Monday, December 7, 2015

2 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை: புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

Dinamani

By சென்னை,

First Published : 07 December 2015 02:40 AM IST





தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த இரு நிலைகளால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால், ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்ட மக்களை அச்சம் அடையச் செய்துள்ளது.
மழை எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைமை இயக்குநர் எஸ்.பாகுலேயன் தம்பி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த சில நாள்களுக்கு முன் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்து, கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு: இரு நிலைகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில், பலத்த, மிக பலத்த மழையும் பெய்யும். சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையிலான கடலோர மாவட்டங்களில், 60 மி.மீ. முதல் 120 மி.மீ. வரை மழை பெய்யும் வாய்ப்புண்டு. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னை மாநகரில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒரு சில நேரங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை இருக்கும்.
பலத்த காற்று எச்சரிக்கை: கடலோரப் பகுதியில், வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றார் பாகுலேயன் தம்பி.
அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம்: இதற்கிடையே, சென்னையில் கடந்த 3 நாள்களாக மழை சற்று ஓய்ந்திருந்ததால் சனிக்கிழமை (டிச. 5) முதல் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பால், பெட்ரோல், டீசல், உள்ளிட்ட அத்தியாவசப் பொருள்கள் தட்டுப்பாடு குறைந்து விநியோகம் சீரடைந்து வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையிலும் செயல்பட்டன. 50 சதவீதம் ஏ.டி.எம்.கள் செயல்பட்டன. பால், தயிர் விநியோகம் ஓரளவு சீரடைந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் செயல்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த மக்களுக்கு நூற்றுக்கணக்கான தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றன. ஆனாலும், இந்த நிவாரணப் பொருள்களை முறையாக வழங்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
படிப்படியாக மின் விநியோகம்: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை நகரில் மின் விநியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள மணலி, எம்.கே.பி. நகர், சிட்கோ நகர், முடிச்சூர், அனகாபுத்தூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், மேற்கு மாம்பலம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
மீண்டும் ரயில், விமான சேவை: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் திங்கள்கிழமை (டிச. 7) முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபோல் கடந்த டிசம்பர் 2 முதல் மூடப்பட்டிருந்த சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. புறநகர் மின் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் மோசமாக இருந்தாலும் பேருந்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் மழை பெய்த தொடங்கியதால் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 2 நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீஸார், ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 லட்சம் பேர் பத்திரமாக மீட்பு
சென்னை, புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டோர் 14,32,924.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள படகுகள் 600.
நிவாரண மையங்கள் 5,554.
விநியோகிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் 85,98,280.
நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் 24,220.
முகாம்களில் பயன்பெற்றவர்கள் 20,17,244.
கால்நடை மருத்துவ முகாம்கள் 1,536.
சிகிச்சை பெற்ற கால்நடைகள் 1,55,007.
முகாம்களில்விநியோகிக்கப்பட்ட பால்பவுடர் 453 மெட்ரிக் டன்
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வெள்ளப் பாதிப்பு, பலத்த மழை ஆகிய காரணங்களால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு தொடர் மழையால், நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, நவம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மட்டும் பள்ளிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

Sunday, December 6, 2015

நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து!

நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து!

ற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும்.

இதன் சிறப்பு,  ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட.

இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இப்போதுள்ள டெக்னாலஜியில் இது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடின்பர்க் யுனிவர்சிட்டி பேராசிரியர் 'ஹரால்டு ஹாஸ்' ன் வழிகாட்டுதலி்ல் அமைக்கப்பட்ட குழு இந்த சாதனையை படைத்துள்ளது. தரைத்தளத்திற்கு இணையாக  இந்த ஒளி பரவுகிறது. அதனால்   நெட்வொர்க்கின் திறனை இது அதிகப்படுத்துகிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்படும் ஒளி அலைகள் சுவர்களில் ஊடுருவ இயலாது என்பது இதன் ஒரு  குறை.
இது குறித்து பேராசிரியர் ஹாஸ் கூறுகையி்ல், " இதன் எளிய உள்கட்டமைப்பு இதனை பரவலாக பயன்படுத்தப்படும்படி வழிவகை செய்கிறது. இனி வரும் காலங்களில் ஒளி விளக்குகளால் மட்டுமல்லாமல், இந்த LI-FI மூலம் உலகம் பசுமையாக மின்னப்போகிறது" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தற்போதைய வேகமான உலகம்,  இன்னும் அதிவிரைவான உலகமாக மாறப்போகிறது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

-ப.பிரதீபா
(மாணவப் பத்திரிகையாளர்)

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வடமாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! vikatan news

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(ஞாயிறு) அதிகாலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. 
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு  மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. 

காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், கடலூர்  கடலோர மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

குமரிக்கடல் பகுதியில் நிலைக் கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையுடன், தென்மேற்கு வங்க கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்றும் உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையில் வட கடலோர மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்யும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும். 

சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் தப்பாத எம்.ஜி.ஆர் இல்லம்; வேதனையில் ரசிகர்கள்


சென்னை; முன்னாள் முதல்வர், அமரர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த வீடு வெள்ளத்தில் சிக்கி, அவர் சேகரித்து வைத்திருந்த பரிசுப் பொருட்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பில் உள்ளனர். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியிருக்கிறது. கனமழையால் பாதிக்காதவர் எவருமில்லை என்ற அளவில் மழையின் பாதிப்பு தமிழகத்தை ஆட்டிப் படைத்திருக்கிறது. சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக இன்னும் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. 

இந்நிலையில் சென்னை ராமாவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் இல்லமும் மழை நீரால் சூழப்பட்டது. முன்பகுதியில் எம்.ஜி.ஆரின் உறவினர்களும் பின்புறம் உள்ள கட்டிடத்தில் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளியும் இயங்கிவருகிறது.

மழை நீர் சூழ்ந்ததால் காது கேளாத பள்ளியில் படித்து வரும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 2–வது மாடியில் தஞ்சம் அடைந்திருந்தனர். கடந்த சில தினங்களாக தத்தளித்த அவர்களை மீனவர்கள் குழு படகுடன் சென்று மீட்டது.

இந்நிலையில் நேற்று அங்கு வெள்ளம் நீர் வடிய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் வசித்து வந்த எம்.ஜி.ஆரின் உறவினர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மீண்டும் இல்லம் திரும்பினர். இதையடுத்து உடனடியாக எம்.ஜி.ஆர். இல்லத்தை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கியது.
அப்போது தரைதளத்தில் எம்.ஜி.ஆர். தம் காலத்தில் பயன்படுத்திய கிராமபோன், பரிசுப்பொருட்கள், எம்.ஜி.ஆர். தொடர்பான ஆவணங்கள், எம்.ஜி.ஆர்.–ஜானகி அம்மாள் பயன்படுத்திய பொருட்கள் பல சேதமடைந்தும் பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டின் முன்பகுதியும் பெரும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் எம்.ஜி.ஆர் அபிமானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வெள்ளத்தில் மூழ்கியது இது முதன்முறையல்ல. கடந்த 82 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அவரது தோட்டம் மூழ்கியது. 

அப்போது எம்.ஜி.ஆரும் அவரது மனைவி ஜானகி அம்மையாரும் மவுண்ட்ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தற்காலிகமாக சிலநாட்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு சில ஆலோசனைகள்...


