Tuesday, March 24, 2015

மரணமும் மர்மமும்!

Dinamani

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் வணிக வரித் துறை அமலாக்கப் பிரிவு கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவியின் மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது என்கிற முடிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சித் தலைமை "இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கலாம்' என்று கூறிய பிறகே முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பைச் செய்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது, முழுமையான பாராட்டு அவருக்குக் கிடைக்காமல் போகிறது.
"சிறப்பு நேர்வுகளில் மட்டுமே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர
விடுவது வழக்கம் என்றும், எந்த விவகாரத்தையும் மாநில காவல்துறை விசாரிப்பதுதான் வாடிக்கை, அதைத்தான் நாங்களும் செய்தோம்' என்றும் கர்நாடக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சித்தராமையா கூறியது சாதாரண நிகழ்வுகளுக்குப் பொருந்தக்கூடியது. ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவியின் விவகாரத்தில் அதையே பொருத்திப் பார்ப்பது பொருத்தமற்றது.
தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் ரவி, கோலார் வணிக வரித் துறை அமலாக்கக் கூடுதல் ஆணையராகப் பதவி வகித்த காலக்கட்டத்தில், பல அரசியல்வாதிகளின் நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தி, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். சுமார் ரூ.200 கோடி வரை அரசுக்கு அவரால் வருவாய் கிடைத்துள்ளது என்பதும், அதன் காரணமாக அவர் பல அரசியல்வாதிகளின் விரோதத்தைப் பெற்றிருந்தார் என்பதும்தான் இந்த விவகாரத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த அழுத்தம் அல்லது மிரட்டல் இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது இது கொலையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம்தான், ரவியின் குடும்பத்தினர் மட்டுமன்றி பொதுமக்களும்கூட வீதிக்கு வந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தக் காரணமாக இருந்தது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிடும் இதே நாளில், கர்நாடக அரசு அறிவித்த சி.ஐ.டி.
விசாரணையின் அறிக்கை பேரவையில் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சி.பி.ஐ. விசாரணை முடியும் வரை சி.ஐ.டி. விசாரணையை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்து விட்டதால், அந்த அறிக்கை பேரவையில் வைக்கப்படவில்லை. இருப்பினும் அந்த அறிக்கையின் அம்சங்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளன. அவருடைய செல்லிடப்பேசியிலிருந்து மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் அவர் தினமும் எத்தனை முறை பேசினார், கடைசியாக அவர் அனுப்பிய குறுந்தகவல் என்ன என்பது உள்பட அனைத்து தகவல்களும் பத்
திரிகைகளில் வெளியாகிவிட்டன. இது எந்த வகையிலும் முறையற்ற செயலே.
ரவி நேர்மையான அதிகாரி என்பது பொதுமக்கள், உடன் பணியாற்றுவோர் எல்லோராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கோலார் மாவட்டத்தில் பணியாற்றிய 14 மாதங்களில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்த அரசு நிலங்களை மீட்டிருப்பதோடு, அவர்களது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளையும் விதித்தார் என்பது இந்த விவகாரத்தில் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், அவரது தனிப்பட்ட அந்தரங்க விவகாரங்களை
அம்பலப்படுத்தி, ஒரு நேர்மையான அதிகாரியை இடுப்புக்குக் கீழாக அடித்தல் என்பது சரியல்ல.
அது அப்படியே இருப்பினும், அந்தப் பெண் அதிகாரி எந்தப் புகாரும் தெரிவிக்காத நிலையில் இது அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். தற்போது அரசியல் லாபத்துக்காக அந்தரங்கத்தை அரங்கேற்றி, அவரது மரணத்தை மலினப்படுத்தப்
பார்ப்பது தரக்குறைவான அரசியல் குயுக்தி.
எடுத்த எடுப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடாமல் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதன் நோக்கமே, இதுபோன்ற அந்தரங்கத்தைக் கிளறியெடுத்து, அதைக் கசியவிட்ட பின்னர் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றுவது என்பதுதானோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த வழக்கை விசாரிக்கவிருக்கும் சி.பி.ஐ., இதே அந்தரங்கத்தை மட்டுமன்றி அவரது நேர்மையான பணியின் போது
அவருக்கு உருவான எதிரிகள் அனைவரையும் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது கோப்புகளிலிருந்தும், அவர் எடுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோர் பட்டியலிலிருந்தும் விசாரணையைத் தொடங்க வேண்டும்.
ஒரு நேர்மையான அதிகாரியின் மர்மமான சாவில் எதிர்க்கட்சிகள் காட்டுகின்ற ஆர்வம் என்பது, பெரும்பாலான தருணங்களில், "அப்பாடா, இடையூறாக இருந்த ஒரு நேர்மையான அதிகாரி முடிந்தார்' என்கிற உள்மகிழ்ச்சியும், அதே நேரத்தில் இதை அரசியல் ஆதாயமாக்கக் காரணம் கிடைத்துவிட்டது என்ற வெளிமகிழ்ச்சி
யுமாகத்தான் இருக்கிறது.
அதிகாரியின் மரணம் தொடர்பான கூடுதல் ஆவணங்களைச் சேகரிக்கும் அரசியல் புலனாய்வுகளில் அவர்கள் ஈடுபடுவதே இல்லை. ஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆளும் கட்சியினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சியினரும்கூட ஆகாதவர்கள்தானே!
நேர்மையான அதிகாரிகள் மரணத்தில் அரசியல்வாதிகள்தான் சுயநலம் பார்க்கிறார்கள் என்றால், உடன் பணியாற்றிய அதிகாரி
களும்கூட மௌனமாக இருப்பது ஏன்? நேரடியாக சொல்ல அச்சமாக இருப்பினும், இன்றைய சமூக வலைதளங்கள் மூலமாக, பத்திரிகைகள் ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் முகம் காட்டாமலேயே உண்மையைக் கசிய விடலாமே! ஏன் செய்வதில்லை? நேர்மைக்குத் துணை தனிமை மட்டும்தானா?

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...