Wednesday, March 25, 2015

பட்டதாரிகளுக்கு எதிர்காலம் குறித்த கனவு வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுறுத்தல்


சென்னை: ''படித்த அறிவாளிகளை உருவாக்கிய நாம், நல்ல, ஒழுக்கமான மனிதர்களை உருவாக்கவில்லை; படித்தவர்களை விட, படிக்காதவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன,'' என, எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழாவில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, காட்டாங்கொளத்தூர் பல்கலை வளாகத்தில், நேற்று நடந்தது. 'இஸ்ரோ' தலைவர் கிரண்குமார், கலிபோர்னியா பல்கலை வேந்தர் பிரதீப் கே கோஸ்லா, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் அசுதோஷ் சர்மா ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் மாணவர்களுக்கான பட்டங்களை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பெங்களூரு அறிவியல் நகரமாக இருப்பதைப் போல், சென்னை, அறிவுசார் நகரமாக திகழ்கிறது. படித்த அறிவாளிகளை உருவாக்கிய நாம், சிறந்த, நல்ல, ஒழுக்கமான மனிதர்களை உருவாக்கவில்லை; படித்தவர்களை விட, படிக்காதவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன. மாணவர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்; எதிர்காலம் குறித்த கனவு, பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டும்; கனவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். நான், 1993ல் டில்லியில் சுகாதாரத் துறை அமைச்சரான போது, போலியோ ஒழிப்பு குறித்த கனவு இருந்தது; இன்று, நான் அமைச்சராக இருக்கும் நிலையில், போலியோ ஒழிக்கப்பட்டது குறித்த திருப்தி எனக்கு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து, தலைவர் ரவி பச்சமுத்து, சத்திய நாராயணன், இணை துணைவேந்தர்கள் கணேசன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில், 90 முனைவர், 3,899 முதுநிலை, 9,628 இளநிலை பட்டதாரிகள் என, 13,617 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில், 91 பேர், பதக்கங்கள் பெற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025