..Dinamani


By ஆசிரியர்

First Published : 03 December 2015 01:56 AM IST


இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும். திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர். ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல்.
முகாம்களுக்கு வராமல் வெளியே இருக்கும் சென்னை மக்கள் சொல்லொணா சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். மீட்புப் படையினர் படகுடன் வீடு தேடி வந்து மீட்டுச் சென்றபோதிலும், குழந்தைகள், பெண்களை மட்டும் அனுப்பிவிட்டு ஆண்களும் பெரியவர்களும் இன்னமும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளம் புகுந்த வீடுகளில் கிடைத்தது லாபம் என்று திருடர்கள் புகுந்து விடுகிறார்கள். அந்த அச்சத்தாலேயே இன்னமும் முற்றிலுமாக வெளியேறாமல் இருக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களது வீட்டில் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் உணவு சமைக்கப் போதுமான பொருள்கள் உள்ளன. ஆனால், சமைப்பதற்கான தண்ணீர்தான் இல்லை.
மழை வெள்ளம் தெருவெல்லாம் ஆறாய்ப் பெருகி ஓடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மின் இணைப்பைத் துண்டித்து விட்டிருக்கிறது. அதனால், மோட்டார் வேலை செய்யாத நிலையில், தண்ணீர் இல்லாமல் குடும்பங்கள் அவதிப்படுகின்றன.
சென்னை மக்களுக்கு மிக இன்றியமையாத் தேவை பாதுகாக்கப்பட்ட குடிநீர். இதைக் குடிநீர் வாரியம் மட்டுமே வழங்கிட முடியாது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்தப் பேரிடர் காலத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்க முன்வர வேண்டும். ஒரு குடும்பத்துக்கு இத்தனை லிட்டர் என அளந்து கொடுத்தாலும் வரவேற்புக்குரியதே.
ஊர் முழுவதும் வெள்ளமும் சாக்கடையும் கலந்து கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளின் நீர்கூடத் தூய்மையானதாக இல்லை. இந்நிலையில், குடிநீர் விநியோகம்தான் சென்னை மாநகராட்சியின் முன்பாக உள்ள மிகக்கடினமான சவால். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாமல் போனால், தொற்று நோய்களும், விஷ ஜுரமும் பரவும் வாய்ப்பு ஏராளம். அந்த நிலைமையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாகிவிடும்.
இதுபோன்ற அடைமழை, புயல், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து, விஷக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அரசு நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பும், நிவாரணமும் வழங்குவதில் கவனம் செலுத்தும் அதேவேளையில், மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிவிடுதல் அவசியம்.
அனைத்துக் குடிநீர்க் குழாய்களையும் சரிபார்த்து, சாக்கடை கலக்கவில்லை என்பதை உறுதி செய்து, குடிநீர் விநியோகத்தை சீராக்கும்வரை, லாரிகள் மூலம் குடிநீரை விநியோகிப்பதே பாதுகாப்பானது. இதற்குப் போதுமான லாரிகள் சென்னை மாநகராட்சியில் கிடையாது. ஆனால் வெள்ளம் பாதிக்காத தமிழகத்தின் பல்வேறு நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள குடிநீர் லாரிகளை சில மாதங்களுக்கு சென்னைக்கு அனுப்பிவைக்கும்படி செய்தால், இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வாக அமையும். அரசுக்கு பொருள்செலவும் பெரிதாக இருக்காது.
மழைவெள்ளம் மண்ணுக்குள் இறங்காமல் தேங்கி நிற்கிறது. ஒரு நூற்றாண்டு காலம் சரியான மழையில்லாமல், விவசாயம் இல்லாமல் இறுகிப்போன மண்ணில் வெள்ளநீர் உடனடியாக இறங்கவில்லை என்றாலும், மெல்ல மெல்ல ஊறிச்செல்லும். முன்பு திடமான கட்டாந்தரை என்று கருதப்பட்ட நிலம், இந்த வெள்ளம் மண்ணுக்குள் இறங்கியபிறகு அவ்வாறாக இருக்காது. அடிமண் இளகும்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆட்டம் காணவும், நிலைகுலையவும் வாய்ப்புள்ளது. ஆகவே பொறியாளர் குழுவினர் பரிசோதிக்கவும், இந்தப் பகுதியில் மண் ஆய்வு நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீருக்கு அடுத்தபடியான சவால் சாலைகள். சென்னை மாநகரச் சாலைகள் அனைத்துமே இந்த மழையிலும் வெள்ளநீரிலும் பெயர்ந்துகொண்டுவிட்டன. சாலைகளை முழுமையாக மாற்றியமைத்தாக வேண்டும். தார்ச் சாலைகளுக்கு எதிரி மழைநீர்தான். ஆகவே, இன்று இயற்கை தந்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, சென்னையில் பிளாஸ்டிக் கலந்த தார்ச் சாலைகளை அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளலாம்.
அரசியல்வாதிகள் அகற்ற மறுத்த ஆக்கிரமிப்புகளை இயற்கை தானே அகற்றியிருக்கிறது. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடராதபடி பார்த்துக்கொள்வதுதான் சென்னை மாநகராட்சி செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமை. இவர்களுக்கு மாற்று வாழிடங்கள் அளிக்காமல், அதே இடத்தில் மீண்டும் பாதுகாப்பாக வீடு கட்டித்தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வாக்குவங்கி அரசியல் நடத்தக்கூடும். தேர்தல் நெருக்கத்தில் இத்தகைய அரசியலுக்கு இப்போது அடிபணிந்தால், மீண்டும் பாதிக்கப்படப்போவது இதே சென்னை, இதே மக்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்தான். அதே நேரத்தில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டியதில்லை.
அரசின் உடனடிக் கடமை குடிநீர் வழங்குதலும், சாலையைச் செப்பனிடுவதும்தான்.

