Tuesday, October 27, 2015

தீர்வு இதுவல்ல!


Dinamani

தீர்வு இதுவல்ல!


By ஆசிரியர்

First Published : 27 October 2015 01:26 AM IST


மத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார்.
÷இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.
÷நேர்முகத் தேர்வு நடத்துவதால் ஊழல் நடக்கிறது. வேலை வாங்கித் தருவதாக ஏழை மக்களிடம் லஞ்சம் பெறப்படுகிறது. சில நேரங்களில் லஞ்சம் கொடுத்தும் வேலை கிடைக்காமல் ஏழைகள் ஏமாந்து போகிறார்கள் என்பதுதான் இந்த முடிவுக்கான காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுவது உண்மைதான் என்றாலும், நேர்முகத் தேர்வை ரத்து செய்வது என்பது ஊழல் ஒழிப்புக்கு ஒரு தீர்வாக இருக்காது.
÷மத்திய அரசுப் பணிகளில் சுமார் 36 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 95% பேர் குரூப்-பி, சி, டி வகைகளில் சேர்ந்தவர்கள். அதாவது "நான்-கெசட்டெட்' ஆஃபீஸர்ஸ் அனைவரும் இந்த வகைக்குள் வந்துவிடுகின்றனர். இந்தப் பணியிடங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் ஓய்வு பெறுவதும், புதிய நியமனங்கள் நடைபெறுவதும் வாடிக்கையான வழக்கம்.
÷தற்போது பிரதமர் அறிவித்துள்ளதைப்போல, இந்தப் பணியிடங்களுக்கு நேர்காணல் இல்லாமல் வெறும் விண்ணப்பம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் தரும் பதிவுமூப்புப் பட்டியல் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டால், உரிய ஆற்றல் இல்லாதவர்கள் தேர்வாகும் வாய்ப்பு மிகவும் அதிகரித்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடு மேலும் பாதிக்கும்.
÷பிரதமர் குறிப்பிடுவது போல இந்த நடைமுறையால் ஊழல் அகன்றுவிடும் என்பதும் உறுதியில்லை. தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியாதல், விடைத்தாள் மாற்றி வைத்தல் போன்ற ஊழல்கள் நடக்கும் இன்றைய சூழலில், விண்ணப்பத்தைக் கையாளுவோருக்கும், வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களுக்கும் பணம் கொடுத்துத் தங்கள் பெயரை முன்னுரிமை கிடைக்கச் செய்வது கடினம் ஒன்றும் அல்ல. ஆகவே, இதன்மூலம் ஊழலை ஒழித்துவிட இயலாது.
÷ஹரியாணா அரசு செய்திருப்பதைப்போல, நேர்காணலுக்கு மதிப்பெண் இல்லாதபடி செய்தல் அல்லது அந்த மதிப்பெண் மிகக் குறைந்த அளவே இருக்கும்படி செய்யலாமே தவிர, நேர்காணலே கூடாது என்று சொல்வது அரசுப் பணியில் தகுதியற்றவர்களும் போலிகளும் உள்ளே புகுந்து, அரசு இயந்திரத்தை நாசப்படுத்திவிட வழிவகுக்கும்.
