Thursday, February 26, 2015

கிணறு தோண்ட அனுமதி பெற ரூ.5,000 கட்டணம்: மாநிலத்தில் புதிய சட்டம் அமல்

சென்னை: 'ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய கிணறு கள் தோண்டவோ, பழைய கிணற்றை ஆழப்படுத்தவோ, ஊராட்சி தலைவரிடம் அனுமதி பெற வேண்டும்' என, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம், இந்த மாதம், 18ம் தேதியில் இருந்து, அமலுக்கு வருகிறது.

30 நாட்களுக்குள்...:

கவர்னர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இச்சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார். இச்சட்டம், 'தமிழ்நாடு ஊராட்சிகள் (கிணறு தோண்டுவதற்கான மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒழுங்கு படுத்துதல்) விதிகள் - 2015' என, அழைக்கப்படும். இச்சட்டப்படி, செயல் அலுவலர் என்பவர், கிராம ஊராட்சி தலைவர் ஆவார்.

* இச்சட்டத்தின்படி, புதிய கிணறு தோண்ட விரும்புவோர், ஆழப்படுத்த விரும்புவோர், 5,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலையுடன், விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள், செயல் அலுவலர் விண்ணப்பத்தை, பரிசீலனை செய்து, அனுமதி அளிக்க வேண்டும்.

* விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தால், உரிய காரணங்களை, எழுத்து மூலமாக, விண்ணப்பதாரருக்கு, விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

* கிணற்றை ஆழப்படுத்தவும், புனரமைக்கவும் மேற்கொள்ளப்படும் பணியை, வணிக ரீதியாக மேற்கொள்வோருக்கு, பதிவுச் சான்று வழங்கப்படும்.


* இதை பெற, 15 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையுடன், பதிவு சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை, கலெக்டரிடம் வழங்க வேண்டும்.


* விண்ணப்பத்தை, 45 நாட்களுக்குள், கலெக்டர் பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும்.

* விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தால், அதற்கான காரணங்களை, விண்ணப்பதாரருக்கு, எழுத்து மூலமாக தெரியப் படுத்த வேண்டும்.

ஆழப்படுத்த...

* கிணறு தோண்ட, ஆழப்படுத்த, அனுமதி பெற்றவர்கள், முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

'பாஸ்போர்ட்'டுக்கு விண்ணப்பிக்க தனியார் வங்கி கணக்கும் உதவும்

சென்னை: 'பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன், தனியார் வங்கி கணக்குப் புத்தகத்தையும், அடையாள சான்றாக இணைக்கலாம்' என, பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன், அடையாள சான்றாக, புகைப்படம் ஒட்டிய, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகங்களை இணைக்க, ஏற்கனவே அனுமதி உள்ளது. இந்நிலையில், தனியார் வங்கி கணக்குப் புத்தகங்களையும் இணைக்கலாம் என, வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது, 26 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கணக்குப் புத்தகங்ளோடு, 56 கிராமப்புற வங்கிகள், 23 தனியார் வங்கிகள் உட்பட, 105 வங்கிகள் அளிக்கும், புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகத்தை, அடையாள சான்றாக, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கலாம். இதற்கு, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Wednesday, February 25, 2015

எல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும் by !இந்துஜா ரகுநாதன்

Return to frontpage...by

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனதில் ஒரு விதக் குழப்பம், பயம் மற்றும் கவலை. இவை எல்லாம் தம் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதற்றம்தான்.

ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதைவிட அக்குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது... 2 வயது தொடங்கியதுமே அந்த குழந்தையின் பள்ளி அட்மிஷன் பேச்சு ஒவ்வொரு வீட்டிலும் எழத் தொடங்குவது இயல்பு. பெற்றோர் தவிர, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆளாளுக்கு கேட்கும் ஒரே கேள்வி, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்க்கப்போறீங்க? அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா? என்றுதான். ஆனால் ஒரு பள்ளியில் அட்மிஷன் கிடைக்க உண்மையில் என்ன தேவை என்பதை பற்றி அறிவது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விண்ணப்ப தேதிக்குக் காத்திருக்கும் பெற்றோர்

ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான். சொல்வதைப் போல் இது சுலபம் இல்லை. தமிழக அரசு பலமுறை குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பப் படிவம் அளிக்கவேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆணையிட்டாலும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நேரத்தில் வெளியிடுவதுதான் வழக்கம். பள்ளியில் விண்ணப்ப தேதியைக் கண்டறிய பெற்றோர்கள் இங்கும் அங்கும் ஓடி தினம் தினம் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

சில பள்ளிகள் நேரடியாக விண்ணப்பப் படிவம் கொடுப்பதும், சிலர் ஆன்லைனில் மட்டுமே வெளியிடுவதும் என்றும் வெவ்வேறு முறையைக் கையாளுவதால் பெற்றொர்களின் நிலை திண்டாட்டமே. நேரில் விண்ணப்பங்களை அளிக்கும் பள்ளிகளின் வாசலில் முதல் நாள் இரவிலிருந்து க்யூ கட்டி நிற்கத் தொடங்கும் பெற்றோர்களுக்கு முதல் 100 நபருக்குள் விண்ணப்பப் படிவத்தை வாங்கிவிட்டால் சீட் நிச்சயம் என்ற ஆதங்கமே காரணம். அது மட்டுமின்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கட்டுபாடு விதிக்கும சில பள்ளிகளில், கணினி தொடர்பில்லாத பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

குழப்பும் பள்ளிகளின் விதிமுறைகள்

முன்பெல்லாம் குழந்தை 4 அல்லது 5 வயது வரும் போது பெற்றோர்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி எல்.கே.ஜியில் சேர்த்துவிடுவது வழக்கம். வயது வரம்பு கூட அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத காலம் அது. ஆனால் இன்றோ ப்ரி.கே.ஜி என்றால் இரண்டரை-யிலிருந்து மூன்றரை வயதுக்குள் இருக்க வேண்டும், எல்.கே.ஜி என்றால் மார்ச் 31-க்குள் 3 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று பலப்பல கட்டுபாடுகளை பள்ளிகள் வரையறுத்துள்ளன.

சரி, இது சமவயதுப் பிள்ளைகள் படிக்க நல்ல வழி என்று நினைத்தாலும் அப்படி இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி வெவ்வெறு கட்டுப்பாடுகள் வெவ்வேறு வயது வரம்பு நிலவரம். வீட்டு அருகே உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே விசாரித்து அதற்கேற்ப வயது வரம்பில் நம் குழந்தை வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் பள்ளியில் சேர்க்கமுடியும்.

இதையெல்லாம் அலசி, ஆராய்ந்து, மெட்ரிக் பள்ளியா? அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா? என்று ஒரு முடிவு எடுப்பது இன்றைய காலத்தில் அதைவிட கடினமானது. மெட்ரிக் பள்ளி என்றால் சமச்சீர் கல்வி என்று சில பெற்றோர்களுக்கு அதன் தரத்தில் சந்தேகம் ஏற்படுவதால் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளை அதிகம் நாடுகின்றனர். அதனால் அங்கு அட்மிஷனுக்கு கடும் போட்டியே நிலவுகிறது. ஏற்கனவே பள்ளியில் சேர்த்த பெற்றோர்களும் வெளிப்படையாக சீட்டு கிடைத்தன் வழியை சொல்ல தயங்குவதால் அட்மிஷனுக்கு அலையும் ஒவ்வொரு பெற்றோரின் தவிப்பும் அலைச்சலும் அளவுக்கற்றது. ஒரு பள்ளியில் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்பாகவே நம் சீட்டை உறுதி படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் என்ற நிலைமையே இன்று உள்ளது.

