Sunday, March 22, 2015

அணாக்களின் காலம் அது!



இன்று உணவகங்களில் இரண்டு இட்லி சாப்பிட்டால், 50 ரூபாய் பில் வருகிறது. 65 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தொகையில் இரண்டு கிராமமே இட்லி சாப்பிட முடியும். அணாக்களின் காலம் அது! இரண்டு அணா (12.5 பைசா) 1950-களில் இருந்த நாணயம். சதுர வடிவில் அன்றைய அன்றாட வாழ்க்கையைச் செல்வாக்கோடு சுற்றிவளைத்து நிர்வகித்த பெருமை அதற்கு உண்டு.

காலையில் எழுந்ததும் கும்பகோணம் டிகிரி காபி வேண்டுமா? மூலை ஹோட்டலில் இரண்டணா. 6 மணியா, ‘இந்து’ பேப்பர் இரண்டணா. 7 மணியா? ‘செவன் ஓ க்ளாக்’ பிளேடு இரண்டணா. 8 மணியா? ‘சூடா ரெண்டு இட்லி’, இல்லை சாதா தோசை - இரண்டணா. உள்ளூர் பயணமா? டிராம் வண்டியில் முத்தியால்பேட்டையில் இருந்து திருவல்லிகேணி 4 கி.மீ. இரண்டணா. சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் மின்சார ரயில் இரண்டணா. கறிகாயா? கால் வீசை (350 கிராம்) கத்திரிக்காய், வெண்டைக்காய் கொசுறு கறிவேப்பிலை, கொத்துமல்லியோடு இரண்டணா. அரை ஆழாக்கு (100 மி.லி.) பால் இரண்டணா. கோயில் வாசலில் இரண்டு பூவன் பழம், நான்கு வெற்றிலை இரண்டு பாக்குடன் இரண்டணா. உள்ளே தீபாராதனை இரண்டணா.

நாட்டார் கடையில் புளித் துண்டு, கல் உப்பு, இரண்டு சிவப்பு மிளகாய், தாளிக்கக் கடுகு, பருப்பு இரண்டணா. லாண்டரியில் சாதாரண சலவை உருப்படிக்கு இரண்டணா. தேங்காய் மூடி இரண்டணா. இளநீர் இளசு இரண்டணா. 80 பக்க நோட்டுப் புத்தகம் இரண்டணா. பென்சில் ஒரு முனையில் ரப்பரோடு இரண்டணா. பள்ளிக்கூட வாசலில் பத்தை போட்டு உப்பு, மிளகாய்ப் பொடியுடன் துண்டு போட்ட மாங்காய் அல்லது கிச்சிலிக்காய் இரண்டணா. கடற்கரையில் தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் பெரிய கூம்புப் பொட்டலம் இரண்டணா. கடற்கரை ரயில் நிலையத்தில் அரை கப் ஐஸ்க்ரீம் இரண்டணா என்று இரண்டணாக்களின் பயன்பாடுதான் எத்தனை எத்தனை! இதைத் தவிர, பஜாரில் நடைமேடையில் துணி விரித்து எதை எடுத்தாலும் இரண்டணா என ஓலமிட்டு வேறு சலுகை விற்பனை.

இரண்டணாவுக்கு இசை

ஜார்ஜ் டவுனில் ஒரு பாட்டு வாத்தியார் ஒரு மணி நேரம் கர்னாடக சங்கீதம் சொல்லிக்கொடுக்க இரண்டணா வசூலித்துவந்தார். மாதச் சம்பளம் உத்தரவாதம் அளிக்க இயலாத கீழ் மட்ட மத்தியதரக் குடும்பத்தினரிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. காசுப் புழக்கத்துக்கு ஏற்ப அவரை மாதத்தில் 10 முறைகூட அழைப்பதுண்டு. இது அக்காலகட்டத்தில் அவலமாகப்படவில்லை. மாறாக, மிரட்டும் ஏழ்மைக்கு இடையே இசைக்கு அளிக்க முன்வந்த மரியாதைக்கும் ஆதரவுக்கும் சான்று அது. இந்த நிலையில் அவ்வப்போது (நிச்சயம் திரும்பி வராத) இரண்டணா கைமாத்தாகக் கேட்கும் பேர்வழிகளும் உண்டு.

சிகரெட்டும் அப்போது இரண்டணாதான். திரைப்பட இடைவேளையில் பளிச்சிடும் சிலைடு ‘புகை பிடிக்காதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கும். கூடவே அரங்கில், பாதித் திரைக்கதையும் ‘மீதியை வெள்ளித் திரையில் காண்க’என்ற அறிவிப்புடன் வலம்வந்த சினிமா பாட்டுப் புத்தகங்கள் விலையும் இரண்டணாதான்.

1950-களில் புழகத்தில் இருந்த இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாட்டசாட்டமான காளை உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஈயம் கலந்த வெண்ணிறத்திலோ அல்லது பித்தளை கலந்த மஞ்சள் நிறத்திலோ பளபளக்கும் மெருகுடன் சதுரமாகஇரண்டணா செலாவணிப் புழக்கத்தில் சுறுசுறுப்பாய் சீறி வருவதற்குக் காளையின் உருவம் பொருத்தமானதே!

- வீ. விஜயராகவன், இலக்கிய, சமூக ஆர்வலர். தொடர்புக்கு: pkvrags@yahoo.com

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...