Tuesday, February 2, 2016

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்



malaimalar

பெங்களூர், பிப். 1–

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாசம்– சவுபாக்கியம்மா தம்பதி மகள் சவுமியா.

இவருக்கும் ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு திருமண வரவேற்பு விருந்து நடந்தது. மணமகன் ராஜு தனது குடும்பத்தினருடன் மிக தாமதமாக மண்டபத்துக்கு வந்தார்.

அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது அவர்கள் ரசம் கேட்டனர். ஆனால் ரசம் காலியாகி விட்டது என்று பதில் வந்தது.

உடனே மணமகன் குடும்பத்தினர் ஆவேசம் அடைந்தனர். பெண் வீட்டாரிடம் தகராறு செய்தனர். "உங்களுக்காக தனியாக உணவு எடுத்து வைத்திருந்தோம். யாரோ அதனை பரிமாறி காலி செய்து விட்டனர்" என்று எவ்வளவோ கூறி சமரசம் செய்தனர். ஆனால் மணமகன் வீட்டார் சமாதானம் அடையாமல் மண்டபத்தில் அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு சென்றனர்.

மறுநாள் அதிகாலை நலுங்கு நிகழ்ச்சிக்காக மணமகன் குடும்பத்தினரை அழைக்க அவர்களது அறைக்கு சென்றனர். ஆனால் அங்கு மணமகன் இல்லை.

தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் இரவோடு இரவாக மண்டபத்தை காலி செய்து விட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் திருமணம் நின்றது. பெற்றோர்கள் கதறி அழுதனர். மணமகள் சவுமியா தேம்பி தேம்பி அழுதார்.

இதனை கண்ட திருமண விழாவுக்கு வந்த கோவிந்த ராஜ் என்ற வாலிபர் சவுமியாவை நான் திருமணம் செய்வதாக கூறினார். இதற்கு பெரியவர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். சவுமியாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதனால் அதே முகூர்த்தத்தில் சவுமியா கழுத்தில் கோவிந்தராஜ் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள். ரசம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

வெளிப்படையாகட்டும் கல்வி நிர்வாகம்!


THE HINDU TAMIL...கருத்து பேழை

வெளிப்படையாகட்டும் கல்வி நிர்வாகம்!
கல்லூரிகள் இணையதளத்தில் எல்லா விவரங்களையும் வெளியிட வேண்டும்!

தமிழகம் நம்பிவரும் பொய்கள் பல. அவற்றில் முக்கியமானது கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது. சமீபத்தில் 1,50,000 மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 80%க்கும் மேல் எந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள் என்று தெரியவருகிறது. அறிக்கையை முழுவதுமாகப் படித்தால் சில உண்மைகள் தெரிகின்றன. மென்பொருள் சேவையைப் பொறுத்த அளவில்தான் சுமார் 20 சதவீதத்தினர் வேலைக்குத் தகுதியானவர். மென்பொருள் உற்பத்திக்கு வந்தால், இது நான்கு சதவீதத்துக்கும் கீழே வருகிறது. அடிப்படைத் தொழில்நுட்பத் துறைகளில் 10 சதவீதத்துக்கும் கீழ். கல்லூரிகள் அதிகமாக இருந்தால் கல்வித்தரமும் உயர்வாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்குத் தமிழகமும் ஒரு சான்று.

மருத்துவக் கல்வியின் நிலை என்ன?

தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் கல்வியின் நிலை இது என்றால், மருத்துவக் கல்வி இதைவிட மோசமாக இருக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அரசு நடத்தும் கல்லூரிகளையும், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரிகளையும் தவிர, மற்ற கல்லூரிகளில் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அலோபதி அல்லாத மருத்துவக் கல்லூரிகளில் நிலைமை மிகவும் மோசம். இந்தத் துறையில் பல வருடங்கள் பணி செய்துவரும் ஓர் அறிஞர் சொல்வது இது: “தொழில்நுட்பக் கல்வி இயந்திரங்களைச் சார்ந்திருக்கிறது. மாறாக, மருத்துவக் கல்லூரிக்கு உயிருள்ள மனிதர்கள் அவசியம். உயிரிழந்த உடல்கள் அவசியம். சில சித்த ஆயுர்வேதக் கல்லூரிகளில் பயின்றவர்களின் பெற்றோர்கள் என்னைச் சந்தித்தனர். 10 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையும் வருடம் இரண்டு லட்சம் ரூபாய் படிப்புக் கட்டணமாகவும் கொடுத்து தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தவர்கள். படித்து வெளிவந்தவர்களில் ஒரு நோயாளியைக்கூட நேரில் பரிசோதித்திராதவர்களே அதிகம் என்கிறார்கள். எல்லா நேராய்வு ஆவணங்களும் பொய்யாகத் தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் ஏதும் இந்தக் கல்லூரிகளில் இல்லை என்கிறார்கள்.”