சிபாரிசைத் தேடி அலையும் பெற்றோர்கள்

பள்ளியைத் தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தேடவேண்டியது ஒரு சிபாரிஸை. பள்ளிக்கேற்ப இந்த சிபாரிசு மாறுபடுகிறது. அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள், பிரபல பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று சிபாரிசு செய்வோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அதிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு முறை. பிரபலங்கள் சிபாரிஸை எடுத்து கொள்ளும் சில பள்ளிகள் அரசியல்வாதியின் ரெக்கம்மண்டேஷனை மதிப்பதில்லை.

அதேபோல் சி.பி.எஸ்.இ பள்ளி என்றால் மாநில அரசின் உயர் அதிகாரி சிபாரிசு என்றாலும் மறுத்துவிடுவர். இப்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு புலனாய்வு அதிகாரியை போலை இங்கும் அங்கும் தேடி, பலரிடம் விசாரித்து, அவமானப்பட்டு சிபாரிசு கடிதத்தை வாங்கி பள்ளியில் கொடுத்து அட்மிஷன் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

டொனேஷன் இருந்தால் அட்மிஷன் நிச்சயம்

விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் டொனேஷன் இல்லாமல் எந்த குழந்தையும் சேர்த்துகொள்வதாக தெரியவில்ல. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீடிக்கும் டொனேஷன் நடுத்தர வர்கக பெற்றோர்களுக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தி கடன் வாங்கும் அளவிற்கு தள்ளிவிடுவது கொடுமை. தன் குழந்தையும் நல்ல ஒரு பள்ளியில் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் அனைவரின் நிலையுமே இதுதான்.

சுமாரான பள்ளியாக இருந்தாலும் சேர்த்துவிட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டொனேஷன் தருவதை விட வேறு வழி இல்லை. நேரடியாக டொனேஷனை வாங்க மறுக்கும் பள்ளிகள் இடை தரகர்கள் மூலமே பணத்தை பெற்று அட்மிஷன் தருவது இயல்பாகிவிட்டது. டொனேஷனை தர மறுத்து நியாயம் பேசி காத்திருந்தால் மிஞ்சுவது குழந்தைக்கு பள்ளி இல்லாத நிலை மட்டுமே. பள்ளியில் குலுக்கல் முறையில் அல்லது கணினி மூலம் ராண்டம் செலக்‌ஷன் முறையில் அட்மிஷன் நடப்பதாக கூறுவது பெற்றோரின் கண்துடைப்புக்காகவே சொல்லபடுவது என்பது அனுபவத்தில் நன்கு தெரிந்துவிடும்.

ஆர்.டி.இ. இடங்கள் குளறுபடி

பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உயரிய நோக்கத்தோடு 2009 ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆர்.டி.இ அதாவது 'கல்வி உரிமைச் சட்டம்' இன்று அதன் உண்மை பயனை அடைந்ததா? என்றால் அதுவும் கேள்விகுறிதான். ஒவ்வொரு பள்ளியிலும் 25% ஆர்.டி.இ. சீட்டுகளுக்கான இடங்களுக்கு மே மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என்று பலமுறை அரசு ஆணையிட்டும் பல பள்ளிகள் அதற்கும் முன்பே எல்.கே.ஜி அட்மிஷனை முடித்துவிடுகின்றனர்.

சில பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆர்.டி.ஈ சீட்டுகான விண்ணப்ப நாட்களை அறிவிக்கின்றனர். இந்த இலவச சட்டத்தை பற்றியே சரவர தெரியாத ஏழை எளிய மக்கள் இணையத்தில் வெளியிடும் தேதிகளை அறிந்து விண்ணபிப்பது என்பது அரிது. கணக்கு காட்டுவதற்கான அறிவிப்பாகவே இதை பலரும் கருதுகின்றனர். சில பள்ளிகளிலோ ஆர்.டி.இ அடிப்படையில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி அளித்துவிட்டு, அந்த இழப்பை சரி செய்ய, மீதி உள்ள இடங்களில் சேர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 1 முதல் ஒன்றரை லட்சம் வரை நன்கொடை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இது மற்ற பெற்றோர்களின் சுமையை பெருக்கிவிடுவதால் இலவச கல்வி சட்டத்தின் சிறப்பே சிதைந்து விடுகிறது.

