Friday, September 18, 2015

மீண்டும் டெங்கு!

Dinamani

By ஆசிரியர்

First Published : 18 September 2015 01:01 AM IST


தலைநகரில் எது நடந்தாலும் அது செய்திதான், தேசியப் பிரச்னைதான். தில்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு அதிகமானால், மத்திய அரசு உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. வெங்காய ஏற்றுமதி விலையை உயர்த்தி நிர்ணயிக்கிறது. தில்லியில் ஒரு பெண் வல்லுறவுக் கொலைக்கு ஆளானால், மத்திய அரசு உடனே சட்டத்தையே திருத்தி எழுதுகிறது. அதேபோலவே, தில்லியில் டெங்கு காய்ச்சல் என்றாலும் மத்திய அரசு பதறுகிறது. களம் இறங்குகிறது.
தில்லியில் கடந்த மூன்று வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவலாக இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக டெங்கு தீவிரம் கொண்டு, மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஏழு வயதுச் சிறுவன் அவினாஷ் டெங்கு காய்ச்சலால் இறந்தபோது, அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத பெற்றோர் தாங்கள் வசித்த 4-ஆவது மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை, தில்லியில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் பேசப்படும் விவகாரமாக மாற்றின ஊடகங்கள்.
இந்தச் சிறுவனின் மரணம், பெற்றோரின் துயரம் ஆகியவற்றோடு நின்றுவிடாமல், குழந்தை அவினாஷ் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது, மூன்று மருத்துவமனைகளால் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் திருப்பியனுப்பப்பட்ட விவகாரம், தில்லி மருத்துவமனைகளின் மீதான தீவிர எதிர்வினையைக் கிளப்பியது. சிறுவன் அவினாஷ் மட்டுமல்ல, அன்றாடம் பல நூறு பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்கிற உண்மையும் வெளிவந்தது. மக்கள் பெருந்திரள் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் களப் போராட்டம், அறிக்கைப் போராட்டம், பேட்டித் தாக்குதல் என பன்முனை எதிர்ப்புகள் தொடங்கின.
இதன்பிறகுதான் மத்திய அரசு தலையிட்டது. தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் டெங்கு காய்ச்சலால் வரும் நோயாளிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு ரூ.600 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தச் சோதனைகள் தில்லி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன. தில்லியில் அனைத்துப் படுக்கைகளும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. கூடுதலாக 1,000 படுக்கைகளை வாங்குவதற்கு முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும்கூட, தனியார் மருத்துவமனைகளை நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகமாக நாடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால், அத்தகைய மருத்துவமனைகளை நெருக்கடிநிலை நடவடிக்கையாக அரசே தாற்காலிகமாக ஏற்று நடத்தும் என்று கேஜரிவால் கூறியதால், இந்திய மருத்துவர்கள் கழகம் சார்பில் நோயாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "தற்போதைய டெங்கு காய்ச்சல் வைரஸ் 2013-ஆம் ஆண்டு வைரஸ் போல கொல்லும் கிருமி அல்ல. அச்சப்பட வேண்டாம். அதிகமான காய்ச்சல் இருந்தால் மட்டுமே அனுமதிக்கும் அவசியம் நேரும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றமும்கூட பொதுநல வழக்கை ஏற்றுக் கொண்டு, டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசுக்கும், தில்லி முதல்வருக்கும் விளக்கம் கோரியுள்ளது.
இவை யாவும் ஒருபுறம் நடந்தபோதிலும், ஓர் உண்மையை மறுப்பதற்கில்லை. டெங்குக் காய்ச்சல் தில்லிக்குப் புதியதல்ல. காமன்வெல்த் விளையாட்டு நடந்த வேளையில், தில்லியில் டெங்கு காய்ச்சலால் எட்டு பேர் இறந்தனர். சுமார் 6,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் 2,000 பேர் தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. குறிப்பாக, அக்டோபர் மாதம் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நிகழாண்டில் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை 15 பேர் இறந்துள்ளனர். சுமார் 1,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில்தான், மத்திய அரசும், தில்லி அரசும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன.
டெங்கு காய்ச்சலைப் பொருத்தவரை, அரசுகளைவிட மக்களே பொறுப்பாளிகள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், தூய்மையான நன்னீரில் மட்டுமே வளர்ந்து பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வீணாகக் கிடக்கும் சிறு பாத்திரங்கள், கலயங்கள், பயன்படாத டயர்கள், பூந்தொட்டிகள், பாத்திகளில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொற்றுநோய் அல்ல. ஆகவே, நன்னீர் தேங்குவதைத் தவிர்த்தாலே பாதி பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருஞ்செலவு மிச்சமாகும்.
கொசு விரட்டி, கொசுக் கொல்லி ஆகியவற்றைத்தான் இன்று பயன்படுத்தி வருகிறோம். இவற்றைவிட கொசுக்களை மலடாக்கும் மருந்துகள் மிகவும் பயனுள்ளதாகவும், கொசு உற்பத்தியை வேகமாகக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அத்தகைய கொசு மலடுக்கான மருந்துகள் சந்தைக்கு வரவில்லை. அது ஏன் என்பது புரியவில்லை.
மக்களை நோயிலிருந்து காப்பாற்றுவது எப்படி அரசின் கடமையோ, அதேபோன்று நோய் உண்டாக்கும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்க உதவுவதும் மக்களின் கடமைதான் என்பதை நாம் உணர வேண்டும்.

