Monday, February 1, 2016

வேண்டாமே தற்கொலைகள்!

Return to frontpage

தி.ஆனந்த்

சமீப காலங்களாக இயற்கை மரணங்களுக்கு நிகராகத் தற்கொலை மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன‌ என்பது அனைவரும் அறிந்ததே. தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒரு ப‌ங்கினர், வளரிளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

புள்ளி விவரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களும், தற்கொலை முயற்சியில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி, மற்ற மாணவர்களைப் போல‌ ஆங்கிலப் புலமை இல்லாததால் அங்கு சொல்லித் தரும் பாடங்கள் புரியவில்லை என்பதால் தற்கொலை என்ற செய்தி தொடங்கி, ஆந்திராவில் சாதியப் பாகுபாட்டால் ஒரு தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டது, அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் பயின்ற மூன்று நர்சிங் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதுவரை செய்திகள் சொல்லும் யதார்த்தம் இதுதான்... மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து கொண்டே வருகின்றன!

ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு 40 நொடிகளுக்கும், ஒரு தற்கொலை நடக்கிறது. அதில் 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன.

படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்திலிருப்பது கவலை தரும் செய்தி. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து இக்கால வளரிளம் பருவ மாணவர்களின் மனப்போக்கை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.

வளரிளம் பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறி, காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். ஆனால், ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மன அழுத்தம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பாலும் நிகழலாம்.

தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும். இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர‌ எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை நாட்டமும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே மேற்கண்ட நற்குணங்களைப் பெறாமல் ஒரு பொம்மைக் குழந்தைகளைப் போலத்தான் சமுதாயத்தில் வலம் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தற்கொலைதான் தீர்வு என்ற முடிவைத் தற்கால இளைஞர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது?

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் போனால் படிப்பு, படிப்பு... விளையாட்டு வகுப்புகள் என்பது பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பு அட்டவனைகளில் மட்டுமே இருக்கும் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. மேலும் பள்ளிகளில் 'வாழ்க்கைக் கல்வி முறைகள்' என்ற உளவியல் சார்ந்த வகுப்புகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்தது. இது போன்ற உளவியல் சார்ந்த வாழ்க்கை முறை கல்வியைக் கற்கும்போது மாணவர்கள் மன அளவில் புத்துணர்ச்சி பெற்று, தவறான முடிவுகளை எடுக்காத வண்ணம் மன தைரியத்துடன் இருப்பர்.

மேலும் முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள் வாழ்க்கையை வளமாக்கும். இயந்திரத்தனமாக வாழும் வளரிளம் பருவத்தினரும், குழந்தைகளும் வாரத்திற்கு ஒரு முறையாவது அதில் இருந்து விலகி, குடும்பத்தினரோடு கடற்கரைப் பகுதி, பூங்கா அல்லது உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசம். சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் மாணவர்களின் மனதில் புகுந்து விடாமல் ஒருவருடன் ஒருவர் நன்றாகப் பழகி சமூகத்தில் சிறந்த குடிமக்களாக வர வேண்டும் என்பதுதான் உறைவிடப் பள்ளிகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்.

ஆனால், இங்கும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி தனி அறைகள் ஒதுக்கப்படுகின்றன. நன்றாகப் பேசிப் பழகுவதற்கு வாய்ப்புள்ள விடுதிகளிலும் தனித்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். தற்கொலைகளுக்குத் தனிமையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

சரி, கூட்டாக இருந்தால் பிரச்சினை இல்லையா என்று கேட்டால், அதிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் பிரச்சினைகளை மீறி நண்பர்களின் ஆதரவு, ஆறுதல், அரவணைப்பு, பொழுதுபோக்கு, கலந்துரையாடலுக்கான வாய்ப்பு என நிறைய நன்மைகள் இருக்கின்றன.

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் உலகத் திரைப்படங்களைத் திரையிடுவது, சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் விடுதிகளில் ஒரு புதிய சூழலை உருவாக்க முடியும். அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். பாதுகாப்பானதாகவும் இருக்கும்!

- கட்டுரையாளர், திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி எனும் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வந்த அந்த கிராமத்தில் பல விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டவர் இவர்.

தொடர்புக்கு: anandt.tanand@gmail.com

ஆ'வலை' வீசுவோம் 17 - ஆங்கில அகராதிகளின் 'கூகுள்'!

