Wednesday, March 25, 2015

இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து

கடந்த 2012-ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து மும்பை நகரில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

அதை விமர்சித்து ‘பேஸ்புக்’ பக்கங்களில் எழுதியதாக மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா மற்றும் ரீனு சீனிவாசன் ஆகிய இரு பெண்கள் மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதனை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவி ஷ்ரேயா சிங்கால் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அவர் தன்னுடைய மனுவில், ‘கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவில் திருத்தங்கள் செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அவர் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி ஆஜராகி வாதாடினார். ‘66-ஏ பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, நடைமுறைக்கு பொருந்தாதது. அரசியல் சட்டம் வரையறுத்த கருத்து மற்றும் பேச்சுரிமையை பறிக்கிறது’ என்று அவர் வாதாடினார்.

இப்பிரச்சினையில், இந்த மனு உள்பட 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2013-ம் ஆண்டு மே 16-ந்தேதி, சமூக வலைத்தளங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐ.ஜி. அல்லது போலீஸ் துணை கமிஷனரின் உத்தரவு இல்லாமல் போலீசார் கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியது.

ஒத்திவைப்பு

கடந்த பிப்ரவரி 26-ந்தேதி, இந்த வழக்கின் மீது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 18-ந்தேதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கானை விமர்சித்து 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாக உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டான்.

இவ்விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த அறிவுரையை உத்தரபிரதேச போலீசார் கடைப்பிடிக்க வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, கைதுக்கான சூழ்நிலை குறித்து உத்தரபிரதேச போலீசாரிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

தீர்ப்பு

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவுக்கு எதிரான மனுக்களின் மீது நீதிபதிகள் ஜெ.செல்லமேஸ்வர், ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அந்த சட்டப்பிரிவு செல்லாது என்று கூறி, அதை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

ஒரு சமூகத்தில் மனிதர்களின் கருத்து மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் முதன்மையானதாகும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு மக்களின் அறிந்து கொள்ளும் உரிமையை பாதிக்கிறது. அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் போன்ற இருபெரும் தூண்களை இந்தப் பிரிவு தகர்க்கிறது.

உரிமைகள் பாதிப்பு

அது மட்டுமல்லாது அரசியல் சாசன சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு உரிமைகளை இந்தப் பிரிவு நேரடியாகப் பாதிக்கிறது. இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்படும் ‘‘எரிச்சல்படுத்தும்’’, ‘‘அசவுகரியமான’’ மற்றும் ‘‘மொத்தத்தில் தவறான’’ என்ற வார்த்தைகள் மிகவும் மேலோட்டமாகவும், தெளிவில்லாமலும் இருக்கின்றன.

சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கும், குற்றத்தை இழைப்பவர்களுக்கும் இந்த சட்டப்பிரிவில் உள்ள இதுபோன்ற வார்த்தைகள் அவற்றின் சரியான உட்கருத்தை சரியாக புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்திருக்கின்றன.

அவதூறு

நீதிபதியாக இருப்பவர்களே, இவற்றில் உள்ள ஒரே வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும்போது, சட்டத்தை அமல்படுத்துபவர்களும், மற்றவர்களும் என்ன முடிவு செய்வார்கள்?

ஒருவருக்கு அவதூறாகப்படுவது மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். ஒருவருக்கு அவதூறாக இருப்பது மற்றவருக்கு அவதூறாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

மத்திய அரசின் வாதம் நிராகரிப்பு

இந்த சட்டப்பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க சில விதிமுறைகளை வகுக்கிறோம் என்று வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு உறுதி அளித்தது. அதை ஏற்க முடியாது.

அரசாங்கங்கள் வரும் போகும். ஆனால் 66-ஏ போன்ற பிரிவுகள் எப்போதும் இருக்கும். தற்போது உள்ள ஆட்சியினர் தங்களுக்கு அடுத்து வரும் ஆட்சியாளர்கள், துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்ற உறுதியை அளிக்க முடியாது. எனவே, கருத்து சுதந்திரத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரான சட்டப்பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது.

நீடிக்கும்

அதே சமயத்தில், சமூக வலைத்தளங்களில், குறிப்பிட்ட தகவல்களை யாரும் பார்க்க முடியாதவாறு முடக்கு வதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம். இதுதொடர்பான 69-ஏ மற்றும் 79 பிரிவுகளை சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அமல்படுத்தலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.புதுடெல்லி,

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...