பெருமழையல்ல, பேரிடர்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 04 December 2015 01:36 AM IST


மழைச் சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பிறகு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.940 கோடியைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ரூ.1,000 கோடி நிவாரண நிதி தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழக அரசு முன்பு கோரியிருந்த ரூ.8,481 கோடி என்பதே கூடப் போதுமானதாக இருக்காது என்பதால், இதை உடனடி நிவாரண உதவியாகத்தான் கருத முடியும்.
சென்ற வாரம் சென்னையில் அடைமழை கொட்டித் தீர்த்தபோது, அந்த மாமழை ஏற்படுத்திய சேத மதிப்பு ரூ.8,481 கோடி என்று கணக்கிடப்பட்டது. உடனடியாக ரூ,2,000 கோடி மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தவுடன் ரூ.940 கோடியைப் பிரதமர் வழங்கினார். தற்போது கடந்த மூன்று நாள்களில், சென்னை மாநகர் மீதான பெருமழையின் பழிதீர்ப்புப் படலத்தின் இரண்டாம் தாக்குதலில், சேதத்தின் மதிப்பு இரண்டு மடங்குக்கும் மேலாகிவிட்டது.
மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழு வந்து, தனது ஆய்வுகளை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகு நேர்ந்த இரண்டாவது தாக்குதலில் நேர்ந்த சேதங்களும் பாதிப்புகளும் அந்த ஆய்வுக் குழுவின் கணக்கில் இருக்காது என்பது உறுதி. பேய்மழையின் இரண்டாவது தாக்குதலையும் மதிப்பீடு செய்து, தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை மீண்டும் திருத்தப்பட வேண்டியது அவசியம்.
நூற்றாண்டுப் பெருமழையின் முதல் தாக்குதலின்போது சில ரயில்கள் மட்டுமே ரத்தாகின. விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. வெளியூர் பேருந்துகள் அனைத்தும் இயங்கின. ஆனால், பெருமழையின் இரண்டாம் தாக்குதலில் ஐந்து நாள்களுக்கு விமான நிலையத்தை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு பகுதியிலான புறநகர் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இன்னமும்கூட ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
மழை பலி எண்ணிக்கை 269-ஆக உயர்ந்தது. 40% செல்லிடப்பேசி சேவைகள் செயலிழந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மீட்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். இவ்வளவு ஆன பின்னரும், சென்னை பெருமழையைப் பேரிடர் துயரமாக அறிவிக்காமல் இருக்கிறார்களே, ஏன்? இதிலும் கூடவா ஓரவஞ்சனை?
2013-ஆம் ஆண்டு உத்தரகண்டில் பெருமழை வெள்ளத்தால் கேதார்நாத் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்கியது. பிறகு, ரூ.7,346 கோடியை வழங்கியது. அந்தச் சேதம் கங்கைக் கரையோரம் மட்டுமே. உயிரிழப்பும் கட்டுமானங்களும் மட்டுமே சேதமடைந்தன. ஆனால், சென்னை மாநகரம் மட்டுமல்ல, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
உத்தரகண்ட் பாதிக்கப்பட்டபோது, பொதுத் துறையின் நவரத்ன நிறுவனங்கள் ஓடிவந்து உதவின. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறுவனமும் பல கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே ரூ.125 கோடியை வழங்கியது. இது நீங்கலாக, பல்வேறு அமைப்புகளும் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் உள்பட) தனியாக நிதி வசூலித்து வழங்கின.
உத்தரகண்ட் வெள்ளத்தின்போது அனைத்து மாநிலங்களும் உடனடியாக நிதி வழங்கின. தமிழகத்தின் தலைநகர் சிதைந்து கிடக்கும் நிலையில், கர்நாடகமும், பிகாரும் தலா ரூபாய் ஐந்து கோடி வழங்க முன்வந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் ஏன் இன்னும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை என்று தெரியவில்லை. உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடுத்த நாளே தமிழக அரசு ரூபாய் ஐந்து கோடி அறிவித்தது. ஆனால், இன்று தமிழ்நாட்டுக்கு உதவிட இன்னமும் ஏன் வட மாநிலங்கள் தாமதிக்கின்றன? இது தாமதமா, தயக்கமா?
சென்னையின் துயரத்தை ஆங்கிலக் காட்சி ஊடகங்களும், வட இந்திய ஊடகங்களும் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. உத்தரகண்ட் மாநிலத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் சென்னை பேரிடருக்குத் தரப்படவில்லை.
தமிழகத்தின் ஊடகங்கள், சென்னைப் பேரிடரின் தீவிரத்தையும், அது ஏற்படுத்தியுள்ள சேதங்கள் ஒவ்வொரு பிரிவிலும் எத்தகையவை, இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை காலம் ஆகும், சேத மதிப்பு என்னவாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள், துறை சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, மத்திய அரசுக்குப் போட்டியாக தனி மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தொலைக்காட்சி ஊடகங்களின் பெரும்பாலான நேரமும், சாதாரண மக்களின் கோபக் குரல்களை மட்டுமே ஒளிபரப்பி அரசியலுக்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்காமல், தமிழக அவலம் குறித்து மாநிலங்கள் அவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பேசியிருப்பது வரவேற்புக்குரியது. ஆளும் கட்சியின் கோரிக்கைகளைவிட எதிர்க்கட்சிகள் பிரச்னையின் கடுமையை எடுத்துரைக்கும்போதுதான், மற்றவர்களுக்கு நிலைமையின் தீவிரம் உறைக்கும். மழை நின்ற பிறகு, வெள்ளம் வடிந்த பிறகு ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுப் பரவும் அபாயத்தைத் தடுக்கவும், எதிர்கொள்ளவும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிற அவரது எச்சரிக்கையில் அர்த்தமுள்ளது. கனிமொழி குறிப்பிட்டிருப்பதுபோல, போதுமான அளவு படகுகளையும், மருத்துவ உதவியையும், தமிழகத்துக்கு உடனடியாக அனுப்பித் தருவது மத்திய அரசின் கடமை.
மத்திய அரசு இந்தப் பேய்மழையை தேசியப் பேரிடராக அறிவிப்பதும், இழப்பை மறு மதிப்பீடு செய்வதும் இன்றியமையாதது!


