Tuesday, March 24, 2015

சமகாலப் பேரவலம்!



தேர்வுகளும் மதிப்பெண்களும் இந்தியக் கல்வித் துறையையும் நம்முடைய பெற்றோர்களையும் எப்படியெல்லாம் ஆட்டு விக்கின்ற ன என்பதை முகத்தில் அடித்துச் சொல்கிறது பிஹார் சம்பவம். மனார் வித்யா நிகேதன் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பெற்றோர்களும் நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு விடைகளை உள்ளே வீசும் படம் ஏற்படுத்திய அதிர்ச்சியைவிடப் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன, இந்தச் சம்பவத்தை பிஹார் அரசும் சமூகமும் எதிர்கொள்ளும் விதம்.

பிஹார் கல்வி அமைச்சர் பி.கே.ஷாஹியின் வார்த்தைகளில் எவ்வளவு பொறுப்பற்றத்தனம்! “14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாநில அரசுக்கு இருக்கும் வசதிக்கு இந்த அளவுக்குத்தான் தேர்வுக்கூடங்களில் காவலையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க முடியும். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்தான் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் ஷாஹி. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் பாட்னா உயர் நீதிமன்றம், அமைச்சரின் பேச்சை வெட்கக்கேடு என்று சாடியிருக்கிறது. வெட்கக்கேடுதான்! கூடவே, அசிங்கங்கள் எந்த அளவுக்கு நமக்குப் பழகிவிட்டன என்பதையும் ஷாஹியின் வார்த்தைகள் அம்பலப்படுத்துகின்றன.

தேர்ச்சி ஒன்றே குறிக்கோள்; மதிப்பெண்களே மாணவர்களின் இறுதி இலக்கு எனும் எண்ணம் இந்தியப் பள்ளிகளில் தொடங்கி, எல்லா வீடுகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிறது. இதற்காக எந்த விலையையும் கொடுக்க எல்லோருமே தயாராக இருக்கின்றனர். இதற்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல என்பதற்கு ஓசூர் சம்பவத்தையே உதாரணமாகச் சொல்லலாம். பிளஸ் டூ தேர்வு வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பிப் பிடிபட்டிருக்கின்றனர் ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இதுதொடர்பாக, ஓசூர் மாவட்டக் கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகளை மாணவர்களுக்கு அளிப்பதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுத்திருக்கின்றன என்பது கல்வித் துறையினருக்குத் தெரியும்.

தேர்வு அறைகளில் பெற்றோர்களும் மாணவர்களின் நண்பர்களும் அத்துமீறி உள்ளே நுழைவது, தடுக்கும் ஆசிரியர்களை அடித்து உதைப்பது, காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்களே பணம் வாங்கிக் கொண்டு ‘பிட்டு’களை உள்ளே சென்று கொடுப்பது, இன்னும் பல இடங்களில் பள்ளிகளே நேரடியாக விடைகளைத் தருவது, இதையெல்லாம் தடுத்து நிறுத்துவது சவாலான காரியம் என்று அமைச்சர் பேசுவது… இவையெல்லாம் எதன் வெளிப்பாடு என்றால், அரசாங்கத்துக்கு இந்த விஷயங்களெல்லாம் அசிங்கம் என்று துளியும் உறைக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. அரசாங்கம் தன்னுடைய பொறுப்புகளில் தரமான கல்விக்கு எந்த அளவுக்குக் கவனம் அளிக்கிறது என்பதன் வெளிப்பாடு. பிஹார் சம்பவம் குறித்து நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்களுக்குப் பின், தேர்வுகளில் பிட் அடித்ததாக 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைதுசெய்து, ரூ.15 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது பிஹார் அரசு. இந்த நடவடிக்கைகள் எல்லாம் இத்தனை நாட்கள் ஏன் உறைக்கவில்லை?

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை முழுமையாக இந்த விவகாரத்தில் குற்றவாளியாக்க முடியாது என்றாலும், இந்தக் குற்றக் கலாச்சாரத்தின் பின்னணியில் அவருக்கும் ஒருவிதத்தில் பங்கு இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு ஆரோக்கிய சமூகத்துக்கான கட்டுமானம் கல்வியையே அடித்தளமாகக்கொண்டு கட்டமைக்கப்படுகிறது. நல்ல நிர்வாகத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட கல்வித் துறை வீழ்ச்சி கண்ணிலேயே படாதது சமகாலத்தின் பேரவலம்!