சைபர்சிம்மன்

இணைய தேடலின் ஆற்றலையும் வீச்சையும் உணர்த்தும் அருமையான ஆங்கில அகராதி தேடியந்திரம்.

இணைய அகராதிகளை தேடியந்திரமாக கொள்ள முடியுமா? வார்த்தைகளுக்கான பொருள் தேட உதவும் தன்மை காரணமாக இவற்றை தேடியந்திரமாக கருதலாம் என்றாலும், அகராதிகளின் இணைய வடிவம் என்பதால், இவற்றை தேடியந்திரம் கீழ் வகைப்படுத்த வேண்டுமா என்றும் யோசிக்கலாம்.

அச்சு வடிவிலான அகராதிகளில் இருந்து இணைய அகராதிகள் பெரும் பாய்ச்சலாக இருப்பதை 'தி ஃபிரி டிக்‌ஷ்னரி' அல்லது 'யுவர் டிக்‌ஷனரி' அளிக்கும் விரிவான தேடல் வசதிகளில் இருந்தே புரிந்துகொள்ளலாம். பாரம்பரிய ஆங்கில அகராதிகளான ஆக்ஸ்போர்டு, மேக்மில்லன் போன்றவற்றின் இணைய அகராதிகளும் கூட காகித பக்கங்களின் வரம்பில் இருந்து விடுபட்டு டிஜிட்டல் பரப்பில் புதிய பரிமாணம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

எனவே, அகராதிகளை வார்த்தைகளுக்கான தேடியந்திரமாக கொள்ளலாம். அப்படியே இதில் இலக்கண சிக்கல் இருப்பதாக தோன்றினாலும் கூட, 'ஒன்லுக்' அகராதியை நிச்சயம் தேடியந்திரமாக கருத வேண்டும். ஏனெனில் ஒன்லுக் அகராதிகளின் அகாரதி - இணையத்தின் பேரகராதி. இணையவாசிகளுக்கு எளிதில் புரியக்கூடிய மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது அகராதிகளின் கூகுள்!

எளிமைக்கு பின்னால்...

ஒன்லுக் முகப்பு பக்கத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். கூகுளின் முகப்பு பக்கம் போலவே இதன் முகப்பு பக்கமும் எளிமையாக இருப்பது தற்செயலானது அல்ல; அந்த எளிமை தான் தேடியந்திரங்களுக்கான முக்கிய அம்சமும் கூட!

தி ஃபிரி டிக்‌ஷனரி அகராதியை பயன்படுத்தியிருக்கிறீர்களா? அது அகராதி போலவே இருக்காது. மாறாக, ஒரு வலைவாசலின் தோற்றத்துடன் அது வரவேற்கும். வார்த்தைகளுக்கான தேடல் கட்டம் மேல் பகுதியில் இருக்க மற்ற முகப்புப் பக்கம் முழுவதும் எண்ணற்ற அம்சங்களாக நிறைந்திருக்கும். மற்றொரு மிகச் சிறந்த இணைய அகராதியான யுவர் டிக்‌ஷனரியும் இதே ரகத்தை சேர்ந்தது தான். ஆனால் இதன் முகப்பு பக்கம் இப்போது சீரமைக்கப்பட்டு நவீன வடிவமைப்புடன் மேம்பட்டிருக்கிறது. தெளிவாக, குழப்பமில்லாத வகையிலான அகராதி எனும் வர்ணனையுடன் இதன் தேடல் கட்டம் நடுநாயகமாக அமைந்திருக்கிறது என்றாலும் கூட, இதிலும் கூட, வார்த்தை பட்டியல், மேற்கோள்கள், உதாரணங்கள், வார்த்தை தேடல் என கூடுதல் அம்சங்கள் அநேகம் இருக்கின்றன.

ஆனால், ஒன்லுக் முகப்பு பக்கம் மிக எளிமையாக தேடல் கட்டத்துடன் காட்சி அளிக்கிறது. அதன் கீழ் வழிகாட்டுவதற்கான தேடல் உதாரணங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. ஆனால், தோற்றத்தை கண்டு ஏமாந்துவிடக் கூடாது. இதன் தேடல் கட்டத்தில் பொருள் தெரிய வேண்டிய வார்த்தையைக் குறிப்பிட்டு தேட முற்படும்போதுதான் இதன் அற்புதமே தெரியவரும். அல்லது தேடல் உதாரணங்களை கிளிக் செய்து பார்த்தாலும் இதன் தேடல் விஸ்வரூபம் எடுப்பதை பார்க்கலாம்.

