Friday, March 27, 2015

இனி புகைப்படங்களில் மட்டும்!- சாந்தி திரையரங்கம்

உலகத் திரையரங்குகள் தினம்: மார்ச் 27
அடையாளம்


சென்னை, அண்ணா சாலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவாக்கிய சாந்தி திரையரங்கம். ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களுக்கு இளைப்பாறுதல் அளித்து வந்தது. இத்திரையரங்கை இனி ரசிகர்கள் காண முடியாது. தற்போதிருக்கும் திரையரங்கம் விரைவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பிரம்மாண்ட வணிக வளாகத்துடன் கூடிய மல்டி பிளக்ஸ் திரையரங்காக மாற இருக்கிறது.

தொடக்க விழாவில்

1961-ல் அன்றைய முதல்வர் காமராஜரால் பொங்கல் திருநாளில் திறந்து வைக்கப்பட்ட இத்திரையரங்கம் சென்னையின் முதல் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டது என்ற பெருமைக்குரியது.


பொக்கிஷ கவுண்டர்

மற்ற திரையரங்குகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று சாந்தி திரையரங்கிற்கு உண்டு. ஒரு சிறு அருங்காட்சியகம் போலச் சிவாஜி நடித்த படங்களின் பட்டியல் அங்கே ஒரு கல்வெட்டாகப் பதிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாழ்வில் முக்கியப் பிரமுகர்களுடன் சிவாஜி இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்கள் அவருக்கு வழங்கிய ஓவியங்கள் எனப் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்குப் போனஸ் விருந்தாக இருந்து வருகின்றன. இங்கே நீங்கள் பார்ப்பது மரத்தினால் செய்யப்பட்ட பழைய டிக்கெட் கவுண்டர். தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் படம் பார்க்க வரும் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.


பாவ மன்னிப்பு

சிவாஜியின் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் அவர் நடித்தது அல்ல என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்த ‘தூய உள்ளம்’ என்ற படமே திரையிடப்பட்டது. பிறகு சிவாஜி நடித்த ‘பாவமன்னிப்பு’ உட்பட அவரது பல படங்கள் இங்கே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. சிவாஜியின் மகன் பிரபு நடித்த ‘சின்னத் தம்பி’ 205 நாட்கள் இங்கே ஓடியிருக்கிறது.

தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் படங்கள் இந்தத் திரையரங்கை ஆக்கிரமித்து விடுகின்றன. இங்கே நீங்கள் பார்ப்பது புரொஜெக்டர் அறை. அங்குள்ள சதுரத் துளை வழியே தெரியும் திரையிடல்.


ரசிகர்களின் அன்பு

சிவாஜியின் ரசிகர்கள் அவருக்கு அன்புடன் வழங்கிய பல ஓவியங்களில் ஒன்று இது. சிவாஜி, கணேசன் ஆகிய இரண்டு பெயர்களின் அர்த்தமும் விளங்கும் விதமாக வரையப்பட்ட ஓவியம்.


அலுவலகம்

திரையரங்கில் இருக்கும் சிவாஜியின் அலுவலக அறையில் அவருக்குப் பிறகு அவரது வாரிசுகள் எந்த மாற்றத்தைச் செய்யவில்லை. இன்றும் இதை விரும்பிப் பார்க்கத் திரையுலக ஆர்வலர்கள் வந்து செல்கிறார்கள்.
படங்கள்: ம.பிரபு

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...