Thursday, January 7, 2016

கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல: அமலாக்கப் பிரிவு வாதம் ..எம்.சண்முகம்

Return to frontpage

டிபி குரூப்’ நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி ரூபாய் சென்றிருப்பது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல என்று நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி பணபரிமாற்றம் நடந்தது தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் உட்பட 16 பேர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கப்பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக ஆஜரான அமலாக்கப்பிரிவு சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘டிபி குரூப் நிறுவனம் வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியுள் ளது. இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு கைமாறாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வர்த்தகம் எதிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. கலைஞர் டிவி-க்கு முறையற்ற வழியில் பணத்தை கொடுக்கவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணபரிமாற்றம் நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல. ஒரு விவசாய நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணம் தர வேண்டிய அவசியம் இல்லை. எதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் இல்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த பிணை உத்தரவாதமும் காட்டப்படவில்லை. கணக்குகள் அனைத்தும் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளன’ என்று வாதிட்டார்.

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் உடனடி பணி நீக்கம்: கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை..hindu tamil

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் உடனடி பணி நீக்கம்: கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை

ஆந்திர மாநில கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா நேற்று அனந்தபூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தாடிமர்ரி மண்டலம், ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஒரு வகுப்பில் ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் சர்தார் பாபு வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அங்கு முதன்மை செயலாளர் சிசோடியா, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்ததை கண்டதும், வகுப்பில் இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
பின்னர் வகுப்புக்குள் சென்ற முதன்மை செயலாளர், பாடத்தை நிறுத்த வேண்டாம் என கூறி தொடர்ந்து பாடம் நடத்தும்படி ஆசிரியர் சர்தார் பாபுவை கேட்டுக்கொண்டார். ஆனால் சர்தார் பாபு ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்காமல் பாடம் நடத்தினார்.
இதைக் கண்டு முதன்மை செயலாளர் சிசோடியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆசிரியர் சர்தார் பாபுவை சோதிப்பதற்காக அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடி னார். ஆனால் பதில் அளிக்க முடியாமல் ஆசிரியர் திணறினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிசோடியா, ஆசிரியர் சர்தார்பாபுவை உடனடியாக பணிநீக்கம் செய்து, அதற்கான உத்தரவையும் வகுப்பிலேயே வழங்கினார்.