மாநில அரசிடம் ஈடு செய்ய வேண்டிய ஆர்.டி.இ-யின் கணக்கை பெற்றோர்களிடம் பறிப்பது நியாயமற்ற செயலாகி விடுகிறது. மொத்ததில் பிள்ளைகளை என்ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர்ப்பதை காட்டிலும் எல்,கே.ஜி சீட் வாங்குவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். குழந்தை பிறந்த உடனே பள்ளி அட்மிஷனுக்கு பணம் சேர்க்க தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல கல்வியை அவர்களுக்கு அளிக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது.

அரசு பாடத்திட்டதை ஒரே சீராக மாற்றியதைப் போல அட்மிஷன் முறையையும் சீர்படுத்தி குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகளில் எல்லாப் பள்ளிகளும் ஒரே விதிமுறைகளை பின்பற்றும்படி வரையறுத்தால் மட்டுமே பிள்ளைகளின் அட்மிஷன் கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்.

இந்துஜா ரகுநாதன் - தொடர்புக்கு induja.v@gmail.com

கபில் முதல் கிறிஸ்கெயில் வரை...!

கிரிக்கெட் விநாயகர் கோவிலில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்...!




கிரிக்கெட் விநாயகர் அருளால்தான் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்ரிக்க அணியை அபாரமாக வீழ்த்தியதாம். இதுதான்... சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களின் இப்போதைய 'ஹாட் டாபிக்'.

அது என்ன கிரிக்கெட் விநாயகர்...? இந்து கடவுள்களிலேயே விநாயகரைதான் இஷ்டப்படி பெயர் வைத்து அழைக்க முடியும். சந்துக்கு சந்து இருக்கும் விநாயகர்களை அந்த அந்த பகுதி பெயருடன் கலந்த அடைமொழியுடன் அழைக்கப்படுவார்.

கடந்த 2001ம் ஆண்டு, அண்ணாநகர் பாளையத்தம்மன் கோவிலில் விநாயகர் சிலை ஒன்று பிரதிருஷ்டை செய்யப்பட இருந்த நிலையில், அன்றைய தினம் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. விநாயக பக்தரான கே.ஆர். ராமகிருஷ்ணன் என்ற அந்த கிரிக்கெட் ரசிகர், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால், 'கிரிக்கெட் விநாயகர்' என்றே பெயர் வைத்து விடுவதாக வேண்டியுள்ளார்.

அந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற, உருவானார் 'கிரிக்கெட் விநாயகர்'. கிரிக்கெட் விளையாடுவது போன்றே விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த விநாயகரின் ஸ்பெஷல். இங்குள்ள குட்டி குட்டி விநாயகர்கள் பந்து வீசுவது போன்றும் பேட் பிடிப்பது போலவும் பீல்டிங் செய்வது போலவும் உருவாக்கப்பட்டு பிரதிருஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிநடந்து வருவதால் கிரிக்கெட் விநாயகருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது, இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணி மோதிய ஆட்டத்தின் போது, ஏராளமான ரசிகர்கள் கிரிக்கெட் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால்தான் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது என்பது அண்ணாநகர் பகுதி கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை.

அதுபோல் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தின் போதும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன் காரணமாகத்தான் உலகக் கோப்பையில் முதல் முறையாக தென்ஆப்ரிக்க அணியை, இந்திய அணி அதிரடியாக வீழ்த்தியதாக கிரிக்கெட் விநாயகரின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரிக்கெட் விநாயகரின் புகழ் பரவ, பரவ சுற்று வட்டார கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது கிரிக்கெட் மேட்ச் இருந்தால் கிரிக்கெட் விநாயகரிடம் வந்து ஆஜராகி வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டுதான் போட்டிக்கே செல்கின்றனர்.