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 643 கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசால் நடத்தப்படும் கல்லூரிகளைத் தவிர, மற்றவற்றில் எத்தனை கல்லூரிகள் காசு பார்ப்பதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது பல்கலைக்கழகத்துக்குத் தெரியும். அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். கண்களை மூடிக்கொண்டு விட்டால் சிலருக்குப் பல வசதிகள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால், கண்களை மூடிக்கொண்டிருந்தனர். மூன்று மாணவிகளின் - 20 வயதுகூட நிரம்பாத மாணவிகளின் - மரணத்தினால் இன்று இவர்களுக்குக் கண்களைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மிகச் சிறிய உலகம்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற ரோகித் வெமுலாவின் தற்கொலை நாடு தழுவி விவாதிக்கப்படுகிறது. தலித்துகளுக்கு நடக்கும் இழிவு களும் நாடு தழுவியது என்றாலும், இந்தியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் அவர் பயின்ற பல்கலைக்கழகமும் ஒன்று. அவருக்கு உலகம் முழுவதும் நடந்தவற்றை, நடப்பவற்றைப் பற்றிய புரிதல், தெளிவு இருந்தது. அவரது உலகம் விரிந்தது. மாறாக, தமிழ கத்தில் பலரும் கேள்விப்படாத ஒரு கிராமத்தில், மரணித்த சிறுமிகளின் உலகம் மிகவும் சிறியது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், செங்கற்களை எண்ண வேண்டாம். சிமெண்ட் மூட்டை களை எண்ண வேண்டாம். கழிப்பறைகளைக் கழுவ வேண் டாம். ஒரே அறையில் 30 பேர்களுக்கும் மேலாக தங்கள் இரவுகளைக் கழிக்க வேண்டாம். இவை அனைத்தையும் சிறுமிகள் செய்யத் தயாராக இருந்தார்கள். அவர்கள் பதிலாகக் கேட்டது ஒன்றே ஒன்று - தரமான கல்வி.

நாம் கேள்வி கேட்க வேண்டும்

கல்வியின் துணைகொண்டு தங்களது மிகச் சிறிய உலகத்தில் ஓரளவு பிரச்சினைகள் இன்றி வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் கல்லூரியில் சேர்ந்தார்கள். எல்லா அவமதிப்புகளையும் தாங்கிக்கொண்டார்கள். அரசிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் முட்டி மோதி யதில் அந்தச் சிறிய உலகம் அவர்கள் கண் முன்னா லேயே உடைந்து சிதறியபோது, வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். என்னைப் பொறுத்தவரையில், சிறிய உலகங்கள் மிகப் பெரிய உலகத்தைவிட முக்கியமானவை. சிறிய உலகங்களை நாம் கவனித்துக்கொண்டால் பெரிய உலகம் தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும்.

அவர்கள் உலகங்கள்தான் சிறியவை; மரணங்கள் சிறியவையல்ல. அவற்றை விதிவிலக்காகப் பார்ப்பதைவிட அபாயகரமானது ஏதும் இல்லை. இவர்களைப் போல தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கல்லூரிகள் என்று சொல்லப்படும் நரகக் குழிகளில் உழல்கிறார்கள். இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. காப்பாற்றுவது கடினமன்று. நாம் எல்லோரும் சேர்ந்து அரசையும் அரசியல் செய்பவர்களையும் கட்டாயப்படுத்தினால் இது நிச்சயம் நடக்கும்.

செய்ய வேண்டியவை என்ன?

முதலாவதாக, கல்லூரிகள் ஆண்டுக்கு ஒரு முறை யாவது பார்வையிடப்பட வேண்டும். அவை இப்போது நடப்பது போன்று உப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் மிக விரிவாக நடத்தப்பட வேண்டும். பார்வையிடும் பல்கலைக்கழகமோ, அரசுத் துறையோ பார்வையீடு அறிக்கைகளை முழுமையாக, மாற்றங்கள் ஏதும் இல்லாமல் தங்கள் வலைதளங்களில் அனைவரும் பார்த்தறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.

