Sunday, January 24, 2016

பாஸ்போர்ட் அலுவலகம் வந்த அஜித்: முண்டியடித்த ரசிகர்கள் கூட்டம் ................ஸ்கிரீனன்



இரண்டாவது மகன் பாஸ்போர்ட் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்த அஜித்தைக் காண பெரும் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

'வேதாளம்' இறுதிகட்ட படப்பிடிப்பில், அஜித்துக்கு ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், உடனடியாக் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார் அஜித்.

அஜித் தனது குடும்பத்தினருடன் லண்டனில் 2 மாதங்கள் ஒய்வெடுக்கத் திட்டமிட்டார். நேற்று இரண்டாவது மகன் ஆத்விக் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்திருந்தார் அஜித்.

குடும்பத்தினருடன் அஜித் வந்திருந்ததால் அவரைக் காண பெரும் கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக கூடியது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஜித் மற்றும் ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன.

அஜித் தன் மகன் ஆத்விக்கை முதன் முறையாக பொது இடத்துக்கு அழைத்து வந்ததால், இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். #KuttyThala என்ற ஹேஷ்டேக் சென்னை, பெங்களூர் மற்றும் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது.

லண்டன் ஒய்வை முடித்து அஜித் திரும்பியவுடன், அவருடைய அடுத்த படத்தின் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பதின் பருவம் புதிர் பருவமா? 16: இளைஞர்களையும் விட்டுவைக்காத மன அழுத்தம் ....டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

உன்னால் முடியும் தம்பி, நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நம்பி” என்ற அறிவுரைகள் யாருக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்கு இலவசமாகவே கிடைக்கும்.

“உன்னைப் பெத்ததுக்கு ஒரு தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படித் தண்டமா உட்கார்ந்திருக்கியே” எனப் பல நேரங்களில் வளரிளம் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில், அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயாலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

மன அழுத்தம் ஒரு நோயா?

‘நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன்’ என்று எல்லோரும் சாதாரணமாகக் கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் நோய் (Depressive disorder) என்பது வேறு. சுமார் 10 - 15% வரையிலான வளரிளம் பருவத்தினரை இது பாதிக்கிறது. ஏதாவது மோசமான வாழ்க்கைச் சூழலாலும் இது ஏற்படலாம், எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் தானாகவும்கூட ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்துகூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள் குழந்தைகளுக்குக் கடத்தப்படும்போது வளரிளம் பருவத்தில் மன அழுத்தம் ஏற்படலாம்.

படிப்பில் உள்ள பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், மன அழுத்த நோய் ஏற்படுவதால் படிப்பில் மந்தத்தன்மை ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது மூளை நரம்புகளில் காணப்படும் ‘செரடோனின்’ என்ற ரசாயனப் பொருள்தான். இதுதான் ஒருவரின் மன உற்சாகத்தைத் தீர்மானிக்கும் வேதிப்பொருள். எனவே, மன அழுத்தம் யாரையும் பாதிக்க வாய்ப்புண்டு.

மருத்துவக் காரணங்கள்

வாழ்க்கைச் சூழ்நிலைகள், மரபணுக்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் உடல்ரீதியான நோய்கள்கூட மன அழுத்த நோயை உண்டு பண்ணும். உதாரணமாக, தைராய்டு என்ற ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்கூட மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் 50% பேர்வரை மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் எல்லோரும், தாங்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதில்லை.

குறிப்பாக வளரிளம் பருவத்தினருக்கு நாள்பட்ட தலைவலி, திடீரென ஏற்படும் மயக்கம் அல்லது வலிப்பு போன்ற உடல் அறிகுறிகள்கூட மன அழுத்த நோயின் அறிகுறியாக வெளிப்படலாம். பள்ளி செல்வதைப் புறக்கணித்தல், பள்ளி செல்லும் நேரம் வந்ததும் ஏற்படும் வயிற்றுவலி, வாந்திகூட இதன் அறிகுறியாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட நோய்க்கான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்

கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்.