மழை சற்று ஓய்ந்ததால் சென்னை மக்கள் நிம்மதி; ஒரு சில பகுதிகளில் இயல்புநிலை மெதுவாக திரும்புகிறது; இன்னும் வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு-- நிவாரண பணிகள் தீவிரம்; வெளியூர்களுக்கு பஸ்- ரெயில்கள் ஓட தொடங்கின

logo
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST
பதிவு செய்த நாள்:
ஞாயிறு, டிசம்பர் 06,2015, 5:59 AM IST

மழை சற்று ஓய்ந்ததால் சென்னை நகரில் சில பகுதிகளில் மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது. வெள்ளம் குறையாத இடங்களில் மீட்பு–நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள் ஓட தொடங்கின.
`
சென்னை,

கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்து உலுக்கிவிட்டது.

மீட்புப்பணி

மழை வெள்ளத்தின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். உணவு, பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர், மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இயல்புநிலை திரும்புகிறது

தற்போது மழை சற்று ஓய்ந்து இருப்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் விடுவிப்பது குறைந்துள்ளதால் அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளத்தின் அளவு சற்று குறைந்து உள்ளது. சில பகுதிகளில் வெள்ள நீர் வடிய தொடங்கி இருப்பதால், அங்கு மெதுவாக இயல்புநிலை திரும்புகிறது.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப்பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தினர். ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து இருந்தனர்.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக வாகனங்கள் குவிந்தன.

மின்சார ரெயில் சேவை

மழை வெள்ளத்தால் பாதித்திருந்த சென்னை புற நகர் மின்சார ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்திருந்தாலும், தற்போது எழும்பூர்–தாம்பரம் இடையே மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தொலைத்தொடர்பு சேவையை பொறுத்தமட்டில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட தரைவழி தொலைபேசி இணைப்புகள், செல்போன் சேவைகள் ஓரளவு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளன.

தென் சென்னையில் பல இடங்களில் மழை, வெள்ளத்தால் மின் விபத்துக்கள் நேராமல் தடுக்கும் வகையில், கடந்த 2 நாட்களாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இப்போது நிலைமைக்கேற்ப, மின் சப்ளை மீண்டும் தொடங்கி உள்ளது.