இரண்டாவதாக, கல்லூரிகள் தங்களது வலைதளங்களில் கீழ்க்கண்ட தகவல்களை வெளியிட வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும்.

* கல்லூரியில் இருக்கும் வசதிகளைப் பற்றிய தெளிவான முழுத் தகவல்.

* கல்லூரி விடுதிகளில் இருக்கும் அடிப்படை வசதிகள், குறிப்பாக சமையலறை, கழிப்பறை பற்றிய தகவல். விடுதிக்கும் கல்லூரிக்கும் இடையே உள்ள தூரம். விடுதிகளில் இருக்கும் அறைகளின் எண்ணிக்கை. கொடுக்கப்படும் உணவைப் பற்றிய தகவல். மருத்துவ வசதிகளைப் பற்றிய தகவல்.

* அரசிடம் இருந்து பெற்ற அனுமதிகளின் நகல்கள்.

* மாணவர்களின் சான்றிதழ்கள் அவர்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டன என்ற உறுதிமொழி.

* கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்களின் அட்டவணை.

* ஆசிரியர்களைப் பற்றிய முழுத் தகவல்.

* கல்லூரியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களைப் பற்றிய செய்திகள் அடங்கிய தனிப் பக்கங்கள்.

மூன்றாவதாக, நிறுவன ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கும் வரைமுறை வேண்டும். உதாரணமாக, நிறுவன ஒதுக்கீட்டு அடிப்படையில் சேரும் மாணவனிடம் ஐந்து லட்சம் ரூபாய் அதிகம் வாங்கினால், ஐந்து லட்சம் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

பங்காரம் எஸ்.வி.எஸ். கல்லூரி சிறுமிகளின் மரணத்துக்கு நாடு இன்று வரை வெடித்தெழவில்லை. காரணம், இது நகர நிகழ்வல்ல. ஏதோ ஓர் ஓரத்தில் நடந்தது. மேலாக, கல்லூரிகளின் பின்புலத்தில் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். மீடியா சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். கேள்வி கேட்டால், எதிர்க் கேள்விகள், பதில்கள் சொல்ல முடியாத கேள்விகள் கேட்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு.

இவர்கள்தான் கல்வியை மரணப் படுக்கைக்குக் கொண்டுவந்தவர்கள். கல்வியின் உயிர் காப்பாற்றப்பட வேண்டுமானால், நாம் இவர்களிடம் கூரிய கேள்விகள் கேட்க வேண்டும். தயங்காமல் கேட்க வேண்டும்.

- பி.ஏ. கிருஷ்ணன்,

‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

50 எம்பிபிஎஸ் இடங்களுடன் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளை: ஜூலையில் தொடங்க முடிவு

THE HINDU TAMIL


50 எம்பிபிஎஸ் இடங்களுடன் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளை: ஜூலையில் தொடங்க முடிவு

புதுச்சேரி பிராந்தியமான காரைக் காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி யின் கிளை வரும் ஜூலை மாதம் முதல் 50 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்படுகிறது.


ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கடந்த 1823-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் "எக்கோல் தி மெடிசின் பாண்டிச்சேரி" என்ற பெயரில் நிறுவப்பட்டது. பிரெஞ்சு இந்திய ஒப்பந்த மாறுதல் அடிப்படையில் தன்வந்திரி மருத்துவக் கல்லூரி என அழைக்கப்பட்டது. பின்னர் அந்த கல்லூரி மண்டல முதுநிலை மருத்துவக் கல்லூரியாக, மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறையால் நேரு நினைவாக, ஜிப்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது 5,500 படுக்கை களுடன், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் தென் னிந்தியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 141 இடங் கள் அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தி நிரப்பப் படுகிறது. மீதமுள்ள 9 இடங்களில் 5 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும். 4 இடங்கள் மத்திய சுகாதார அமைச்சகம் மூலம் நிரப்பப்படும்.