# வழக்கத்துக்கு மாறான மந்தத்தன்மை.

# சுறுசுறுப்பு இல்லாமல் அதிகச் சோர்வுடன் காணப்படுவது.

# முன்பு ஆர்வமாக இருந்த எந்த விஷயத்திலும், தற்போது ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருப்பது.

# தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது.

# பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு

# காரணமே இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் எண்ணங்கள் ஏற்படுவது.

# தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.

# தான் எதற்கும் உதவாதவன், வாழத் தகுதியற்றவன் என்ற எண்ணம்.

# அதீதக் குற்ற உணர்ச்சி.

# எரிச்சல் தன்மை, கோபம்.

# படிப்பில் பின்தங்குதல், பள்ளியைப் புறக்கணித்தல்.

# காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது.

# புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்.

# அதிகக் கவனக் குறைவு, ஞாபக மறதி.

தடுப்பும் சிகிச்சையும்

# தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளியில் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

# குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மனப் பாரங்களைப் பகிர்வது அவசியம்.

# புத்தகங்கள் வாசிப்பது, இசைக் கருவிகளை வாசிக்கப் பயிற்சி எடுக்கலாம்.

# நேரத்தைப் பகிர்ந்து செலவிடக் கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)

# வேலைகளைப் பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது. மற்றும் பெரிய வேலைகளைப் பகுதிப் பகுதியாகப் பிரித்துச் செய்வதற்குப் பழகலாம்.

# பிரச்சினைகள் எப்போதுமே நிரந்தரமானவை அல்ல, பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.

# பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்துப் பிடித்து, சில நொடிகளுக்குப் பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விட வேண்டும்.

# பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படும்.

# தீவிரமான மன அழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாகப் பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும்.

(அடுத்த வாரம்: வேண்டாம் விபரீத விளையாட்டு)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

நெட்டெழுத்து: இணையத்தில் அரசு பள்ளி மகத்துவம் அடுக்கும் ஆசிரியர்

க.சே. ரமணி பிரபா தேவி

Return to frontpage

ஒவ்வோர் ஆசிரியருக்கும், அவர் பணியாற்றும் பள்ளி ஒரு கோயில்தான்.

அதன் அடிப்படையில் தான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைத்தளத்துக்கு ''கல்விக்கோயில்'' எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறுகிறார் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் இராஜேந்திரன்.

'பள்ளிக்குச் சென்றோம்; பாடம் சொல்லிக் கொடுத்தோம். மாலை மணி அடித்தால், கிளம்பினோம்' என்று இல்லாமல், தான் செய்யும் பணிகளை முறையாக ஆவணப்படுத்தி, தன் வலைதளத்தில் பதிவேற்றுகிறார். ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இவருக்கு, தன் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும், புகைப்படங்களோடு கூடிய செய்திகளாக பதிவுபடுத்துவது வழக்கம்.

பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழாவை விரிவான தகவல்கள் மற்றும் புகைப்படங்களோடு சேர்த்து செய்தியாகப் பதிவிட்டிருக்கிறார்.படிக்க http://kalvikoyil.blogspot.com/2016/01/blog-post_11.html

பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், சுகாதார விழிப்புணர்வுப் போட்டிகள், கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் குறித்த தகவலையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் தகவலையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். புகைப்படங்களோடும், மாணவர்களின் கைவண்ணங்களோடும் பதிவுகள் மிளிர்கின்றன. வாசிக்கhttp://kalvikoyil.blogspot.com/2014/07/blog-post.html

பள்ளியில் நடத்தும் விழாக்களைத் தாண்டி, ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்தும் பதிவுகளையும் தவறாமல் தன் வலைத்தளத்தில் பதிகிறார் ஆசிரியர் இராஜேந்திரன். கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பப் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் குறித்த பதிவுக்கான இணைப்பு http://kalvikoyil.blogspot.com/2015/12/blog-post.html

இவரின் ஆசிரியர் குழு, பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தாண்டி வெளியிலும், தனது மாணவர்களைக் களப் பணியில் ஈடுபடுத்துகின்றது. அதன் ஒரு பகுதியாக உலக பாரம்பரிய வார விழா தொடர்பாக தேடுதல் பணியை மேற்கொண்டனர். அப்போது பள்ளியிலிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் புதரில் மறைந்திருந்த நூற்றாண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வாசிக்க: புதிய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்புhttp://kalvikoyil.blogspot.com/2015/11/blog-post_22.html

இவை தவிர பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம், யோகா உள்ளிட்ட மனவளக் கலை பயிற்சிகள், சுதந்திர தின விழா, குழந்தைகள் தின விழா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளின் இணைப்புகளும் காணக்கிடைக்கின்றன.

