Saturday, March 21, 2015

தென்னிந்திய ஆண்களின் மீசையும், பெண்களின் ஆசையும்!



சிறு வயதில் தாத்தா அல்லது அப்பாவின் மீசையைப் பிடித்து இழுத்து, அப்போது அவர்கள் கத்துவதை, வலியால் துடிப்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும்பாலும் அப்படிச் செய்து விளையாடுவதை ரசிப்பார்கள். ஆனால் இன்று மீசை இல்லாமல் இருப்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.

ஆண்களைப்போல முறுக்கு மீசையுடன் பெண்கள் வலம் வந்தால் ஆண்கள் ரசிப்பார்களா? ஆனால், ஆண்கள் ஏன் பெண்களைப்போல மீசையை மழித்துவிட்டு வலம் வருகிறார்கள்? ஆண்கள் உருவத்தில் பெண்களைப்போல இருந்தால், பெண்களுக்குப் பிடிக்காது. அதுதானே இயற்கை.

ஒரு பெண்ணுக்கு ஆணின் முகத்தைப் பார்த்தவுடன் முதலில் ஈர்ப்பது மீசைதான். காலம்காலமாக ஆண்களின் மீசையைப் பார்த்து, ரசித்தவர்கள்தான் நமது தமிழ் பெண்கள். மீசை என்பது ஆண்மையின் அடையாளங்களுள் முக்கியமான ஒன்று.

ஒரு பெண் ஆணின்பால் ஈர்க்கப்படுவதற்கு உருவமும், ஆணின் செயல்பாடுகளும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதில், ஆணின் மீசைக்கும் பங்கு உள்ளது. பொதுவாக தன்னிடம் இல்லாத ஒன்றை எதிர்பாலினரிடம் பார்க்கும்போது அது மனதை ஈர்க்கும் என்பது இயற்கை. எனவே, மீசை உள்ள ஆண்களைத்தான் பெரும்பாலான பெண்களுக்குப் பிடிக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் உணருவதில்லை.

பொதுவாக வெளிநாடுகளில் ஆண்கள் மீசை இல்லாமல் இருக்கிறார்கள். வடமாநிலங்களில்கூட பெரும்பாலான ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். அங்கே உள்ள பெண்கள் அதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு காரணம் பெண்கள் சிறு வயதில் இருந்தே, தந்தை, சகோதரர் உட்பட அனைத்து ஆண்களையும்  மீசை இல்லாமல் பார்த்துப் பழகியதால் அங்குள்ள பெண்களுக்கு ஆண்கள் அப்படி இருப்பது சாதாரணமாகத் தெரியலாம்.

ஆனால், தென்னிந்தியாவில் ஆண்களின் மீசைக்கு ஒரு பெரிய அடையாளம் இருக்கிறது. நம் தமிழர் பண்பாடு மீசையை ஆண்மையின் அடையாளமாக கொண்டது. தென்னிந்தியப் பெண்கள், குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் இன்றும் ஆண்களின் மீசையை வெகுவாக ரசிக்கிறார்கள். மீசை என்பது ஆணுக்கு அழகு மட்டுமல்ல அடையாளமும் கூட.

வெளிநாடுகளின் தாக்கம், வடமாநிலங்களில் பரவி இப்போது அது நம் வீடுகளுக்கும் வந்துவிட்டது. இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மீசை வைத்துக்கொள்வதில்லை. அதற்கு சினிமாவும் ஒரு காரணம்.
அந்தக் கால சினிமாக்களில், ஹீரோக்கள் மீசை இல்லாமல்தான் இருந்தார்கள். ஆனால் ஒரு சின்ன கோடு போல பென்சிலில் மீசை வரைந்து நடித்தார்கள். அதற்கு காரணம் நாடகங்களில் பல வேடங்களை உடனே போட மீசை இடைஞ்சலாக இருந்துள்ளது. சில நேரங்களில் பெண் வேடங்களும் போடுவதுண்டு, அதனால் நாடகங்களில் இருந்து அவர்கள் சினிமாவுக்கு வந்ததால், அந்தப் பழக்கம் தொடர்ந்தது.