Thursday, September 17, 2015

இறைச்சி உற்பத்தியில் இந்திய எழுச்சி


Dinamani


By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 17 September 2015 01:39 AM IST


இந்தியா என்றால் புலால் மறுப்பை வலியுறுத்திய வள்ளுவன், புத்தன், வள்ளலார், காந்தி உள்ளிட்ட எண்ணற்றோர் பிறந்த நாடு என்று பெருமைப்பட்டதெல்லாம் வீண். இறைச்சி உற்பத்தியிலும், நுகர்விலும் வரலாறு காணாத வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது.
÷சீனர்கள் பாம்பைத் தின்கிறார்கள், பூனை, எலி உண்கிறார்கள். புழு, பூச்சிகளையும் தின்கிறார்கள் என்று பழிப்பதுண்டு. ஆனால், தமிழர்களில் சில வகுப்பினர் பூனை, எலி உண்பதுண்டு. வட கிழக்கு இந்தியாவில் வாழ்வோர் சிலர் நாயைக்கூட விட்டு வைப்பதில்லையாம்.
÷மனிதனுக்குப் புரதப் பசியைவிட இறைச்சிப் பசியே அதிகம். ஒரு காலத்தில் கோழி இறைச்சி அதிக விலையிலும் ஆட்டிறைச்சி குறைந்த விலையிலும் விற்றது. ஆனால், நாமக்கல்லில் தோன்றிய கோழிப் புரட்சி நாட்டையே வென்றது. கோழி விலை மலிந்தது; தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி மாவட்டங்களில் கோழி வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழிலாக மாறி வருகிறது.
÷இறைச்சிக் கோழி என்றாலும் முட்டைக் கோழி என்றாலும் கோழி கோழிதான். இது தொடர்பான ஒரு விவசாயப் புள்ளிவிவரம் சிறப்பானது. கோழி, மாடு வளர்ப்பால் உயர்ந்தது இறைச்சி மட்டுமல்ல; மக்காச் சோள உற்பத்தியும்தான். இன்று தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக மக்காச் சோள உற்பத்தி இரண்டாம் நிலையில் உள்ளது.
÷இவ்வாறே, இந்தியாவிலும் நெல், கோதுமைக்குப் பின் மூன்றாம் இடத்தில் மக்காச் சோள உற்பத்தி உள்ளது. இறைச்சிக் கோழி, கசாப்பு மாடுகளுக்கான தீவனத் தேவை காரணமாக இந்தியாவில் மக்காச் சோள உற்பத்தி உயர்ந்துள்ளது.
÷நாமக்கல் கோழிப் புரட்சிக்குப் பின் கோழி விலை விழுந்தது. கோழி உணவு உயர்ந்தது. இந்த அன்னிய தேசத்து வெள்ளைக் கோழி வளர்க்கப்படும் தொழில்நுட்பத்தைக் கவனித்தால் அந்தத் தொழில்நுட்பம் ஆரோக்கியமற்றது என்று புரிந்து கொள்ளலாம்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் இந்தக் கோழிகள், தென்னம்பஞ்சுப் படுக்கை மீது நெருக்கமாக ஒன்றுமீது ஒன்று மோதும் அளவில் ஊட்டம் கொடுத்துக் குஞ்சுகளைக் கொழுக்க வைத்து விற்கிறார்கள். அவ்வாறு வளர்க்கும்போது கோழிகள் இறக்கும். தொற்றுநோய் பரவும். அவ்வாறு தொற்றுநோய் பரவாமல் இருக்க கோழிகள் மீது, தடை செய்யப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆக்சி டெட்ரா சைக்கிள், குளோர் டெட்ரா சைக்கிள், டாக்சி சைக்ளின், என்ரோ ஃப்ளோக்சாசின், சிப்ரோ ஃப்ளோக்சாசின் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
÷அப்படியும் நூற்றுக்கு 5 முதல் 10 கோழி இறக்கும். அவற்றை உண்ண இப்படிப்பட்ட கோழிப் பண்ணைகளில் நாய்கள் சுற்றித் திரியும். இந்தக் கோழிகள் அங்காடிக்கு வரும்போது அந்த இறைச்சிகளில் 10 முதல் 15 சதவீதம் ஆன்டிபயாட்டிக் எஞ்சியிருக்கும்.
÷தேன் விஷயத்திலும் இப்படித்தான். பெட்டிகளில் தேனீ வளர்ப்போர் தேனீக்கள் இறக்காமல் இருக்கத் தெளிக்கும் ஆன்டிபயாட்டிக் அத் தேனில் எஞ்சியிருக்கும்.
÷நீங்கள் கேட்கலாம். ஆன்டிபயாட்டிக்தானே. அது நல்லதுதானே. ஒரு டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். அது ஆபத்தானது என்பார்கள். ஏனென்றால், நமது உடலில் உள்ள கிருமிகள் கோழிக்கறி, தேன் ஆகியவற்றில் எஞ்சியுள்ள ஆன்டிபயாட்டிக்கை எதிர்த்து வெல்லும் சக்தி பெற்று விடும். நமக்கு நோய் வரும்போது நம் உடலில் செலுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் வேலை செய்யாது. உண்மையில் இவற்றை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மாறி மாறிப் புதிது புதிதான மருந்துகள் உண்டுப் பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.
÷கூண்டுகளில் வளர்க்கப்படும் வெள்ளைக் கோழி இறைச்சி எப்படியெல்லாம் வறுபடுகிறது என்று பார்த்தால் சில்லி சிக்கன், சிக்கன் ரோல், பீசா, பர்கர் என்று ஏகப்பட்ட அவதாரத்தை எடுத்துவிட்டது. ஒரு காலத்தில் மீன், முட்டை எல்லாம் தாவர உணவு என்று பேசப்பட்டது. இன்று அந்தப் பட்டியலில் சிக்கனும் சேர்ந்துவிட்டது.
÷இந்தியாவில் உள்ள மேல்ஜாதி ஹிந்துக்கள் - குறிப்பாக பிராமணர்கள், ஜெயின் என்ற பட்டப் பெயருள்ள ஹிந்துக்கள், சைவப் பிள்ளைமார் புலால் உண்பதில்லை. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மென்தகடு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பொறியாளர் இளைஞர் - இளம்பெண்கள் கூட்டம் ராப் பகலாய் கணினிகள் முன் கடுந்தவம் புரிவோர்களில் வெஜிடேரியன் என்று கூறிக் கொள்ளும் மேலே குறிப்பிட்ட மேல்ஜாதி யுவ - யுவதிகள் அமெரிக்க அறிமுகமான சிக்கன் பர்கருக்கு அடிமையாகிவிட்டனர்.
÷இப்படிப்பட்ட சாஃப்ட்வேர் நிறுவன உணவகங்களில் ஜங்க் ஃபுட்டுடன் "சிக்கன் பர்கருக்கு' ஏக வரவேற்பு உண்டு. சிக்கன் மட்டுமல்ல; பீஃப் மட்டன், போர்க் பர்கர்களும் உண்டு. அதாவது கோழிகளுடன், மாடு, ஆடு, பன்றி இறைச்சிகள் மேல்நாட்டு பாணி உணவாக புதிய பாங்குடன் பர்கர் பாஸ்தா, பீஸ்தா என்று புதிய புதிய பெயர்களில் வழங்கப்படலாம்.