தற்போது புதுச்சேரி பிராந் தியத்தின் ஒரு பகுதியாக காரைக்காலில் ஜிப்மர் கிளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசு காரைக்காலில் மருத்துவக்கல்லூரி தொடங்கு வதற்கு தேவையான நிலத்தை ஜிப்மர் நிர்வாகத்துக்கு ஒதுக்கி யுள்ளது. இதற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜிப்மர் இயக்கு நர் டாக்டர் எஸ்.சி.பரிஜா கூறுகையில், “வரும் ஜூலை மாதம் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை காரைக்காலில் 50 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்கப்படுகிறது. பொதுப் பணித் துறைக்கு சொந்தமான பழைய கட்டிடங்களில் தற்காலிக மாக மருத்துவக் கல்லூரி இயங்கும். 2 ஆண்டுகளில் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு அங்கு மருத்துவக் கல்லூரி மாற்றப்படும். மருத்துவப் பயிற்சி அளிக்க காரைக்கால் அரசு மருத்துவமனை தற்போது பயன்படுத்திக் கொள்ளப்படும்” என்றார்.

புதுச்சேரிக்கு வாய்ப்பில்லை

அதே நேரத்தில் புதுச்சேரியி லுள்ள ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்களை உயர்த்த வாய்ப்பில்லை என்று ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக புதுச்சேரி பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கூறியதாவது: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுவதால் ஆண்டுதோறும் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவர்களின் தேவையை கருத்தில் கொண்டு பாரம்பரிய மருத்துவக்கல்லூரி நிறுவனங்கள் 100 இடங்கள் வரை கூடுதலாக அதிகரித்துக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடங்களை அதிகரித்துள்ளன. ஆனால், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் இடங் களின் எண்ணிக்கையை உயர்த் தவில்லை. மொத்தமுள்ள 150 இடங்களில் 40 எம்பிபிஎஸ் இடங்கள் புதுச்சேரி மாணவர் களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஜிப்மர் இடங்களை அதிகரித்தால் புதுச்சேரி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும். இடத்தை உயர்த்தாததால் இந்த வாய்ப்பு நழுவுகிறது என்று குறிப்பிட்டனர்.

ஜிப்மர் வட்டாரங்களில் கேட்டதற்கு, “நடப்பாண்டும் புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்குத்தான் சேர்க்கை நடக்கும். இடங்கள் அதிகரிக்கப்படவில்லை” என்ற னர்.

குறள் இனிது: தன் இடம்... தனி பலம்....சோம.வீரப்பன்

THE HINDU TAMIL

சோம.வீரப்பன்

சந்தன வீரப்பனை எளிதில் மறக்க முடியுமா? தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என்று மூன்று மாநில அரசுகளும் பல ஆண்டுகளாகத் தேடின, தேடின, தேடிக்கொண்டே இருந்தன! தலைக்கு ரூ.5 கோடி என அறிவித்துப் பார்த்தார்கள். தனிப்படை அமைத்தும் தவித்தார்கள். இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, நெருங்குவதற்கு ஆன செலவு சுமார் ரூ. 700 கோடிக்கும் மேல் 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்தி வந்தது.

பின்னணியை விடுங்கள். அதன் வாதப்பிரதிவாதங்களை விடுங்கள். அரசியலை விட்டே விடுங்கள். ஆனால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். வேறு மாநிலத்திற்கு, ஏன் வேறு நாட்டிற்கே தப்பிச் செல்பவர்களைக்கூட (மனது வைத்தால்) தேடிக் கண்டுபிடித்து விடும் அரசுக்கு வீரப்பனை பிடிக்க இவ்வளவு காலம் ஆனது ஏன்? காரணம் ... அவன் மறைந்திருந்த இடம் காடு. அவனைத் தேடியவர்களுக்கு தெரிந்த இடமோ நாடு. அவன் இருந்த சத்தியமங்கலம் மலைப்பகுதியும், அதன் சுற்றியுள்ள காடுகள் அத்தனையும் அத்துப்படி.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கும் போகும் பொழுது பார்த்து இருப்பீர்கள். நாம் உயரத்தில் இருக்கும் பொழுது தூரத்தில் வரும் வண்டியின் சத்தம் கூட நன்றாகக் கேட்கும். வெகு தொலைவில் உள்ள மனித நடமாட்டத்தையும் சிறு பிம்பமாகப் பார்த்து விடலாம். ஆனால் அடிவாரத்தில் இருப்பவர்களுக்கு அப்படித் தெரியாது. அது தவிர வீரப்பனுக்கு பறவைகளின் மொழி தெரியுமென்றும், விலங்குகளின் நடமாட்டத்தை வைத்தே பலவற்றை ஊகித்து விடுவானென்றும் படித்திருப்பீர்கள். உள்ளுர் வாசிகள் உதவியது தனிக்கதை.