கல்விக்கான வலைதளத்தில் அறிவியல் சோதனைகள் இல்லாமல் போகுமா? ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் கால நேரம் கொண்ட அறிவியல் குறும்படங்களின் யூடியூப் இணைப்புகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல் மற்று உயிரியல் தொடர்பான சோதனைகள் கொண்ட காணொலிக் காட்சிகள், நிச்சயம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்! காணஒரு நிமிட அறிவியல் சோதனைகள் http://kalvikoyil.blogspot.com/2014/08/experiments-tamil.html

'அரசுப் பள்ளி எப்போதும் தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளிதான்' என்று ஆணித்தரமாகக் கூறும் ஆசிரியர் இராஜேந்திரன், அதை உலகுக்கு உணர்த்திடவே இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அரசுப்பள்ளிகளின் சாதனைகளை வெளிக்கொணரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

கல்விக்கோயில் வலைதள முகவரி http://kalvikoyil.blogspot.com/

சென்னையை சிங்கப்பூராக மாற்றும் செயல்திட்டம் எங்களிடம் உள்ளது: அன்புமணி ராமதாஸ் தகவல்..THE HINDU TAMIL

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியின் 3 நாள் பயணத்தை அன்புமணி ராமதாஸ் சென்னையில் நேற்று தொடங்கினார். புரசைவாக்கம் தானா தெருவில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார் படம்: ம.பிரபு


பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியின் 3 நாள் பயணத்தை அன்புமணி ராமதாஸ் சென்னையில் நேற்று தொடங்கினார். புரசைவாக்கம் தானா தெருவில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார் படம்: ம.பிரபு


சென்னையை சிங்கப்பூராக மாற்றும் செயல்திட்டம் எங்களிடம் உள்ளது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ், ‘நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்’ என்ற தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். பின்னர் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்தப் பிரச்சாரத்தின்போது, சூளைமேடு நெடுஞ்சாலை, காந்தி சிலை அருகே கூடியிருந்த மக்களிடம் அன்புமணி பேசியதாவது:

பாரம்பரிய சிறப்புகொண்ட, 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னையை திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக நாசம் செய்துவிட்டன. சென்னையை நீடித்த, வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கான பிரச்சார இயக்கம் இது. நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும் என நம் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் அரசியல் செய்யவோ, ஓட்டு கேட்கவோ இந்தப் பிரச்சார இயக்கத்தை தொடங்கவில்லை.

அடுத்த 6 மாதங்கள் இந்தப் பிரச்சாரம் நடக்கும். சென்னை பெருநகர் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்டு ஒரு ஆவணத்தை தயாரித்து அரசிடம் வழங்க இருக்கிறோம். சென்னையை சிங்கப்பூராக மாற்ற முடியும். அதற்கான செயல்திட்டம் எங்களிடம் இருக்கிறது.

கடந்த 2010-ல் அண்ணா பல்கலைக்கழகம் ரூ.2.17 கோடி செலவில் ஓர் ஆய்வு நடத்தி சென்னையை மேம்படுத்துவதற்கான செயல்திட்ட அறிக்கையை வழங்கியது. அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் இப்போது கடும் வெள்ள சேதத்தை நாம் சந்திக்க நேரிட்டது.