÷ஹைதராபாத் ஓர் அற்புத நகரம். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையின் எடுத்துக்காட்டு. ஒரு பக்கம் ஏழை இஸ்லாமியச் சிறுமிகள் அரபு நாடுகளுக்குக் கடத்தப்படுவதில் முதலிடம் என்பதை மறந்துவிட்டு சாஃப்ட்வேர் தொழில், புலால் உணவு பற்றி அறிவோம். ஹைதராபாதில் "ஹலீம்' என்ற புலால் உணவு விழா பாரம்பரியச் சிறப்பு மிக்கது. ஒரு விதமான கோதுமை மாவு ரொட்டியில் மாட்டுக் கறி, ஆட்டுக் கறியுடன் கடலைப் பருப்பு கலந்த பிண்ட உணவு. பன்னுக்குள் மசாலா சிக்கன், வகை வகையான "நான் வெஜ்' பிரியாணி விழாவில் உண்டு.
÷இந்திய மொழிகளில் கலந்துவிட்ட ஒரு புதிய சொல் "நான் வெஜ்'. விமானத்தில் பயணிக்கும்போது, உணவு வழங்கும் விமானப் பணிப்பெண் பயணிகளிடம் "வெஜிடேரியன்?' என்று வினவும்போது இறைச்சிப் பிரியர்கள் "நான் வெஜ்' என்று சொல்ல வேண்டும். "நான் வெஜிடேரியன்' என்று பொருள் கொள்ளக் கூடாது.
÷இந்த விஷயத்தில் ஆய்வு மேற்கொண்ட ஹைதராபாத் நகராட்சி ஆணையர் சோமேஷ் குமாரின் "நான் வெஜ்' புள்ளிவிவரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஹைதராபாதில் உள்ள 1.1 கோடி மக்களில் 78 லட்சம் மக்கள் "நான் வெஜ்' என்றும், ஹைதராபாதில் மட்டும் தினமும் 3 லட்சம் கோழிகள், 8,000 ஆடுகள், 2,500 மாடுகள், 50 பன்றிகள் கொல்லப்பட்டு உண்ணப்படுவதாகத் தெரிவித்தார். இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் என்றுமே "நான் வெஜ்'. ஆனால், இப்போது சுமார் 90 சதவீத ஹிந்துக்களும் "நான் வெஜ்' - குறிப்பாக சிக்கனுக்கு அடிமை.
÷புத்தனை வணங்கும் இந்தியர்களில் பலர் மாட்டுக் கறிக்கு அடிமை. உலகத்துக்குக் கொல்லாமையை போதித்த புத்த மதம் இலங்கை, சீனா, ஜப்பான் நாடுகளில் பரவியிருந்தாலும், உயிர்களைக் கொல்வதே வாழ்க்கை நெறியானது. இந்தியாவிலும் நமது பாரம்பரியக் கருத்துகள் தவிடுபொடியான நிகழ்வுகள் உண்டு. பசு மாடுகளை தெய்வமாகப் போற்றி வளர்க்கும் இந்தியாவில் பசுவதை கூடிவருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
÷மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறிவிட்டது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் நாம் ஆண்டுதோறும் பெறும் அன்னியச் செலாவணி மதிப்பு 5,000 கோடி டாலர். உள்ளூர் வர்த்தக மதிப்பு அளவிடற்கரியது. பல கோடி டாலர்கள்.
÷பரந்தாமனாகிய பாலகிருஷ்ணன் குழல் ஊதினால் பிருந்தாவனத்தில் ஆயர்பாடி மாடுகள் மதி மயங்குமாம். இன்றுள்ள சூழ்நிலையில் யமுனைக் கரையில் உள்ள தில்லி, மதுரா பகுதிகளில் பசு மாடுகள் குறைந்து எருமை எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. ஏனெனில், பசுவை விட எருமையே லாபம். மாட்டிறைச்சியில் எருமையின் பங்கு அதிகம். பசுவதைத் தடுப்பு இருப்பினும், பசு - காளை இறைச்சிகளும் எருமை இறைச்சி என்ற லேபிள் பெற்று ஏற்றுமதியாகிறது? மாடு வளர்த்துப் பால் மூலம் வருமானம் பெறும் விவசாயிகள் சினை பிடிக்காத வெற்று மாடுகளையும், காளைக் கன்றுக் குட்டிகளையும் கசாப்புக்கு அனுப்புவதால் பெறும் வருமானம் பால் உற்பத்தியில் பால் விலை சரியும்போது சற்று ஈடுகட்டுகிறது.
÷வடகிழக்கு இந்தியாவில் - அதாவது அஸ்ஸôம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நாம் பசுக்களை வளர்ப்பதுபோல் பன்றிகளை வளர்க்கின்றனர். ஆட்டுப் பால், கழுதைப் பால் போல் பன்றிப் பாலை யாரும் அருந்துவதாகத் தெரியவில்லை. பன்றியிடம் பால் கறக்க முடியுமா என்பதும் புலிப்பால் கறந்த கதைதான்! முழுக்க முழுக்க இறைச்சிக்குத்தான். பொதுவாக இந்தியாவில் உள்ள ஆதிவாசிகள், ஷெட்யூல்டு வகுப்பினர் அனைவருமே நூறு சதவீதம் "நான் வெஜ்'.
÷இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்கள் சைவ உணவையே அலகாகப் பயன்படுத்துகின்றனர்! கலோரி உணவு என்பது மனிதனை குண்டாக்கும் தத்துவமே. புரதச் சத்துக்குப் போதுமான பருப்பு விளைச்சல் இந்தியாவில் இல்லை. உலகிலேயே அதிகம் பருப்பு விளைவிக்கும் நாடான இந்தியாவில்தான் பருப்பு இறக்குமதியும் அதிகம். ஆகவே புரதச் சத்து வழங்கும் "நான் வெஜ்' இந்தியர்களின் தவிர்க்க முடியாத தேவை என்பது நடைமுறை.
÷எனினும், கசாப்புக் கடைகளில் ஆடுகளின் அழுகுரல் நெஞ்சைப் பரிதவிக்க வைக்கிறது. பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்றை நினைவுபடுத்தி அன்றாடம் இறக்கும் வாயில்லா ஜீவன்களுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்:
"இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே...
காலொடிந்த ஆட்டுக்காகக்
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல்போல் உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்த வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க-
ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி
வந்தாங்க'.
÷இதுதான் இந்திய எதார்த்தம்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

