Wednesday, November 11, 2015

வேதாளம் - படம் எப்படி?

cinema.vikatan.com
தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணன் இல்லை, "தங்கைக்காக எவனையும் செய்யும் அண்ணன்" தான் வேதாளம்.
லட்சுமி மேனனின் படிப்பிற்காக கொல்கத்தாவிற்கு தங்கையோடு வருகிறார் அஜித். லட்சுமி மேனனுக்கு ஓவியக் கல்லூரியில் சீட் கிடைக்க, அஜித்திற்கு டாக்ஸி ஓட்டுநராக வேலை கிடைக்கிறது. சாதாரண குடும்பமாக வாழ்ந்துவரும் அண்ணன் தங்கை வாழ்வில் புயல் வீச ஆரம்பிக்கிறது. 

டாக்ஸி டிரைவர்கள் அனைவரிடமும் போலீஸ் துறை ஒரு சட்டவிரோதக் கும்பலைப் பிடிக்க உதவுமாறும், நீங்கள் இந்தக் குற்றவாளிகளைக் கண்டால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள் எனவும் கூற, அஜித்தும் ஆர்வத்தால் ஒரு பெரிய போதை மருந்து கும்பல் பற்றியான தகவலை போலீஸிடன் கொடுத்துவிடுகிறார்.
போலீஸ் கூண்டோடு போதைக் கும்பலைப் பிடிக்க, வில்லன்கள் டார்கெட் நினைத்தது போல் அஜித் மேல் விழுகிறது. ஆட்டம் ஆரம்பம்.  அஜித்தை வில்லன்கள் தேடி பிடித்து தூக்கிக்கொண்டு போக,
“நீ என்னத் தூக்கிட்டு வந்தியா,  நான் தாண்டா உன்னைத் தேடி வந்துருக்கேன்” 
என அஜித்தின் இன்னொரு ஆக்‌ஷன் அவதாரம் அரங்கேறுகிறது.
அஜித் ஏன் அப்பாவியாகவும்,ஆக்ரோஷமாகவும் இருவாழ்க்கை வாழ்கிறார் என்பதற்கு மாஸ் ஃப்ளாஷ்பேக்காகவும், க்ளைமாக்ஸாகவும் விரிகிறது மீதிக் கதை..

படத்தின் இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களான அஜித், லட்சுமி மேனன். இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள்.
வெறித்தனமாக அடித்துக் கொண்டிருக்கையில் தங்கையை பார்த்த அடுத்த கணம் கீழே விழுந்து அடிவாங்குவது அடடே தருணம். எப்படி ஒரு முன்னணி நடிகை தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால் உண்மையில் படமே லட்சுமி மேனன் தான் என்பது படம் பார்த்தப் பிறகு தான் புலப்படுகிறது.
மருமகனாக சூரி, மாமியாராக கோவை சரளா இருந்துமே காமெடி காட்சிகள் எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
நாயகியான ஸ்ருதி ஹாசனுக்கு படத்தில் சொச்ச காட்சிகளே.  ஒரு நாயகியாக எத்தனையோ மொழிகளைக் கடந்து நடித்துவரும் நிலையில் தனக்கான ஸ்கோப்பை கேட்காமல் எப்படி ஸ்ருதி நடிக்க ஒப்புக்கொண்டார்.  இதில் பெரிய தவறாக படத்தின் இடைவேளைக்குப் பிறகு ஸ்ருதிக்கு வேறு யாரோ குரல் கொடுத்துள்ளனர். 

தம்பி ராமையா, ரத்னா காட்சிகள் சென்டிமெண்ட் மக்களுக்கு பந்தியில் வைக்கப்பட்ட இனிப்பு. எனினும் கொஞ்சம் நீளமான காட்சிகள். அதை சரி செய்திருக்கலாம்.
“போகட்டும் பொண்ணுங்க ஸ்கூலுக்கு, கலேஜூக்கு
அவங்கள நிம்மதியா போக விடுங்க”  என அஜித் பேசும் இடம் சமூக அக்கறை. 