÷சாதாரண கடைநிலை ஊழியர்களான, அலுவலக ஏவலர்கள் (ப்யூன்), துப்புரவுத் தொழிலாளர்கள் (ஸ்வீப்பர்) போன்ற பணிகளுக்கு அந்தந்த அலுவலக உயர்அலுவலர்களே பணி நியமனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, அவர்கள் அந்த நியமனத்தைக்கூட, ஒரு முறை நேரில் பார்த்த பிறகுதான் முடிவு எடுக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வயது இளமையாக இருந்தாலும், நடைமுறையில் அவர்கள் உடல்வலிமையுடன் இருக்கிறார்களா, இந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, பேச்சும், உடல்மொழியும் அடுத்தவரின் உணர்வைப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறதா என அறிந்து கொள்வதற்காகத்தான் அந்த வாய்ப்பை நேர்காணல் வழங்குகிறது. ஊழியரின் பொதுஅறிவைச் சோதிப்பதற்காக மட்டுமே அல்ல நேர்காணல்.
÷ஒரு பணிக்கு குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி மட்டுமே போதும் அல்லது தகுதித் தேர்வில் அவர் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது; அவரை அப்படியே பணிக்கு வந்து சேரச் செய்யலாம் என்றால், போலிகள் உள்ளே புகுவதில் வெற்றி பெறுவார்கள். இப்போது உடல்தகுதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைக் கூட லஞ்சம் கொடுத்தால் கிடைத்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. அதனால் குறைந்தபட்சம் நேர்காணலுக்கு மதிப்பெண் ஏதும் இல்லாமலேகூட ஒரு முறை அவர்களது திறமையைச் சோதிக்கும் நடைமுறை கட்டாயம் தேவை.
÷நேர்காணல் குழு உறுப்பினர்கள் ஊழல் செய்கிறார்கள் என்றால், நேர்காணல் குழுவை ஒரு நாள் முன்னதாக, பல்வேறு அரசுத் துறை, பொதுத் துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்டு திடீரென அமைத்து, நேர்காணல் நடத்தினால் இடைத்தரகர்களின் செயல்பாட்டை முடக்க முடியும். பள்ளித் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியின்போது அவற்றுக்கு மாற்று எண்கள் கொடுத்து, எந்த ஊர், எந்தப் பள்ளி, எந்த மாணவன் என்று தெரியாதபடி விடைத்தாள் திருத்தச் செய்வதுபோல, நேர்காணல் நடத்தும் குழுவையும் திடீரென்று நியமித்து ஊழலை ஓரளவு தவிர்க்கலாம்.
÷நேர்காணல் குழு ஊழல் செய்கிறது, அவர்களை வைத்து இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள், மக்கள் ஏமாறுகிறார்கள் என்பதற்காக நேர்காணல் இல்லாமல் செய்வதன் மூலம் திறமை இல்லாதவர்கள் அரசுப் பணியில் நியமிக்கப்படும் அபாயம் அதிகரிக்கும்.
÷ மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற "வியாபம்' பணியிட நியமன, மருத்துவக் கல்லூரி அனுமதி ஊழல் எதிரொலிதான் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு காரணம் என்று தோன்றுகிறது. ஊழலை ஒழிப்பதில் அவருக்கு இருக்கும் முனைப்பை பாராட்டும் அதேவேளையில், அதற்கு அவர் கையாள நினைக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்யும் முடிவு சரியானதல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
÷நேர்காணல் இல்லாமல் செய்வதால், ஊழல் குறையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால், அரசு இயந்திரத்தின் செயல்திறன் குறைந்துபோகும் என்பது சர்வ நிச்சயம்.