மழை நீரை கடலில் விட்டுவிட்டு மறுபடி கடலில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துகின்றனர். இது திமுக, அதிமுக கட்சிகள் கொள்ளையடிப்பதற்கான திட்டம்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

அன்புமணியின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

மாற்றம் தந்த மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினோம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு


Return to frontpage


சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா. | படம்: ம.பிரபு

2011-ல் தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்து, அந்த மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியதால்தான், தொடரட்டும் இந்த அரசு என நினைக்கின்றனர்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

மேலும், "எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. எனக்குப் பிறகும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று அவர் உறுதியுடன் கூறினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பேசியது:

"தமிழகத்தின் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், விவசாயம், நதி நீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் 2011-ல் எங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வழங்கப்படுகிறது. 3 லட்சம் பசுமை வீடுகள் திட்டத்தில், 2 லட்சத்து 62 ஆயிரத்து 853 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 12 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள், 59,905 இலவச கறவை மாடுகள், 27 லட்சத்து 80 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் ரூ.2 ஆயிரம், மீன் குறைவு காலங்களில் ரூ.4 ஆயிரம், மீனவர் குடும்பங்களுக்கு ரூ.2,700 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 63 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிருக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மகப்பேறு நிதித் திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 19 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ரூ.2,910 கோடியே 21 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு திருமண நிதி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் 32 லட்சத்து 67 ஆயிரத்து 311 பேருக்கு மடிக்கணினிகள், 31 லட்சத்து 71 ஆயிரத்து 764 பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உணவுக் கட்டணம் ரூ.755, ரூ.875 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலவச திட்டங்கள் அனைத்தும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.70 கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன், புதிதாக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், அம்மா மருந்தகங்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். 8,542 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 724 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் மற்றும் பழநி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

நிறைவேற்றப்பட்ட எதிர்பார்ப்புகள்...

கடந்த திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகத்தான். 2011-ல் தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என உறுதியுடன் இருந்து, அந்த மாற்றத்தை ஏற்படுத்தினர். அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியதால்தான், தொடரட்டும் இந்த அரசு என நினைக்கின்றனர்.

குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று சிலர் கேட்கலாம். பேச முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்து பேச முடியுமா? அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது.

எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

Thursday, January 21, 2016

வெள்ளி இழை இல்லாமல் 1000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி

Dinamani

First Published : 21 January 2016 09:10 AM IST
வெள்ளி இழை இல்லாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை தவறுதலாக ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ரூபாய் நோட்டு அச்சக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு அம்சம் இல்லாத ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 5AG, 3AP வரிசை நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்தில் உள்ள Security Printing and Minting கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்கில் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்படும்.
இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ஆர்.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, January 20, 2016

வாட்ஸ் அப்’ வாழ்க்கை!


logo

உங்கள் கையில் ஆறாவது விரல் இருக்கிறதா? இல்லையென்று சொன்னால் நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி. இருந்தால்தானே அதிர்ஷ்டம் என்பார்கள். இது என்ன புதிதாக இருக்கிறது...?

ஆமாம், ஆறாவது விரல் இருந்தால், அதுவும் எல்லா நேரமும் இருந்தால் கிரகம் சரியில்லை என்று அர்த்தம். சோதிடம் போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம்மில் பலருக்கு உடலின் ஓர் அங்கமாக மாறி இருக்கும் செல்பேசி தான் அந்த ஆறாவது விரல். விஞ்ஞானத்தின் அற்புத படைப்பான செல்பேசியை இப்படி மாற்றியதில் பெரும்பங்கு வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்), பேஸ் புக் (முகநூல்) போன்ற சமூக வலைத்தளங்களுக்கு உண்டு.

பண்டிகை காலங்களில் கடைகடையாய் ஏறி இறங்கி வாழ்த்து அட்டைகளை வாங்கி, பிடித்தவர்களுக்கு அனுப்பியதில் கிடைத்த நிறைவு இப்போது இல்லாவிட்டாலும் ‘வாட்ஸ் அப்’ வாழ்த்து புது சுகம் தருகிறது. முந்திக்கொண்டு வாழ்த்து அனுப்பியவர்களுக்குப் பிடித்தமாதிரி ‘நன்றி கார்டு’ அனுப்பியதைவிட முகநூல் பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பில் இன்பம் அதிகமிருக்கிறது.

இதெல்லாம் காலத்தின் கொடை. இன்னும் சொல்லப்போனால் கட்டாயம். இவற்றைப் புறக்கணித்துவிட்டு 21–ம் நூற்றாண்டில் நாம் மட்டும் தனி தீவாக வாழ முடியாது.