“உன் வாழ்க்கையில மறக்க முடியாத ரெண்டு விஷயம்
ஒண்ணு உன்ன பெத்தவங்க  இன்னொன்னு நான்”
“அவங்க உனக்கு பிறப்பக் குடுத்தாங்க,
நான் உனக்கு இறப்பக் குடுக்கபோறவன்டா” 
“பணத்துக்காகவே பண்ணும் போது பாசத்துக்காகப் பண்ணமாட்டேனாடா என் வென்று”  இப்படி படம் முழுவதும் கைத்தட்டலுக்காகவே படபட பன்ச்கள் பறக்கின்றன.
ஆலுமா டோலுமா அஜித் ஸ்பெஷல், உயிர் நதி கலக்குதே எமோஷனல் ஸ்பெஷல் எனினும் பாடல்களில் கொஞ்சம் சறுக்கலே. ஆனால் பின்னணியில் தெறிக்கவிட்டிருக்கார் அனிருத். 

ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், எல்லாவற்றிற்கும் மேல் இடைவேளை யாரும் எதிர்பாரா தருணமாக அஜித் மழையில் வெறியுடன் கத்துவது,  சிவாவின் டச்.

சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வெற்றியின் ஒளிப்பதிவு கண்கட்டி வித்தை. எல்லாம் சரி தான் பாஸ் அந்த நீளம் சத்தியமா பொருத்துக்க முடியலை. முன் பாதி அப்படியே தொங்கி நிற்கிறது. அதைக் கொஞ்சம் செதுக்கினால் இன்னும் நன்று.
அதென்ன கும்பல் கும்பலாக பெண்களைத் தூக்கி வெளிநாட்டில் விற்பது. வேலாயுதம் முதல் வேதாளம் வரை தொடரும் அதே போரடிக்கும் வில்லன் காட்சி. ப்ளீஸ் மாத்துங்க. 
மியூசிக்கை போட்டுவிட்டு வெறித்தனமாக நடனம் ஆடி சண்டைப்போடுவதெல்லாம் அஜித் ரசிகர்களுக்கு அசத்தல் ட்ரீட். மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என கொஞ்சம் தனியாக பார்த்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு பார்க்க தேர்ந்தெடுக்க வேண்டிய சென்டிமெண்ட் படம் தான் வேதாளம்.

மனசு போல வாழ்க்கை 33: உங்களை உண்ணும் உணவு ......................டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage



நீ எதை உண்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்கிறது கடோபநிஷத்.

மனதைப் பக்குவப்படுத்த உடலைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மதமும் முதலில் உணவுக்கட்டுப்பாட்டை விதிக்கிறது. எல்லா மதங்களும் உண்ணாவிரதத்தைப் பரிந்துரைக்கின்றன. எந்த நாளில், எந்த நேரத்தில் , எப்படிப்பட்ட முறையில் என்பதில்தான் வேறுபாடுகள். பிரார்த்தனை செய்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்பதும் எல்லாச் சமயங்களும் பரிந்துரைப்பதே. பிறரோடு பகிர்ந்து உண்பதும் பொதுவாக மதங்கள் வலியுறுத்தும் கருத்து.

உணவின் தேர்வு

உண்ணுதல் புனிதமான செயல். உடல் வளர்ப்பது உயிர் வளர்ப்பது. அது இறைமையைப் போற்றும் செயல். கடவுள் வாழும் ஆலயமே உடல். உணவு சமைப்பதும், பரிமாறுவதும், உண்பதும், பகிர்வதும் தெய்வீகச் செயல்கள். அதனால்தான் சிந்தையை முழுவதுமாக இந்தச் செயல்களில் செலுத்துவது அவசியம்.

அறம் சார்ந்த வாழ்க்கையை மேம்படுத்துவதே சமய நம்பிக்கை. பிற சமய அன்பர்களின் உணவுப் பழக்கத்தில் அத்து மீறல் செய்வது அராஜகம். யார் உணவையும் பறிப்பதோ தடுப்பதோ மிருகச்செயல். உணவு என்பது தனி நபர் உரிமை. தங்கள் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வசதிக்கும் ஏற்ப உண்ணுதல் அவரவர் தேர்வு.

இது மட்டும்தான் சிறந்த உணவு என்று எண்ணுதல் பேதமை. காரணம் உணவுகள் தட்ப வெப்ப நிலை, வேலை, உடல் உழைப்பு, கலாச்சாரம் சார்ந்தவை. அதனால்தான் ஒரு உணவைச் சிறந்த உணவு என்று யார் மீதும் திணிப்பது அறியாமை.

ஒரே உணவு சரியா?