Tuesday, September 15, 2015

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: மறதியைத் தோற்கடித்த பெரியசாமி

Return to frontpage


ஆயிஷா இரா.நடராசன்


நமது கல்விமுறை நெகிழ்ச்சியில்லாமல் இறுக்கமான தன்மையோடு இருப்பதால், மாற்றங்களைக் கொண்டுவர அது பெருந்தடையாய் உள்ளது.

- இந்தியாவின் தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பு 2005.

ரயிலில் ஏறியதும் “டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டேனே” என்று பதறுபவர்கள், போலீஸாரிடம் பிடிபட்டபின் “லைசன்ஸ் கொண்டு வரல” என்று கையைப் பிசைபவர்கள். குடையிலிருந்து ஹெல்மட் வரை எதை எதையோ மறப்பவர்கள் இந்த நாட்டில் இல்லையா?

அவர்களைப் போலவே வகுப்பறைகளின் வாசலில் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். புத்தகம் எடுத்துவரவில்லை. பேனா கொண்டுவரவில்லை. வீட்டுப்பாடம் எழுதி வீட்டிலேயே வைத்துவிட்டார். அடையாள அட்டை இல்லை, எங்கோ வைத்து மறந்துவிட்டேன். பென்சில் இருக்கு. அழிக்கும் ரப்பர் இல்லை. பேனா இருக்கு. அதில் மை போடவில்லை என்று பலவிதமான மறதிகளைப் பேசிக்கொண்டே அந்தக்கூட்டம் நிற்கும்.

மறதி மனிதனோடு உடன் பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கு மட்டும் ஏன் தண்டனையும் வசவும் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கும் அவமதிப்பும்? இதற்கு மாற்று இருக்கிறது என்று எனக்குப் புரியவைத்த மாணவர்தான் பெரியசாமி.

எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர் கறார் பேர்வழி. தனது வகுப்பில் பாடப் புத்தகம் கொண்டுவராதவர்களை வெளியே நிற்கவைத்து விடுவார். ஆனால், முதல் வரிசை மாணவர்களில் ஒருவரின் புத்தகத்தை (இரவல்) வாங்கி புத்தகத்தைத் திறந்தபடியே ‘‘போன வகுப்பில் எங்கே… விட்டோம்’’ என மாணவர்களேயே கேட்பார். அவர் ஏன் தன் புத்தகத்தை கொண்டுவரவில்லை என்று மாணவர்கள் கேட்பது கிடையாது. நமது கல்வி முறையில் அவருக்கு ‘இம்சை அரசன்’ காலத்து அதிகாரம் உள்ளது.

இந்த மாதிரியான கல்விமுறையை ‘வங்கி’ முறைக் கல்வி என்று பிரேசில் நாட்டில் பிறந்த மாற்றுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரையரே வர்ணித்தார். இந்தக் கல்வியில் ஆசிரியர், மாணவர், பாடப்பொருள் எனும் மூன்று பகுதிகள் உள்ளன. ஆசிரியர் அனைத்து அதிகாரமும் பெற்றவர். மாணவர் அடிபணிந்து போகவேண்டியவர். மாணவரின் தலையைத் திறந்து பாடப்பொருளை வங்கியில் பணம்போடுவதுபோல் நிரப்புவதே கல்வியாக இருக்கிறது. இதில் பேனா, புத்தகம், நோட்டு என்பதெல்லாம், வங்கிக்கு ‘உங்கள் பாஸ்புக்கை’ எடுத்துச்செல்லவேண்டும் என்பதுபோல முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் கணினி காலத்திலும் அதில் எதுவும் மாறவில்லை.