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

சமஸ்
C  

1
நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?
பட்டத்து யானைகள் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை அல்ல என்றே தம்மைக் கருதுகின்றன. அதிலும் எறும்புகள் அதிகபட்சம் உழைப்பதற்கும் ஓட்டுப் போடுவதற்கும் மட்டுமே உரிமயுடையவை என்றும் அவை கருதுகின்றன. நம்மூரில் ஜனநாயகத்துக்கான அதிகபட்ச மதிப்பு அவ்வளவுதான். சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டிகளில் நாஞ்சில் சம்பத் இதைத்தான் அவருக்கே உரிய திராவிட நடையில் சொல்லியிருக்கிறார்: “எறும்புகள் சாகின்றன என்பதற்காகப் பட்டத்து யானைகள் ஊர்வலம் போகாமல் இருக்க முடியுமா?”
நாஞ்சில் சம்பத் அதிமுக கட்சிப் பதவியிலிருந்து ‘விடுவிக் கப்பட’ அவர் கொடுத்த பேட்டிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் தலைமை சொல்லவில்லை. என்றாலும், மக்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். மேலும், “அதுதான் உண்மை யான காரணம் என்றால், அவர் பதவி நீக்கப்பட்டது சரிதானே?” என்றும் கேட்கிறார்கள். அதுதான் காரணமா என்று நமக்குத் தெரியாது. ஆனால், அதுதான் காரணம் என்றால், அங்கே ஒருவர்கூடப் பதவியில் நீடிப்பது நியாயமாக இருக்காது.
நாஞ்சில் சம்பத் ஒரு பதச் சோறு
நாஞ்சில் சம்பத் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மேடைப் பேச்சில் தேறியவர். பேட்டிகளும் இக்கட்டான கேள்விகளும் அவருக்குப் புதியவை அல்ல. “ஐயோ, மேடையிலேயே அவர் கொச்சை கொச்சையாகப் பேசுவாரே!” என்று நீங்கள் கேட்பீர்களேயானால், மேடைக்குக் கீழே அவர் இன்னும் பேசுவார் என்பதே பதில். நாஞ்சில் சம்பத்திடம் வெளிப்பட்டது ஆட்சியாளர்களின் மமதைக்கு ஒரு பதம் சோறு. சுற்றிலும் விளக்குகள் எரிய, கேமராக்கள் முன் தான் பேசுவதைக் கோடிப் பேர் பார்ப்பார்கள்; விமர்சிப்பார்கள் எனும் எல்லைக்குட்பட்ட சூழலில், பொதுவெளிக்கு ‘நன்கு பயிற்சி பெற்ற’ சம்பத்தே இப்படிப் பேசுகிறார் என்றால், ஏனையோர் எப்படிப் பேசுவர்?
இந்த வெள்ளம் தொடர்பாக ஒரு மாதமாகப் பல்வேறு தரப்பினருடனும் ஊடகவியலாளர்கள் உரையாடிக்கொண்டிருக்கிறோம். என்னிடம் பேசிய ஒரு அதிமுககாரரும் பரிவோடு பேசி நான் கேட்டதில்லை. “ஆமாம், வெள்ளம் வந்துச்சு… ஆத்தோரம் இருந்தா அடிச்சுக்கிட்டுப்போவத்தான் செய்யும். நாங்க என்னா பண்ண முடியும்? கூட விழுந்து சாவணும்கிறீங்களா?” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டவர்களே அதிகம்.
அதிகார வாசம் ஏற்படுத்தும் மமதை ஒரு கட்டத்துக்கு மேல் உடலில் தோல் மாதிரி மனதுக்குள் படர்ந்துவிடுகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அரசியல் யானைகள் தங்களை எப்போதும் பட்டத்து யானைகளாகவே கருதுகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையின்போது உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றனவா? குண்டுகள் தமிழர்கள் மீது கொத்துக்கொத்தாக விழுந்துகொண்டிருந்தபோது, “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்றார் கருணாநிதி. “போர் ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றார் ஜெயலலிதா.