தேடல் விஸ்வரூபம்

ஒரு குடிசையின் கதவை திறந்து உள்ளே சென்றால் மாடமாளிகை அறைகளுக்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பிரமிப்பை இதில் தேடும்போது உணரலாம்.

உதாரணத்துக்கு, இதில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளுபேர்ட் எனும் வார்த்தையை கிளிக் செய்து பார்த்தால் அடுத்து தோன்றும் பக்கத்தில், 33 அகராதிகளில் இந்த வார்த்தைக்கான பொருள் இருக்கிறது என தகவலுக்கு கீழே வரிசையாக ஒவ்வொரு அகராதியில் தோன்றும் பொருளுக்கான இணைப்பு இடம்பெற்றிருக்கும்.

அதாவது, ஒன்லுக் நாம் தேடும் வார்த்தையை இணையத்தில் உள்ள அகராதிகள் அனைத்திலும் தேடிப் பார்த்து சலித்தெடுத்து, எந்த எந்த அகராதிகளில் எல்லாம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் பட்டியலிடுகிறது. எந்த அகராதி தேவையோ அதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். தேவை எனில் ஒன்றுக்கும் மேற்பட்ட அகராதி விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

பரவலாக அறியப்பட்ட ஆக்ஸ்போர்டு, மெரியம் வெப்ஸ்டர்ஸ், மேக்மில்லன் போன்ற அகராதிகள் தவிர வேறு பல அகராதிகளும் இந்தப் பட்டியலில் இருப்பதை பார்க்கலாம். இப்படி எல்லாம் கூடவா அகராதிகள் இருக்கின்றனவா? என வியப்பை ஏற்படுத்தும் வகையில் பல புதுமையான இணைய அகராதிகளையும் இதில் பார்க்கலாம். தேடும் வார்த்தையின் தன்மைக்கேற்ப அகராதிகளின் பட்டியல் மாறும் - பல புதிய அகராதிகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு இணைப்புடனும் அதற்கான விவரங்கள் மற்றும் மூல தளத்திற்கான சுட்டி இடம்பெற்றிருக்கும்.

அகராதி பட்டியல்

இந்தப் பட்டியலில் பொதுவான நோக்கிலான பொருள்களும், அதன் கீழ் குறிப்பிட்ட துறை சார்ந்த விளக்கத்தையும் பார்க்கலாம். மொழி ஆர்வம் கொண்டவர்களுக்கு சரியான வேட்டையாக அமையும். இல்லை, குறிப்பிட்ட பொருள் தான் தேவை எனில், இந்தப் பட்டியலை பார்ப்பதற்கு முன்னரே பொதுப் பிரிவில் அர்த்தம் தேவையா அல்லது அறிவியல், மருத்துவம், கணிணி போன்ற துறை சார்ந்த விளக்கம் தேவையா என தீர்மானித்து அதற்கேற்ப தேடிக்கொள்ளலாம்.

உதாரணமாக ஜாவா எனும் வார்த்தையை தேடும்போது, கணினி சார் விளக்கம் தேவை எனில் நேரடியாக 19 தொழில்நுட்ப அகராதிகளில் தேடிக்கொள்ளலாம். அதே போல ஆர்சனிக் எனும் சொல்லுக்கு மருத்துவத்தின் கீழ் ஆறு அகராதிகளை காணலாம்.

இவை தவிர வழக்கமான பெயர்ச்சொல், வினைச்சொல் போன்ற விளக்கங்களையும் அருகே பெட்டியாக பார்க்கலாம். அது மட்டும் குறிப்பிட்ட வார்த்தை தோன்றிய வரலாறு, அதன் பயன்பாடு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். கொச்சை வழக்கிலான பயன்பாடு, சொற்றொடர்களின் பயன்பாடு என்றும் கூடுதல் விவரங்கள் சிறகு விரிக்க காத்திருக்கின்றன.

தலைகீழ் தேடல்

இணையத்தில் மொத்தம் எத்தனை அகராதி இருக்கிறது என்ற விவரம் யாருக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்... பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட துறை சார்ந்த இணைய அகராதிகள் இருப்பது கூட தெரியாது. அதனால் என்ன, ஒன்லுக்கை பயன்படுத்துவது மூலம் அவை அனைத்திலும் தேடலாம்.

