Thursday, March 26, 2015

பலிகடா ஆசிரியரா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அந்த ஆசிரியர்கள் அங்கே தேர்வறைக் கண்காணிப்பாளர்
களாக வந்தது எப்படி என்பதில் தொடங்கி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எந்தெந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன, இதில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன பங்கு என்பதாக விசாரணை வளையம் விரிந்துகொண்டே செல்கிறது. இன்னும் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம், மேலும் சில கைதுகள் நடக்கலாம்.
இவ்வாறான சூழல் உருவெடுத்தமைக்கு கல்வி வணிகமய
மானது மட்டுமன்றி, கல்வித் துறையும்கூட ஒரு முதன்மைக் காரணம் என்பதால், கல்வித் துறை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பாடுபடுகிறது.
உடனடியாக கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு என்னவென்றால், ஒரு தேர்வுக்கூடத்தில் ஒரு மாணவர் காப்பியடிப்பதை அந்த அறையின் கண்காணிப்பாளர் கண்டுபிடிக்காமல் வேறு யாராவது கண்டுபிடித்தாலோ அல்லது பறக்கும்படை கண்டுபிடித்தாலோ அந்த அறையின் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது .
ஒரு மாணவன் காப்பியடிப்பதை அனுமதிக்கும் அறைக் கண்
காணிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மேலும், ஓர் அறைக் கண்காணிப்பாளர் அவ்வாறு காப்பியடிக்க அனுமதிக்கிறார் என்பதை மாணவர்கள் வெளியே வந்தவுடனே பகிர்ந்துகொள்வார்கள். இத்தகைய அறைக் கண்காணிப்பாளர்கள் மீது கூடுதலாக கவனம் செலுத்த, கல்வித் துறை இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின்போது முதல்முறையாக தேர்வு நடைபெறும் பள்ளிகளில் புகார் பெட்டி வைத்திருக்கிறது. இதில் மாணவர்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். குறிப்பிட்ட அறையில் இன்று அறைக் கண்காணிப்
பாளராக இருந்தவர் குறிப்பிட்ட மாணவருக்கு உதவி செய்தார் என்றோ அல்லது விடைகளைச் சொல்லித் தந்தார் என்றோ புகார் செய்ய முடியும். இவ்வாறான ஒரு நல்ல நடைமுறையை அறிமுகம் செய்திருக்கும் கல்வித் துறை, நடைமுறை சாத்தியமில்லாத தடலாடி உத்தரவுகளையும் போடுகிறது.
இன்றைய பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்களே தவிர, ஆசிரியர்களுக்கு ஆதரவாக இல்லை. ஒரு மாணவன் விடைத்துணுக்குகள் வைத்திருக்கிறானா என்பதைப் பரிசோதிக்கும் உரிமையை ஆசிரியர்கள் இழந்துவிட்டார்கள். நீ பனியனுக்குள் என்ன வைத்திருக்கிறாய், சட்டையை கழற்று என்று சொன்னால், மாணவரை மற்றவர்கள் முன் அசிங்கப்படுத்தியதாக நீதிமன்ற வழக்குத் தொடுக்கும் நிலைமை உள்ளது.
ஒரு மாணவன் விடைத்துணுக்களை வெளியே எடுக்கும் வரை, அவன் வைத்திருந்தானா என்பது அந்த அறைக் கண்காணிப்பாளருக்கும்கூட தெரியாது. ஓர் அறையில் குறைந்தது ஐம்பது மாணவர்கள் தேர்வு எழுதும்போது, ஒரு மாணவன் இத்தகைய விடைத்துணுக்கை எடுக்கும் ஒரு கணம் என்பது கண் மறைக்கும் நேரம்தான். இதற்காக, அறைக் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்வது என்று தொடங்கினால், அறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்ற யாருமே முன்வர மாட்டார்கள்.
மேலும், அறைக் கண்காணிப்பாளர்கள் இத்தகைய மாணவர்
களைக் கண்டுபிடிக்கும்போது அந்த மாணவர்கள் மிரட்டவும் செய்கிறார்கள் என்பதையும் கல்வித் துறை உணர வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதற்கான தீர்வைக் காண வேண்டுமே தவிர, இவ்வாறான அதிரடி உத்தரவுகள் தேவையில்லாத எதிர்ப்புகளையே கொண்டு வந்து சேர்க்கும்.
தேர்வு அறைக் கண்காணிப்பிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மாணவர்களின் நடவடிக்கை மட்டுமன்றி, அறைக் கண்காணிப்பாளரின் நடவடிக்கையும் அதில் பதிவாகும். புகார் பெட்டியில் ஆசிரியர் குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தாலோ அல்லது தாக்குதலுக்கு அஞ்சிய ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட மாணவர் குறித்து புகார் தெரிவித்திருந்தாலோ, அந்த அறை கேமரா மூலம் மாணவன், ஆசிரியர் நடவடிக்கையை மீட்டெடுத்து நட
வடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நவீன முறைகள்தான் இன்றைய தேவை. அதிரடி உத்தரவுகள் அல்ல.
மாணவர்கள் காப்பியடிக்கக் காரணம் படிக்கவில்லை என்பதுதான். எந்த மாணவர்கள் படிக்கவில்லை, எந்த மாணவர்களுக்கு போதுமான வருகைப் பதிவு இல்லை, அவர்களை பொதுத் தேர்வுக்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஒரு வரன்
முறையை - ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு நடத்துவது போல- கல்வித் துறை உருவாக்க வேண்டியதும் அவசியம்.
75% வருகைப் பதிவு இல்லை என்ற காரணத்துக்காக சீர்காழி அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியை 6 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தி, 100% தேர்ச்சிக்காக எங்கள் குழந்தைகளை வேண்டுமென்றே தடுத்துவிட்டார் என்று கூறியதால், அந்தப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களைக் கட்டுப்படுத்துவதுபோய் ஆசிரியர்களின் கரங்கள் கட்டுண்டு இருக்கும் அவலம் மாற வேண்டும்.
மக்கள் அல்லது பெற்றோரின் கோபத்தை தணிக்கும் நட
வடிக்கை தாற்காலிகமானது. நிரந்தரமான தீர்வுக்கு கல்வித் துறை தன்னை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். அறைக் கண்
காணிப்பாளர் பலிகடாவாக்கப்படுவது ஏற்புடையதல்ல.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...