திருவாரூர் ஆழித் தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் By திருவாரூர், First Published : 27 October 2015 12:14 AM IST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழித் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித் தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோó பீடத்தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோó கம்பீரமாக அசைந்து வருவதைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தாóகள் வருவார்கள்.
கடந்த 16.7.2010 அன்று நடைபெற்ற ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தேர் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு, 2.8.2010 முதல் தேர் பிரிக்கும் பணி தொடங்கி சில மாதங்களில் நிறைவடைந்தது. பின்னர், புதுத்தேர் கட்டும் பணி சுமார் ஓராண்டுக்கு பிறகு தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை திங்கள்கிழமை ஆழித் தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட விழா நடத்த தீர்மானித்தது.
அதன்படி, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,பிரவேச பலி, ம்ருத்சஹ்கிரஹணம், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரஷ்பந்தனம், 6 மணிக்கு முதல்கால யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தேர் வெள்ளோட்டம்: திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9 மணிக்கு பூர்ணஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, காலை 9.20 மணியளவில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. பின்னர் 9.30 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, பக்தர்கள் "ஆரூரா, தியாகேசா' என பக்தி கோஷம் எழுப்பினர். பிரமாண்ட தோற்றத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வந்தக் காட்சி பிரமிக்க வைத்தது. தேருக்கு முன்னால் சிவபக்தர்கள் தேவாரப் பாடல்கள் பாடிச் சென்றனர். இசை வாத்தியங்கள் முழங்க ஆழித் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
தேரடியிலிருந்து தியாகராஜர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பாதுகாப்பு பணியில் காவல் துறை, தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். சுப்ரமணியர் தேர் நான்கு வீதிகளையும் 5 மணி 45 நிமிடங்கள் சுற்றி விட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல், ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் ஏழரை மணி நேரம் சுற்றிவிட்டு, மாலை 5 மணிக்கு தேரடி நிலைக்கு வந்தடைந்தது. தேர்களை தள்ளும் பணியில் 3 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
தேரோட்ட தேதி அறிவிப்பு எப்போது?
தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதற்கு பிறகு பழையத் தேர் பிரிக்கப்பட்டு, தற்போது ரூ. 2.18 கோடியில் புதியத் தேர் வடிவமைக்கப்பட்டு, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதனால், பல ஆண்டுகளாக ஆடி அசைந்தாடும் திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண முடியாத ஏக்கத்தில் இருந்த பக்தர்களுக்கு விரைவில் ஆழித்தேரோட்டத்தை காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளோட்டம் விடப்பட்டுள்ள நிலையில், தேரோட்டம் நடைபெறும் தேதி இதுவரை தொடர்புடைய துறை அறிவிக்காததால், அந்த அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பக்தர்கள்.
ரூ. 45 லட்சத்தில் உருவான சுப்பிரமணியர் தேர்
திருவாரூர் தியாகராஜர் கோயில் சுப்பிரமணியர் தேர் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் ரூ. 45 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 18 அடி. ஆழித்தேரை போல் ஐந்து அடுக்குகளை கொண்ட இத்தேரின் முதல் அடுக்கில் 99 சிற்பங்கள், இரண்டாம் அடுக்கில் 95 சிற்பங்கள், மூன்றாம் அடுக்கில் 105 சிற்பங்கள் என மொத்தம் 299 சிற்பங்கள் உள்ளன.
மூன்றடுக்குக்கு மேல் தேவாசனம், சிம்மாசனம் உள்ளது. தேரைச் சுற்றிலும் 126 பித்தளை மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
2000-க்கும் மேற்பட்ட கன அடி இலுப்பை மரங்கள், இரண்டு டன் அளவுக்கு இரும்பு பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்

