Sunday, November 8, 2015

உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு..

உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு..
vikatan.com

களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. விஸ்வரூபமாய் தொடரும் தலைமுறைகளை வென்ற தனி அவதாரம் கமல்.

முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!


'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு திசைக்குப் பயணப்பட்டது அதற்குப் பிறகுதான்!

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில்,பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் கமல் நடித்ததே இல்லை!

கமல் நடித்த படங்களைப் பாராட்டி பாலசந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் அழைப்பார்!

கமலின் தந்தை உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன், சந்திரஹாசன், கமல் மூவரும் சிதையின் அருகில் நிற்க, திரும்பிப் பார்த்த கமல் 'அண்ணா, நீங்களும் வாங்க' என இருவரை அழைத்தார். அவர்கள் ஆர்.சி.சக்தி, ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா. கதறித் துடித்தபடி அவர்களும் கொள்ளிவைத்தனர்!


ஃபிலிம்ஃபேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!

எண்பதுகளின் மத்தியில் 'மய்யம்' என்ற இலக்கியப் பத்திரிகையைக் கொஞ்ச காலம் நடத்தினார் கமல்!

எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!

ஆரம்பத்தில் 'சிவாலயா' என்ற நடனக் குழுவை ஆரம்பித்து நடத்தினார் கமல்.அதற்குப் பிறகுதான் நடன உதவியாளராக தங்கப்பனிடம் சேர்ந்தார்!

ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்'தான் கமலைத் தனிகதாநாயகனாக ஆக்கியது. ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்த படம்'பட்டாம்பூச்சி'!

'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்!


கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு, முற்றுப்பெறாத கனவுகளில் ஒன்று...'மருதநாயகம்'!

கடவுள் மறுப்புக்கொள்கையைக் கொண்டவர் என்றாலும், ஆத்திகத்தை கமல்விமர்சனம் செய்வதில்லை!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,பெங்காலி மொழிப் படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்!

தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல். சினிமாவில் இத்தகைய முன் மாதிரி இவர்தான்!

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர். ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா!

கமல், சாருஹாசன், சுஹாசினி என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள்!
 

'ராஜபார்வை' முதல் தம்பியுடன் இருந்து அலுவலகத்தைக் கவனிக்கிறார் அண்ணன் சந்திரஹாசன். கல்லாப்பெட்டி அவரது கவனத்தில்தான் இருக்கிறது!

ஏதோ மன வருத்தம்... சாருஹாசனும் கமலும் இப்போதும் பேசிக்கொள்வதுஇல்லை!

பிரசாத் ஸ்டுடியோவில் அகேலா கிரேன் இறக்குமதி ஆகியிருந்தது. அதை இரவோடு இரவாகச் சென்று பார்த்த முதல் நபர் கமல். பிறகுதான் பி.சி.ஸ்ரீராம் போன்றவர்கள் வந்து பார்த்தார்கள். தொழில்நுட்பத்தின் மீதுகொண்ட தீராத ஆர்வம்தான் காரணம்!

வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு இறந்துபோன நாய்க்காகக் கண்ணீர்விட்ட தருணங்களும் உண்டு!

'ஹே ராம்' படம் முதல் டைரக்ஷனாக வெளிவந்தாலும், முன்னமே 'சங்கர்லால்'படத்தை, டி.என்.பாலு இறந்து போக, முக்கால்வாசிக்கு மேல் இயக்கியிருக்கிறார்!


கமல் மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்த மனிதர் மறைந்த அனந்து. தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த நண்பர் என்ற அன்பு அவர் நெஞ்சு நிறைய உண்டு!

அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கமலின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கிறது!

பட்டு வேட்டி பிடிக்கும். தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபீஸ் வந்தால், அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்!

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி,கன்னடம், பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்!

ரஜினிக்குப் பிடித்த படமான 'முள்ளும் மலரும்' படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்தவரே கமல்தான்!
'உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?' என்று கேட்டால், 'நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம்' என்பார்.

கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்'ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!

'சட்டம் என் கையில்' படம்தான் கமல் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் என்பது பலரும் சொல்லும் தகவல். ஆனால், அவர் 'பார்த்தால் பசி தீரும்'படத்திலேயே சின்ன வயதில் டபுள் ரோல் பண்ணியிருக்கிறார்!

ஊர்வன, பறப்பன, ஓடுவன என அனைத்தையும் சாப்பிடும் அசைவப் பிரியர் கமல். ஆக்டோபஸை எவ்வாறு பிடித்து, சமைத்துச் சாப்பிடுவது என்பதை நடித்தே காட்டுவாராம். அந்த நடிப்பிலேயே எதிரே உள்ளவர்கள் பசியாறி விடுவார்களாம்!

ஆஸ்கர் விருது பெற்ற 'டிராஃபிக்' படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர்ஸ்டீபன் சோடர்பெர்க்கைப் போன்று ஒரு ஸ்டெடிகேம் கேமராவை இடுப்பில் கட்டி, லென்ஸைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன் யூனிட்'டாக ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின் நீண்ட நாள் ஆசை!

நடிகர் நாகேசுக்கும் கமலுக்குமான உறவு 'அப்பா-மகன்' உறவு போன்றது. தன்னை 'கமல்ஜி' என்று நாகேஷ் அழைக்கும்போது, 'எதுக்கு அந்த ஜி' என்ற கமலிடம், 'கமலுக்குள்ள ஒரு நாகேஷ் இருக்கலாம். ஆனால், நாகேசுக்குள்ள ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை' என்பாராம் நாகேஷ்!


கமலுக்கு சினிமா சென்டிமென்ட்களில் துளியும் நம்பிக்கை கிடையாது. 'ஹே ராம்' படத்தின் முதல்வசனமே இப்படித்தான் இருக்கும்... 'சாகேத்ராம் திஸ் இஸ் பேக்-அப் டைம்'!

நல்ல மூடு இருந்தால், நண்பர்களிடம் தன் கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விரல் ஜாலங்களை, குரல் ஜாலங்களுடன் கேட்கக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.இருந்தும் ஏனோ, இன்னமும் தொகுப்புகளாக வெளியிடாமல் தாமதிக்கிறார் கமல்!

''சந்திக்கும் மனிதர்களின் பேச்சுக்களை, நடவடிக்கைகளை நகலெடுப்பது போல்கவனிக்கும் ஆற்றல் எனக்குத் தெரிந்து சிலருக்கே உண்டு. இந்த ஆற்றல்கைவரப்பெற்றவர்கள் வரிசையில் முக்கியமான இடம் கமலுக்கு உண்டு''என்கிறார் யூகி சேது!

'மர்மயோகி'யில் கமல் ஒரு அகோரி கேரக்டர் செய்வதாக இருந்தார். கொஞ்சகாலத்துக்கு முன்பு நீண்ட தாடி வளர்த்தது அதற்காகத்தான். 'சாமா சானம்' என்றுதொடங்கும் பாடல் ஒன்றைக்கூட இதற்காகத் தயார் செய்துவைத்திருந்தார்.'மர்மயோகி' டிராப் என்றவுடன் தாடியை எடுத்துவிட்டார்!

நன்றாகத் தமிழ் பேசும் ஹீரோயின்களை கமலுக்கு மிகப் பிடிக்கும். தமிழ்க் கதாநாயகிகள் அதிகம்வருவதில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அதனால்தான் அபிராமியையும் சினேகாவையும்அழைத்துத் தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார்!

'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமல் முன்பு நடத்திய 'மய்யம்'பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில்,கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!

பாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்தார் கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகில் இருந்து முதன்முதலில் எழுந்த எதிர்க்குரல் கமலுடையது!

முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்குப் பிடித்தமானது. கூடவே பிளாக் டீ!