வன்முறையின் காரணி

பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்க இந்த சின்ன சின்ன மறதிகளே காரணங்களாக சொல்லப்படுகிறது. படிப்பதில் உள்ள ஈடுபாடு, தேர்வு மதிப்பெண்கள் உள்ளிட்ட கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தண்டனை அளிப்பதைவிட பள்ளிக்கு ஏதாவது ஒன்றை எடுத்துவர மறந்ததுக்காக தண்டனைகள் அளிக்கப்படுவதே அதிகம் என்பார் ரஷ்ய கல்வியாளர் ஜேம்ஸ் பாஸ்டர் னாக்.

மிக அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வராமல் மறப்பது பேனாவையோ அல்லது பென்சிலையோதான். சிலர் எளிதில் தொலைத்துவிடுவதும் அதைத்தான். இன்று பள்ளி அமைப்புக்கு வெளியே அதிகம் பயன்படாத ஒன்றாக பேனா மாறிவிட்டது. மின்னஞ்சலும் குறுஞ்செய்தியுமாக எல்லாம் இணைய மயமாய் ஆகியும் பள்ளிக்கல்வி இறுகிப்போய் பிடிவாதமாக இருக்கிறது.

விநோதமான பட்டப் பெயர்

நான் முன்பு பணிசெய்த அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்தார் பெரியசாமி. பேனா பெரியசாமி என்றால்தான் தெரியும். இப்படி ஒரு பட்டப் பெயர் அவருக்கு எப்படி வந்தது என ஆச்சரியப்பட்டேன். பேனா பெரியசாமி என்பது பட்டப் பெயர் அல்ல. காரணப்பெயர்தான் என்று தெரியவந்ததும் திகைத்துப் போனேன்.

ஒரு நாள் வகுப்பறையில் நுழையும்போது பேனா பெரியசாமி தனது வகுப்பு சகாக்களில் பலருக்கும் பேனா சப்ளை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். பெரியசாமிக்கு பேனா சேர்ப்பது ஒரு ஹாபியாம். விதவிதமாக சேர்த்து வைத்திருந்தார். அதற்காகவே இரண்டு டப்பாக்கள் வகுப்பில் இருந்தன. யார் பேனா கொண்டுவரவில்லை என்றாலும் உடனே இரவல் தருவார்.

ஆனால், பள்ளி முடிந்ததும் அவற்றைத் திரும்பப் பெறுவதிலும் கறார் பேர்வழி. சில சமயம் மற்ற வகுப்புகளிலிருந்து வந்து அவரிடம் பேனா வாங்குபவர்களும் உண்டு. பழைய பேனாக்கள்தான். சிலவற்றில் வேறு வண்ணங்களில் மூடிகளும் இருக்கும். சில ஒழுகுவதும் உண்டு. ஆனால், வகுப்பில் அது இல்லை என்றால் வாங்கும் தண்டனையைவிட, இது உடனடி நிவாரணம் அல்லவா? பெரியசாமி இருக்கும் வகுப்பறை அமைதியாக நடப்பதை உணர்ந்தேன்.

நம் நாட்டின் கல்வி முறைமையை வடிவமைக்கும் ‘கல்வித் திட்ட வடிவமைப்பு 2005’ ‘மாணவர்களின் பள்ளி அனுபவங்களால் உணரப்பட்டு உள்வாங்கி கல்வி கட்டமைக்கப்படுகிறது’ எனக் கூறுகிறது. ‘பள்ளியில் நடக்கும் அனைத்துமே கல்விதான். பாடப் புத்தகத்தைக் கடந்து வெளிப்பட்டு தோன்றும் அறிவின் அனைத்து அம்சங்களுமே போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும்’ என நம்மை அது தூண்டுகிறது.

ஒரு பேனா கொண்டுவரவில்லை என்பதற்காக அந்தப் பாடவேளை முழுவதையும் ஒரு மாணவரை நிற்கவைத்து அவருக்கு பாடம் புகட்ட கூச்சலிட வேண்டுமா? அதைவிட அந்த ஆசிரியரே ஒரு ‘பேனா’ பெரியசாமி ஆகி, ஒன்றிரண்டு பேனாக்களை (இப்போதெல்லாம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது) கூடுதலாய் வைத்திருந்து பேனா எடுத்து வராதவர்களுக்கு கொடுக்கலாமே? பிரச்சினையில்லாமல் கற்றல் தடைபடாமல் தொடரலாமே? எனும் புதிய சிந்தனையை அவர் எனக்கு போதனை செய்துவிட்டார்.

