சு, ஹீரோவோட ஜீன்ஸ் கலர்ல இது இருக்கு. ஹீரோயினோட ஸ்டிக்கர் பொட்டுல அது இருக்குன்னு படத்தை எடுத்த டைரக்டருக்கே தெரியாத குறியீடெல்லாம் சொல்லுவாங்க. இன்னாபான்னு கேட்டா குறியீட்டுப் படம்பாங்க. இந்த மாதிரி படத்துக்கு இன்னயின்ன குறியீடு எல்லாம் இருக்குன்னு படம் பார்த்துட்டு வந்து பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்ருவாங்க. அத பாத்துட்டுப் படம் பார்க்கப் போறதால சேதாரம் இருக்காது.

அட்மின் அட்டகாசம்!



தீபாவளி விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது, தெரிந்த இளைஞனிடம் ''காலேஜ் முடிச்சு ரொம்ப நாளாச்சே... என்ன பண்றே?'' என்றேன்.

''அட்மினா இருக்கேன்...'' என்று பதில் வந்தது.

''எந்த கம்பெனியில?'' என்றேன்.

''கம்பெனியா? ஹா ஹா, அதெல்லாம் இல்லை... வாட்ஸ்அப்புல ஏழு குரூப்புக்கு அட்மினா இருக்கேன்'' என்றான் அசால்ட்டாக.



கோலிகுண்டு சீசன், பம்பரம் சீசன், கிட்டிப்புள் சீசன் போல முன்பு ஃபேஸ்புக்கில் கமென்ட் போட்டு அதிக லைக் வாங்க வேண்டுமென்று வெறி பிடித்து அலைந்தவர்கள் சிலர். இப்போது வாட்ஸ்அப்பிலும் கொலைக்குத்தை ஆரம்பிக்கிறார்கள்.

ஒருபக்கம் முக்கியமான தகவல்களை பரப்புவது, ஆபத்து காலங்களில் உதவுவது என்று வாட்ஸ்அப்பால் பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த அட்மின் அட்டகாசம் தொடர்கிறது.

கொக்கி குமாரு, பக்கி பாஸ்கரு என்று வயலன்ட் கேங்குகள் போல இவர்களும் வாட்ஸ் குரூப்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியான தகவல்களைப் பரிமாறுகிறார்களா என்றால் இல்லை. மொக்கை ஸ்டேட்டஸ்களையும் கேட்டு புளித்துப்போன பொன் மொழிகள், ஜோக்குகளையும் போட்டு கொலையாய்க் கொல்லு கிறார்கள்.

''எங்க வீட்டு வாசலில் குப்பை, நகராட்சி அள்ளவில்லை'' என்று போட்டோவை ஷேர் செய்து குரூப்பிலிருக்கும் அனைவரின் செல்லையும் குப்பையாக்குகிறார்கள். உண்மையில் அந்தக் குப்பையை போட்டதே அந்த வாட்ஸ் அப் அட்மின் ஆறுமுகமாகத்தான் இருக்கும். டாஸ்மாக் பாரில் உட்கார்ந்துகொண்டு ''கே எஃப் பீர் கிடைக்கல, பிரிட்டிஷ்தான் கிடைச்சது. உங்க ஏரியாவுல கிடைக்குதா?'' என்று பாட்டிலையும் கண்றாவி சைட் டிஷ்ஷையும் போட்டோ எடுத்து ஷேர் செய்வது என்று வாட்ஸ்அப்பை, நம் ஊரிலுள்ள பார்களிலிருக்கும் வாஷ்பேசின் போல் ஆக்கி விட்டார்கள்.

இதாவது பரவாயில்லை. பண்டிகை தினத்தன்று ''மட்டன் வாங்கிவிட்டோம், இன்னும் சமைக்கலை'' என்று குளோசப்பில் அந்த மட்டனைக்காட்டி செல்போனைப் பதறவிடுகிறார்கள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா!

இதைவிட காமெடி, சிலர் ரமேஷ் ஃப்ரெண்ட்ஸ், சுரேஷ் ஃப்ரெண்ட்ஸ், கருவைக்காட்டு நண்பர்கள், பிணந்தின்னி குரூப்ஸ் என்று ஆரம்பிப்பார்கள். இவர்கள் பின்னால் ஒரு குரூப் சேர்ந்தவுடன் அட்மினே அதிலிருந்து விலகிப்போய்விடுவார். ஏன் குரூப் துவக்கினார், ஏன் விலகினார் என்று யாருமே அறிந்துகொள்ள முடியாது. அதனால், அவருக்கு அடுத்ததாக அதில் இணைந்தவர் ஓ.பி எஸ் மாதிரி அடுத்த அட்மினாகி விடுவார்.