4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டி.வி-யில் கமலின் பிறந்த நாளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர்களை அழைத்து ஒரு கவியரங்கம் நடத்தினார்கள். ஒரு நடிகரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நடத்தப்பட்ட முதல் கவியரங்கம் அதுதான்!

'ஆளவந்தான்' ரிலீஸின்போது, 'இனிமேல் 100 நாட்கள் எல்லாம் படம் ஓடாது. சினிமா பார்ப்பது வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி. சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அருகில் உள்ள பெட்டிக் கடையில் வாழைப்பழம் கிடைக்க வேண்டும்' என்று சொல்லி, அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கமல்தான்!

'யாரையாவது டின்னருக்கு அழைக்க வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்?'என்று ஒருமுறை கமலிடம் கேட்கப்பட்டபோது, 'காந்தியடிகளை டின்னருக்கு அழைத்து, ஆட்டுப் பாலும் நிலக்கடலையும் பரிமாற விருப்பம்' என்று பதில் சொன்னார்!

'நாகேஷ், தன்னுடைய திரையுலக காமெடி வாரிசை உருவாக்காமல் போய்விட்டார். அந்தத் தவறை நானும் செய்ய மாட்டேன்!' அண்மையில் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான காரணமாக நண்பர்களிடம் கமல் பகிர்ந்து கொண்டது இது!

சென்னை புறநகரில் ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்டுவதற்காக கமல் இடம்வாங்கிப்போட்டிருக்கிறார். அனைத்துவிதமான தொழில் நுட்பங்களுடன் கூடிய சினிமா தியேட்டர்களும், கேளிக்கை பூங்காக்களும், ரெஸ்டாரென்ட்டுகளும் அங்கு இருக்கும்!


தமிழ் சினிமாவை 'கோலிவுட்' என்று பலரும் சொன்னாலும் கமல் அந்த வார்த்தையை உச்சரிக்க மாட்டார். அப்படிச் சொல்லவேண்டாம் என மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிப்பதே அவரது ஸ்டைல்!

வீட்டில் நான்கு கார்களை வைத்திருக்கும் கமல்ஹாசன் புதிதாக ஹம்மர் ஹெச்2 என்னும் காரை 1.8 கோடி ரூபாய் விலையில் வாங்கியிருக்கிறார். இது ஸ்டாலின் வைத்திருக்கும் ஹம்மர் ஹெச்3 காரைவிட காஸ்ட்லி!
'உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு', 'போங்கடா... போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா', 'வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது', 'ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்', 'சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை', 'மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்' - இவை எல்லாம் வசனகர்த்தா கமல் எழுதிய புகழ்பெற்ற வசனங்கள்!

விகடன் டீம்

Saturday, November 7, 2015

ஐயா, பேசியது போதும் காரியத்தில் இறங்குங்கள்!.....சிந்தனைக் களம் » தலையங்கம்



இது தீபாவளிப் பருவம். ஆடைகள், தங்க, வெள்ளி நகைகள், நுகர்வுப் பண்டங்கள் என்று அனைத்தின் விற்பனையும் உச்சத்தில் இருக்க வேண்டிய நேரம். ஆனால், பொருளாதாரச் சுணக்கம் காரணமாகப் பல்வேறு துறைகளிலும் தொழில், வர்த்தக நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை, விற்றுமுதல் போன்றவை சுணங்கிக்கிடக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டுக்கான வரவு - செலவுக் கணக்குகளை வெளியிட்ட நிறுவனங்களில் சரிபாதிக்கும் மேல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருவாய் குறைந்திருக்கிறது. இது நிறுவனங்களின் நிகர லாபத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் லாபம் குறைந்துவிட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 7% வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