சென்னை,

பதிவு செய்த நாள்:
செவ்வாய், அக்டோபர் 27,2015, 12:16 AM IST


சென்னையில் நேற்று பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்.

சென்னையில் நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று பகல் 2.40 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. அது 7.5 ரிக்டர் அளவு என்று பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அருகே உள்ள வடஇந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலும் பல இடங்களில் உணரப்பட்டது.

நந்தனம், பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தகவல்தொழில்நுட்ப அலுவலகம்

கோடம்பாக்கத்தில் உள்ள 9 மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில் 600–க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். நேற்று மதியம் 2.40 மணிக்கு திடீர் என்று அந்த கட்டிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நில அதிர்வை உணர்ந்தனர். உடனே அங்கு வேலையில் இருந்த ஏராளமானவர்கள் பதறியபடி வேகமாக கீழே இறங்கிவந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு நில அதிர்வு ஏற்பட்டதை கூறி, தாங்கள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். 30 நிமிடங்கள் கீழேயே நின்ற அவர்கள், பின்னர் அலுவலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை தொடங்கினார்கள்.

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம், நந்தனம், கோயம்பேடு, அம்பத்தூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள், ஊழியர்களும் இதனை உணர்ந்தனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் தான் இந்த அதிர்வை அதிகம் உணர முடிந்தது.

பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் இயக்கிக்கொண்டிருந்தேன். பகல் 2.45 மணி அளவில் நான் உட்கார்ந்து இருந்த நாற்காலியை யாரோ தள்ளிவிடுவது போல இருந்தது. பிறகுதான் அது நில அதிர்வு என்பதை உணர்ந்து கீழே இறங்கினேன். அதுபோல எங்கள் குடியிருப்பில் உள்ள ஏராளமானவர்கள் கீழே இறங்கி வந்தனர் என்றார்.

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியது தியாகராயநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்..daily thanthi



சென்னை,

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியுள்ளது. தியாகராயநகரில் விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையன்று மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக ‘போனஸ்’ வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இயல்பானது. தீபாவளி பண்டிகையின்போது உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.அங்காடித் தெரு

அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், சென்னையில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

சென்னை நகரின் முக்கிய வணிகதளமாக விளங்கும் தியாகராய நகர் பகுதியில் நேற்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் உள்பட பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை தியாகராய நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக அங்காடித்தெரு என்று அழைக்கப்படும் ரெங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாகவே காட்சியளித்தது.மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், தியாகராயநகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் இயல்பான நாட்களை விடவும் அதிகமாக காணப்பட்டது.

பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு தள்ளுபடியில் மக்கள் வாங்கிச்சென்றனர். மேலும், நேற்று விடுமுறை தினம் என்பதால், தீபாவளி பொருட்கள் வாங்க வருவோர்களின் எண்ணிக்கை வழக்கமாக வரும் கூட்டத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதிநவீன கேமரா

கூட்டநெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திருட்டு–வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபடும் ஆசாமிகளை கண்காணிப்பதற்காக தியாகராய நகர், பாண்டி பஜார், வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 70 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பாண்டி பஜார் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. மற்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பைனாக்குலர் மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பாதுகாப்பு ஏற்பாடுகளை தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் மாம்பலம் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர். தீபாவளி பொருட்கள் வாங்க வரும் மக்கள் சுமுகமாக நடந்து செல்லும் வகையில் ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிய கடைகளின் வெளியே இருந்த சுமார் 500–க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை பாதுகாப்பு கருதி போலீசார் நேற்று அகற்றினார்கள்.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த 100 போலீசார் மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த 50 போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பண்டிகை நெருங்கும் சமயத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாபாரிகள் மகிழ்ச்சி

தியாகராயநகர் பகுதியை போன்று புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

பொதுமக்களின் வருகை அதிகரித்து வருவதையடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பொருட்கள் வாங்க வந்தவர்களை விடவும் அதிக மக்கள் கூட்டம் நவம்பர் 1–ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