'’ஏய்...நீ, வாட்ஸ்அப் குரூப் நடத்துறியா, போலீஸ்ல மாட்டப்போறே, உங்க வாட்ஸ்அப் தகவல்களை எல்லாம் அமெரிக்க உளவுத் துறையிலேர்ந்து அண்டார்டிகா உளவுத் துறைவரை வாட்ச் பண்ணுகிறார்கள். நம் ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல இதை ரெக்கார்டு பண்ணவே ஒரு டீம் இருக்கு. உன் குரூப்புல உள்ளவன் எவனாவது வில்லங்கமான மேட்டரை அதுல ஏத்திவிட்டான்னா, அவனைப் பிடிக்க மாட்டாங்க. அட்மினான உன்னைத்தான் பிடிப்பாங்க. சமீபத்துல ஜம்மு காஷ்மீர்ல பல பேரை பிடிச்சு குண்டாஸ்ல போட்ருக் காங்க என்று விளையாட்டாக ஓட்டுவதைக் கேட்டு நம் அப்பிராணி அட்மின் கதி கலங்கிவிடுவார். அதோடு அவர் ஆரம்பிச்ச குரூப்பிலிருந்து அவரே நைசாக விலகிவிடுவார். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது பல பேருடைய கதை.

வருகிற மெசேஜை அப்படியே காப்பி பண்ணி அடுத்த குரூப்பில் போடும் என் நண்பன், ''காபி டூ பேஸ்ட் செய்த விரலை செல்லில் மட்டுமல்ல, வேறு எந்த இடத்தில் வைத்தாலும் அந்த மெசேஜ் பதிவாகிறது'' என்கிறான். எல்லாம் ஒரு மனப்பிராந்திதான்.

இன்னும் சிலபேர் 60 குரூப்களில் இருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால், அவர்களுடைய செல்போன் சத்தம் போடாமல் ஒரு நிமிடம்கூட இருந்ததில்லையாம். மாத்தி மாத்தி ஒரே மெசேஜை 60 குரூப்களும் அனுப்பி அவரை டார்ச்சர் செய்கிறார்களாம். இதனால் செல்லை அவ்வப்போது ஆஃப் பண்ணிவிடுகிறார். இன்னும் சில வாட்ஸ்அப் குரூப்களில் குட்மார்னிங் மெசேஜ் சொல்லியே கொலவெறி ஏற்றுகிறார்கள்.

என்ன டெக்னாலஜி வந்தாலும் இந்த இம்சை அரசன்கள் தொல்லை தாங்க முடியலையேப்பா!

செ.சல்மான்

எம்.ஜி.ஆருடன் வாலியின் அனுபவங்கள்


எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

இதுபற்றி வாலி கூறியதாவது:-

'ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

'வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

விபூதி -குங்குமம்

'என்ன அண்ணே?' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

'நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

'ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?' என்று கேட்டேன்.

எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

'வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், 'கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!' என்று சொல்றாங்க.

உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.'

எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

'அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, 'சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.

தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். விலகாதிருந்த நாளில் (1972) கலைஞரின் மகன் மு.க.முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு 'பிள்ளையோ பிள்ளை' என்னும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, நான் பாடல்களை எழுதினேன்.

படம் தயாரானதும், அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று, தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.

படத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் மு.க.முத்துவின் நடிப்பை எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.

நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச்சொன்னார்.

மறுநாள், நான் தோட்டத்திற்கு சென்றேன்.

விருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது. இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத்தொடங்கினார். 'என்னங்க வாலி! மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா?'

இப்படி எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டதும், அவரது மனதில் உள்ளது என்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.

'பிள்ளையோ பிள்ளை' படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு. திரு.பஞ்சு மூலம், கலைஞர், தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.

அதன் காரணமாகப் படத்தின் கதாநாயகி, கதாநாயகனைப் பார்த்து - 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!' என்று பாடுவதாக பாடலைப் புனைந்தேன்.

எம்.எஸ்.வி.யும், சாருகேசி ராகத்தில் அந்த பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருந்தார்.

இதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் 'மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துக்கிட்டதானா? என்று என்னைக் கேட்டார்.

எம்.ஜி.ஆரிடம் நான் சொன்னேன்:

'அண்ணே! மு.க.முத்து வளர வேண்டிய இளம் கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க... அதனாலதான் அப்படி எழுதினேன்' என்று நான் சொன்ன விளக்கத்தை எம்.ஜி.ஆர். நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.

மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை, எனக்கு அவர் சொல்லாமலேயே சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.

இதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய 'எங்கள் தங்கம்' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.

இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.

இதில் 'நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்று ஒரு பாடலை எழுதினேன்.

எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.

முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.

மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.

அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.

முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.

'வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.

(அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது')

இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.

படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், 'நான் அளவோடு ரசிப்பவன்...' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் 'எங்கள் தங்கம்' படத்தில் எழுதினேன்.

'நான் அளவோடு ரசிப்பவன்' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், 'வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!' என்று என்னிடம் சொன்னார்.

நான் அவ்வாறே எழுதினேன்.

இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.

இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.

அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.

'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்', 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்', 'நான் செத்துப் பிழைச்சவண்டா', 'நான் ஆணையிட்டால்' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.

இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.

அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.'

இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

NEWS TODAY 31.01.2026