அயல்நாடுகளில் உள்ள தங்களுடைய விற்பனை அல்லது உற்பத்திப் பிரிவுகளிலிருந்து வருவாய் பெறும் இந்திய நிறுவனங்களுக்கு, உலக அளவிலான பொருளாதார மந்தம் காரணமாக வருவாயில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்த தடுமாறிக்கொண்டிருக்கின்றன. மேல்வரிசை நிறுவனங்கள் தங்களுடைய எல்லாவிதச் செலவுகளையும் குறைத்துவருகின்றன. உலக அளவில் நுகர்வு குறைந்திருப்பதாலும் சீனத்திலிருந்து அளவுக்கு அதிகமாகக் கொண்டுவந்து குவிப்பதாலும் உருக்கு, உலோகம் போன்ற துறைகளில் விற்பனைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக் காரணங்கள் தவிர, உள்நாட்டிலும் பல அம்சங்கள் தொழில், வர்த்தகத்துக்கு அனுகூலமாக இல்லை. வீடு, அடுக்ககம் போன்ற விற்பனைத் துறையில் தேவையைவிட அளிப்பு அதிகமாகிவிட்டது. எனவே, கூவிக்கூவி விற்க வேண்டியிருக்கிறது. வங்கிகளும் லாபம் ஈட்ட முடியாமல் இருக்கின்றன. உள்நாட்டிலும் நுகர்வுப் பண்டங்களுக்கும் இயந்திரங்களுக்கும் கிராக்கி அதிகரிக்காததால் இந்தச் சரிவுத் தொடர் சுழல்வட்டமாகவே நீடிக்கிறது. கிராமப்புறங்களைப் போலவே நகர்ப்புறங்களிலும் தேவையிருந்தும் பொருட்களை வாங்குவதைத் தள்ளிப்போடுகின்றனர்.

உலக அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்திய அரசால் மாற்ற முடியாது. ஆனால், உள்நாட்டில் தேவைகளை அதிகப்படுத்த அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும் அரசுத் துறைகளிலும் உற்பத்தியைப் பெருக்குவது, புதிய வேலைகளை மேற்கொள்வது, கையில் உள்ள திட்டங்களை முழு மூச்சுடன் செய்துமுடிப்பது போன்றவை நிச்சயமாக அரசு கையில்தான் இருக்கின்றன. பொருளாதாரத்தை முடக்கிவிட அரசு நடவடிக்கை எடுத்தால்தான், உள்நாட்டில் வேலைவாய்ப்பும் நுகர்வும் அதிகரிக்கும். இந்தியாவின் பொருளாதார பலமே உள்நாட்டு நுகர்வும் சேமிப்பும்தான். அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் பல திட்டங்கள் இன்னும் மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகளின் அனுமதிக்காக இன்னமும் காத்திருக்கின்றன. பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. யார் நடவடிக்கை எடுப்பது? நிலையற்ற இச்சூழலில் தனியார் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். அரசுதான் அடித்தளக் கட்டமைப்பில் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு உதாரணம், கட்டுமானத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைத்தது. இது நல்ல விஷயம். ஆனால், நிலம், வீட்டு மனை, அடுக்ககம் போன்றவற்றைக் கட்டி விற்பனை செய்வோர் விலையைச் சிறிது குறைத்தால்தான் விற்பனை சூடுபிடிக்கும். யார் அவர்களிடம் பேசுவது? அரசு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால், பேச்சு சத்தம்தான் எப்போதும் கேட்கிறது. பொருளாதாரம் சத்தத்தால் பெருகாது ஐயா!

Friday, November 6, 2015

காற்றில் கலந்த இசை 29: அக உலகின் கணணீர் தேசம் .......... வெ. சந்திரமோகன்

Return to frontpage




கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.

‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.

சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.

முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!...vikatan

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறை அமைச்சரை நீக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Return to frontpage

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கர் முயல்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்திய முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். அமைச்சரின் தூண்டுதலால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் விஜயபாஸ்கருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உள்ளூரில் மக்கள் நலப் பணிகளை செய்வதில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாள், கருப்பட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, கணேசன் ஆகியோர் தங்கள் பகுதியில் மருத்துவமனை அமைத்துத் தரும்படி கோரிக்கை வைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது இல்லத்தில் அனுமதி வாங்கி சந்தித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அவர்களை வீட்டுக்குள் அழைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘ எனக்கு எதிராக கொடி பிடிக்கிறீர்களா? வலையர் (முத்தரையர்) சாதியை சேர்ந்த உங்களால் என்னை எதுவும் செய்யமுடியாது’’ என்பதில் தொடங்கி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

பெண் என்றும் பார்க்காமல் இப்படி திட்டுவது சரியா எனக் கேட்ட போது, ஊராட்சி ஒன்றியத் தலைவர் கெங்கையம்மாள் மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக காவல் நிலையத்திலும், காவல்துறை உயரதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். மாறாக அமைச்சர் தூண்டுதலில் அவர்கள் மீண்டும் மிரட்டப்பட்டுள்ளனர்.

முத்தரையர் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கரைக் கண்டித்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் கூடுதலான முத்தரையர்கள் புதுக்கோட்டை நகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, மீமிசல், திருமயம், இச்சடி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 20 மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் அவர்களுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதிமுகவில் தமக்கு பிடிக்காதவர்களை அவர்களின் சமூகத்தின் பெயரைக் கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அமைச்சர் திட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை அதிமுக ஆதரிக்கிறதா என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.

அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் 'வேதாளம்' - அதிரும் 20 தெறிப்புகள்! ......ஸ்கிரீனன்



இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது 'வேதாளம்'. அப்படத்தைப் பற்றிய தகவல்கள்:

* இரண்டு கெட்டப்களில் நடித்திருக்கிறார் அஜித். படத்தின் தற்போதைய காலகட்டத்தில் 'விநாயகா' என்ற பாத்திரத்திலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் 'வேதாளம்' என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் பாத்திரத்தின் பெயரைப் படத்தின் பெயராக வைக்கலாம் என்று சிவாவிடம் சிபாரிசு செய்திருக்கிறார் அஜித்.

* ஆக்‌ஷன் கதை என்றாலும் காமெடி அதகளம் அதிகமாக இருக்கும் என்கிறது படக்குழு. சூரி, மயில்சாமி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ‘ஆதித்யா டி.வி.’ தாப்பா, மகேந்திரன் என ஒரு பெரிய காமெடி பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. அஜீத் - சூரி இருவர் மட்டுமே நடித்த மிகப்பெரிய காமெடி சீனை மட்டும் இரண்டு நாட்களுக்குப் படமாக்கியிருக்கிறார்கள்.

* 'வேதாளம்' படத்தின் டீஸரைப் பார்த்து, இது பேய் படம் என்று அனைவருமே நினைத்தார்கள். ஆனால், இது பேய் படமல்ல என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது படக்குழு.

* அஜித்தைப் போன்று நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று பெண்கள் ஏங்கும் வகையில் அஜித் - லட்சுமி மேனன் காட்சிகளை இப்படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் சிவா.

* 'வீர விநாயகா' பாடல் தான் படத்தின் முதல் பாடலாக அமையவிருக்கிறது. கொல்கத்தாவில் படுவிமர்சையாக கொண்டாப்படும் விநாயகர் சதுர்த்தியின் போது இப்பாடலை அஜித் பாடி ஆடுவது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஷோபி மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். லட்சுமி மேனன், சூரி இருவரும் அஜித்துடன் இப்பாடலில் ஆடியிருக்கிறார்கள்.