வார்த்தைகள் ஒரு வெளிப்பாடு. அவற்றைவிட ஆயிரம் மடங்கு அர்த்தமுள்ளவை செயல்பாடுகள். “ஒரு வீட்டில் ஒப்பாரிச் சத்தம் கேட்கிறது என்பதற்காக, பக்கத்து வீட்டில் கல்யாணக் கச்சேரியைத் தவிர்க்க முடியுமா?” என்று கேட்ட நாஞ்சில் சம்பத்தின் வார்த்தைகள், ஒரு கட்சியின் அலட்சியத்தின் வெளிப்பாடு என்றால், வெள்ளப் பிணங்கள் சுடுகாட்டைச் சேரும் முன் மதுக் கடைகளைத் திறந்த ஒரு அரசின் செயல்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
செய்தியாளர்கள் குணசேகரனும், ரங்கராஜ் பாண்டேவும் எழுப்பிய கேள்விகள் மக்களின் கேள்விகள். வெளியே இதைவிடவும், பல மடங்கு கோபத்தோடும் கேள்விகளோடும் இருக்கிறார்கள் மக்கள். அன்றைய தாய ஆட்டத்தில் நிகழ்தகவில் விழுந்த புள்ளி நாஞ்சில் சம்பத். வேறு யாரேனும் அங்கு உட்கார்ந்திருந்தால் மட்டும் என்ன பதில் சொல்லிவிடப்போகிறார்கள்? “ஆமாம், எங்கள் கட்சி தவறிழைத்துவிட்டது. மக்கள் இன்னலில் உழன்றுகொண்டிருக்கும்போது கட்சிக் கூட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் இவ்வளவு பிரம்மாண்டமும் இப்படியான கொண்டாட்டமும் நடந்தது அநாகரிகம். எங்கள் இயக்கம் சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்று பேச இன்றைக்கு இங்கே எந்த அரசியல்வாதிக்காவது மனசாட்சி இருக்கிறதா அல்லது அப்படியான ஜனநாயகம்தான் எந்தக் கட்சியிலாவது இருக்கிறதா? எந்த நடராஜனோ ஆட்சியைப் பற்றி விமர்சித்தால், எந்த நடராஜனையோ கட்சியைவிட்டு நீக்கிச் சேர்க்கும் அளவுக்குத்தானே உட்கட்சி ஜனநாயகம் இங்கே இருக்கிறது!
யூனூஸுடன் ஓர் உரையாடல்
ஓரிரு நாட்களுக்கு முன் முஹம்மது யூனூஸைச் சந்தித்தேன். இந்த மழை வெள்ளம் நமக்குக் காட்டிக்கொடுத்த நல்மனிதர்களில் ஒருவரான அதே யூனூஸ்.
“இங்கேதான் நுங்கம்பாக்கத்தில் சின்னதாக ஒரு அலுவலகம் நடத்துறேன். இணைய வர்த்தகம்” என்றார். “எது உங்களை மீட்புப் பணிக்கு உந்தித் தள்ளியது?” என்ற கேள்விக்குப் பின் அவர் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நாம் இன்றைய அரசியல்வாதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது.
“இந்த டிசம்பர் மழைக்கு முன்னாடி நவம்பர்ல ஒரு பெருமழை பெஞ்சுது இல்லையா, அதுதான் என் வாழ்க்கையில திருப்புமுனை. அதுவரைக்கும் என் வாழ்க்கையோட குறிக்கோள் நூறு கோடி ரூபா சம்பாதிக்கிறது. வேகமா சம்பாதிச்சுக்கிட்டும் இருந்தேன். நவம்பர்ல அந்த மழை பெஞ்ச நாளுக்கு மறுநாள் வீட்டுலேர்ந்து வீதிக்கு வந்தப்போ நிறையப் பேர் வீட்டைவிட்டு வெளியே வந்து நின்னதைப் பார்த்தேன். ஓர் இளம்பெண் கைக்குழந்தைக்கு வீதியில உட்கார்ந்து பால் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மனசு என்னமோ மாதிரி இருந்துச்சு.
எனக்குச் சொந்தமான வீடுகள்ல சில வீடுங்க காலியா இருந்துச்சு. வீதியில நின்ன சில குடும்பங்களை அழைச்சுக்கிட்டு வந்து அங்கே தங்க வெச்சோம். தலை மேல கை வெச்சி அவங்க வாழ்த்தினப்போ, வாழ்க்கையோட அர்த்தமே வேறன்னு புரிஞ்சுச்சு.
அடுத்த மழை பிடிச்சப்போ சமூக வலைதளங்கள்ல நண்பர்க ளோட சேர்ந்துக்கிட்டு முடிஞ்சவரைக்கும் உதவிக்கிட்டு இருந்தோம். டிசம்பர் 1 அன்னைக்கு உதவி கேட்டு நூத்துக்கணக்கானவங்க தொடர்ந்து போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அப்படித்தான், ஊரப்பாக்கத்துலேர்ந்து ஒரு அழைப்பு வந்துச்சு.