அண்மையில் சென்னையை தாக்கிய பேய் மழையின் போது சமூக ஊடகங்களின் சக்தியையும் பார்த்தோம். பிரிந்து போன நட்பை மீட்டெடுத்தல், ஒத்த சிந்தனை கொண்டோரை ஒருங்கிணைத்தல், கோடிக்கணக்கானோரை ஒரே நேரத்தில் சென்றடைதல், அரசுகளைத் தீர்மானிக்கும் ஆற்றல் என நீளும் இவற்றின் அதீத வீச்சு மிரள வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி, எளியோரின் சொற்களையும் அம்பலம் ஏற்றி எல்லாரையும் சமமாக்குவதால் இவற்றைக் கொண்டாடவும் செய்யலாம். தப்பில்லை. அதனால் உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதை நினைத்து மகிழலாம். ‘வாட்ஸ் அப்’ பயன்பாடும் அப்படியே. எவ்வளவு வசதி. என்னே வேகம். இன்றைய அவரச யுகத்திற்கு நிச்சயமாக இது தவமின்றி கிடைத்த வரம். பெரும் மகிழ்வு.

மகிழ்ச்சி எல்லாம் எதுவரையில்..? வரமாக இருக்கும் வரைதான். அதுவே சாபமாகி விட்டால் என்னாகும் என்கிற கவலை இப்போது எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. புகழ், பணம், வாழ்க்கை இப்படி எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினையில்லை. எதற்காவது அடிமையாகிவிட்டால் தொலைந்தோம். எல்லாவற்றிலுமே ஒரு போதை இருக்கிறது. அது இருமல் மருந்தில் இருக்கும் ஆல்கஹால் போல மிதமாக இருந்தால் ரொம்பது நல்லது.

குடிகாரர்களில் இரண்டு வகை உண்டு. எப்போதாவது, விரும்பிய போது அல்லது கொண்டாட்டங்களின் போது குடிப்பவர்கள் முதல் ரகம். இவர்களால் பெரிய வம்பில்லை. இரண்டாவது ரகம் குடி நோயாளிகள். இப்படிப்பட்டவர்கள் முழுக்கவும் மதுவுக்கு அடிமையானவர்கள். குடிக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும். பேச்சே வராது. மூளை சொல்படி கேட்காது. முக்காலமும் மதுவையே நினைத்துக் கொண்டிருக்கும். கிட்டதட்ட மதுவைப் போலவே இன்றைக்குப் பலரையும் மயக்கி வைத்திருக்கின்றன சமூக வலைதளங்கள். என்ன, குடித்துவிட்டு தெருவில் கிடப்பவனைப் பளிச்சென தெரிகிறது. இதில் நடக்கும் பாதிப்புகள் மெல்லக் கொல்லும் நஞ்சாக சத்தமின்றி தனி மனித சக்தியை, குடும்பங்களை உறிஞ்சி குடித்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் இரண்டிலும் கதியாக கிடப்பவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு எகிறிக் கொண்டே போகிறது.

சாதாரணமாக நம்முடைய வீடுகளிலேயே கவனியுங்களேன். ஆளாளுக்கு கையில் ஒரு செல்பேசி. கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள். இதில் வயது, பாலின வித்தியாசமெல்லாம் கிடையாது. குழம்பு தாளிக்கும் நேரத்தில் கூட ‘வாட்ஸ் அப்’ பையும், ‘பேஸ் புக்’கையும் விட்டுப் பிரிய முடியாத குடும்பத்தலைவிகள் அதிகரித்துவிட்டார்கள். குடும்பத்தலைவனைப் பற்றி கேட்கவா வேண்டும்? இரண்டும் பேரும் இப்படி என்றால் குழந்தைகளையும் மற்றவர்களையும் இவர்களால் எப்படி கேட்க முடியும்?