கடைசியாக அவரை நான் பார்த்தபோது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் பெறும் கவுண்டரில் காசாளராக இருந்தார். ‘‘சலான் நிரப்பிட்டீங்களா … பேனா இருக்கா” என்று ஒரு முகவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக்காக சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தமிழக இளைஞரை மீட்க நடவடிக்கை


    Return to frontpage


    ஆர்.செளந்தர்
    அ.சாதிக் பாட்சா
    ஆர்.சிவா

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக் குச் சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சதாம் உசேனை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சதாம் உசேனின் தந்தை இமாம் ஷா, சதாம் உசேன் மனைவி ஜாஸ் மின்பானு, அவரது இரண்டரை வயது மகன் ஷர்கான் ஆகியோரு டன் தேனிக்கு வந்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம், எஸ்.பி. ஜெ.மகேஷ் ஆகியோரி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:

எனது மகன் சதாம் உசேனை கும்பகோணம் அருகே உள்ள சோலைபுரத்தை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு அனுப்புவதாக சொல்லி விசா எடுக்க ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் சென்று 40 நாட்கள் முடிந்து விட்டது. ஓட்டுநர் வேலைக்கு சென்ற அவரை ஓட்டுநர் பணி தராமல் கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். தகுந்த உணவோ, தங்க இடமோ கொடுக்காமல் அனாதையாக உள்ளார். அவர் அங்கு படும் கஷ்டங்களை வாட்ஸ் அப் மூலம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித் துள்ளார். அந்த ஆதாரங்களை இந்த கடிதத்துடன் (சிடி) இணைத் துள்ளேன். அவரது பாஸ்போர்ட் டையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கின்றனர். அவரை உடலள விலும், மனதளவிலும் கடுமை யாக துன்புறுத்துகின்றனர். இதனால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். எனவே தக்க நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சதாம் உசேன் மனைவி ஜாஸ்மின் பானு கூறுகையில், வாட்ஸ்அப்பில் எனது கணவர் உதவி வேண்டி வீடியோ அனுப்பிய பின்னர் மறுநாள் (3நாட்கள் முன்பு) இன்டர்நெட் மூலம் எனது மாமனார் மற்றும் என்னிடம் பேசினார். அப்போது மிக வும் கஷ்டமாக உள்ளது என வேத னையுடன் கூறினார். இரண்டு நாட் கள் அரசு விடுமுறை என்பதால் இன்று(நேற்று) வந்து புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது இன்னும் ஓரிரூ நாட்களில் சதாம் உசேன் தமிழகம் வந்து விடுவார் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்டோர் பேட்டி

கம்பத்தைச் சேர்ந்த ஷேக் மைதீன் (இட்லி வியாபாரி) கூறிய தாவது: எனது மகன் காஜா மைதீன் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி மற்றும் கம்பத்தைச் சேர்ந்த 2 பேர் ரூ. 80 ஆயிரம் வாங்கினர். ஆனால், கூறியபடி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பித் தரவில்லை. மேலும், இவர்கள் தாதப்பன்குளம் பகுதி யில் உள்ள 7 பேரிடம் ரூ. 12 லட் சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாங் கள் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட் இதுவரை கிடைக்க வில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த அரசமணி (லாரி ஓட்டுநர்) என்பவர் கூறியது: கம்பம் மெட்டு காலனி நந்த கோபால் கோயில் அருகே, ஒரு நபரை ஓட்டுநர் வேலைக்கு அழைத் துச் சென்றனர். ஆனால், அவரை ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளனர். பின்னர், அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். 4 மாதங்களுக்கு முன் வேறு ஒரு ஏஜென்சி மூலம், கத்தாரில் அவர் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார்.

கம்பத்தை சேர்ந்த மணி (டெய்லர்) என்பவர் கூறியது: எனது மகனுக்கு சிங்கப்பூரில் பிட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், கம்பத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரூ. 2 லட்சம் கொடுத் தேன். தொழில் கற்றுக் கொடுத்து நல்ல வேலையும், நல்ல சம்பளமும் வாங்கித் தருவதாக அவர் கூறி னார். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு கூறியபடி வேலை வாங்கி தரவில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த வியாபாரி சம்சுதீன் கூறியது: எங்கள் பகுதி யைச் சேர்ந்த கேட்டரிங் முடித்த ஒரு இளைஞரை, குவைத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமை யல் வேலைக்காக அழைத்துச் சென்றனர். சமையல் சரியில்லை எனக் கூறி, அவரை பாத்திரம் கழுவ வைத்துள்ளனர்.

பேசியபடி சம்பளம் கொடுத்ததால், அங்கேயே பணிபுரிந்து வருகிறார். வெளி நாடு செல்லும் முன் நம்பகமான நிறுவனங்கள்தானா என தீவிர விசாரணை செய்ய வேண்டும். நிறு வனங்கள் குறித்து காவல்துறை யினரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின் வேலைக்குச் செல்வதே சிறந்தது. இதேபோல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளியே சொல்லத் தயங்கி வருகின்றனர் என்றார்.

முறையாக வெளிநாடு செல்வது எப்படி?

வெளிநாடுகளில் வேலை செய்யும் மற்றும் வேலை தேடும் நபர்களுக்காக ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், முதல் மாடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், எண் - 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை - 600 020' என்ற முகவரியில் இது இயங்கி வருகிறது. தொலைபேசி எண்கள் 044 - 24464267, 24464268.

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்களது விவரங்களை இங்கு பதிவு செய்து கொண்டால் அவர்களின் பாதுகாப்பை குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்நிறுவனம் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ளும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களும் இதேபோல பதிவு செய்து கொண்டால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள்:

தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை ரூ.600 முதல் ரூ.1000 வரை மாறுபடும். விண்ணப்பங்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

அவசர உதவிகளுக்கான தொடர்பு எண்கள்:

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அவசர உதவிகளுக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை தெரிவித்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினையில் சிக்கினால்..?

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அங்கு சரியான வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படாமல் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் அதுகுறித்து அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். மறுவாழ்வுத்துறை அலுவலக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு இந்த புகாரை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.