வேலை வாய்ப்பில் ஊழலுக்கு இடம் இல்லை

logo

பிரதமரோ, முதல்–அமைச்சரோ, சுதந்திர தினத்தன்று ஒரு அறிவிப்பை பிரகடனப்படுத்தினால், அது பரிசீலனை என்ற எல்லையைத்தாண்டி, நிறைவேற்றப்படுவதற்கு தயாராக இருக்கிறது என்ற உறுதி மக்களிடம் இருக்கும். அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தன் உரையின்போது, இளைஞர் சமுதாயத்துக்கு குறிப்பாக வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித்தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை, உற்சாகம் ஊட்டும் சில முடிவுகளை அறிவித்தார். ‘‘நாட்டில் ஊழல் இருக்கும் இடங்களில் ஒரு இடம் வேலைவாய்ப்புதான். ஏழைகளிலும் ஏழையான பரம ஏழை தன் மகனுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று தணியாத ஆசைகொண்டு இருக்கிறார். இளைய சமுதாயத்தினர் ரெயில்வேயிலோ, ஆசிரியருக்கோ, பியூன், டிரைவர் போன்று எந்த வேலைக்காகவும் இண்டர்வியூ கார்டு வந்துவிட்டால், யாரை ரெக்கமண்டேஷன் அதாவது, பரிந்துரைக்காக அணுகலாம்? என்று யோசிக்கத்தொடங்கிவிடுவார்கள். அந்த இளைஞரின் விதவைத் தாய்கூட இந்த வேலைக்காக யாரிடம் பரிந்துரைக்கு செல்லலாம்? என்று குழம்புவார். ஏனெனில், நாட்டில் நியாயமும், அநியாயமும் திறமை அடிப்படையில் இல்லாமல், இண்டர்வியூ அடிப்படையில்தான் முடிவாகிறது. இண்டர்வியூவில் தோல்வி அடைந்துவிட்டாய் என்று எளிதாக கூறிவிடுகிறார்கள். ஓரிரு நிமிடங்கள் இண்டர்வியூ நடத்தி ஒருவரை மதிப்பீடு செய்யும் திறன் படைத்த மனோதத்துவ நிபுணரைக்கூட நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஒரு ஏழை தாயின் மகனோ, மிகச்சிறிய வேலையைத்தேடும் குறைவான படிப்புள்ளவர்களோ இதுபோல இண்டர்வியூவுக்கு செல்லவேண்டுமா?, இணையதளத்தில் தாக்கல் செய்யப்படும் மார்க்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யமுடியாதா?, உடல்தகுதி தேவைப்படும் பதவிகளுக்கு தனிவழி முறைகள் தேவைதான். ஆளுமை மற்றும் தோற்றம் தேவைப்படும் பதவிகளுக்கு இண்டர்வியூ தேவைதான். இளநிலை பதவிகளுக்காக நேர்காணல் தேர்வுகளை விரைவில் நிறுத்திவிட்டு, திறமை அடிப்படையில் வேலைவழங்குமாறு மாநில அரசுகளையும், மத்திய அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் ஊழலை ஒழிக்க உதவும்’’ என்று முழங்கினார்.

தான் சொன்னதை நிறைவேற்றும் வகையில், மாதந்தோறும் ‘மனதின் குரல்’ என்று வானொலியில் பேசும் உரையில் நேற்று முன்தினம் உரையாற்றும்போது, மத்திய அரசாங்க பணிகளில் ‘கெஜட்டெட்’ பதவிகள் தவிர, மற்ற அனைத்து வகையான டி, சி, பி, பிரிவு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இது வருகிற 2016–ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விண்ணப்பதாரர்களை நேரில் பார்க்காமல் தேர்ந்தெடுப்பதில் சில குறைபாடுகள் இருந்தாலும், இனி மத்திய அரசாங்கத்தில் திறமை உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் வேலைகிடைக்கும். லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் போட்ட பணத்தை எடுக்க முதல்நாளில் இருந்தே லஞ்சம் வாங்கத்தொடங்கிவிடுவார்கள். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு வேலை என்று இருக்கும் நிலையில் திறமைக்கு நிச்சயமாக இடம் இருக்காது. ‘‘எதிலும் நேர்மை, எங்கும் நேர்மை’’ என்ற பாதையின் கதவு லஞ்சம் இல்லாத தேர்வுதான். இந்த முறையை உடனடியாக மாநில அரசுகளும் பின்பற்றவேண்டும். இதுமட்டுமல்லாமல், இண்டர்வியூவில் கலந்துகொள்பவர்களுக்கு அவர்களின் விடைத்தாள் நகலையும் கொடுக்கும் முறைவேண்டும். இதன்மூலம் வேலை கிடைக்காதவர்களும் தாங்கள் எந்த இடத்தில் தவறியிருக்கிறோம் என்று பார்த்து அடுத்தமுறை தவறாமல் இருக்க பாடம் புகட்டும்.