மரணமும் மர்மமும்!

Dinamani

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் வணிக வரித் துறை அமலாக்கப் பிரிவு கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவியின் மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது என்கிற முடிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சித் தலைமை "இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கலாம்' என்று கூறிய பிறகே முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பைச் செய்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது, முழுமையான பாராட்டு அவருக்குக் கிடைக்காமல் போகிறது.
"சிறப்பு நேர்வுகளில் மட்டுமே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர
விடுவது வழக்கம் என்றும், எந்த விவகாரத்தையும் மாநில காவல்துறை விசாரிப்பதுதான் வாடிக்கை, அதைத்தான் நாங்களும் செய்தோம்' என்றும் கர்நாடக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சித்தராமையா கூறியது சாதாரண நிகழ்வுகளுக்குப் பொருந்தக்கூடியது. ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவியின் விவகாரத்தில் அதையே பொருத்திப் பார்ப்பது பொருத்தமற்றது.
தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் ரவி, கோலார் வணிக வரித் துறை அமலாக்கக் கூடுதல் ஆணையராகப் பதவி வகித்த காலக்கட்டத்தில், பல அரசியல்வாதிகளின் நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தி, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். சுமார் ரூ.200 கோடி வரை அரசுக்கு அவரால் வருவாய் கிடைத்துள்ளது என்பதும், அதன் காரணமாக அவர் பல அரசியல்வாதிகளின் விரோதத்தைப் பெற்றிருந்தார் என்பதும்தான் இந்த விவகாரத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த அழுத்தம் அல்லது மிரட்டல் இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது இது கொலையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம்தான், ரவியின் குடும்பத்தினர் மட்டுமன்றி பொதுமக்களும்கூட வீதிக்கு வந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தக் காரணமாக இருந்தது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிடும் இதே நாளில், கர்நாடக அரசு அறிவித்த சி.ஐ.டி.
விசாரணையின் அறிக்கை பேரவையில் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சி.பி.ஐ. விசாரணை முடியும் வரை சி.ஐ.டி. விசாரணையை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்து விட்டதால், அந்த அறிக்கை பேரவையில் வைக்கப்படவில்லை. இருப்பினும் அந்த அறிக்கையின் அம்சங்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளன. அவருடைய செல்லிடப்பேசியிலிருந்து மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் அவர் தினமும் எத்தனை முறை பேசினார், கடைசியாக அவர் அனுப்பிய குறுந்தகவல் என்ன என்பது உள்பட அனைத்து தகவல்களும் பத்
திரிகைகளில் வெளியாகிவிட்டன. இது எந்த வகையிலும் முறையற்ற செயலே.
ரவி நேர்மையான அதிகாரி என்பது பொதுமக்கள், உடன் பணியாற்றுவோர் எல்லோராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கோலார் மாவட்டத்தில் பணியாற்றிய 14 மாதங்களில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்த அரசு நிலங்களை மீட்டிருப்பதோடு, அவர்களது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளையும் விதித்தார் என்பது இந்த விவகாரத்தில் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், அவரது தனிப்பட்ட அந்தரங்க விவகாரங்களை
அம்பலப்படுத்தி, ஒரு நேர்மையான அதிகாரியை இடுப்புக்குக் கீழாக அடித்தல் என்பது சரியல்ல.
அது அப்படியே இருப்பினும், அந்தப் பெண் அதிகாரி எந்தப் புகாரும் தெரிவிக்காத நிலையில் இது அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். தற்போது அரசியல் லாபத்துக்காக அந்தரங்கத்தை அரங்கேற்றி, அவரது மரணத்தை மலினப்படுத்தப்
பார்ப்பது தரக்குறைவான அரசியல் குயுக்தி.
எடுத்த எடுப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடாமல் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதன் நோக்கமே, இதுபோன்ற அந்தரங்கத்தைக் கிளறியெடுத்து, அதைக் கசியவிட்ட பின்னர் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றுவது என்பதுதானோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த வழக்கை விசாரிக்கவிருக்கும் சி.பி.ஐ., இதே அந்தரங்கத்தை மட்டுமன்றி அவரது நேர்மையான பணியின் போது
அவருக்கு உருவான எதிரிகள் அனைவரையும் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது கோப்புகளிலிருந்தும், அவர் எடுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோர் பட்டியலிலிருந்தும் விசாரணையைத் தொடங்க வேண்டும்.
ஒரு நேர்மையான அதிகாரியின் மர்மமான சாவில் எதிர்க்கட்சிகள் காட்டுகின்ற ஆர்வம் என்பது, பெரும்பாலான தருணங்களில், "அப்பாடா, இடையூறாக இருந்த ஒரு நேர்மையான அதிகாரி முடிந்தார்' என்கிற உள்மகிழ்ச்சியும், அதே நேரத்தில் இதை அரசியல் ஆதாயமாக்கக் காரணம் கிடைத்துவிட்டது என்ற வெளிமகிழ்ச்சி
யுமாகத்தான் இருக்கிறது.
அதிகாரியின் மரணம் தொடர்பான கூடுதல் ஆவணங்களைச் சேகரிக்கும் அரசியல் புலனாய்வுகளில் அவர்கள் ஈடுபடுவதே இல்லை. ஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆளும் கட்சியினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சியினரும்கூட ஆகாதவர்கள்தானே!
நேர்மையான அதிகாரிகள் மரணத்தில் அரசியல்வாதிகள்தான் சுயநலம் பார்க்கிறார்கள் என்றால், உடன் பணியாற்றிய அதிகாரி
களும்கூட மௌனமாக இருப்பது ஏன்? நேரடியாக சொல்ல அச்சமாக இருப்பினும், இன்றைய சமூக வலைதளங்கள் மூலமாக, பத்திரிகைகள் ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் முகம் காட்டாமலேயே உண்மையைக் கசிய விடலாமே! ஏன் செய்வதில்லை? நேர்மைக்குத் துணை தனிமை மட்டும்தானா?