`வெள்ளம் ஆறா அடிச்சிக்கிட்டுப்போவுது. எல்லாம் மாடில குழந்தைங்களோட நிக்கிறோம். எப்படியாவது காப்பாத்துங்க'ன்னு. அரசாங்கத் துறைகள் யாரையும் அணுக முடியலை.
ஆயிரக்கணக்கானவங்க சிக்கியிருக்காங்க. பெரிய வெள்ளம். படகுங்க இல்லாம உதவிக்குப் போக முடியாது. கடக்கரையை நோக்கி ஓடினோம். 20 படகோட்டிகளோட 9 படகுகளை எடுத்துக்கிட்டு ரொம்பக் கஷ்டங்களுக்கு மத்தியில போய்ச் சேர்ந்தோம். நாங்க போனப்போ, அது ஊரா இல்லை. வெள்ளக்காடா இருந்துச்சு. குறைஞ்சது பத்தடித் தண்ணீ கடுமையான வேகத்துல ஆறாப் பாயுது. கும்மிருட்டு வேற. ராத்திரி மூணரை மணி இருக்கும். அப்போ ஆரம்பிச்சு மறுநாள் ராத்திரி ஒன்பதரை மணி வரைக்கும் போராடிக் காப்பாத்தினோம்.”
அப்படிக் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர்தான் நிறைமாதக் கர்ப்பிணி சித்ரா. தன் பிள்ளைக்கு இப்போது யூனூஸ் பெயரைச் சூட்டியிருக்கிறார். வெள்ளத்தில் உதவிக்கு அழைத்தவர்கள் யூனூஸுக்குப் பரிச்சயமானவர்களா? இல்லை. படகோட்டிகள் பரிச்சயமானவர்களா? இல்லை. “நீச்சல் தெரியுமா?” என்று கேட்டால், அதுவும் “தெரியாது” என்றார். அப்புறம் எப்படி திடீரென்று அந்த இருட்டில் கிளம்பிப்போனார்? ‘‘உயிருக்குப் போராடுற இடத்துல நம்மை வைக்காம, உதவுற இடத்துல நிறுத்தியிருக்கார் கடவுள். அப்போ உதவுறது கடமை இல்லையா?’’ என்றார். இந்த மீட்புப் பணியின்போது யூனூஸ் ஒரு இடத்தில் தவறி விழுந்திருக்கிறார். வெள்ளம் அடித்துச் செல்லவிருந்தவரை இழுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். “மொத்தம் எத்தனை பேரை மீட்டீர்கள்?” என்றேன். “1,500 குடும்பங்கள்” என்றார். கையைப் பிடித்துக்கொண்டேன்.
ஒரு யூனுஸால் 1,500 பேரை மீட்க முடிந்திருக்கிறது என்றால், சர்வ வல்லமையும் கொண்ட ஒரு ஆளுங்கட்சியினரால் இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்? தமிழகத்தில் எல்லா பெரிய கட்சிகளுமே மீனவர்கள் அணி என்று ஒன்றை வைத்திருக்கின்றன. உள்ளதிலேயே பெரியது ஆளுங்கட்சியின் மீனவர் அணி. ஒரு யூனூஸ் அழைத்தால் 20 பேர் ஓடி வருகிறார்கள் என்றால், ஆளுங்கட்சியினர் அழைத்திருந்தால் எத்தனை பேர் ஓடிவந்திருப்பார்கள்? இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்?
பரிவு எங்கே?
எது ஒரு யூனூஸைத் தன் உயிரையும் பொருட்படுத் தாமல் ஓடச்செய்ததோ, அது இல்லாததுதான் இன்றைக்கும் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினரை மமதையோடு பேசச் செய்கிறது. அன்பு - பரிவு - கருணை.
பட்டத்து யானைகள் வலியவை. பிரம்மாண்டமானவை. பட்டத்து யானைகள் பீடுநடைக்கு முன் எறும்புகளின் சாவுகள் ஒரு பொருட்டல்லதான். ஆனால், சக எறும்புகளை அவை கலங்கவைக்கும்; துன்புறுத்தும்; அச்சத்தில் ஆழ்த்தும்; ஒன்றுதிரட்டும். பட்டத்து யானைகள் பட்டத்து யானைகள்தாம். எறும்புகள் எறும்புகள்தாம். ஆனால், கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னாகும்? யோசிக்க வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