இந்தத் தேடலில் அநேகமாக ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தரிசனமோ அல்லது சின்ன கண்டுபிடிப்போ சாத்தியமாகலாம். சும்மா இல்லை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய அகராதிகளில் இருந்து தேடித் தருகிறது அல்லவா!

தேவை எனில் அகராதிகளின் பட்டியலையும் பார்க்கலாம். பொது அகராதிகள் மற்றும் துறை சார்ந்த அகராதிகள் என பட்டியல் விருகிறது. எந்த ஒரு வார்த்தைக்கும் குறிப்பிட்ட ஓர் அகராதியில் பொருள் தேடும் வசதியும் இருக்கிறது. நேரடியாக நமக்கு தேவையான வகையிலும் தேடலை கட்டமைத்துக்கொள்ளலாம்.

இவை தவிர, தலைகிழ் தேடலும் சாத்தியம். அதாவது ஏதேனும் விளக்கத்தை சமர்பித்து அதற்கு பொருத்தமான வார்த்தையும் தேடலாம்.

இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்ன என்றால் ஒன்லுக் அகராதி தேடியந்திரம் 1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதுதான். துவக்கத்தில் ராபர்ட் வேர் என்பவர் இதை நடத்தியிருக்கிறார். அதன் பிறகு டபிபீபர்மேன் இதற்கு பொறுப்பேற்று இதன் தற்போதைய வடிவை கொண்டு வந்தார். டேட்டாமியூஸ் நிறுவனம் இதை பராமரித்து வருகிறது.

ஒன்லுக் தேடியந்திர முகவரி: http://www.onelook.com

சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் 'லைக்' பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்

Return to frontpage

கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன.

மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்ட மார்க், இந்த தகவலை அறிவித்திருக்கிறார். ஆனால் எப்போது இம்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் அதில் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து மார்க், "ஃபேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளார்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.

உணர்ச்சிகள் அடங்கிய ஃபேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் பெறலாம்: விதிகளை தளர்த்தியது மத்திய அரசு

Return to frontpage

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது. 2014-ல் 42 நாட்களாகவும் 2015-ல் 21 நாட்களாகவும் குறைக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதற்கான நோட்டரி அபிடவிட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் எண் அட்டை ஆகிய 4 ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பாஸ்போர்ட் பெறலாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் வழங்கிய பிறகு வழக்கமான போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய நடைமுறை குறித்து சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராகேஷ் அகர்வால் கூறியபோது, இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். ஒருவேளை ஆதார்- வாக்காளர்- பான் அடையாள அட்டைகள் இல்லை என்றால் வழக்கமான போலீஸ் விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

பணி நிரந்தரம் செய்வதாக உறுதி: ஒப்பந்த செவிலியர் உண்ணாவிரதம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு

Return to frontpage

பணி நிரந்தரம் செய்வதாக அதிகாரிகள் அளித்த உறுதி யின்பேரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் 3,447 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் அறிவிக்கப் பட்டது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது. தமி ழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.

உண்ணாவிரதம் இருந்தவர் களில் 8 பேர் நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதையடுத்து, அன்றிரவே தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது தோல்வி அடைந்ததால், பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக செவிலியர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், 2-ம் நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நேற்றும் 4 செவிலியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை டிஎம்எஸ் வளா கத்தில் நேற்று நடந்தது.

இதில், முதல் கட்டமாக 806 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாகவும், மீதமுள்ளவர்களை இன்னும் 10 நாட்களில் பணி நிரந்தரம் செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஒப்பந்த செவிலியர்கள் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

10-ம் தேதிக்குள்..

10-ம் தேதிக்குள் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் 11-ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருவோம் என்று ஒப்பந்த செவிலியர்கள் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வழக்கு

Return to frontpage

டி.சுரேஷ்குமார்

ராபின் மெயின் மோசடி வழக்கு. இது, அரசியல் பெரும்புள்ளி ஒருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 32 காலங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு என்ற இக்காரணத்தை தவிர வேறு சில காரணங்களுக்காகவும் இந்த வழக்கை சற்று பின்னோக்கிப் பார்க்கலாம்.