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க வீட்டுக்கு வருவாங்க! ஆவண நகலை தயாராக வைத்திருக்க அறிவுரை

திருப்பூர் : வீடு வீடாகச் சென்று, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி, திருப்பூர் மாவட்டத்தில் நாளை துவங்குகிறது. எனவே, ஆவண நகல்களை, பொதுமக்கள் தயாராக வைத்திருக்கும்படி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கவும், நேர்மையாக தேர்தலை நடத்தவும், இரட்டை பதிவை தவிர்க்கவும், பட்டியலில் ஆதார் எண் இணைக் கும் பணி, இம்மாதம் 1ல் துவங்கி யது. இதுதொடர்பான இறுதி கட்ட பயிற்சி, திருப்பூர் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது.

தேர்தல் அதிகாரிகள் பேசியதாவது: ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர், ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பெற வேண்டும்.பட்டியலில் தவறு இருப்பின், அவற்றை திருத்தம் செய்ய, படிவம் 8 வழங்க வேண்டும். பட்டியலில்,2 இடங்களில் பெயர் இருப்பின், ஏதேனும் ஒன்றை நீக்குவதற்கு, படிவம் 7 வழங்க வேண்டும். புதிதாக குடிவந்தவர்களாக இருப்பின், படிவம் 6 பெற வேண்டும். இப்படிவம் பெறும்போது, வாக் காளரின் பழைய முகவரியை பெற வேண் டும். தீதீதீ.ஞுடூஞுஞிtடிணிண.tண.ஞ்ணிதி.டிண என்ற இணைய தள முகவரியில், தமிழில் விவரங்களை பதிவு செய்வது குறித்தும், அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

நாளை முதல், அடுத்த மாதம் 8 வரை, மாவட்டத்தில் உள்ள 2,243 ஓட்டுச்சாவடி மையங்களிலும், இப்பணி நடைபெறும். மக்களிடம் வழங்கப்படும் படிவங்களை திரும்பப் பெற, அடுத்த மாதம் 12 மற்றும் 24; மே 10 மற்றும் 24ல், சிறப்பு முகாம் நடத்தப்படும்.