Monday, October 26, 2015

பழக பழகத்தான் பிடிக்கும்............தினகரன்



நன்றி குங்குமம் டாக்டர்

சுகர் ஸ்மார்ட் தாஸ்

வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் லிஃப்ட் வேலை செய்யவில்லை. நாம்தான் படி ஏறி செல்ல வேண்டும்... ஒவ்வொரு படியாக!- ஜோ ஜிரார்ட் (அமெரிக்க விற்பனையாளர் / கின்னஸ் சாதனையாளர்)

வயிற்றுப் பகுதியில் அதிக எடையை ஆசையோடு வைத்திருக்கும் ஆப்பிள் வடிவ நபர்களும், இடுப்பில் அதிக சுற்றளவை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பேரிக்காய் வடிவ நபர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான்... எடையோடு வடிவமும் சேர்ந்து வினையாற்றும் என்பதால், சராசரி வடிவத்துக்கு மாற வேண்டியது முழுமுதல் கட்டாயம்.சரி... டயட்டில் இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள்.

அப்போது உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் எப்படி மாறுகின்றன?

ஒருவித கையறு நிலையை உணர்கிறீர்களோ? எல்லோரும் பிரமாதமான உணவு வகைகளை இஷ்டம் போல வெட்டும்போது, நாம் மட்டும் ஏன் இப்படி பட்டினியும் பத்தியமுமாகக் கிடக்கிறோம் எனத் தோன்றுகிறதோ? இந்த தாழ்வு மனப்பான்மையே அதிகமாக சாப்பிட வைத்து விடும்... நல்ல நிலைக்கு மாறுவதற்கு எதிரான முடிவை எடுக்கச் செய்து விடும்... ஜாக்கிரதை! இப்படிச் சொல்லிப் பார்க்கலாமே... ‘நான் ஹெல்த்தியான லைஃப்ஸ்டைலுக்குள் நுழைகிறேன். விரைவிலேயே பொருத்தமான உடல் நலத்துடன், ஸ்லிம் ஆக, ஆற்றல் மிக்கவராக ஆகப் போகிறேன்!’

எந்த ஒரு எடை குறைப்புத் திட்டத்துக்கும் பின்னடைவாக இருப்பது ஊக்கக் குறைவுதான். நம் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நாமே நம்பத் தொடங்கும் போதுதான், அந்தச் செயலில் இயல்பூக்கம் உருவாகும்.

அப்படியானால் நம் மனத்திண்மையை எப்படி மேம்படுத்துவது?

எது முக்கியம் என முடிவெடுங்கள் தோற்றம், உடல் நலம், குடும்பம், சமூகத்தில் நன்மதிப்பு... இவையெல்லாம் முக்கியமா என நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் வேண்டும் என முடிவெடுத்தாலே, அதை அடைவது எளிதாகி விடும். ஒரு பழத்துண்டுக்கும் ஒரு சாக்லெட்டுக்கும் இடையேயான ஒரு சாய்ஸ் உங்கள் கையில் உள்ளது. சில நொடி சபலங்களைத் தாண்டி, புத்திசாலித்தனமாக முடிவெடுக்க நம்மால் நிச்சயம் முடியும்!

ஹெல்த்தியாக சிந்தித்தால் ஹெல்த்தியாக மாறலாம்

நம்மை ஆற்றல்மிக்க ஆரோக்கிய மனிதராக நினைக்கத் தொடங்குவது அவசியம். அதுவே அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்பதற்கு வழிகாட்டும். நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது ஜீரா வழியும் ஜிலேபியால் நம்மை வென்று விட
முடியாது. அந்த வெற்றியை ஆப்பிளுக்கு வேண்டுமானால் வழங்கலாம்!