வெளியூர்களுக்கு பஸ்–ரெயில்கள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின. ஏராளமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் மற்றும் சென்னை வழியாக செல்லும் ரெயில்களும் நாளை (7–ந் தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. என்றாலும் நேற்று முதல் ரெயில்கள் ஓடத் தொடங்கின.

ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கான கட்டணம் (கிளார்க் கட்டணம் மட்டும் கழித்து) முழுமையாக திரும்ப தரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.டி.ஆர். என்னும் டிக்கெட் டெபாசிட் ரசீதை அளித்து கட்டணங்களை திரும்பப் பெறலாம்.

டிசம்பர் 1–ந் தேதியில் இருந்து ரத்தான டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 4–ந் தேதியில் இருந்து 10–ந் தேதி வரையில் டிக்கெட் டெபாசிட் ரசீது வழங்கப்படும். ரெயில் புறப்படும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு ‘ரீபண்ட்’ விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிவாரண பணிகள் தீவிரம்

மழை சற்று ஓய்ந்துள்ள போதிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. வெள்ளம் வடியாத இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புறநகர் பகுதிகளான மணலி, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், பழைய மாமல்லபுரம் சாலை, வரதராஜபுரம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை போட்டன.

ராணுவ தளபதி தகவல்

மழை, வெள்ளத்தின் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ராணுவ தளபதி தல்பீர் சிங், சென்னை வந்து உள்ளார். நேற்று அவர் 2–வது நாளாக விமானத்தில் பறந்து வெள்ள சேத நிலைமையை ஆய்வு செய்தார். அவருடன் பொது கட்டளை அதிகாரியும் சென்று இருந்தார்.

இது தொடர்பாக ராணுவம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘சிவில் நிர்வாகத்துக்கு தேவைப்படுகிறவரை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவ வீரர்கள், மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். தேவைக்கேற்ப கூடுதலான படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கூடுதலான பொறியியல் சாதனங்களுடன், மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என ராணுவ தளபதி தல்பீர் சிங் தெரிவித்து இருக்கிறார் என கூறப்பட்டு உள்ளது.

தாம்பரம்

வெள்ள பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்து 500 பேரை ராணுவத்தினர் பத்திரமான இடங்களுக்கு மீட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

‘தாம்பரம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், டிபன்ஸ் காலனி, தி.நகர், கோட்டூர்புரம், காசி தியேட்டர், பெருங்குடி மற்றும் பிற பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியில் உள்ளன. வெள்ளத்தால் ஏற்படுகிற உடல் நல பாதிப்புகளை சந்திக்கிற வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களை, மருந்தகங்களுடன் அமைப்பதற்கு ராணுவம் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது’ எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படை

ராணுவ வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தாம்பரம், முடிச்சூர், கோட்டூர்புரம், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளையும், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் பணிகளையும், அந்த படையின் தலைமை இயக்குனர் ஓ.பி.சிங் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

16 ஆயிரம் பேர் மீட்பு

சென்னை வெள்ள மீட்பு–நிவாரண பணியில் 20 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் குழு, இப்போது புதிதாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ஏறத்தாழ 1,600 வீரர்கள், ஐம்பது குழுக்களாக பிரிந்து மீட்பு, நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 21 அதிகாரிகளும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர். எங்கள் படையினர், இதுவரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த அளவுக்கு வீரர்களை ஈடுபடுத்தியது இல்லை.

200 படகுகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் தவித்த 16 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இரவு–பகலாக...

தொடர்ந்து மீட்புப் பணி இரவு–பகலாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற பொருட்களும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் கூடுதல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், மீண்டும் மழை தொடங்குவதற்கு முன் நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதில் எங்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் உறுதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் கூட்டம்

இதற்கிடையே டெல்லியில் சி.எம்.ஜி. என்னும் நெருக்கடி மேலாண்மை குழுவின் கூட்டம், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ராணுவம், உணவு, ரெயில்வே, விவசாயம், சுகாதாரம், தொலை தொடர்பு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத்துறை, தேசிய பேரிடர் படை உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை வெள்ள மீட்பு, நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இயன்றவரையில் குடிநீர், பால், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சென்றடைவதற்கு தேவையான பணிகளை முழுவீச்சில் நடத்துமாறு அதிகாரிகளுக்கு ராஜீவ் மகரிஷி உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NEWS TODAY 27.01.2026