கையெழுத்து கட்டாயம் : மாவட்ட அளவில், இதுவரை 92 ஆயிரத்துக்கும் அதிகமானோர், "ஆன்-லைன்' மூலமாக, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளனர். பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் படிவத்தில், வாக்காளர் கையொப்பத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; கையொப்பம் இல்லாதவை ஏற்கப்படாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுப்பணி நடந்து வரும் இந்நேரத்தில், 2 வாரங்களில் ஆதார் எண் இணைப்பு பணியை முடிக்க இயலாது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

"நகலுடன் தயாரா இருங்க'
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பர். ஒவ்வொரு குடும்பத்திலும், வாக்காளராக உள்ளவர்களது மொபைல் எண், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை, தயாராக வைத்திருக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும்போது, அவ்விவரங்களை தெரிவிப்பதுடன், ஆவண நகல் களையும் வழங்க வேண்டும்,' என்றனர்.

ஆதார் எண் இல்லையா?
ஆதார் அட்டை பெறாத வாக்காளர்கள், தங்களது மொபைல் எண், இ-மெயில் முகவரியுடன், உடற்கூறு பதிவின்போது வழங்கப்பட்ட ரசீது நகலை வழங்கலாம். இதுவரை உடற்கூறு பதிவு செய்யாதவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பெற்ற ரசீது நகலை வழங்கலாம். அதுவும் இல்லையெனில், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்துள்ள படிவ நகலை வழங்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

ஆர்.டி.ஐ., கேள்விக்கு பி.எஸ்.என்.எல்., 'காமெடி' பதில்: தகவல் கேட்டவர் அதிர்ச்சி

சென்னை: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், சென்னை, தமிழக வட்டங்களில் உள்ள, தரைவழி போன் இணைப்புகள் எவ்வளவு என்ற கேள்விக்கு, 'ஊழியர் மணியின் குடும்பத்தைப் பற்றி சொல்ல முடியாது' என, 'காமெடி'யாக ஒரு பதிலை அளித்துள்ளது பி.எஸ்.என்.எல்., நிர்வாகம்.

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்க தலைவர் சடகோபன், தகவல் அறியும் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., கீழ், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, 2015 ஜனவரி, 7ம் தேதி அனுப்பிய மனுவில், கேட்கப்பட்ட கேள்விகள்:

* பி.பி.எல்., காம்போ யு.எல்.டி., 999 சி.எஸ்., - 13 திட்டம் பற்றி தெரிவிக்கவும்.

* யு.எல்.டி., என்றால், எல்லையில்லா பதிவிறக்கம் என்று பொருள். ஆனால், உங்கள் திட்டத்தில் பதிவிறக்கம் செய்ய, எல்லை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதா?

* பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வட்டத்தில், மாவட்ட வாரியாக தரை வழி இணைப்புகள் - பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?

* சென்னை வட்டத்தில், தரைவழி இணைப்புகள் எண்ணிக்கை மற்றும் பிராட்பேண்ட் எண்ணிக்கை எவ்வளவு?

* கடந்த, 2009 முதல், இணைப்பு செயல்பாடு தொடர்பாக, ஆண்டு வாரியாக பெறப்பட்ட புகார்கள் எத்தனை? அதைப்போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவை உட்பட, 10 கேள்விகளை, சடகோபன் கேட்டிருந்தார்.

இதற்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'உங்கள் மனு பெறப்பட்டது. விரைவில் பதில் அனுப்பப்படும்' என, தெரிவித்து, பிப்., 10ம் தேதி, சடகோபனுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தின் பொருள் என்ற பகுதியில், 'அவினாஷ் சிங்' என, குறிப்பிட்டு இருந்தது. பொருள், தவறாக உள்ளதைக் குறிப்பிட்டு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, பிப்., 18ம் தேதி, சடகோபன் கடிதம் எழுதினார். அதற்கு, மார்ச், 4ம் தேதியிட்டு, சடகோபனுக்கு அனுப்பிய பதிலில், அவர் கேட்ட கேள்விகளுக்கு தொடர்பே இல்லாத விஷயங்களை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், பதிலாக அளித்து உள்ளது.