சுறுசுறுப்பாக நடை போடுவோம்

முகத்தில் புன்னகையோடு நிமிர்ந்த நெஞ்சோடு, எப்போதும் தன்னம்பிக்கை கொண்டு, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வோமே. இது பழகப் பழக இனிதாகும். ஆம்... ஹெல்த்தியான வாழ்க்கை முறையும் பழகப் பழகத்தான் பிடிக்கும்!

எதிர் சிந்தனையை எகிறச் செய்வோம் அவ்வப்போது எதிர் எண்ணங்கள், தன்னம்பிக்கையைக் குறைக்கும் சிந்தனைகள் தோன்றக்கூடும். மண்டைக்குள் ‘எப்படி இருந்தே நீ... இப்போ இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா?’என்றெல்லாம் குரல்கள் இழுக்கும். ‘வா வா வா’ என வம்புக்கு இழுத்து, கடத்திப் போய் கிட்னி திருடும் வடிவேலு பட காமெடி போன்றதுதான் அது. அதற்கெல்லாம் செவி சாயக்க வேண்டியதே இல்லை.

உதாரணமாக... நாம் சாப்பிட வேண்டிய அளவு முடிந்த பிறகும், அதன் சுவை ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடேன்’ என ஆசை காட்டும். அந்த ஆசைக்கு மயங்கினால், நம்மை நாமே தண்டிப்பதாகத்தானே அர்த்தம். ஆகவே, ‘நோ தேங்க்ஸ்’ சொல்லி, அவ்விடம் விட்டு அகன்று விட வேண்டும் அக்கணமே. இதுபோன்ற எதிர் எண்ணங்களும் சுய பச்சாதாபங்களும் நம்மை பின்னடைவுக்குள் தள்ளிவிடும் என்பதை மறக்க வேண்டாம். எதிர் எண்ணங்களுக்கு எதிரான எண்ணங்களை அதற்குப் பதிலாகக் கூறி, அதை ஓட ஓட விரட்டுவோம். நல்ல சாய்ஸ் நம் சாய்ஸ் என்கிற நிலையில் நெகட்டிவ் எண்ணங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. அவை தொலையட்டும்!

மற்றவர்களையும் வண்டியில் ஏற்றுவோம் தனக்கு நீரிழிவு இருக்கிறது என்கிற விஷயத்தைக்கூட ரகசியமாக வைத்திருக்கிற நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இது ஒரு மோசமான நிலை. இந்த விஷயத்தை வெளியில் சொல்லாத போது, ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்பியோ, விரும்பாமலோ அதிக அளவில் சாப்பிடும் நிலை ஏற்படும். ‘சுகர் இல்லாத காபி’ என்று கேட்டு வாங்கக்கூட கூச்சப்படுகிறவர்களை நாம் பார்க்கிறோம். ஹோட்டலில் தவறுதலாக சுகர் சேர்க்கப்பட்ட காபி அளிக்கப்பட்டாலும் கூட, அதை மாற்றித்தரும் படி கேட்காமல், அப்படியே பருகுபவர்கள் பலர் உண்டு.

அதற்கு அவர்கள் கூறும் காரணம்... ‘பரவாயில்லை’. நம் உடல் நம் உணவு நம் உரிமை. இதில் ‘பரவாயில்லை’ என்ற விட்டுக் கொடுத்தலுக்கு அவசியமே இல்லை. ஆதலால், உணவு விஷயத்தில் எந்த இடத்திலும் தயக்கமே வேண்டாம். ‘இதுதான் வேண்டும்... இப்படித்தான் வேண்டும்’ என உறுதியாகக் கேட்டு வாங்கியே சாப்பிடலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டிலும் அப்படித்தான். நாமே உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் அக்கறை காட்டாத போது, வீட்டில் உள்ளவர்களும் காலப்போக்கில் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இதன் முக்கியத்துவமும் புரியாமல் போகும். அதன் பிறகுநாம் தனிமைப்படுத்தப்படுவோம். நீரிழிவு கட்டுப்பாடு கையை விட்டுப் போய் விடும். நாம் தினசரி வாழ்வில் எடுக்கிற சிறுசிறு முடிவுகள் கூட, நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றி அமைக்கிற பணியைச் செய்யும். இதில் நம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இயல்பாக ஈடுபடுத்தும் போது, நம் பணி எளிதாகி விடும். அதோடு, அறிந்தோ அறியாமலோ அவர்களும் ஆரோக்கிய கப்பலில் ஏறி நம்மோடு பயணிப்பார்கள். நம்முடைய திட்டத்தில் பலவித சமூக, கலாசார காரணிகள் தடங்கல் விளைவிக்கக் கூடும். இருப்பினும், நம் உறுதியும் குடும்பத்தினரின் ஆதரவும் இருக்கும் போது, இந்தப் பயணம் நிச்சயம் இனிமையாகவே அமையும்!