எஸ்கிமோக்கள் பூமியின் வடதுருவத்தில் உறைந்த பனி மண்டலத்தில் வாழும் பழங்குடி மக்கள். அங்குள்ள மிருகங்களை அவர்கள் உண்டாலும், அவற்றின் கொழுப்பு மாரடைப்பை வரவழைக்காது. ஆனால் நாம் இங்கு எதைத் தொட்டாலும் கொலஸ்ட்ராலுக்குப் பயப்படுகிறோம். அதற்கான காரணம், நாம் இப்போது உண்ணும் பல உணவுகள் நம் பாரம்பரியத்தில் இல்லாதவை. நம் வாழ்வு முறைக்கு ஒவ்வாதவை. அவற்றை ஜீரணிக்க நாம் சிரமப்படுகிறோம்.

அவரவருக்கான உணவு எது என்பதைத் தீர்மானிப்பது அவரவர் கடமை. ஒரு அலுவலகத்திலோ ஒரு குடும்பத்திலோ அனைவருக்கும் ஒரே உணவு என்பதே அடிப்படையில் ஒரு குறைபாடுதான். எல்லோருக்கும் ஒரே உணவு என்பது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் ஒரு நிர்வாகக் கண்ணோட்டத்தில் எளிதானது. அதனால் நிறைய நேரமும் மனித உழைப்பும் மிச்சமாகிறது. ஆனால், தனி நபர் ஆரோக்கியத்துக்கு இது நன்மை பயக்காது.

உடலின் உணவுமொழி

உணவு விடுதிகளில் புதுப் புது உணவுகள் படையெடுப்பது சந்தையின் அசுர வளர்ச்சியால். மெனு கார்டு முன்பு ஒரு அட்டையாக இருந்தது. இன்று அது டெலிபோன் டைரக்டரி போல வீங்கி வருகிறது. உலக நாடுகளில் உள்ள அனைத்து உணவுகளையும் இங்கேயே உட்கார்ந்துகொண்டு ருசி பார்க்கத் தயாராகிவிட்டோம்.

ஆனால் ஒவ்வொரு உணவின் தன்மை பற்றியும் அது நம் உடலையும் மனதையும் என்ன செய்யும் என்பதைப் பற்றியும் யோசிக்கிறோமா? ஒரு உணவின் தயாரிப்பில் என்னவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்து கொள்கிறோமா? இதற்குப் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் உடலோடு சற்று உறவாடினால் போதும்.

ஒவ்வொரு உணவுக்கும் பிறகு ஏற்படும் உணர்வு, எண்ணம், உடல் மாறுதல்கள் என்று கூர்ந்து கவனியுங்கள். உடல் உங்களோடு பேசத் தயாராக இருக்கிறது. நீங்கள் தயாரா?

தேவாமிர்த ருசி

நட்சத்திர விடுதியில் தட்டை ஏந்தி ஒரு 50 அயிட்டங்களை அரையும் குறையுமாக அள்ளித் தின்றுவிட்டு வீடு வந்திருப்பீர்கள். சாப்பிடும் போது நன்றாக இருக்கும். வீடு வந்து படுக்கும்போது கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும். இது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? அப்படி என்றால் ஏன் என்று யோசியுங்கள்.

வேலை செய்யும்போது அலுவலகத்தின் சமாச்சாரங்களைப் பேசியே என்ன உண்கிறோம் என்று உணராமலே மதிய உணவு எடுத்துக் கொள்வோம். எல்லா உணவுகளும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பெரிய திருப்தி இருக்காது. ஆனால், ஒரு நாள் சுற்றுலாவின் போது, அருவியில் நீண்ட நேரம் குளித்துவிட்டு உண்ணும் ஒரு சாதாரணக் கடையின் உணவு தேவாமிர்தமாக ருசிக்கும். ருசியைக்கூட விடுங்கள். பசித்துக் காத்திருக்கும்போது வரும் சமையல் நறுமணம் எவ்வளவு தூண்டுதலாக இருக்கும்! இதை எத்தனை நாட்கள் நாம் முகர்ந்திருக்கிறோம்?

நீங்கள் உண்ணும் உணவால் ஏற்படும் உடல் மாற்றங்களையும் மன மாற்றங்களையும் ஒரு வாரத்துக்கு கூர்ந்து நோக்குங்கள். உங்கள் உடல் பற்றிய அறிவும், உணவு பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

உணவே மருந்து

நம் கலாச்சாரம், மரபணுக்கள், கற்றல் மூலமாக நம்மிடம் உள்ள சில ஆதார உணவுகள் உண்டபின் வயிற்றுக்கும் மனதுக்கும் பெரிய திருப்தி தருபவை. அவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தி உண்பதுதான் புத்திசாலித்தனம். உங்களுக்கான உணவை உங்கள் உடலே தேர்வு செய்யும். அதன் மொழி கேட்டு நடப்பதுதான் உத்தமம்.