கமல், ரஜினி காலத்தில் அந்த வழக்கம் மாறியது. அதன்பிறகு ஹீரோக்கள் அடர்த்தியான மீசை வைத்து நடித்தனர். இப்போதுள்ள ஹீரோக்களும் பத்து வருடங்களுக்கு முன்புவரை அடர்த்தியான மீசை வைத்து நடித்தவர்கள்தான். ஆனால், இப்போது அவர்களுக்கு வயதாகிக்கொண்டு இருப்பதை மறைக்க பெரும்பாலான ஹீரோக்கள் மீசை இல்லாமல்தான் நடிக்கிறார்கள்.

மேலும் மீசை சரியாக முளைக்காத வயதிலேயே சில பேர் ஹீரோவாக நடிக்க வந்துவிடுகிறார்கள். அதுபோன்ற கதைகளை நம் படைப்பாளிகள் உருவாக்குகிறார்கள். இன்னொரு காரணம், தென்னிந்தியாவைத் தாண்டி மற்ற மாநிலங்களில், நாடுகளில் தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்கள் ஓடுவதற்கு அவர்களின் மீசை இல்லாத முகமும் ஒரு பொதுவான பிம்பத்தைக் கொடுக்கிறது.
இதுபோன்ற ஹீரோக்களை ஆதர்சமாகக் கொண்ட இளைஞர்கள், இந்த ஹீரோக்களை பெண்களும் ரசிப்பதால், அதைப்போலவே தாங்களும் இருந்தால்தான் பெண்கள் தங்களையும் ரசிப்பார்கள் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால்தான் இன்றைய இளைஞர்கள் எப்போதும் மீசையை மழித்துவிட்டு வலம் வருகிறார்கள். இப்படியே போனால் நம் தமிழர்களின் அடையாளமாகிய மீசை மறந்தும், மறைந்தும் போகும்.

இதனால், உருவம் மட்டுமின்றி உள்ளத்திலும் ஆண்தன்மை குறைந்துவிடும். ஒரு ஆணைப் பார்த்து பெண்ணுக்கு இயல்பாகத் தோன்ற வேண்டிய ஒரு ஈர்ப்பு குறைந்துவிடும். ஒரு பெண்ணை கவர்வதற்காக தன் கெட்ட குணங்களை, கெட்ட பழக்கவழக்கங்களை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, தனது உருவத்தை, இயற்கையான தனது அடையாளத்தை மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இப்படிச் செய்தால் பெண்களுக்கு புடிக்குமா? அப்படி மாற்றிக்கொண்டால் பெண்களுக்கு புடிக்குமா என்று நினைப்பதை கைவிட்டு, ஆண்கள் தங்களுடைய சுயத்தை, ஆண்தன்மையை இழந்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆண்கள் ஆண்களாக இருத்தலே போதும். இயற்கையாக, இயல்பாக இருந்தாலே ஆண்களை  பெண்களுக்குப் பிடிக்கும்.

உருவம் மட்டுமில்லாமல் ஆண்களின் பேச்சு, குரல், நடை, கம்பீரம், உடல்வாகு, நேர்கொண்ட பார்வை, பெண்கள் அருகில் இருக்கும்போது, ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஒரு பெண் ஆணை ரசிக்கிறாள். கணவன் மனைவிக்கு இடையே உள்ள தாம்பத்ய உறவிலும் மீசைக்கு பங்கு உள்ளது.

எனவே, ஆண்கள் ஆண்களாக இருந்தாலே போதும். இயற்கையாக உள்ள ஆண்களின் அடையாளங்களைத் தொலைத்துவிடாமல் இயல்பாக இருந்தாலே பெண்கள், ஆண்களை ரசிப்பார்கள். ஆண்களின் வசம் ஈர்க்கப்படுவார்கள். பொதுவாக ஆண்களும் பெண்களும் சமம் என்பதை, ஆண்கள் உருவத்தில் மாற்றம் செய்து நிரூபிக்க முயற்சி செய்யாமல், பெண்களை நடத்தும் விதத்தில் காட்டினாலே போதும்.

- ருத்ரன்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...