Wednesday, January 6, 2016

TAMIL NADU PLUS TWO EXAMINATION TIME TABLE 2016

AMRITA ADMISION NOTIFICATION 2016-17

நேருவும் நேஷனல் ஹெரால்டும்...


Dinamani


By தி. இராசகோபாலன்

First Published : 05 January 2016 12:56 AM IST


பிரசவ வேதனையைப் பெண்ணுக்கு மட்டும் ஏன் வைத்தான், என்று பல நேரங்களில் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால், பத்திரிகைக் குழுமத்தைச் சார்ந்தவர்கள் மறுநாள் வரவேண்டிய பத்திரிகையை, முதல்நாள் இரவே மூட்டைக் கட்டி அனுப்ப வேண்டுமென்பதில் படுகின்ற பாடுகள் இருக்கின்றனவே, அவற்றை எண்ணிய நேரத்தில் படைத்தவன் சமதர்மவாதிதான் என்பது புலப்பட்டது. இத்தகைய பெரும்பாடுகள் நேஷனல் ஹெரால்டு தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம் வரை அகலவே இல்லை.
பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மூளைதான் நேஷனல் ஹெரால்டு. லண்டனில் படிப்பை முடித்து நேரு அலகாபாத் திரும்பிய நேரத்தில், இன்டிபெண்டன்ட் எனும் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை மோதிலால் நேருவின் முழுமையான பொருளாதாரப் பின்புலத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது. நேரு அப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதலானார். ஆனால், மனிதவளம் இல்லாமல் போனதால் அப்பத்திரிகை அகால மரணமடைந்தது.
நேருவின் எழுத்துக்களில் இலக்கிய நயம் இல்லை என்று சிலர் விமர்சித்தபோது, "நான் ஓர் இலக்கியக்கர்த்தா அல்ல. ஆனால், ஒரு பத்திரிகை எழுத்தாளனைப்போல் இருக்கின்றேன்' என நவின்றார்.
இன்டிபெண்டன்ட் பத்திரிகை மறைந்த சோகம் நேருவைக் கப்பிக்கொண்டது. என்றாலும், அதுவே அடுத்தொரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் எனும் வேகத்தையும் தந்தது. காங்கிரஸ் கட்சியினுடைய நடப்புகளையும், போராட்டங்களையும் காஷ்மீரத்திலிருந்து, இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் ஆதங்கத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 09.09.1938 அன்று லக்னெளவில் தொடங்கினார்.
இதழியல் துறையில் ஒரு துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்த கே.ராமா ராவை நேஷனல் ஹெரால்டின் ஆசிரியராக்கினார் நேரு. இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில்கூட பத்திரிகைக்கு ஆல்பெர்ட் எனும் கனரக இயந்திரத்தை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தவர் நேரு. பத்திரிகையின் நோக்கம், சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது; எதையும் தியாகம் செய்து அதனைக் காப்போம் என்பதாகும்.
இந்தக் குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், இந்திரா காந்தி. கேபிரியல் எனும் கார்ட்டூனிஸ்ட் வரைந்த கார்ட்டூனுக்குக் கொடுத்த தலைப்பு அது. அதனை நறுக்கி இந்திரா, நேருவுக்கு அனுப்பினார். நேரு அதனைப் பத்திரிகையின் நோக்கமாக்கினார். இதனைப் பத்திரிகை உலகம், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையின் குறிக்கோளாகிய ‘Comment is free;’ but facts are sacred என்பதற்குச் சமமானதாகப் பாராட்டியது. ஆசிரியர் கே. ராமாராவ், எங்களுடைய மூலதனம் நேருபிரான். எங்களது முதல் வங்கி ஏழைகளின் சட்டைப் பையே என எழுதினார்.
நேஷனல் ஹெரால்டில் ராமா ராவின் எழுத்துக்கள் தீப்பந்தங்களாகவும், கண்ணி வெடிகளாகவும் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கலங்கடித்தது. ஆங்கிலேய அரசு பத்திரிகையின் மீது தனது கிடுக்கிப்பிடியை இறுக்கிப் பிடித்தது. முன்ஜாமீனாக ரூ.6,000/- கட்டச் சொன்னது. அதனைக் கட்டி முடித்தவுடன் மீண்டும் 12,000/- ரூபாயைக் கட்டியாக வேண்டும் அல்லது பத்திரிகை நிறுத்தப்படும் என அச்சுறுத்தியது. ஆத்திரமடைந்த நேரு, ஒரே ஓர் அறிக்கையினைப் பத்திரிகையில் வெளியிட்டார். உடனடியாக ரூ.42,000/- பொதுமக்களிடமிருந்து வந்து குவிந்தது.
ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி ராமாராவ் காரசாரமாக எழுதினார். லக்னெள சிறைச்சாலைக்குள்ளேயே தடியடி செய்து, விடுதலைப் போராட்ட வீரர்களை அடித்து நொறுக்கிய அநாகரிகச் செயலை, ரத்தம் கொப்பளிக்கத் தக்கவகையில் தீட்டிக் காட்டினார் ராமாராவ்.
ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசு, கறுப்புச் சட்டத்தைக் கையில் எடுத்து ராமா ராவைக் கூண்டிலேற்றி ஆறு மாத காலம் சிறையில் அடைத்தது. வெகுண்டெழுந்த நேரு, அலகாபாத்திலிருக்கும் ஆனந்தபவனத்தை விற்றாவது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்துவேன் என்றறிக்கை விட்டார். நேரு என்ற ஒரே ஓர் உறைக்குள், தேசியமும் பத்திரிகா தர்மமும் இரண்டு வாள்களாகக் கிடந்தன. என்றாலும், அதிகார வர்க்கம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை இழுத்து மூடியது.
மறுபடியும் நேஷனல் ஹெரால்டு 1945-இல் புத்துயிர் பெற்று எழுந்தது. மணிகொண்டா சலபதி ராவ் ஆசிரியராக வந்தார். நேருவுக்கு நெருக்கமான நண்பர். சலபதி ராவ், 30 ஆண்டுகாலம் அப்பத்திரிகையில் கோலோச்சினார். அமரர் ஏ.என். சிவராமன் கணக்கன் எனும் பெயரில் பத்திரிகை உலகத்தின் லகானைக் கையில் பிடித்திருந்ததுபோல, சலபதி ராவ் எம்.சி. எனும் பெயரில் (மணிகொண்டா சலபதிராவ்) அதிகார வர்க்கத்தை நெம்புகோல் போட்டு நெம்பினார்.
நேஷனல் ஹெரால்டில் நேருவின் எழுத்துக்கள் முழு வீரியத்தோடும், வேகத்தோடும் மின்சாரத்தைப் போல் பாய்ந்தன. போட்டி பத்திரிகையாளர் நேருவுக்கு ஒரு பத்திக்கு ரூ.150/- தருவதாகக் கூறி எழுத அழைத்தனர். ஆனால்,நேரு, பாரதியாரைப் போல,"காசு பெரிதில்லை நெஞ்சிலுள்ள காதல் பெரிது காண்' என மறுதலித்துவிட்டார். 1947-இல் நேரு பிரதமர் ஆனவுடன், பத்திரிகையில் மேலாண்மைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
நேஷனல் ஹெரால்டில் பொருளாதார நெருக்கடி வந்தது. பத்திரிகைக் குழுமம் முழுவதும் ஊதியம் வாங்காமலேயே பத்திரிகையை நடத்தினர்.
1968-இல் லக்னெள அலுவலகம் தில்லிக்கு இடம் பெயர்ந்தது. சலபதி ராவ் நேருவின் நண்பராக இருந்தபோதிலும், ஆட்சியின் தவறான அணுகுமுறைகளைக் கண்டிக்கத் தவறுவதில்லை. நேருவினுடைய ஆட்சிக்காலத்தில் பிகினி எனும் இடத்தில் ஓர் அணுச் சோதனை நடந்தது. அதனைக் குறித்துப் பத்திரிகை நிருபர் கேட்டபொழுது, பேட்டி தர மறுத்துவிட்டார் நேரு.
ஆனால், சலபதி ராவ் அது குறித்து நேருவிடம் எடுத்துச்சொல்லிவிட்டு, அது எமனின் ஏஜெண்ட் என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டினார். சலபதி ராவ் தலையங்கங்களைத் துல்லியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் எழுதுவார்.
சலபதி ராவின் நடுநிலைக்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டலாம். பண்டித கோவிந்த வல்லப பந்த் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, ஓர் அரசு விழாவில், விநாயகர் பூஜையை முடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். மதச்சார்பற்ற நாட்டில் ஓர் அரசு விழாவில் விநாயகர் பூஜை முடித்துவிட்டுத் தொடங்கியதைச் சலபதி ராவ், தலையங்கத்தில் கண்டித்துக் கடுமையான சொற்களால் காய்ச்சி எடுத்துவிட்டார்.
இது பிரதமர் நேருவின் பார்வைக்குச் சென்றவுடன், அவர் அதனைப் பல படிகள் எடுத்து எல்லா மத்திய அமைச்சர்களுக்கும், முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, எதிர்காலத்தில் அதுமாதிரி நடக்கக்கூடாது என எச்சரித்தார்.