நம் பாட்டி, தாத்தாக்களின் தெம்பு நம் பெற்றோர்களுக்கு இல்லை. நம் பெற்றோர்களின் தெம்பு நமக்கு இல்லை. நம் தெம்பாவது நம் பிள்ளைகளுக்கு இருக்குமா? மருத்துவம் வளர்ந்த அளவு ஆரோக்கியம் வளர்ந்துள்ளதா? யோசியுங்கள். நாம் கோட்டை விடும் இடம் உணவு என்று புரியவரும். உணவில் எல்லா அத்துமீறல்களையும் செய்கிறோம். சந்தை, அரசியல், சமூகம் அவற்றை செய்ய வைக்கிறது. ஆனால் நோய்வாய்ப்படுகையில் அவதிப்படுபவர் நீங்கள் மட்டும் தானே!

உலகின் எல்லா மனப்பயிற்சி மையங்களும், சமயங்களும், சோதனைகளும் உணவில்தான் தொடங்குகின்றன. உடல் பயிற்சிகூட அடுத்ததுதான்.

பேசாமல், பிற செயல்களில் ஈடுபடாமல் சாப்பிட்டுப் பாருங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். டி.வியும் செல்போனும் சாப்பிடும் இடத்திலேயே இருக்க வேண்டாம். கிடைக்கின்ற உணவில் உங்களுக்கு ஏற்றதாய், அளவாய் உண்ணுங்கள். உண்ணும் அளவுக்கு உடல் உழைப்பு உள்ளதா என்று பாருங்கள். பாரம்பரிய உணவுகள், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முன்னுரிமை தாருங்கள். வெளி உணவு என்றால் லேபிள் பாருங்கள். டப்பாவில் அடைத்த உணவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் எந்த உணவின் மீதும் வெறுப்பும் விரோதமும் வேண்டாம்.

இந்த உணவை உண்ணும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் உணவு உடல் திடமும் மன நிறைவும் அளிக்கும் மாமருந்து என்பதை மறந்துவிட வேண்டாம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Monday, November 9, 2015

பள்ளி மாணவர்களுக்கு புதிய மொபைல் அப்ளிகேஷன்: ஸ்மிருதி இரானி அறிமுகம்.....பிடிஐ

Return to frontpage

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், ஆன்- லைன் மூலம் மாணவ-மாணவியர் கள் கல்வி சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும், புதிதாக கற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக நேற்று மத்திய அரசு மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தள வசதிகளை அறிமுகம் செய்து வைத்தது.

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆன்-லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், ‘இ-பாடசாலா’ என்ற இணையதளமும், மொபைல் அப்ளிகேஷனயும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பள்ளி கல்வி திட்டத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதற்காக மட்டுமின்றி, குழந்தைகள் புதிதாக கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கவுமே, இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம். மேலும், மாணவர்கள் மீதான தேர்வு சுமையை குறைப்பது குறித்து சில மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர பள்ளிகளில் மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுக்க கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டி வகுத்து கொடுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின்படி, அந்தந்த மாநில அரசுகள் சொந்தமாக மதிய உணவுகளை தயாரிக்கும்படியும் வலியுறுத்தப் போகிறோம்’’ என்றார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ‘சரண்ஷ்’ என்ற மற்றொரு அப்ளி கேஷனும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளி கேஷன் மூலம் பிற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், பாடவாரியாக குழந்தைகளின் கல்வி திறனை பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இதே போல் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சாலா சித்தி’ என்ற மற்றொரு டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம்: பஸ், ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள் - தாம்பரம்- கோயம்பேடு இடையே கடும் போக்குவரத்து நெரிசல்

Return to frontpage

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந் தனர். பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களுக்கு 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நேற்று 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறும் போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேட்டில் இருந்து பயணம் செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் குறித்து பயணிகளுக்கு தகவல் அளிக்க உதவி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன” என்றார்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் தாம்பரம்- கோயம்பேடு இடையே நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியை கடக்க 2 மணிநேரத்துக்கும் மேல் ஆனதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இது தொடர்பாக போக்கு வரத்து போலீஸார் கூறும்போது, “சென்னையின் முக்கிய சாலை களான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர் லால் நேரு சாலை ஆகியவை 10 ஆண்டுகளுக்கு முந்தைய போக்குவரத்தை தாங்கும் வகை யில் அமைக்கப்பட்டது. இப்போது அதைவிட 3 மடங்கு போக்குவரத்து அதிகரித்து விட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் சாலைகள் சுருங்கி விட்டன. இந்நிலையில் வழக்கமான போக்குவரத்தோடு தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் வாகனங்களும் சேர்ந்துகொண்டதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது” என்றனர்.