ஒரு வேளை, இந்தியா உலகக் கோப்பையை வென்று விட்டால் என்ன நடக்குமோ? தெரியவில்லை.



பேஸ்புக்கில் பொங்கி எழுந்த அருந்த(தி)தீ...


Return to frontpage

அருந்ததி

சமூக வலைத்தளங்கள் வரமா...சாபமா என்ற விவாதம் என்றைக்குமே நீண்டு கொண்டுதான் இருக்கப்போகிறது.

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை நட்புக்காகவும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்துபவர்களுக்கு மத்தியில் அதை முழுக்க முழுக்க வக்கிர புத்தியின் வடிகாலாக பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

அப்படிப்பட்ட ஒரு 'பெருமித ஜொள்ளரின்' விஷமங்கள் அவர் பயன்படுத்திய அதே பேஸ்புக்கில் அம்பலமாக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த நபரால் துரத்தப்பட்ட ஒரு பெண்ணாலேயே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. பொருத்தது போதும் பொங்கி எழு... என்ற அடக்க முடியாத கோப உணர்வின் வெளிப்பாடுதான் அந்த பேஸ்புக் பதிவு.

அருந்ததி பி. நலுகெட்டில், இவர் ஹைதராபாத்தில் சமூக ஆர்வலராக இருக்கிறார். அழகான தோற்றம் கொண்டிருப்பது அவர் தவறல்லவே. ஆனால், அந்த தோற்றத்துக்காகவே வெகு நாட்களாக பேஸ்புக் போன்ற வலைதளங்களில் ஒரு நபரால் தொடர்ந்து தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். ஜொள்ளரின் தொந்தரவு எல்லை மீறிச் சென்று கொண்டிருந்தது. உதாரணத்திற்கு அவர் அனுப்பிய ஒரு மெசேஜ் "அருந்ததி என்னை தயவுசெய்து பேஸ்புக்கில் சேர்த்துக் கொள்ளவும். நீங்கள் மிகவும் செக்ஸியாக இருக்கிறீர்கள். உங்கள் போன் நம்பரைக் கொடுங்கள். என்னுடன் உறவு கொள்ள தயரா? (மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)".

நாளுக்குநாள் வக்கிர மெசேஜ்களின் எண்ணிக்கை அதகரித்தது. அப்போதுதான், அருந்ததி அந்த முடிவை எடுத்தார்.



அருந்ததி அந்த நபர் குறித்து போலீஸில் புகார் தெரிவித்திருக்கலாம், இல்லையேல், அந்த நபரை போனில் தொடர்பு கொண்டு வசை பாடியிருக்கலாம். ஆனால், அவர் செய்தது எல்லாம் இது மட்டுமே. குறிப்பிட்ட அந்த நபரிடம் இருந்து வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.,கள், பேஸ்புக் சேட் பாக்ஸில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை அப்படியே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்கமாக பகிர்ந்தார்.
இதோ அவர் பதிவு செய்த நிலைத்தகவல்:
தொழில்நுட்பம் வளரும் அதே வேகத்திற்கு அதைப் பயன்படுத்தி பாலியல் வக்கிரங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதற்கு அருந்ததியின் அணுகுமுறையும் ஒரு படிப்பினையே. அத்துமீறல்களை பொறுத்துக் கொண்டிருப்பது கோழைத்தனம். கோழைகளாக இல்லாமல்... அருந்ததிகளாக இருக்கலாம்.

மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத்தேர்வு

சென்னை: மருத்துவ மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது. 595 இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகள் என, பல மருத்துவ மேற்படிப்பு கள் உள்ளன. இதில், 1,100 இடங்களும், எம்.டி.எஸ்., படிப்புக்கு, 40 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக, மீதமுள்ள 595 இடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு, 8,600 பேர்; எம்.டி.எஸ்., படிப்புக்கு, 1,157 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி, சென்னையில் ஐந்து மையங்களில் நடக்கிறது. ''மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங் களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.

NEWS TODAY 29.01.2026