தூதரக அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி பிரச்சினையில் சிக்கியுள்ள நபரை மீட்டு அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய சம்பளம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

நேரடியாக மறுவாழ்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தவிர, மத்திய அரசு நிறுவனமான புரொடெக்டர் ஆஃப் எமிக்ரண்ட்ஸ் (குடியேறியவர்களின் பாதுகாப்பு அலுவலர் சென்னையில் அசோக் நகரில் உள்ளது) எனும் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். இந்த அலுவலருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களை கவனிப்பதுடன் தனியார் ஏஜண்டுகளை கண்காணிக்கும் அதிகாரமும் உண்டு.

ஏழை இளைஞர்களை பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஏஜண்டுகள் மீதும் இந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், வெளிநாட்டில் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்திய பிரஜைகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்க உதவி செய்வார்கள்.

ஏஜென்ஸி உண்மையானதா?

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய அந்த ஏஜென்ஸியின் பெயர் www.moia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பெயர் இருந்தால் அந்த ஏஜென்ஸி மூலம் வேலைக்கு செல்லலாம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

இளைய தலைமுறை ஹீரோ 'ஆப்பிள்'



ஸ்டீவ் ஜாப்ஸ் என்றொரு மனிதர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் கேட்ஜெட்ஸ் விரும்பிகளை பித்து பிடிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு விதம். இளந் தலைமுறையினரின் நாடி பிடித்து, அவர்களின் ரசனை அறிந்து வடிவமைப்பதில் இந்நிறுவனத்துக்கு நிகர் யாரும் இல்லை. ஆம் ஆப்பிள் என்ற சொல் உருவாக்கியுள்ள பிம்பம் அழகானது, தனித்துவமானது, நம்பிக்கையானது எல்லாவற்றையும் தாண்டி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தைத் தொடுவது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.

நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.

இத்தனைக்கும் ஆப்பிள் புதிதாக எதையும் உருவாக்குவதில்லை. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளவற்றை தனது தொழில்நுட்பத்தால் மிக சிறப் புடையதாக்குகிறது.

இந்த நிறுவனத்திடம் அசைக்க முடியாத, எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த கணிப்பு உள்ளது. இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம் என்கின்றனர் தொழில்நுட்ப உலகினர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தி பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தங்களது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஐந்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

ஐ போன் 6 எஸ், ஐ போன் 6 எஸ் பிளஸ், ஐ-பாட் புரோ, ஆப்பிள் டிவி உள்ளிட்ட தயாரிப்புகளை வெளியிடுகிறது. இதற்கிடையே ஐ-பாட் புரோ-வுக்கு துணைக் கருவியாக ஆப்பிள் பென்சிலையும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வரிசைகள் மற்றும் ஐ பாட் வரிசைகளைத் தாண்டி, அந்த நிறுவனம் பிற துறைகளில் மேற்கொண்டு வரும் தயாரிப்புகளும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன.

ஆப்பிள் வாட்ச் போன்றவை அந்த வகையில் வெற்றி பெற்றதுதான். அதுபோல தற்போது வெளியிட உள்ள ஆப்பிள் பென்சிலும் ஐ- பாட் மற்றும் ஐ-ஓஎஸ் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்கிறது தொழில்நுட்ப உலகம்.

புதிதாக வெளியிட உள்ள ஐ-பாட் புரோவின் சைஸ் சற்றே பெரியது. இதன் துணைக் கருவியாகத்தான் ஆப்பிள் பென்சில் வருகிறது. இந்த வெளியீடு மூலம் மைக்ரோசாப்ட் சர்பேஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி வரிசை விற்பனையில் ஆப்பிள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

தொழில் முறையிலான கலைஞர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்களுக்கு ஆப்பிள் பென்சில் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். கிட்டத்தட்ட புதிய வாசலை இது திறந்துள்ளது. தவிர வேலை திட்டங்களை எளிமையாக ஐ-பாடில் எழுதி சேமித்துக் கொள்ளவும் செய்யலாம். அதாவது காகிதத்தில் பென்சிலைக் கொண்டு எழுதுவது, வரைவது போல ஆப்பிள் பென்சில் கொண்டு ஐ பாடிலேயே வடிவமைப்பு வேலைகளைச் செய்து கொள்ளலாம்.

பெருவாரியான கலைஞர்கள் இப்போதே இந்த பென்சிலை வரவேற்கத் தொடங்கி விட்டனர். ஆப்பிள் தயாரிப்புகள் நம்பகமானவை மற்றும் தரமானவை என்கிற பார்வை மக்களுக்கு எப்போதும் இருக்கச் செய்கிறது. அதன் இதர தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பை போல ஆப்பிள் பென்சிலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

ஆப்பிள் பென்சில்

பாய்ண்டட் நிப் பென்சிலைப் போலவே வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியாக இருக்கிறது ஆப்பிள் பென்சில். இதன் முனையிலுள்ள சென்சார்கள் மிகக் கூர்மையான வடிவில் உள்ளன. மெலிதான கோடுகள் அல்லது பட்டையான கோடுகளையும் இதன் மூலம் வரையலாம். ஆப்பிள் பென்சிலைப் பயன்படுத்துவது ஓவியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதுவரை விரல்களுக்குள் உலகத்தை அடக்கிய தொழில்நுட்பம், இனி அதற்கு எந்த வேலையுமில்லை என்பதை ஆப்பிள் பென்சில் மூலம் நிரூபிக்க தயாராகிறது.