தனியார் ஆம்னி பஸ் ஓட்டு நர் ஆர்.ஸ்டீபன் அருள்ராஜ் கூறும் போது, “கிண்டி- கோயம்பேடு இடையே போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தாம்பரத்திலேயே எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் நான் கிண்டியிலிருந்து தி.நகர் வழியாக போக்குவரத்தில் சிக்காமல் கோயம்பேட்டை அடைந் தேன். மற்ற ஆம்னி பஸ்கள் போக்குவரத்தில் சிக்கி 2 மணிநேரம் அவதிப்பட்டன” என்றார்.

பெருங்களத்தூரில் நெரிசல்

பெருங்களத்தூரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆர்.சர வணன் கூறும்போது, “பெருங் களத்தூரில் கடந்த 3 நாட்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஒரு சில ஆம்னி பஸ்கள் மட்டுமே பெருங்களத்தூர் வழியாக வருவதை தவிர்க்கின்றன. மற் றவை வந்து கொண்டு தான் இருக் கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

எஸ்.மாலிக் கூறும்போது, “வெளியூர் செல்லும் தனியார் வாகன ஓட்டிகள் பெருங்களத்தூர் பாதையை தேர்வு செய்ய வேண்டாம் என்று போக்கு வரத்து காவல்துறை அறிவுறுத்தி யிருந்தது. ஆனால், பெரும் பாலான தனியார் வாகன ஓட்டிகள் காவல் துறையின் வேண்டுகோளை ஏற்கவில்லை. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

அதிகாரி விளக்கம்

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கவேண் டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதுபற்றி போக்கு வரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புறநகர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான திடல் இல்லாததால், தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க முடியவில்லை” என்றார்.

பெண் எனும் பகடைக்காய்: பண்டிகை நாட்களிலும் குறையாத பெண் உழைப்பு ..............பா.ஜீவசுந்தரி

Return to frontpage



அநேகமாக குழந்தைகளின் காலண்டர் பார்க்கும் பழக்கத்துக்கு தீபாவளிப் பண்டிகையே ஒரு காலத்தில் காரணமாக இருந்திருக்கிறது. ‘எப்போதான் இந்தத் தீவாளி வரும்’ என்று புதிய காலண்டரின் பின் அட்டையை ஜனவரியிலேயே திருப்பிப் பார்ப்பதில் இருந்து, இன்னும் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறது என்று மாதத்தையும் தேதியையும் தலைகீழாகப் போட்டுக் கழித்துப் பார்ப்பதுவரை தீபாவளி குழந்தைகளுக்கான செயல்முறைக் கல்வியாக எப்போதோ அறிமுகமாகிவிட்டது. அடுத்தது தீபாவளிக்கான கவுன்ட்-டவுன் 100 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை தீபாவளி ஏழைகளின் திருவிழா!

வானம் கருகருத்துக் கிடக்க மழை எப்போது நிற்கும் என்று காத்திருந்து மத்தாப்புகளையும் வெடிகளையும் கொளுத்தி அந்தக் கரி மருந்துப் புகையை சுவாசிக்காத குழந்தைகள் இருக்க முடியாது. அதனால்தான் தீபாவளி குழந்தைகளின் திருவிழாவாகவும் இருக்கிறது. அதோடு புத்தாடைகள், பரிசுகள். இப்போதெல்லாம் மொபைல், ஸ்மார்ட்போன், டேப், டேப்லட் போன்றவைகளும் குழந்தைகளுக்கான தீபாவளி லிஸ்டில் சேர்ந்து விட்டன. ஆனால் அவையெல்லாம் வசதி படைத்த வீட்டுக் குழந்தைகளுக்கு.

சென்ற தலைமுறை ஆராதித்துக் கொண்டாடிய தீபாவளி பற்றிய சின்னச் சின்ன சந்தோஷங்களும் எதிர்பார்ப்புகளும் இன்றைய தலைமுறையிலும் நீடிக்கிறதா என்றால் அதற்கான பதில் என்னிடம் இல்லை.