வீரப்பனிடம் பெரிய கோட்டை இருக்கவில்லை. அரசாங்கத்திடம் இருந்ததைப் போல பல்லாயிரக்கணக்கான ஆள் பலம் இல்லை. ஆயுதங்களும் இல்லை. ஆனால் அந்த காட்டைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு விட்டான். நல்ல அரணும் மற்ற சிறப்பும் இல்லாதவரென்றாலும் எதிரியை அவர்கள் வாழும் இடத்தில் தாக்குவது கடினம் என்கிறார் வள்ளுவர்.

நண்பர்களே இதில் நாம் ஒரு நல்ல மேலாண்மைப் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். தனக்கேற்ற இடத்தில் இருப்பவனை வெளியிலிருந்து வருபவன் அதிக சக்தியுடன் வந்தாலும் வெற்றி கொள்வது கடினம் என்பது உண்மைதானே! நீங்களே சொல்லுங்கள். அல்வா என்றால் திருநெல்வேலியும் இருட்டுக்கடையும் தானே ஞாபகம் வருகின்றன. இட்லி என்றால் மதுரை, முகூர்த்தப்பட்டு என்றால் இன்றும் காஞ்சி பட்டு என்று விடாமல் படையெடுப்போரை திசை மாற்ற முடியுமா? இவர்கள் தமதாக்கிக் கொண்ட இடங்கள் அவரவர்கள் ஊர்கள் மட்டுமல்ல, தனித் தரமும், நற்பெயரும் தான். அப்படிப்பட்டவர்களை பெரும் விளம்பரங்கள், விலைக்குறைப்பு போன்றவைகளால் வெல்வது அரிது!


சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது (குறள் 499)

somaiah.veerappan@gmail.com

Monday, February 1, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 16: இளைஞர்களையும் விட்டுவைக்காத மன அழுத்தம்


Return to frontpage

டாக்டர் ஆ. காட்சன்


“உன்னால் முடியும் தம்பி, நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நம்பி” என்ற அறிவுரைகள் யாருக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்கு இலவசமாகவே கிடைக்கும்.

“உன்னைப் பெத்ததுக்கு ஒரு தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படித் தண்டமா உட்கார்ந்திருக்கியே” எனப் பல நேரங்களில் வளரிளம் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில், அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயாலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

மன அழுத்தம் ஒரு நோயா?

‘நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன்’ என்று எல்லோரும் சாதாரணமாகக் கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் நோய் (Depressive disorder) என்பது வேறு. சுமார் 10 - 15% வரையிலான வளரிளம் பருவத்தினரை இது பாதிக்கிறது. ஏதாவது மோசமான வாழ்க்கைச் சூழலாலும் இது ஏற்படலாம், எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் தானாகவும்கூட ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்துகூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள் குழந்தைகளுக்குக் கடத்தப்படும்போது வளரிளம் பருவத்தில் மன அழுத்தம் ஏற்படலாம்.

படிப்பில் உள்ள பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம், மன அழுத்த நோய் ஏற்படுவதால் படிப்பில் மந்தத்தன்மை ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது மூளை நரம்புகளில் காணப்படும் ‘செரடோனின்’ என்ற ரசாயனப் பொருள்தான். இதுதான் ஒருவரின் மன உற்சாகத்தைத் தீர்மானிக்கும் வேதிப்பொருள். எனவே, மன அழுத்தம் யாரையும் பாதிக்க வாய்ப்புண்டு.

மருத்துவக் காரணங்கள்

வாழ்க்கைச் சூழ்நிலைகள், மரபணுக்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் உடல்ரீதியான நோய்கள்கூட மன அழுத்த நோயை உண்டு பண்ணும். உதாரணமாக, தைராய்டு என்ற ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால்கூட மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் 50% பேர்வரை மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் எல்லோரும், தாங்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதில்லை.