பதில் விவரம்:

பி.எஸ்.என்.எல்., ஊழியர் சி.மணியின் குடும்பம், அவர் அப்பா பெயர், அவருக்கு எத்தனை குழந்தைகள் போன்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அத்தகவல்கள் அனைத்தும், அவர் சொந்த வாழ்க்கை தொடர்புடையது. எனவே, பி.எஸ்.என்.எல்., ஊழியர் மணி பற்றிய, சில கேள்விகளை ஆர்.டி.ஐ., சட்டம் - 2005 பிரிவு 8 (1) உட்பிரிவு (1)ன் படி, ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு, பதிலில் கூறப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் இந்த பதிலை கண்டு, அதிர்ந்து போன சடகோபன், என்ன கேள்வி கேட்டோம்; அதற்கு இப்படி பதில் அளித்துள்ளார்களே என, குழப்பத்தில் உள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: என் கேள்விகளுக்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவன, தகவல் தொடர்பு அலுவலர் அளித்த பதில், ஆர்.டி.ஐ., மூலம், வேறு யாரோ கேட்ட கேள்விகளுக்கு உரியது. என் கேள்விகள் கிடைத்தன. பதில் விரைவில் அளிக்கப்படும் என, அனுப்பிய கடித்தின் பொருளில், வேறு ஒருவர் பெயரை குறிப்பிட்டு இருந்தனர். இந்தத் தவறை சுட்டிக்காட்டி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, நான் நினைவூட்டியும் கூட, எனக்கு அளித்த பதில், வேறு ஒருவரின் கேள்விக்கு உரியது என, அறிந்து கொள்ளவில்லை. ஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அலுவலர், கேள்விகளை படிப்பதில்லை. குறைந்தபட்சம், பதில் கடிதத்தில் கையெழுத்து போடும் போது கூட, கேள்வி கேட்டவர் யார்; அதற்கு உரிய பதில் தான் தயார் செய்யப்பட்டு உள்ளதா; உரியவருக்கு தான், கடிதம் அனுப்பப்படுகிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. நிர்வாகத்தில், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, ஆர்.டி.ஐ., சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை, அரசு அதிகாரிகள் கவனமாக கையாள்வதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இவ்வாறு, அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தை அணுகியபோது, 'தவறு நடத்திருந்தால், சரி செய்யப்படும்' என, பதில் அளித்தனர்.

பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'...DINAMALAR 24.3.2015



பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த 5ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், தேர்வுத் துறை மூலம், மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாவட்டங்களில் தேர்வுப் பணி நியமனத்தில் நடந்த குளறுபடிகளால், தேர்வுப் பணிக்கு புதிதாக வந்தவர்கள் நிபந்தனைகளை கடைபிடிக்க முடியாமல், பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேர்வுத் துறை மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடுகளை தடுக்க, விடைத்தாளில், மூன்று பார்கோடுகள் கொண்ட முகப்புச் சீட்டு (டாப் ஷீட்) இணைக்கப்பட்டிருக்கும். அதில், மாணவரின் பதிவு எண், பள்ளியின் பெயர், புகைப்படம் போன்ற தகவல்கள் இருக்கும். அதனால், விடைத்தாளில் தங்கள் பதிவு எண் எழுதக் கூடாது என, மாணவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதே நேரம், தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை ஆசிரியர்கள் பெற்று, முகப்புச் சீட்டில், மூன்று பிரிவு பார்கோடு பகுதியில், ஒரு பார்கோடு பகுதியை மட்டும் கிழித்துக் கொண்டு, இரண்டு பகுதிகளுடன் தலைமைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், பல தேர்வு மையங்களில், கடைசி நேரத்தில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால், அவர்களில் பலர், தேர்வுத் துறை நிபந்தனைகள் தெரியாமல் குழம்பினர். அதனால், முதல் நாள் நடந்த, தமிழ் முதல்தாள் தேர்வில் மட்டும், விடைத்தாளிலுள்ள முகப்புச் சீட்டை, சில தேர்வு மையங்களில் முழுவதுமாக கிழித்து விட்டனர். இதனால், விடை திருத்தும் மையங்களுக்கு வந்த விடைத்தாள்களில், முகப்புச் சீட்டு இல்லாமல், எந்த மாணவருக்கு சொந்தமான விடைத்தாள் என்பது தெரியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு, அந்தந்த தேர்வு மைய ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் கொண்டு, முழுமையாக இருக்கும் முகப்புச் சீட்டின் கையெழுத்துகளை சரிபார்த்து, அவற்றை விடைத்தாளுடன் பொருத்திப் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

புதிய மருத்துவ கல்லூரியில் சேர்க்கை எப்போது?