புத்தாடைகள் அப்போது ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ மட்டுமே கிடைக்கும். அதிலும் ரெடிமேட் என்ற உடனடி ஜீபூம்பா எல்லாம் மிக மிக அபூர்வம். ஜவுளிக் கடைக்குப் போய், அளந்து வாங்கி வரும் துணி, நம் உடுப்பாக மாறி கைக்குக் கிடைப்பதற்குள் அந்தச் சின்னஞ்சிறு மனசு படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது. பள்ளிக்கூடம் விட்டு வந்த நேரமெல்லாம் தையற்கடை வாசலில் தவமாய்த் தவமிருந்த காலமெல்லாம் மனதை விட்டு அகலாதவை. வீட்டிலிருக்கும் நாலைந்து உருப்படிகளுக்கும் ஒரே கலரில் எடுத்துத் தைக்கப்படும் உடைகளை இப்போதைய குழந்தைகள் பார்த்தால் அந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு தனி யூனிஃபார்ம் இருந்திருக்குமோ என்றுதான் நினைப்பார்கள். அதை இப்போது நினைத்தாலும் ரத்தக் கண்ணீர் வருகிறது.

யூனிஃபார்ம் என்றதும் நினைவு வந்துவிட்டது. பள்ளிக்கூடத்து அசல் யூனிஃபார்மேகூடச் சில ஆண்டுகளில் தீபாவளி புத்தாடையாய் வாய்த்து, சக பள்ளி மாணவிகள் மத்தியில் நம் மானத்தை வாங்கியிருக்கிறதே.

படபடபடபடபடபடவெனச் சில நிமிடங்களுக்குச் சத்தக்காடாய் அலறும் இன்றைய1000 வாலாக்களெல்லாம் நினைத்தே பார்க்க முடியாதவை. டப் டப் என வெடிக்கும் ஒற்றை வெடிகள் மட்டுமே அப்போது மகிழ்ச்சியைத் தந்தவை. முக்கோண வடிவில் ஒற்றை ஒற்றையாய், பாக்கெட்டுகளில் உதிரிகளாய்க் கிடைத்த ஓலை வெடியை மறந்துவிட முடியுமா?

சில தொலைக்காட்சி விளம்பரங் களில் பள்ளிக் குழந்தைகள் ‘பட்டாசு வெடிக்காதீர்கள், அவையெல்லாம் நம்மைப் போன்ற குழந்தைகளின் உழைப்பில் தயாராகின்றன. அதனால் பட்டாசுகளைப் புறக்கணிப்பீர்’ என்று ‘பெரிய மனுஷ’ தோரணையுடன் பேசுவதைப் பார்க்க முடிந்தது. அதோடு அதைச் சொல்லி முடித்ததும் அந்தக் குழந்தை யாரையோ திரும்பிப் பார்க்கிறது. ‘சொல்லிக் கொடுத்தத சரியா ஒப்பிச்சிட்டனா’ என பார்ப்பது போல இருக்கிறது. குழந்தை உழைப்பு, சுற்றுச்சூழல் மாசு எல்லாம் சரிதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் நமக்கில்லை. ஆனால், குழந்தை உள்ளங்கள் இதையெல்லாம் மனதார ஏற்குமா? நாமும் குழந்தைகளாய் இருந்து அந்த நிலையைக் கடந்து வந்தவர்கள்தானே… நமக்கிருந்த மனநிலையும் ஏக்கமும் அவர்களுக்கும் இருக்காதா? எதிர்ப்பையும் பிரச்சாரத்தையும் நாம் மேற்கொள்வோம். குழந்தைகள் பாவம்… அவர்களை விட்டுவிடுவோம். அவர்கள் குழந்தைகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

குழந்தைகளுக்குத் தெரியுமா, பண்டிகை வந்தால் பருப்பு, எண்ணெய் வகையறாக்கள் விலை ராக்கெட் இல்லாமலே விண்ணில் பறக்கும் அதிசயம்! கடனோ, உடனோ ஏதாவதொன்று பட்டுத் தீர்க்கும் பெற்றோருக்குத்தான் தெரியும் அத்தனை குத்தல் குடைச்சல்களும்.