அவ்வாறு சற்றே காலச்சக்கரத்தை பின்னோக்கிச் செலுத்தினால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அப்போதைய ஆட்சியில் ராபின் மெயின் வழக்கு ஏற்படுத்திய சலசலப்பும், அதிமுகவில் ஜெயலலிதா, காளிமுத்து உள்ளிட்ட பலரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் தெரியவரும்.

1985 அக்டோபர் மாதம். அப்போதுதான் ராபின் மெயின் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அவர் அன்றைய வேளாண் அமைச்சர் காளிமுத்துவின் நண்பர்.

நண்பர் மீதான கைது நடவடிக்கையையும், அந்த வழக்கில் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சற்றும் எதிர்பாராத காளிமுத்து, ஜெயலலிதா மீது விமர்சனங்களை குவித்தார்.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீண்டும் நியமித்ததற்கு கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காளிமுத்து தெரிவித்த எதிர்ப்பே மிகக் கடுமையானது. ஜெயலலிதாவை ஏன் கொள்கை பரப்புச் செயலராக நியமித்தீர்கள் என எம்.ஜி.ஆரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் திராவிட கட்சியின் அதிகாரத்தை முடிவு கட்ட ஜெயலலிதா சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

ராபின் மெயின் வழக்கில் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிபிஐ தன் மீது அவ்வாறாக குற்றம் சுமத்த ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாக இருந்தார் எனவும் கூறினார்.

மேலும் ராபின் மெயின் வழக்கு தொடர்பாக தனது உதவியாளர் மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்திரா காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.

காளிமுத்து - ஜெயலலிதா காரசார வாக்குவாதம்

இந்தக் குற்றசாட்டுகளையெல்லாம் திட்டமிட்டு மறுத்த ஜெயலலிதா, கற்பனை அடிப்படையில் காளிமுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் என்றார். இல்லை, நான் அவரது (ஜெயலலிதாவின்) அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாக இருப்பேன் என்பதற்காகவே என் மீது போலி குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா சுமத்துகிறார் என்ற பதில் வாதத்தை முன்வைத்தார் காளிமுத்து. இந்த வார்த்தைப் போர் ஓயவில்லை, "யாரோ ஒருவர் செய்த குற்றத்துக்கு நான் பலிகடா ஆக முடியாது" என்றார் ஜெயலலிதா. இவ்வாறாக பதிலுக்கு பதில் தொடர்ந்து கொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆர். வைத்த முற்றுப்புள்ளி:

தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 1985 அக்டோபர் 28-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை தாக்கல் செய்தனர். இந்த அதிரடி அறிவிப்பால், சலசலப்புகள் சற்று ஒய்ந்தன.

அந்த வேளையில்தான், சிபிஐ தனக்கு எதிராக ராபின் மெயினிடம் வாக்குமூலம் பெற சிபிஐ முயற்சிப்பதாக எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார் காளிமுத்து. இதனையடுத்து எம்.ஜி.ஆரும், சட்ட அமைச்சர் பொன்னையனும் காவல்நிலைய லாக்-அப் நிலவரம் அறிவதாக கூறி அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். எழும்பூர் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்குதான் ராபின் மெயின் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியே சலசலப்பும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அவ்வப்போதும் எழுந்தும், மறைந்தும் இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.

1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதுவரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவந்த காளிமுத்து, ஜெயலலிதா தரப்பில் ஐக்கியமானார். பின்னர் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். ஆனால், எல்லாம் அப்படியே சுமுகமாக செல்லவில்லை. திடீரென காளிமுத்து திமுகவுக்கு திரும்பினார். அங்கும் அவர் வெகு காலம் நீடிக்கவில்லை. மீண்டும் அதிமுகவுக்கே வந்தார்.

2001-ல் காளிமுத்துவை சட்டப்பேரவை சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் 2005-ல் ராபின் மெயின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அப்போது, காளிமுத்து பதவி விலக வேண்டும் என வலுவான எதிர்ப்புக் குரல் உருவானது. ஆனால், சபாநாயகர் பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யத் தேவையில்லை என ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக காளிமுத்து மாரடைப்பில் இறந்தார்.

ராபின் மெயின் வழக்கில் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த காளிமுத்து உட்பட 16 பேர் வழக்கு நடத்து கொண்டிருக்கும்போதே இறந்துவிட்டனர்.