சென்னை, அரசினர் தோட்ட புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி முடிவடைந்து உள்ளது. வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சிலான - எம்.சி.ஐ., அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பல்நோக்கு மருத்துவமனை:

கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், புதிய தலைமை செயலகக் கட்டடத்தை, அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது. இதையொட்டி, 'புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்' என, அரசு அறிவித்தது. இதற்காக, 200 கோடி ரூபாயில், ஏழு அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி நடந்தது. மே மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்திய மருத்துவக் கவுன்சிலிடம், முறையான அனுமதி பெற வேண்டி உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கட்டுமானப் பணி விரைந்து முடிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கட்டுமானப் பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க, அரசு உத்தரவிட்டதால், சிறப்புக் கவனம் செலுத்தினோம். கல்லூரிக்கு தேவையான பிரிவுகள், ஆய்வகங்கள் என, எல்லா பணிகளும் முடிந்துள்ளன. 100 பொறியாளர்கள், 15 நாட்கள் இரவு, பகலாக முயற்சித்து, பணிகளை இறுதி செய்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எம்.சி.ஐ., அனுமதி:

கட்டுமானப் பணி முடிந்தாலும், மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., அனுமதி கிடைக்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை நடத்தும் வகையில், எல்லா பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, அனுமதி கோரப்பட்டு உள்ளது. எம்.சி.ஐ., எந்த நேரத்திலும் ஆய்வுக்கு வரலாம். சிக்கல் ஏதுமின்றி, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, கல்லூரி செயல்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

செங்கல்பட்டு கல்லூரியில் எம்.சி.ஐ., குழுவினர் ஆய்வு:

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில், 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்தன. இரு ஆண்டு களுக்கு முன், 100 இடங்களாக உயர்த்திக் கொள்ள, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என, எம்.சி.ஐ., ஆண்டுதோறும் ஆய்வு நடத்தும். அதன்படி, மூன்று பேர் கொண்ட, எம்.சி.ஐ., குழு, நேற்று காலை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்தது. கல்லூரியில் உள்ள வசதிகள், ஆய்வகங்கள், பேராசிரியர், பணியாளர்கள், வகுப்பறைகள், விடுதிகளில் ஆய்வு செய்தது. 'டீன்' ஐசக்மோசஸ், வசதிகள் குறித்து விவரித்தார். மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை, சிகிச்சைக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தியது. குழுவினரின் ஆய்வு இன்றும் தொடர்கிறது. அதன்பின், இந்திய மருத்துவக் கவுன்சிலில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

- நமது நிருபர் -

ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?

அடுத்தடுத்து, அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவைகள் இருக்காது என, தெரிகிறது. இதனால், வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாது, ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுப்பதும்கூட, சிரமம் ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பணம் எடுப்பது மற்றும் அனுப்புவது போன்ற விஷயங்களை, வரும் 27ம் தேதிக்கு முன் முடித்துக் கொள்வது நல்லது. காரணம், மார்ச் 28ம் தேதி முதல், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் விடப்படவுள்ளதால், வங்கிகளில், முற்றிலுமாக பணிகள் இருக்கப்போவதில்லை. இந்நிலை, ஏப்ரல் 5ம் தேதி வரை நீடிக்கும் என தெரியவந்துள்ளது. வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுப்பதிலும்கூட, சிரமம் ஏற்படலாம். காரணம், பெரும்பாலான ஏ.டி.எம்.,களில், ஓரிரு நாட்களுக்கு தேவையான பணத்தை மட்டுமே, வங்கிகள் நிரப்பி வைப்பதுண்டு. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால், ஏ.டி.எம்., சேவைகளும், நிச்சயம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26

PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26 Gireesh Babu, New Delhi Saturday, July 25, 2026, 08:00 Hrs ...