மேலும், சலபதியின் போர்க்குணத்திற்கு மற்றொரு நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டலாம். ஒரு பெரிய பணக்காரக் கோடீஸ்வரன் வீட்டு நாய் செத்துப் போயிற்று. செல்வந்தர்கள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து, பிடிஐயில் எட்டுப் பத்திக்குப் படத்தோடு செய்தி வரும்படியாகச் செய்துவிட்டனர். அதனை எல்லாப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துவிட்டன.
அதே நாளில், ஓவியக்கலையில் உலகப் புகழ்பெற்ற மாமனிதர் அபீந்தரநாத் தாகூரின் மறைவும் நேரிட்டது. அதனை ஒரு சிறிய பெட்டிச் செய்தியில், அவருடைய மரணத்தைக் குறிப்பிட்டுவிட்டு, அவர் இரபீந்திரநாத் தாகூருக்கு உறவினர் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
இங்கிலாந்தில் ஓவியக்கலையில் வல்லுநர்கள் மேலும் தம் அறிவை அபிவிருத்தி செய்வதற்காக அபீந்திரநாத் தாகூரின் ஓவியக்கூடத்திற்கு வந்து போவது, சலபதி ராவுக்குத் தெரியும். அபீந்தரநாத் அவர்களின் ஆர்வத்தின் காரணமாகத்தான், இரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எனவும் சிலர் எழுதியிருக்கின்றனர்.
அத்தகைய உலகப் புகழ் பெற்ற ஓவியருக்குப் பெட்டிச் செய்தியும், கோடீஸ்வரன் வீட்டு நாய்க்கு எட்டுப்பத்தியில் இறுதி ஊர்வலத்தை வருணித்திருந்ததும், சலபதி ராவை நக்கீரப் பார்வைக்குக் கொண்டு சென்றது. தலையங்கத்தின் தலைப்பு: அ. தாகூர் - ஒரு நாய் - பிடிஐ என்பதாகும். தலையங்கம் எழுதிய தாள்கள் தீப்பற்றும் அளவுக்கு வார்த்தைகளால் வறுத்து எடுத்துவிட்டார்.
சலபதி ராவ் கடைசி வரை கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். பத்திரிகை உலகம் அவரைப் பத்திரிகைகளுக்காகவே வாழ்க்கைப்பட்டுவிட்டார் என எழுதியது. பத்திரிகை ஊழியர்களின் கண்ணியம் கிஞ்சித்தும் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொண்டார். பத்திராதிபர்கள் அத்துமீறி நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் அனுமதித்ததில்லை.
பல பெரிய மனிதர்களையும், பல பெரிய பிரச்னைகளையும் ஊர் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சலபதி ராவின் மறைவு, பரிதாபப்படத்தக்கதாக அமைந்தது. 1983-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் சிக்கித் தெருவோரமாக அவருடைய சடலம் கிடந்தது.
நேருவின் மறைவுக்குப் பிறகு நேஷனல் ஹெரால்டு, தாயை இழந்த ஊமைக் குழந்தை போலாயிற்று. காங்கிரஸ் கட்சி, அப்பத்திரிகை தனக்கு வாளும் கேடயமுமாக இருந்ததை மறந்தது. நிதிப்பற்றாக்குறையாலும், கடன் சுமையாலும் லக்னெளவில் இருந்த ஹெரால்டு கட்டடம் ஏலம் விடப்பட்டது.
ஊதியம் இல்லாத காரணத்தால், ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தி, குஷ்வந்த் சிங்கை அப்பத்திரிகையின் ஆசிரியர் ஆக்கினார். 2000 பத்திரிகைகள் தாம் விற்பனை ஆயின. குஷ்வந்த் சிங் நிலைமையை உணர்ந்து, ஊதியம் வாங்காமலேயே பணியாற்றினார். பி.டி.ஐ., யு.என்.ஐ.க்குரிய சந்தாக்கள் செலுத்தப்படாமையால், 2008-இல் இரட்டைப் பூட்டாகப் போட்டுப் பத்திரிகையை இழுத்து மூடினர்.
கவியரசர் கண்ணதாசன் பெற்ற பிள்ளையைப்போல் போற்றி வளர்த்த தென்றல் பத்திரிகை வேறொரு பெரிய முதலாளியால் வாங்கப்பட்டபோது, தன் கன்னத்தில் வடிந்த கண்ணீரைக் கவிதையாகத் தீட்டினார்:
அந்தோ என் செல்வம் ஆழிவாய்ப்
பட்டதம்மா
பந்தாடும் தென்றல், பாய்போட்டுத்
தூங்குதம்மா
பாண்டியனார் நாட்டில், பழம்பெரிய சோணாட்டில் தோன்றிய நாள்தொட்டுத் தொடர்ந்தோடும் தென்றலது,
ஆண்டி உடற்சாம்பல், அணுபோல்
பறந்ததம்மா
எனக் கண்ணதாசன் பாடியதுபோல், நேருவும், நேஷனல் ஹெரால்டு நின்று போனதைக் கல்லறையின் காதுகளின் வழியே கேட்டிருந்தால், கண்ணதாசன் அழுகையை ஆங்கிலத்தில் வடித்திருப்பார்.