ஆனால், ராபின் மெயின் வழக்கு அதிமுகவில் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் சமரசங்களையும் யாரும் மறக்க முடியாது.

Wednesday, January 27, 2016

சுயநிதிக் கல்லூரியும், செட்டப் ஆஸ்பத்திரியும்... ....கே. மகேஷ்

Return to frontpage

முன்னாடி எல்லாம் கடை வாசல்ல உட்கார்ந்து நாலஞ்சி பெருசுக பேப்பரை படிச்ச மாணிக்கே இருப்பாங்க. ஒரு புள்ளி விடாம வாசிச்சிருவாங்க. அதுவும் சட்டசபை செய்தின்னா கேட்கவே வேணாம்.

“கேட்டாம் பாரு கேள்வி”ன்னு செல்லையா தாத்தா சொல்வாரு. “பதில் அதவிட பிரமாதம்யா”ம்பாரு இளந்தாடி தாத்தா. “எல்லாம் தப்புய்யா. அது மரபு கெடையாது” அப்பிடிம்பாரு தங்கய்யா தாத்தா.

ஒரு தடவை நான் கடைக்குப் போயி அப்பாகிட்ட, “யப்போ, அம்மை உங்கள சாப்பிட கூப்டாவ”ன்னேன். பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்த தங்கய்யா தாத்தாவுக்கு கோவம் வந்திருச்சி. என் காதை பிடிச்சித் திருகி, “அப்பாவாமுல்லா, அப்பா. அதுக்கு, ‘ஏலெ பிச்சக்கனி கஞ்சி குடிக்கவாலே’ன்னு கூப்பிட்டிருக்கலாம்ல. பெத்த தகப்பன, ‘அய்யா இங்க வாரும், போரும்’ மரியாதையா கூப்பிடத் தெரியல. நீயெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சி என்னாத்துக்கு?”ன்னு குமுறிட்டாரு.

ஏன்னா அவருக்கு எல்லாமே மரபுப்படி நடக்கணும். நல்லவேள இப்ப அவரு உசுரோட இல்லை. இருந்திருந்தா சட்டசபை செய்தியப் படிச்சிட்டு ரொம்பப் புலம்பியிருப்பாரு.

எனக்கு சட்டசபை மரபெல்லாம் தெரியாது. இருந்தாலும் இந்த தடவை பெருத்த ஏமாத்தம். நாலரை வருஷமா சட்டசபை கூட்டத்தொடர் ஒரு மாதிரியா நடந்திருந்தாலும், கடைசி கூட்டத்தொடர்லயாவது பூராப் பேரும் அநியாயத்துக்கு ‘பெர்பார்ம்’ பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தேன். வழக்கம் போல ஏமாத்திட்டாங்க. பாவம், சட்டசபையில பேசுறதுக்கு மேட்டரே இல்ல பாருங்க.

நம்ம கல்வித்தரத்தப் பத்தியும், கல்வி நிறுவனங்களப் பத்தியும் பேசுறதா இருந்தாலே ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு நாள் வேணும். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, சுய நிதிக் கல்லூரி, பேராசிரியர் பணி நியமனம், துணை வேந்தர் தேர்வுன்னு விலாவாரியா பேசுனா ‘புரட்சித் தலைவி அம்மா’ சொன்ன மாதிரி, 36 நாளு பேச வேண்டியது இருக்கும். ஆனா யாரும் பேசல. எதிர்க்கட்சிகளப் பேச விடலைன்னா, உங்க பாணியில மக்கள் மன்றத்துலயாவது பேசலாம்ல? பேச மாட்டாங்க. ஏன்னா, நம்ம அரசியல்வாதிகளுக்கும், அவங்களோட புரவலர்களுக்கும் கல்வி வியாபாரம்தான் மெயின் பிஸினஸே... செய்யும் தொழிலே தெய்வம். அதைப் பத்தி பேசுனா சாமி குத்தமாகிடாதா?