‘பருப்பில்லாமல் கல்யாணமா?’ என்பது போல பலகார, பட்சணங்கள் இல்லாத பண்டிகையா? நாம் ரசித்து ருசித்துச் சாப்பிடும் பலகாரங்களுக்காக மாவு இடிபடும் உரல் உலக்கை சத்தமும், திரிகைகள் அரைபடும் ஓசையும் இப்போது இல்லாமல் போய்விட்டன. கைப்பக்குவத்துடன் அம்மாக்களும் ஆத்தாக்களும் தயாரித்துக் கொடுத்த கெட்டி உருண்டை என்ற பொருள்விளங்கா உருண்டையின் பொருள்கூட இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாதே. பயற்ற மாவு உருண்டை, ரவா லட்டு, பூக்கப் பூக்க அரைத்த உளுந்த மாவில் முக்கியெடுத்து, எண்ணெயில் பொரித்த சுகியன் என்ற ‘சீயம்’ நினைவிலாவது இருக்கிறதா? அதிரசத்தின் பெயரே சொல்லுமே அதன் அற்புதச் சுவையை. இவையெல்லாம் நம் இளமைக் காலத்து அதிசயங்கள்! அற்புதங்கள்! ஆனால், இப்போது அதையெல்லாம் எதிர்பார்ப்பதும் நம் அறியாமை அல்லாமல் வேறென்ன?

வீடு ஒன்றே உலகமாக, அடுப்பங்கரையே தங்கள் ராஜாங்கமாக இருந்த நம் ஆத்தாக்களின் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. அதற்காக இப்போதும் பெண்கள் வீட்டில் சமைக்காமலோ, பண்டிகைகள், பட்சணங்களை முழுமையாகப் புறக்கணித்தோ விடவில்லை. அது ஒரு பக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழைய ருசி வேண்டுமானால் இல்லாமல் போகலாம். என்னதான் படித்தாலும் பட்டம் பெற்றாலும், வேலைக்குப் போனாலும் வீட்டு வேலைகளின் வீரியம் மட்டும் குறைந்துவிடுவதில்லை. சாதனங்கள் மாறியிருக்கலாம். உழைப்பு?

பண்டிகை என்பது பெண்களைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அனைத்துப் பொறுப்புகளையும் அவள் மீது ஏற்றும் பெரும் சுமை. கலாச்சாரம், பண்பாடு கெடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் அவளுக்கே. ஆண்கள் இதிலிருந்தெல்லாம் எளிதாகக் கழன்று கொண்டு விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்’ ஆகிவிடும் அதிசய வித்தைகள்.

இதில் அன்றாட வீட்டு வேலை அல்லது பொறுப்புகள் எதனையும் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாத நிலையில், அப்படி யாராவது தனது பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்களா என ஒரு பெண் எதிர்பார்ப்பாளேயானால், ‘நல்ல இல்லத்தரசி’ என்ற மகுடம் அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும். இத்தனைக்கும் அவளுக்குக் கிடைப்பது என்ன? வீட்டில் வேலை பார்க்கும் உதவியாளருக்கு 200 ரூபாய்க்குச் சேலை என்றால் எஜமானிக்கு 2000 ரூபாய் சேலை.

இப்போதெல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்கள்கூட பண்டிகை அன்று விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வீட்டு வேலையைப் பார்க்க வேண்டுமே. சொந்த வீட்டில் எந்த நாளும் எந்தப் பெண்ணுக்கும் விடுமுறை என்பது இல்லை. எங்கு சமையலறை ஒழிகிறதோ அங்குதான் உண்மையான பெண் விடுதலை இருக்கும் என்பது எத்தனை உண்மை!

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com

இனிப்பு, பட்டாசு ஆர்டரை ரத்து செய்த பாஜக ....................ஐஏஎன்எஸ்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இனிப்பு வகைகள், பட்டாசுகளுக்கு பாஜக மாநிலத் தலைமை சார்பில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக பாஜக தோல்வியைத் தழுவியதால் அனைத்து ஆர்டர்களும் காலை ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியபோது, லட்டுகள், பட்டாசுகளுக்கு ஆர்டர் அளித்திருந்தோம், ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக இருந்ததால் அவற்றை ரத்து செய்துவிட்டோம் என்று தெரிவித்தன.

பாஜகவை நம்பி முதலீடு செய்திருந்த வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதுகுறித்து பாட்னாவைச் சேர்ந்த வியாபாரி ரஷான் ஷா கூறியபோது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பாஜக கொடிகளை வாங்கி வைத்திருந்தேன், ஆனால் அந்த கட்சி தோல்வியை தழுவியிருப்பதால் யாரும் கொடிகளை வாங்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

பாஜக கட்சி அலுவலகங்கள் முன்பு ஏராளமான பட்டாசு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகள் மாறியதால் அந்த வியாபாரிகள் தங்கள் இடத்தை உடனடியாக மாற்றி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் அலுவலகங்களுக்கு முன்பு கடை விரித்தனர்.