குறிப்பாக வளரிளம் பருவத்தினருக்கு நாள்பட்ட தலைவலி, திடீரென ஏற்படும் மயக்கம் அல்லது வலிப்பு போன்ற உடல் அறிகுறிகள்கூட மன அழுத்த நோயின் அறிகுறியாக வெளிப்படலாம். பள்ளி செல்வதைப் புறக்கணித்தல், பள்ளி செல்லும் நேரம் வந்ததும் ஏற்படும் வயிற்றுவலி, வாந்திகூட இதன் அறிகுறியாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட நோய்க்கான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

அறிகுறிகள்

கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்.

# வழக்கத்துக்கு மாறான மந்தத்தன்மை.

# சுறுசுறுப்பு இல்லாமல் அதிகச் சோர்வுடன் காணப்படுவது.

# முன்பு ஆர்வமாக இருந்த எந்த விஷயத்திலும், தற்போது ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருப்பது.

# தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது.

# பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு

# காரணமே இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் எண்ணங்கள் ஏற்படுவது.

# தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.

# தான் எதற்கும் உதவாதவன், வாழத் தகுதியற்றவன் என்ற எண்ணம்.

# அதீதக் குற்ற உணர்ச்சி.

# எரிச்சல் தன்மை, கோபம்.

# படிப்பில் பின்தங்குதல், பள்ளியைப் புறக்கணித்தல்.

# காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது.

# புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்.

# அதிகக் கவனக் குறைவு, ஞாபக மறதி.

தடுப்பும் சிகிச்சையும்

# தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளியில் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.

# குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மனப் பாரங்களைப் பகிர்வது அவசியம்.

# புத்தகங்கள் வாசிப்பது, இசைக் கருவிகளை வாசிக்கப் பயிற்சி எடுக்கலாம்.

# நேரத்தைப் பகிர்ந்து செலவிடக் கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)

# வேலைகளைப் பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது. மற்றும் பெரிய வேலைகளைப் பகுதிப் பகுதியாகப் பிரித்துச் செய்வதற்குப் பழகலாம்.

# பிரச்சினைகள் எப்போதுமே நிரந்தரமானவை அல்ல, பிரச்சினைகளுக்குத் தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும்.

# பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்துப் பிடித்து, சில நொடிகளுக்குப் பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விட வேண்டும்.

# பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படும்.

# தீவிரமான மன அழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாகப் பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும்.

(அடுத்த வாரம்: வேண்டாம் விபரீத விளையாட்டு)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? 17: தற்கொலை எண்ணம் வருவது ஏன்? டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

நல்ல திடகாத்திரமான பயில்வானுக்கு வயிற்று வலி வந்தால் ‘ அவனுக்குத் தைரியம் இல்லை’ என்றோ, ‘நீ நினைச்சா வயிற்று வலியை நிறுத்திவிடலாம், முயற்சி செய்’ என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதைப்போல் மன அழுத்தமும் ஒரு நோய்தான். இது ஒரு நோய் நிலை என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், காலம் தாழ்த்துவதும் வளரிளம் பருவத்தினரை மேலும் பாதிப்பதுடன், தற்கொலைவரை இட்டுச் சென்றுவிடுகிறது.

சில நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றிய பின்னர்தான் இவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியவரும். அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரச்சினையாகத்தான் இன்னமும் இது உள்ளது. எனவே, ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மருந்துகளை உட்கொள்வது பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

தற்கொலையின் தூதன்

அப்பா திட்டியது முதல் காதல் தோல்வி வரை வளரிளம் பருவத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மன நோய்களைப் பொறுத்தவரை முதல் காரணம், மன அழுத்த நோய்தான். மன அழுத்தம் தீவிரமடையும்போது சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும்படி யாரோ காதில் பேசுவதுபோலக் குரல்களும் கேட்கும். இந்த மாயக் குரலுக்கு ‘ஹாலுசினேசன்’ (Hallucination) என்று பெயர்.

மன அழுத்த பாதிப்புகள் மட்டும் இருந்தால்கூடச் சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் இளசுகள், இப்படி ஒரு குரல் பேசுவதாகச் சொல்லிவிட்டால் பேயோட்டக் கண்டிப்பாகக் கூட்டிச் சென்றுவிடுவார்கள். ஆனால், மன அழுத்தம் மோசமடையும்போது குரல் பேசுவது போன்ற பிரச்சினை ஏற்படலாம். அதேநேரம் மருந்துகள் உட்கொண்ட ஓரிரு நாட்களில் தற்கொலை எண்ணங்கள் மறைந்து, இவர்கள் பழைய மனநிலைக்கு மாறுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

தாழ்வு மனப்பான்மையா?