மருத்துவக் கல்லூரிகள்

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியில தற்கொலை பண்ணுன மாணவிக எழுதிவெச்சிருந்த கடிதாசிய பேப்பர்ல படிச்சிருப்பீங்க. ‘அடிப்படை வசதி இல்ல, கெட்ன பீசுக்கு ரசீது தர்றதில்ல, மாணவர்கள கிரிமினல்னு திட்டுறாங்க, செத்த பிறகு கூட நடத்தை சரியில்லைன்னு சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு’ன்னு அந்தப் புள்ளைக எழுதியிருக்குதுக. நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க இந்தப் பிரச்சன, அந்த காலேஜ்ல மட்டும்தாம் இருக்குன்னு? தமிழ்நாட்ல இருக்க பூரா சுய நிதிக்கல்லூரிகள்லேயும் இதே பிரச்சனை இருக்கு. இது கல்வித்துறை அதிகாரிகள்ல இருந்து அரசாங்கம் வரைக்கும் தெரிஞ்ச விஷயம்தாம். எஸ்விஎஸ் கல்லூரியப் பத்தி கலெக்டர்ல இருந்து மருத்துவ கல்வி இயக்குநரகம் வரைக்கும் மாணவர்கள் புகார் பண்ணியிருக்காங்க. ஆனா நடவடிக்கை எடுக்கல. 3 பிள்ளைக செத்தப் பிறகு, ‘சினிமா போலீஸ்’ மாதிரி கிளைமாக்ஸ்ல வந்திருக்காங்க அதிகாரிங்க. கல்லூரிகள்ல மாணவர்கள் இறந்தது புதுசும் இல்ல, உடனே இது நிற்கப் போறதும் இல்ல.

ஏன்னா, சுயநிதிக் கல்லூரிகள்ல டிசிப்பிளின்ங்கிற பேர்ல பசங்க அடிமை மாரி நடத்துறாங்க. மாணவர்களுக்குப் பிரச்சனைன்னா, ஆசிரியர்கள்தாம் நிர்வாகத்துகிட்ட பேசணும். ஆனா தனியார் சுயநிதிக் கல்லூரிகள்ல ஆசிரியர்கள் நிலைமையே கவலைக்கிடமா இருக்கு. ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டை கையில குடுத்துட்டு, தங்களோட பிரச்சினையையே பேச முடியாத வாயில்லாப் பூச்சிகளா இருக்கவங்க, மாணவர்களுக்காகப் பேச முடியுமா? அப்பிடிப் பேசி பிரச்சனையானா, எத்தனை மீடியாக்கள் அவங்களுக்காக செய்தி வெளியிடும்-? அவங்களும் தாம் காலேஜ் நடத்துறாங்களே!

செட்டப் மருத்துவமனை

மதுரையில எங்க வீட்டுப் பக்கம் ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரி இருக்கு. அடிக்கடி பிரச்சனை வந்தாலும் ‘தெறமையா’ சமாளிச்சிடுவாங்க. போன வருஷம் அரசு அனுமதியில்லாமலேயே கூடுதலா மாணவர்களைச் சேத்திட்டாங்கன்னு பிரச்சினை. பல லட்சம் டொனேஷன் குடுத்து சேர்ந்த பசங்களுக்கு, பரீட்சை நேரத்துல ஹால் டிக்கெட் வராமப் போயிருச்சி. அவங்களுக்கு எல்லாம் ஹால்டிக்கெட் வராதுன்னு நிர்வாகத்துக்கு ஏற்கெனவே தெரியும். எப்பிடியும் பரீட்சைக்கு முன்னால கூடுதல் சீட்டுக்கு அனுமதி வாங்கிடலாம்னு நினைச்சிருந்தாங்க. ‘வாங்க’ முடியாததால பிரச்சினை வெளிய வந்திடுச்சி. அப்புறம் என்ன மாணவர்களைத் திருப்திப்படுத்துறதுக்காக மருத்துவ பல்கலைக்கழத்து மேல பேருக்கு ஒரு கேஸைப் போட்டுட்டு ஜாலியா இருக்காங்க.