ஜல்லிக்கட்டும் தீர்வும்!

Dinamani


By ஆசிரியர்

First Published : 05 January 2016 12:55 AM IST


கல்யாணத் தேதி குறித்துவிட்டு மாப்பிள்ளை தேடிய கதையாக பொங்கல் இன்னும் பத்து நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்று அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இவர்களுடன் ஊடகங்களும் மல்லுக்கட்டுகின்றன. ஆனாலும், மத்தியிலிருந்து எந்தவிதமான ஆதரவான சூழலும் தென்படவில்லை.
இந்த விவகாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அங்கமாகிய காங்கிரஸ், தி.மு.க. இரண்டும்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று பொதுவான குற்றச்சாட்டை மற்ற அரசியல் கட்சிகள் பேட்டியளித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக, கடந்த 18 மாதங்களாக பா.ஜ.க. அரசு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி குஷ்பு.
அரசியல் கட்சிகளை விட்டுத்தள்ளுவோம். ஏன் இதுநாள் வரை, தமிழர் பண்பாட்டில் அக்கறையும் ஆர்வமும் உள்ள அமைப்புகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தத் தவறின என்கிற கேள்வியை யாரும் எழுப்பத் தயாராக இல்லை.
உயர்நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை அடியொட்டி, மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு, காவல் துறையின் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட குழுவின் மேற்பார்வை ஆகியவற்றோடு, காளைகளைத் துன்புறுத்தாமல், மது ஊட்டாமல், வெறியேற்றும் செயல்களில் ஈடுபடாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், எத்தகைய குற்றச்சாட்டும் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டதாகவும் எந்தச் சம்பவங்களும் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தடை விதிக்க நேர்ந்தது ஏன்? நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக சரியான புரிதலை முன்வைக்கத் தமிழக அரசோ, இதில் அக்கறையுள்ளவர்களோ இல்லாமல் போனதுதான் காரணம்.
ஜூலை 11, 2011-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வெளியிட்ட அரசு அறிவிக்கையின்படி, "கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தவோ அல்லது கேளிக்கை பொருளாக்கவோ கூடாது. இந்த விலங்குகளின் பாலின வேறுபாடு எதுவாக இருப்பினும் இந்த விலங்குகள் அனைத்துக்கும் அந்தச் சட்டம் பொருந்தும். காளை என்று இந்த சட்டத்தில் குறிப்பிடும்போது அது எருமை, மாடு (காயடிக்கப்பட்டது), பசு, கன்று அனைத்துக்கும் பொருந்தும்' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காளை என்ற சொல்லுக்கு, எருமை, மாடு, பசு, கன்று எல்லாமும் அடங்கும் என்றால், எருமையும் பசுவும் தாங்களாக விருப்பப்பட்டா மனிதருக்குப் பால் தருகின்றன? கன்றுக்காக சுரக்கும் பாலை மனிதன் கறப்பது துன்புறுத்தல் அல்லவா? அதன் இயல்புக்கு அப்பாற்பட்டு செயல்படச் செய்யும் விலங்கு - விரோத நடவடிக்கை அல்லவா? கன்றுக்கான பாலை மனிதன் திருடிக்கொள்வது குற்றமல்லவா? அந்தப் பாலை விற்பனை செய்வது, பசுவைத் துன்புறுத்தும் மானுட வணிகம்தானே!
ஒரு நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும்போது, ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் வணிகத்துக்காக பசுக்களை பயன்படுத்துவதும் குற்றம்தானே! ஏறுதழுவுதல் துன்புறுத்தல் என்றால், மாட்டை ஏர் பூட்டுவதும், வண்டி பூட்டுவதும்கூட துன்புறுத்தல்தானே? அவற்றின் இயல்புக்கு பொருந்தா செயல்தானே!
இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், கரடி, குரங்கு, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகியவற்றை வைத்து தொழில்புரியும் சர்க்கஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுதான். ஆனால், இதில் காளை சேர்க்கப்பட்டதன் காரணம், ரேக்ளா போன்ற பந்தயத்தைப் போன்று, ஜல்லிக்கட்டும் ஒரு பந்தயம் என்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான்.
ஜல்லிக்கட்டு பந்தயம் அல்ல இது ஒரு வீரவிளையாட்டு. இந்த வீரத்துக்குப் பரிசாகக் காளையின் கழுத்தில் அதன் உரிமையாளர் காசுகளை கட்டிவிடுகிறார். இது பணத்துக்காக அல்லது தனிநபர் அல்லது தனி அமைப்பின் லாபத்துக்காக நடத்தப்படும் பந்தயம் அல்லது சூதாட்டம் என்பதாக கருதப்படும் என்றால், உறியடித் திருவிழாக்களும்கூட வெறும் சூதாட்டம் என்று ஆகிவிடும் அவலம் நேரும்.
ஆயிரக்கணக்கில் அடிமாடுகள் லாரிகளில் போய்க்கொண்டிருக்கின்றன. மாடுகள் இறைச்சி ஏற்றுமதி நடந்து கொண்டே இருக்கிறது. காளை என்ற சொல் மாடு என்பதையும் உள்ளடக்கியது என்றால், இது எவ்வாறு நடக்கின்றது? மிகப்பெரும் தோல்பொருள் ஏற்றுமதியும் விற்பனையும் எவ்வாறு நடக்கிறது?
காளையை, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை அரசியல்ரீதியாக யாரும் நடத்தவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், உச்சநீதிமன்றம் தடைவிதிப்பது முறையல்ல என்பதை நீதிமன்ற வழக்காற்றின் அடிப்படையில் எதிர்வினை புரியவும் தமிழ்நாட்டின் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தவறிவிட்டன.
ஜல்லிக்கட்டு என்கிற தமிழர் மரபு சார்ந்த, உணர்வுசார்ந்த விவகாரத்தை, சரியான புரிதல் இல்லாமல் தடுப்பதால், வடநாட்டினர் தமிழர் நலனுக்கு எதிரானவர்கள் என்கிற எண்ணத்தை விதைப்பதாக அமைந்துவிடும். ஒரு சிறிய விவகாரத்தைப் பெரிதாக்கி, தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிரான விஷத்தை விதைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கலாமா?
இந்த விவகாரத்தில், அண்மையில் ஒரு பேட்டியில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டதைப்போல, காட்சிப்படுத்தல் விலங்குகளின் பட்டியலை தீர்மானிக்கும் பொறுப்பை மாநில அட்டவணைக்கு மாற்றுவது நல்லது. இது இந்தியாவுக்கு பெரும் நன்மை சேர்க்கும். அதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு.

NEWS TODAY 28.01.2026