ஸ்வீட் டேட்டா

உலக நீரிழிவாளர்களில் 46.3 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு நீரிழிவு இருப்பதே தெரியாது!

(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)

பிச்சை தராவிடினும் நன்றே..தினகரன்


உத்தரப் பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில், ரூ.100 பிச்சை தராததால், ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரன், சம்பந்தப்பட்டவரை இழுத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து இருவரது உயிரையும் அநியாயமாக பறிபோகச் செய்துள்ளான். பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம், ஏதோ கொடுத்து வைத்ததுபோன்று ரூ.10 கொடு, ரூ.20 கொடு என்று உரிமையோடு கேட்கிறார்கள். சாலையோர கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், சாப்பாடு வாங்கிக் கொடுக்கும்படி பலர் முன்னிலையில் வம்பு செய்கின்றனர். பிச்சைக்காரர்கள் சமூகத்துக்கு பாதிப்பு இல்லாமல் கோயில் குளங்களில் இருந்த காலம் மாறி இப்போது, அதையே ெதாழிலாக செய்யும் வாலிபர்களும் பெருகிவிட்டனர். எந்த வேலையும் இல்லாமல் குவியும் வருமானத்துக்காக அழுக்கு சட்டையுடன் பிச்சை எடுக்க கிளம்பி விடுகின்றனர். பிச்சைக் கொடுக்காதவர்கள் அல்லது, ஒரு ரூபாய், 2 ரூபாய் பிச்சை தருபவர்களை, ஜென்மத்துக்கு வெட்கி தலைகுனியும்படி பலர் முன்னிலையில் திட்ட ஆரம்பித்துவிடுகின்றனர்.

பிச்சை என்பதில் இருந்துதான் லஞ்சமே ஆரம்பம் ஆகின்றது என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து, மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும் என்று பல முறை நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. ஆனால், இன்னமும் கூட, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் பிச்சைக்காரர்களை சர்வசாதாரணமாக காண முடிகிறது. இதுபோன்ற பிச்சைக்காரர்களில் சிலர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். சாதாரணமானவர்களை காட்டிலும் இதுபோன்றவர்களால் எப்போதுமே அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம். உத்தரப் பிரதேசத்தில் அதுதான் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் என்ன செய்வார் என்ற ரீதியில் போலீசார் பேச ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், இறந்த நபரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்பதை இவர்கள் அறிவார்களா? ஒவ்வொரு வாரமும் பிச்சைக்காரர்களை பிடித்து மறுவாழ்வு இல்லங்களில் அடைக்க வேண்டும். இதுபோன்றவர்களை தொடர்ந்து பிடித்து வந்தால் மட்டுமே பயம் ஏற்படும். 6 மாதத்துக்கு ஒரு முறை நான்கைந்து பேரை பிடித்து கொண்டு செல்வதால் மட்டும் எந்த பயனும் ஏற்படாது. அதேபோல் இன்று முதல் பிச்சை தருவதில்லை என்று மக்களும் உறுதி ஏற்க வேண்டியது அவசியம்.

NEWS TODAY 25.01.2026