அதே கல்லூரியில இந்த வருஷம் வேறொரு பிரச்சனை. மூச்சுத்திணறல் வந்து மயங்கி விழுந்த ஒரு பையன், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் முன்னாடியே இறந்திட்டாம். அங்கயிருந்த டாக்டர்க ‘ஏன்யா மெடிக்கல் காலேஜ்ல இருந்து தான வர்றீங்க? அங்க பர்ஸ்ட் எய்ட் குடுக்கணும்ங்கிற அறிவு கூடவா இல்ல’ன்னு திட்டியிருக்காங்க. ‘அய்யோ சார், எங்க காலேஜ்ல டாக்டர் மட்டுமில்ல, ஆக்ஸிஜன் சிலிண்டரும் கெடையாது’ன்னு சொல்லிப் புலம்பியிருக்காங்க பசங்க. விதிப்படி எந்த மருத்துவக் கல்லூரி நடத்தினாலும் அதாடு சேர்ந்து ஆஸ்பத்திரியும் இருக்கணும். ஆனா, எத்தனை காலேஜ்ல அப்படி இருக்கு-? அதிகாரிங்க ஆய்வுக்கு வரும்போது மட்டும், ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்துல வர்ற மாதிரி வேகவேகமா ஒரு ‘ஆஸ்பத்திரி செட்’ போட்டுச் சமாளிக்கிறாங்க.

ஏழை படும் பாடு

மருத்துவ, பொறியியல் கல்லூரிகளாவது ஓரளவு வசதியா னவங்ககிட்ட கொள்ளையடிக்குது. ஆனா, நர்சிங், ஐடிஐ, லேப் டெக்னீஷியன்னு சொல்லி கோர்ஸ் ஆரம்பிக்கிறாங்க பாருங்க. அவங்களோட இலக்கு முழுக்க ஏழைங்க. அதுவும் பாவப்பட்ட கிராமப்புற ஏழைங்க.

ஏப்ரல், மே மாசம் வந்திட்டா போதும், தேர்தல் வௌம்பரம் கணக்கா ஊரெல்லாம் “நர்சிங், நர்சிங் அசிஸ்டெண்ட், லேப் டெக்னீஷியன், கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி! குறைந்த கட்டணம்! உடனடி வேலைவாய்ப்பு!”ன்னு எழுதித் தள்ளிருவாங்க. கண்ணைப் பறிக்கிற கலர்ல பிளக்ஸ் வௌம்பரம் வேற.

கடன்வாங்கி பிள்ளைகளச் சேப்பாங்க ஏழைங்க. டுட்டோரியல் காலேஜ் மாதிரி ஏதாவது மொட்டை மாடியில கூரை போட்டு வகுப்பு நடக்கும். ஒரு வழியா அந்தப் புள்ளைகளும் படிச்சி(-?) பாசும் ஆகிடுங்க. அப்புறம்தாம் தெரியும் இந்த சர்ட்டிபிகேட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்துல கூட பதிய மாட்டாங்கன்னு. இதுல வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் தொல்ல வேற.

அரசாங்கத்தையும், கல்வி வியாபாரிகளையும் மட்டும் குத்தம் சொல்லிப் பிரயோசனம் இல்ல. நம்மோட தனியார் மோகம்தாம் எல்லாத்துக்கும் மூல காரணம். நான் குடியிருக்கிற ஊரு அரசாங்க பள்ளிக்கூடத்துல என்ன குறைன்னாலும் புகார் பண்ணுற அதிகாரம் சலூன் கடை வெச்சிருக்கிற மதியழகனுக்கு இருக்குது. ஏன்னா அவரோட பிள்ளை அங்க படிக்கதால அவர கல்விக்குழு உறுப்பினரா போட்டிருக்காங்க. எல்கேஜிக்கு 1 லட்சம் நன்கொடை கொடுத்து பிள்ளைய நர்சரி ஸ்கூல்ல சேத்த நம்மால, ‘என்ன சார் ஸ்கூல் 3 மணிக்கே முடிஞ்சிடுச்சி. பையன் 5 மணிக்குத்தான் வீட்டுக்கு வாரான். ஒரு பஸ்தாம் வெச்சிருக்கீங்கள்லா-?ன்னு துணிஞ்சி கேள்வி கேட்க முடியுமா? பிள்ளைய பழி வாங்கிடுவாங்களோன்னு பயப்படுறோம். இதே பயம் மெட்ரிக் ஸ்கூல், காலேஜ்ன்னு தொடர்ந்துக்கிட்டே இருக்குது. பெத்தவங்களும் பயப்படுறோம், பசங்களும் பயந்து பயந்தே சாவுறாங்க.

வாழ்க்கைய வாழ்றதுக்கு கல்வியா? எப்பிடியாவது பயந்து நடுங்கி செத்துப் பிழைச்சாவது, பிழைக்க வழிதேடுறது கல்வியா? முதல்ல யோசிக்க வேண்டியது நாமதாம்!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

NEWS TODAY 29.01.2026