ஒரு முறை சார்ஜர் ஏற்றினால் 12 மணி நேரம் பயன்படுத்தலாம். முக்கியமாக ஆப்பிள் பென்சில் 30 நிமிடங்கள் செயல்படுவதற்கான மின்சக்தியை 15 விநாடிகளில் எடுத்துக் கொள்கிறது. பென்சிலின் மேற்புறத்தில் சார்ஜர் கனெக்டர் உள்ளது. இது காந்த சக்தி மூடி மூலம் மூடப்பட்டுள்ளது. ஐபாட், மற்றும் ஐபாட் பிளஸ் மூலமாகவும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

ஐபாட் பென்சிலை தற்போது ஐபாட் புரோவில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு விநாடிக்கு 240 முறை சிக்னல் பெறுகிறது. இது இரண்டும் ப்ளூடூத் மூலம் இணைகிறது.

ஐபாட் புரோ

தற்போது கொண்டுவர உள்ள ஐ-பாட் புரோ குறித்து தொழில்நுட்ப வாடிக்கையாளர்கள் குறிப்பிடும்போது; ஆப்பிள் மேக் புக் வடிவில் ஒரு ஐ-பாட் என்கின்றனர்.

32.8 செமீ திரை, 2732*2048 ரெசலூஷன் கொண்டுள்ளது. ஆப்பிள் 13 அங்குல மேக் புக்கைவிட 1 செமீ அளவே சிறியதாக உள்ளது. தவிர ஐ-பாட் புரோவை பார்த்த மாத்திரத்திலேயே இதர ஐபாட் மாடல்களிலிருந்து பிரித்து பார்த்துவிட முடியும்.

ஏற்கெனவே உள்ள மாடல்களில் உள்ளது போலவே டச் ஐடி ஹோம், பவர் மற்றும் இதர பட்டன்கள் இருந்தாலும், புரோ வை தனித்துக் காட்டுகிறது அதன் ஸ்பீக்கர்கள். இதர டேப்ெலட் கணினி தயாரிப்பாளர்கள் இதுவரை தவற விட்ட இடம் இது. இரண்டு பக்கமும் ஸ்பீக்கர்கள் உள்ளன. ஸ்பீக்கர்களை ஸ்வைப் செய்து கொள்ளலாம். ஹெட்போன் இல்லாமல் பாடல்களை கேட்கும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாகியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் மாடலை வெளியிட்டபோது அதன் உப கருவியாக சர்பேஸ் பேனாவையும் கொண்டு வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறவில்லை. விளம்பரம் மற்றும் வெளிப்படுத்தும் தன்மையில் மைக்ரோசாப்ட் கோட்டை விட்டது. மைக்ரோசாப்ட் செய்த தவறு சர்பேஸ் பேனா ஸ்கீரினில் பயன்படுத்த மட்டுமே என வெளிப்படுத்தியதுதான்.

இப்போது மீண்டும் நாம் அறிய வருவது இதுதான்: ஆப்பிள் புதிதாக எதையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்வது. ஆப்பிள் பென்சில் மற்றும் ஐபாட் புரோ இணையர்கள் ஸ்டோர்களில் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளன. ஆப்பிளின் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெற்றே வந்திருக்கிறது. ஏனென்றால் அது இளைஞர்களை பிடித்தாட்டுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இளந்தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையுமே கவர்ந்து இழுக்கிறது.

நேர்த்தியான வடிவமைப்பும், போட்டி நிறுவனங்களை ஓரங்கட்டும் தொழில்நுட்பமும் சேர்ந்து ஆப்பிளை உலகின் முதல்தரமான தொழில்நுட்ப நிறுவனமாக வளர்த்துள்ளது.

மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி


Return to frontpage


டாக்டர். ஆர். கார்த்திகேயன்


நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

கூடுதலாக செலுத்திய வரி 10 நாளில் திருப்பி வழங்கப்படும்: வருமான வரித்துறை நடவடிக்கை



கூடுதலாக செலுத்திய வரியை 7 முதல் 10 நாட்களுக்கு திருப்பி கொடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆதார் அட்டை அல்லது இதர வங்கி தகவல்கள் மூலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டிருப்பதால் எளிதாக திருப்பி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

முன்பெல்லாம் அதிகம் செலுத்திய வரியை திரும்ப வாங்குவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு நீண்ட காலம் ஆனது. சிலருக்கு சில மாதங்களில் திரும்ப கிடைத்தது. பலருக்கு சில வருடங்களுக்கு பிறகே கிடைத்தது.

எலெக்ட்ரானிக் முறையில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்பட்டிருப்பதால் திருப்பி கொடுப்பது எளிதாகி இருக்கிறது. கூடுதலாக பெறப்பட்ட வரி, குறைந்தபட்சம் ஒரு வாரமும், அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளும் திருப்பிக்கொடுக்கப்படும். இந்திய வரி நிர்வாகத்தில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சமீபத்திய தகவல்களின் படி 2.06 கோடி வருமான வரித்தாக்கல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வந்திருக்கின்றன கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஆன்லைன் மூலம் வரிதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 1.63 கோடி வருமான வரி தாக்கல் மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

செப்டம்பர் 7 வரை 45.18 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 22.14 லட்சம் விண்ணப்பங்களுக்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டது.

பெரும் பாலான வரி செலுத்தியவர்களிடம் விசாரித்த போது 11 முதல் 13 நாட்களில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி திரும்ப கிடைத்தது என்று தெரிவித்தனர்.

புதிய தொழில்நுட்பம் மூலம் வரிசெலுத்துபவர்களுக்கான சேவையில் மனித தலையீடு இல்லாமல் நேரடியாக நடக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதன் மூலம் விண்ணப் பங்களை வேகமாக பரிசீலனை செய்யலாம்.

பணத்தையும் வேகமாக திருப்பி கொடுக்க முடியும் என்று வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்தார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...