குறள் இனிது: ....வாய்ப்பை விட்டுடாதீங்க, தூள் கிளப்புங்க! ......சோம.வீரப்பன்


இன்று காலையில் எழுந்ததும் நீங்கள் குடித்தது காபியா, டீயா? கும்பகோணமோ, பெங்களுரோ காபிக்குத் தனிமவுசு தான்! பில்டர் காபி, காப்பிசினோ, பிளாக் காபி என வேறுபட்டாலும், கொட்டும் மழையில் பால்கனியிலோ, சாலையோரக் கடையிலோ அமர்ந்து கொண்டு ஆவி பறக்கும் காபியை மெல்ல மெல்ல ரசித்துக்குடிப்பது அலாதி மகிழ்ச்சிதான்! இந்தக் காபியை வைத்தே பெரிய கலக்குகலக்கி பணத்தைக் கொட்ட வைத்துள்ளனர் காபிடே நிறுவனத்தினர்.

20 வருடங்களில் சுமார் 1400-க்கும் மேல் கிளைகள்! விற்பனை ரூ.2,500 கோடியாம்!! அரட்டை அடிப்பதற்காகவே மக்கள் காபி குடிக்க வருவார்கள் எனும் மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்து அதையே பெரும் வியாபாரமாக்கி விட்டார்கள்!!!

நீங்கள் தங்க நகையை அடகுவைத்துக் கடன் வாங்கியிருக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயம் முத்தூட் பைனான்ஸ் பற்றித் தெரியாமல் இருக்காது. 128 வருட பழமையான நிறுவனம் என்றாலும், அவர்கள் விசுவரூபம் எடுத்தது 2011-12ல் தான். தங்கம் விலை தாறுமாறாக ஏறியதும், முன்னமே அடகு வைத்த நகையின் மேலேயே அதிகப்பணம் பெற்றுக் கொள்ளுங்கள் எனும் தனித்துவம் காட்டினார்கள்; தங்கத்திற்குக் கதவைத் திறந்து கொண்டார்கள்! இன்று அவர்களுக்கு 4000-க்கும் மேலே கிளைகள்.

நம்ம ஊர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸையே எடுத்துக் கொள் ளுங்கள். மைசூர்பாக்கு எனும் நமது பாரம்பரிய இனிப்பை மைசூர்பா என்று பெயர்சுருக்கி, பெயர்சூட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டு சென்று விட்டார்கள்.

நாம் நம் வாழ்வில் பலமுறை தற்பொழுது சூழ்நிலை சரியில்லை என வருத்தப்படுகின்றோம். அச்சந்தர்ப்பங்களில் அடக்கி வாசிப்பது சரிதான். ஆனால் சில சமயங்களில் நாமே எதிர்பார்க்காத அளவில் சாதகமான சூழ்நிலையும் அமைவது உண்டா இல்லையா? கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு வரும் பொழுது உடனே அதைப் பயன்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளையும் செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர்.

வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் வெற்றி பெற்றவர்கள் பலரிடமும் காணப்படும் ஓர் ஒற்றுமை. அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை; அது எடுத்துக் கொள்ளப்படுவது என்பார்கள்! வாய்ப்புகளும் அப்படித்தானே!! பிஎஸ்என்எல் பல ஆண்டுகளாக இருந்துவரும் நிறுவனம். வீட்டுத் தொலைபேசியின் உபயோகம் குறைந்து, கைபேசியின் ஆதிக்கம் தொடங்கிய பொழுது மகத்தான வாய்ப்புகள் உருவாகின. ஆனால் அந்நிறுவனம் கோட்டை விட்டது. அக்கோட்டையை ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பிடித்துக் கொண்டன.

வாய்ப்புகளை நாம் தவறவிடுவதற்குக் காரணம் அவை கடினமான சவால்களைப் போலத் தோற்றமளிப்பதுதான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன். எனவே அரிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். தப்பிவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். வெற்றிக் கொடி நாட்டுங்கள்!

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல் (குறள் 489)

தொடர்புக்கு: somaiah.veerappan@gmail.com

NEWS TODAY 26.01.2026