இரவு நெடு நேரம் சமூகத்தளங்களில் தேவையோ, நோக்கமோ இன்றி மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் கைகள் பர, பரவென்று ஆகின்றன. காலைக்கடன்களைக் கழிக்கிறார்களோ இல்லையோ, செல்பேசி முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஒரு நாள் பார்க்க முடியாவிட்டால் பட,படத்துப் போய்விடுகிறார்கள். இன்னும் சிலருக்கோ நாட்கணக்கெல்லாம் இல்லை. சில மணி நேரம் கூட பொறுக்க முடியாது. செல்பேசியோ, சமூக வலைத்தளங்களோ இல்லையென்றால் பைத்தியமாகிவிடுவார்கள். அதிலும் ஒரு கண் வைத்திருந்தால்தான் எந்த வேலையையும் செய்யமுடியும். சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலும் சரி; துக்கம் விசாரிக்க மரண வீட்டுக்குப் போனாலும் சரி; என்ன பதிவு வந்திருக்குமோ என குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் இஷ்டம் போல எல்லாவற்றையும் பதிவேற்றுவது கொடுமையிலும் கொடுமை. துக்க வீட்டில் போய் செல்ஃபி (கைப்படம்) எடுத்து, பதிவேற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமான வேலை இருந்தாலும், ‘வேண்டாம்’ என்று மனசு நினைத்தாலும் கைகள் தானாகவே ‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’ போன்வற்றுக்குப் போனால் ‘முற்றி’ போய்விட்டது என்று அர்த்தம். என்னவொன்று அடிமையாகிவிட்டோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. இப்படியானவர்கள் முன்பு நாம் பார்த்த குடிநோயாளிகளைப் போன்றவர்கள். உடனடியாக மனநல மருத்துவர்களைப் பார்க்க வேண்டியவர்கள்.

குடியைப் போலவே ‘சமூக வலைத்தள போதை’யில் சிக்கியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் களும் ஏராளம். இவர்கள், எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் யாரோடும் மனம்விட்டுப் பேசாமல் எப்போதும் அதிலேயே மிதந்து கொண்டிருப்பதால் குடும்ப உறவுகளிடையே இடைவெளி விழுகிறது. அதிலும் குடும்ப வாழ்க்கைக்கு ‘வாட்ஸ் அப்’ பெரும் வில்லனாக உருவெடுத்திருப்பதைச் சமீபத்திய விவாகரத்து வழக்குகளில் காண முடிகிறது. மண வாழ்க்கை முறிவுக்கு மட்டுமல்ல; உளவியல் நோய், குழந்தைப் பேறின்மை போன்றவை அதிகரிப்பதற்கும் சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணியாகி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தருகிறது.

இதற்காக அஞ்சி, நடுங்கி இவற்றை ஒரேயடியாக தவிர்க்கவும் முடியாது. இவற்றினால் கிடைக்கும் நன்மையைப் பெறாமல் போனால் அறிவலித்தனமாகிவிடும். அப்படியென்றால் என்ன வழி? நம்முடைய கட்டுப்பாட்டில் அவற்றை வைத்திருக்க வேண்டும். ‘ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே சமூக வலைத்தளத்தில் செலவிடுவேன்; அதுவும் எனக்குத் தேவையற்ற குப்பைகளைப் பார்க்க மாட்டேன்’ என்பதில் உறுதியாக இருக்கலாம். நிறைய நேரமிருப்பவர்கள் இதனை ஒரு மணி நேரமாக்கலாம். இந்த நேரத்தை வசதிப்படி பிரித்துக்கொள்ளலாம். ஆனால் அதைத் தாண்டி போகக்கூடாது; போகவே கூடாது. நம்முடைய நேரத்தைக் கொல்வதற்கு இடம் கொடுத்தோமானால், நாளை அது நம்மைக் கொல்வதற்கும் முயலும் என்பதை மறந்திடக் கூடாது.

குழந்தைகளோடு கொஞ்சுவதற்கு, குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கு, வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காகத்தான் அத்தனை வசதிகளையும் தேடுகிறோம். வசதியில் இவற்றைத் தொலைத்து விட்டு என்ன செய்யப்போகிறோம்? உலக நியதிப்படி எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். வசதிகள், வரமாவதும் சாபமாவதும் நம் கைகளில்தான் இருக்கிறது. எவ்வளவு அதி அற்புதமான அமிர்தமானாலும் அளவைத்தாண்டிவிட்டால் நஞ்சு தானே!

NEWS TODAY 29.01.2026