* மொத்தம் 100 நாட்களில் படப்பிடிப்பு முடிப்பது என்று திட்டமிட்டார்கள். இடையே ஒரு சில தடங்கல்கள் ஏற்பட, இறுதிகட்டத்தில் இரவு, பகலாக பணிபுரிந்து மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

* சென்னை, கொல்கத்தா, இத்தாலி ஆகிய மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. சென்னையில், பெரம்பூர் பின்னி மில், மீனம்பாக்கம் பின்னி மில், மோகன் ஸ்டுடியோ, கிண்டி ரேஸ் கோர்ஸ், வடபழனி மலர் ஹாஸ்பிட்டல், ஃபிலிம் சிட்டி, மணி மஹால், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

* கொல்கத்தாவில் விக்டோரியா அரண்மனைக்கு அருகிலும், ஹவுரா பிரிட்ஜிலும் வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. கொல்கத்தாவில் வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளை எல்லாம் சென்னையில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

* 'ஆதவன்' படத்தில் வரும் கப்பல் காட்சி படமாக்கப்பட்ட இடத்திலேயே இப்படத்தில் வரும் ஒரு கப்பல் காட்சியும் படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.

* அஜித்தின் தங்கையாக நடித்திருக்கும் லட்சுமி மேனனின் கதாபாத்திரப் பெயர் 'தமிழ'். ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

* கால் டாக்ஸி நிறுவனம் நடத்தி வருவபவராக நடித்திருக்கிறார் சூரி. அவரிடம் டிரைவராக பணிபுரியும் பாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

* 'வேதாளம்' பாத்திரக் காட்சிகளில் ஸ்ருதிஹாசன் மற்றும் சூரி இருவருமே கிடையாது. லட்சுமி மேனனும் ஒரு சில காட்சிகளில் தான் வருவார். 'வேதாளம்' பாத்திரத்தின் நண்பராக அப்புக்குட்டியும், தந்தையாக தம்பி ராமையாவும் நடித்திருக்கிறார்கள்.

* இப்படத்தில் ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. கிண்டி ரேஸ் கோர்ஸில் ஒரு சண்டைக்காட்சி, பெரம்பூர் பின்னி மில்லில் இரண்டு சண்டைக்காட்சிகள், ஃபிலிம் சிட்டியில் ஒரு சண்டைக்காட்சி, மோகன் ஸ்டுடியோவில் இரண்டு சண்டைக்காட்சிகள், இத்தாலியில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கி இருக்கிறார்கள். அஜித்தின் நண்பரான சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

* அஜித்தும், லட்சுமி மேனனும் ஹவுரா ரயில் நிலையத்தில் வந்திறங்கும் காட்சி தான், அஜித்தின் முதல்காட்சியாக படத்தில் வரவிருக்கிறது.

* அஜித் - ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் என்பதே கிடையாது. 'நீ நல்லவன், அதனால உன்னைப் பிடிச்சிருக்கு' என்ற வசனத்தை அடிக்கடி அஜித்தைப் பார்த்து கூறுவார் ஸ்ருதி ஹாசன். இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். பால சரவணன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோர் ஸ்ருதிஹாசனோடு வரும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.

* கொல்கத்தா ரோட்டில் அஜித் - வில்லன்கள் துரத்தல் காட்சியிலும் மற்றும் இத்தாலி கப்பலில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் மிகவும் துணிச்சலுடன் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் அஜித்.

* உலகம் முழுவதும் இதுவரை 1000-க்கும் அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தான் எத்தனை திரையரங்குகள் என்பதன் சரியான கணக்கு தெரியும்.

* டப்பிங்கின் போது காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு, "மீண்டும் நாம ஒரு படம் பண்ணலாம் சிவா" என்று கேட்டிருக்கிறார் அஜித். எப்போது என்பது விரைவில் தெரியவரும்.

* நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இப்படத்துக்கு இப்போதே அஜித் ரசிகர்கள் கட்-அவுட் எல்லாம் வைக்க தயாராகி வருகிறார்கள்.

* இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் போலந்து நாட்டில் வெளியானதில்லை. 'வேதாளம்' தான் முதன் முதலில் போலந்து நாட்டில் வெளியாகிறது.

NEWS TODAY 31.01.2026