Monday, March 30, 2015

வேண்டாமே மானியம்!

சமையல் எரிவாயு உருளை பெறுகின்ற வசதி படைத்த நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று தாங்களாகவே அறிவிக்க முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுதில்லியில் மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்ற எரிசக்தி சங்கம் நிகழ்வில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட பிரதமர், இதுவரை 2.80 லட்சம் நுகர்வோர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விட்டுக்கொடுத்திருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி சேமிப்பு கிடைக்கும். இதனை ஏழை, எளியோர் நலனுக்காகப் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வசதி படைத்தோருக்கு சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவது குறித்து அரசு யோசித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியபோது பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதன்பிறகு, அது குறித்து அமைச்சர் பேசவில்லை. இருப்பினும், வசதி படைத்தவர்கள் தாமாகவே முன்வந்து மானியம் தேவையில்லை என்று அறிவிக்கலாம் என்று கூறிய ஜேட்லி, மானியம் இல்லா எரிவாயு உருளையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, சில பா.ஜ.க. அமைச்சர்களும் தங்கள் சுட்டுரையில், தாங்களும் மானியம் பெறாத எரிவாயு நுகர்வோராக மாறிவிட்டதாக அறிவித்தனர்.

தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று விரும்பும் நுகர்வோர் இதற்கான படிவத்தை எரிவாயு உருளை முகவரிடம் கொடுக்கலாம் அல்லது இதற்கான இணையதளத்தில் தாங்களே பதிவு செய்யலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இப்போது பிரதமர் அறிவிப்பின்படி நாட்டில் மொத்தம் 2.80 லட்சம் பேர் இவ்வாறாக மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாறியிருக்கின்றனர்.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ஒரு நாளைக்கு 30 லட்சம் எரிவாயு உருளைகள் (அதாவது ஆண்டுக்கு 90 கோடி உருளைகள்) விநியோகம் செய்யப்படுகின்றன. 15 கோடிப் பேர் வீட்டுச் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள். இவர்களில், அதிகபட்சமாக 5 கோடிப் பேர் மானியம் பெறா நுகர்வோராக மாறும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். இருப்பினும், வெறும் 2.8 லட்சம் நுகர்வோர் மட்டுமே இவ்வாறு மானியம் பெறா நுகர்வோராக மாறியுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

இதுதொடர்பான நீடித்த பிரசாரம்தான் இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும். குறைந்தபட்சம் சொந்த வீடு, சொந்த அடுக்ககத்தில் வசிக்கும் ஒரு நுகர்வோர் இந்த எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பதால் அவருக்கு பெரும் இழப்பு ஏதுமில்லை. ஒரு கார் வைத்திருக்கும் வசதி படைத்தவர் தன்னைத் தானே மானியம் பெறா எரிவாயு நுகர்வோராக மாற்றிக் கொள்வதால் அவருக்கு நட்டமில்லை. நான் எரிவாயு மானியம் பெறா நுகர்வோர் என்று சொல்லிக் கொள்வது பெருமை என்கிற மனமாற்றத்தை ஏற்படுத்தத் தொடர்ச்சியான பிரசாரம் தேவை. எந்தவிதப் பலவந்தமான திணிப்பும் இல்லாமல் அவரவர்களே தங்களது வசதியை நிர்ணயித்துக் கொள்ளட்டும்.

பெட்ரோலியப் பொருள்களுக்காக மட்டும் ரூ.46,458 கோடி மானியம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வேறு பயன்பாட்டுக்கு திருப்பும் வகையில் மானியத்தை விட்டுக் கொடுத்து, அரசுக்குத் தோள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அரசின் மானியம் வேண்டாம் என்று சொன்ன நபர்களுக்கு வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பது ஒன்று விட்டு ஒன்று பற்றியதாக முடியும். வசதி படைத்தோர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மானியத்தை துறந்துவிடுவதுதான் சரி.

மத்திய அரசின் திட்டத்தில் மட்டுமல்ல, மாநில அரசின் திட்டங்களிலும்கூடப் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து, தங்களால் இயன்ற இனங்களில் மானியத்தைத் தவிர்க்க முன்வர வேண்டும். இதன்மூலம், அரசின் நிதிச் சுமையைக் குறைப்பதுடன், முறைகேடுகளுக்கு மறைமுகமாக துணை போகாதவராக அந்த நுகர்வோர் மாறலாம்.

பொது விநியோக மையத்தில் 20 கிலோ விலையில்லா அரிசி எனக்கு வேண்டாம் என்று பொதுமக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தால், தமிழ்நாட்டில் ஏழைகள் மட்டுமே 20 கிலோ விலையில்லா அரிசியைப் பெற்று பயன்பெறுவர். இதனால் வாங்கப்படாமல், அனைத்து குடும்ப அட்டைகளிலும் அரிசி வாங்கியதாகப் பதியப்பட்டு, அந்த அரிசி மெருகூட்டப்பட்டு, மீண்டும் சந்தைக்கு நம்மிடமே கிலோ ரூ.45-க்கு வரும் அவலநிலை ஏற்படாது.

இதே நிலைப்பாட்டை மக்கள் தாங்களாகவே முன்வந்து, விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை எனக்குத் தேவையில்லை என்று எழுத்துமூலமாகப் பதிவு செய்வார்கள் என்றால், இவற்றைப் பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இந்த விலையில்லாப் பொருள்களை கள்ளச்சந்தையில் தள்ளிவிடும் வழக்கமும் இருக்காது.

இதற்கான வழிமுறையை எண்ணெய் நிறுவனங்களைப் போல தமிழக அரசும் உருவாக்க வேண்டும்.

ஒரு கோயில் வாசலில் யாரோ ஒருவர் வழங்கும் அன்னதானத்தை வாங்க கெüரவம் பார்க்கிற மனித மனம், அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்கள், மானியப் பொருள்களை மட்டும் வேண்டாம் என்று சொல்லத் தயங்குகிறது. காரணம், இது நமது அரசு, நமக்கு கொடுக்கும் பொருள் என்ற உரிமைக்குரல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒலிக்கிறது. நமக்கு வசதி இருப்பதால் நாம் அதை வேண்டாம் என்று சொல்வதன் மூலம் அரசின் நிதிச் சுமை குறையும், முறைகேடு குறையும் என்பதைப் புரிந்து கொண்டால், தயக்கம் இருக்காது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...