Tuesday, March 31, 2015

எப்போது உணரப் போகிறோம்?

கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடைபெற்ற நேரம். சென்ற முறை உலக சாம்பியனாக இருந்த இந்திய அணி, அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.

ஆஸ்திரேலியாவை வெற்றி கொள்வது கடினம்தான் என்று தெரிந்தாலும், எப்படியாவது வெற்றி கிடைத்துவிடும் என்ற நப்பாசை, நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை பிரார்த்தனை செய்ய வைத்தது.

அலுவலகங்களுக்கு ஏதேனும் காரணத்துடன் விடுப்பு சொல்லிவிட்டு, கிரிக்கெட் போட்டிக்குச் செல்ல ரசிகர்கள் ஆயத்தமானார்கள். விடுப்பு தராத அலுவலகங்களில்

தொலைக்காட்சியில் போட்டியை ரசிக்க அனுமதி பெறப்பட்டது.

தேர்வு அறைகளில் இருந்த மாணவர்களுக்குக் கூட, கிரிக்கெட் ஜுரமே அதிகமாக இருந்தது. வீடுகளிலும், கடைகளிலும் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள் முன் மனிதர்கள் தவமிருந்தார்கள். எங்கும் கிரிக்கெட் பற்றியே பேச்சு.

போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா மின்னல் வேகத்தில் மட்டையைச் சுழற்றுகிறது. ரன்கள் குவிகின்றன. மக்கள் சலிப்படைகிறார்கள். இந்திய அணி பந்து வீச்சாளர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள்.

அடுத்து இந்திய அணி மட்டையைச் சுழற்றத் தொடங்கியதும் ரசிகர்களின் நம்பிக்கை பொய்க்கிறது. அணி வீரர்களை வசைபாடுகிறார்கள். இறுதியில் ஆஸ்திரேலியா வெற்றியடைகிறது.

ரசிகர்களின் ஆத்திரம் தொடர்ந்தது. ஆத்திரத்தைத் தீர்க்கும் வடிகால்களாக இருக்கவே இருக்கிறது முகநூல். கோபங்களும், வருத்தங்களும், ஆறுதல்களுமாக தகவல்கள் பறிமாறப்பட்டன.

விராட் கோலி மீதான கோபத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர் ஒரே ரன்னில் வெளியேறியவுடன், நேரில் போட்டியை ரசிக்க வந்த அவருடைய தோழியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா மீது கோபம் பாய்கிறது. அவரைக் குறித்து ஏராளமான வசைகள்.

முகநூலிலும், சுட்டுரையிலும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரசிகர்களின் கோபம், தரம் தாழ்ந்து போனதன் உதாரணம் அது.

அணித் தலைவர் தோனி கண்ணீர் விடும் புகைப்படத்தை முகநூலில் பதிக்காத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை எனலாம். வேறு சிலரோ, கிரிக்கெட்டில் தோற்பதற்கு எவ்வளவு பணம் கைமாறியது என்று விவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இப்படி, கிரிக்கெட் மீது இருக்கும் மோகம் மற்ற விளையாட்டு பக்கம் திரும்புவதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.

கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட விடாமல் படித்துவிடும் நாம், மற்ற விளையாட்டுகளில் சாதனை புரிபவர்களைக் கூட கவனிப்பதில்லை.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால், இந்திய ஹாக்கி அணி என்று ஒன்று இருப்பதே பலருக்குத் தெரியாது.

கிரிக்கெட்டை விட உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் விளையாட்டு கால்பந்து.

கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு இந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் இல்லை. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில், இதுவரை இந்திய அணி இடம்பெறவே இல்லை.

டென்னிஸ் விளையாட்டின் லியாண்டர் பயஸையும், மகேஷ் பூபதியையும் செய்தித்தாள்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. மற்ற நாடுகளில் பெரிய அளவில் போற்றப்படும் டென்னிஸ் கூட, இங்கே கேட்பாரற்றே இருக்கிறது.

சதுரங்க விளையாட்டின் விஸ்வநாத ஆனந்தையும் நாம் கொண்டாடிவிடவில்லை. உலக அரங்கில் முதன்மை இடம் பெற்றும் அவர் பெரிய அளவில் அறியப்படவில்லை.

கிரிக்கெட்டில் தோற்ற தினத்தில் மற்றொரு செய்தியும் சமூகவலைதளங்களில் உலா வந்தது. அதை கிரிக்கெட் கவலையில் நிச்சயம் மறந்திருப்போம்.

கபடியில் உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய கபடி அணியினரை வரவேற்று மகிழ ஒருவரும் இல்லை என்பதுதான் அது.

இப்படி ஏராளமான விளையாட்டு வீரர்களை நாம் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்காக, தொலைக்காட்சிப் பெட்டிகளையும் திருப்புவதில்லை. குற்றாலீஸ்வரன்களுக்கும், விஸ்வநாத ஆனந்துக்கும் சமூக வலைதளங்களில் கூட ஆதரவளிக்க முன்வருவதில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றிபெற்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துவிடும் என்று சமூக வலைதளங்களில் கற்பனை கோட்டை கட்டுகிறோம்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் அமைப்பான ராயல் சொசைட்டியின் தலைவராக நம்மூர் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாட மறந்துவிட்டோம்.

உலகில் உயர்ந்து நின்றும் உள்ளூரில் அங்கீகாரம் கிடைக்காத நம்மவர்களின் ஏக்கத்தை எப்போது உணரப் போகிறோம்?

கிரிக்கெட்டைக் கொண்டாடுங்கள். ஆனால், மற்ற விளையாட்டு வீரர்களையும் கவனியுங்கள். உலக அரங்கில் நமக்கு பெருமை தேடி தந்தவர்களை ஒரு நொடியாவது போற்றுவோம்.

ஏராளமான விளையாட்டுகள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன. அவற்றையும், வளரும் பருவத்தினருக்குக் கற்றுத் தருவோம்.

வரும் கோடை காலத்தை, அனைத்து விளையாட்டுகளையும் ஆராதிக்கும் திருவிழாக்களாக மாற்றுவோம்.

"பாருங்கள் வளர்ந்த நாடுகளை' என்று மற்ற விஷயங்களுக்கு கைகாட்டும் நாம், அந்த நாடுகள் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தருவதைப் புரிந்து கொள்வோம்.

அனைத்து விளையாட்டு வீரர்களையும் பாரபட்சமின்றி ஊக்குவிப்பது, அரசின் கடமை மட்டுமல்ல. நமது பொறுப்பும் கூட. இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே உலக அரங்கில் நமது விளையாட்டுத் துறையின் பெருமை உயரும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...