Monday, March 30, 2015

மருத்துவச் சேவையில் குறைபாடா?

ஒரு மனிதன் வாழ்நாளில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது தனது உடல் நலத்தைப் பேணுவதில்தான். இதற்காக நடைப் பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்கிறான்.

காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற சிறிய அளவிலான நோய்களைத் தவிர, பிறவற்றை அறியாத நிலையில் மக்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தனர். மேலும், அவற்றைக் குணப்படுத்துவதற்கு அவர்கள் அலோபதி மருத்துவரை நாடிச் செல்லவில்லை. மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தி குணம் அடைந்தனர்.

ஆனால், இன்றைய நிலை? தலைவலி என்று மருத்துவமனைக்குச் சென்றால், பல்வேறு பரிசோதனைகளைச் செய்து, பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக வசூலித்துவிட்டு, "உங்களுக்கு மூளையில் கட்டி உள்ளது. இதை உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து' என மருத்துவர் நமக்கு பீதியை ஏற்படுத்துகிறார்.

வசதி படைத்தவர்களால் சில லட்சங்களைச் செலவிட முடியும். ஆனால், ஏழைகளுக்கு இது சாத்தியமா? மேலும், மூளையில் கட்டி ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவது இல்லை.

ஏழைகளுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குபவை அரசு மருத்துவமனைகள். அங்குதான் உயர் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கென சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குகின்றன.

தமிழக அரசு 2015-16-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத் துறைக்கென ரூ.8,245 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 4.52 சதவீதமாகும்.

2010-11-ஆம் நிதியாண்டில் இத் துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.4,395.31 கோடி. அதாவது, ஆண்டுக்கு ஆண்டு இத் துறைக்கென ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்து வருகிறது.

இதுதவிர, தேசிய சுகாதார இயக்கம், உலக வங்கி இவற்றின் உதவியுடன் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கென கணிசமான நிதி ஒதுக்கப்படுகிறது.

மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், புதிய மருத்துவமனைகளையும், புதிய மருத்துவக் கல்லூரிகளையும் துவக்குவதிலும் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.735.42 கோடியும், உபகரணங்கள் வாங்க ரூ.360.51 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பெரு நகரங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் வரை பல்வேறு நிலைகளில் மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருந்தும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

ஒரு கர்ப்பிணிப் பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றால், அங்கு அவரது பிரசவத்துக்கு உரிய வசதிகள் இல்லை என்று அருகில் உள்ள வட்ட அளவிலான மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். இடைப்பட்ட நேரத்தில் அந்தக் கர்ப்பிணி படும் துயரம் சொல்லி மாளாது. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளி உயிரிழந்த உதாரணங்கள் ஏராளம். இதனால், மருத்துவமனைகளைச் சேதப்படுத்துவதும், மருத்துவமனை ஊழியர்களைத் தாக்குவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் பல்வேறு நவீன இயந்திரங்களை இயக்குவதற்கு போதிய தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாததால், அவை பல மருத்துவமனைகளில் காட்சிப் பொருளாக உள்ளன. இதில் வீணாவது மக்களின் பணம் என்பது ஏன் நிர்வாகத்துக்குத் தெரிவதில்லை?

மேலும், அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சைக்கு வரும் நோயாளி, அங்குள்ள சிறப்பு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுகிறார்.

அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்று கூறினாலும், ஒவ்வொரு சோதனைக்கும் சில நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டாவிட்டால், எதுவும் நடக்காது.

அண்மையில் தென் மாவட்டம் ஒன்றின் தலைநகரில் உள்ள தலைமை மருத்துவமனையில் நிகழ்ந்த காட்சி நமது வேதனையை அதிகரிக்கிறது. இரண்டு வயதுக் குழந்தைக்கு காய்ச்சல். நேரம் இரவு 10 மணி. அரசு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார் தந்தை. பணி நேரத்தில் மருத்துவர் அங்கு இல்லை. இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

காத்திருங்கள், மருத்துவர் வருவார் என ஒருவர் கூறுகிறார். குழந்தையுடன் அரை மணி நேரம் காத்திருக்கிறார் அந்தத் தந்தை. அருகிலிருந்த ஓர் அறையில் இருந்து தூங்கி எழுந்த நிலையில், அரைத் தூக்கத்துடன் வெளியே வருகிறார் மருத்துவர். குழந்தையுடன் மருத்துவர் முன் அமர்கிறார் தந்தை.

குழந்தைக்கு என்ன பிரச்னை என்று தந்தையிடம் கேட்ட அந்த மருத்துவர், குழந்தையைப் பரிசோதிக்காமல் மருந்து, மாத்திரைகளை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு, மீண்டும் தமது தூக்கத்தைத் தொடர அறையை நோக்கிச் செல்கிறார்.

அரசுப் பணத்தில் படித்து, அரசுப் பணியைப் பெற்று, கைநிறைய ஊதியம் பெற்றுக் கொண்டு இப்படி விரும்பத்தகாத வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?

இதற்காக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் முறையாக பணிபுரியவில்லை என்று கூறவில்லை. சிலர் செய்யும் தவறுகள், ஒட்டுமொத்த மருத்துவர் இனத்தையும் பழிக்கு ஆளாக்குகிறது என்பது கசப்பான உண்மை.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...