பல நேரம் மன அழுத்தம் என்பது, தாழ்வு மனப்பான்மைக்கு ஈடான ஒன்றாகத் தவறாகக் கருதப்படுவதும் சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்துவதற்கு முக்கியக் காரணமாகிறது. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் குணாதிசயம்தான். ஆனால், மன அழுத்தம் என்பது ஒரு நோய். தாழ்வு மனப்பான்மை என்பது மன அழுத்த நோயின் மற்ற அறிகுறிகளுடன் ஒரு அறிகுறியாக வர வாய்ப்பு இருக்கிறதே தவிர, இரண்டும் ஒன்றல்ல.

இதனால் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினர் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாகப் பெற்றோரால் கருதப்பட்டுப் பல அறிவுரைகளுக்கும், மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான சிகிச்சைகளுக்கும், சிலவேளைகளில் தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதுதான்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்ததற்குச் சொன்ன காரணம் வித்தியாசமானது. “அட்வைஸ், அட்வைஸ். ஸ்கூல் போனா டீச்சர் அட்வைஸ், வீட்டுக்கு வந்தா அப்பா அட்வைஸ், வெளியே போனா சொந்தக்காரங்க அட்வைஸ். என் மனநிலையை யாரும் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான், தற்கொலை முயற்சிக்கு அவன் சொன்ன காரணம்.

தேவை விழிப்புணர்வு

புள்ளிவிவரங்களின்படி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்குச் சமம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல, கவனத்துக்குரியதும்கூட. ஆனால், நிஜத்தில் சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற வருபவர்களுடன் ஒப்பிடும்போது, மன அழுத்தத்துக்குச் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அப்படியே வருபவர்களில் பலரும் பல மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்துச் சிகிச்சைக்கு வரும் அளவுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பது வேதனைக்குரியது.

சில நேரம், மற்றப் பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்கள்கூட இதை ஒரு நோய்நிலையாக பார்க்காமல் காலம் தாழ்த்துவது மருத்துவக் கல்வி திட்டத்தில் மனநல மருத்துவத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அதிகரிக்கவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

சமீபத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தான் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து மீண்டு வந்ததை வெளிப்படையாகக் கூறியது நல்ல எடுத்துக்காட்டு. உலகில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவதில் தற்போது முதலிடத்தில் உள்ள இதய நோயைப் பின்தள்ளிவிட்டு, 2020-ம் ஆண்டு முதல் முதலிடத்தை ஆக்கிரமிக்கப்போவது மன அழுத்த நோய் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பது அதற்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

தவறான எண்ணங்கள், ‘தவறான நம்பிக்கைகள்’

# இவர்கள் சோம்பேறிகள், பிரச்சினை களை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்.

# தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்.

# மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் மனதை உற்சாகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

# படிப்பில் ஆர்வம் இல்லாததால், வேண்டு மென்றே இப்படிச் செய்கிறார்கள்.

# பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதற் கான ஒரு வழியாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

# அவர்களுடைய குணம் சரியில்லை, மன அழுத்தத்திலிருந்து அவர் களாக முன்வந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

# மன அழுத்தத்துக்குச் சிகிச்சை இல்லை.

# மாத்திரைகள் சாப்பிட்டால் காலம் முழுக்க அதற்கு அடிமையாகி விடுவார்கள்.

மேற்கண்ட தவறான கருத்துகளைப் போல மனநல மருத்துவரிடம் சென்றால் தூங்க வைப்பதற்குத்தான் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்பதும் தவறான எண்ணமே. இதற்கான மாத்திரைகள் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, செரடோனின் என்ற வேதியல் பொருளைச் சமநிலைப்படுத்தவே கொடுக்கப் படுகிறது.

(அடுத்த வாரம்: இந்தப் பிரச்சினையும் வருமா?)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

ஆண்களிடம் பெண்கள் முதலில் கவனிப்பது என்ன?......தம்பி

Return to frontpage

ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் கேட்டால் கொஞ்சமல்ல ரொம்பவே ‘ஜெர்க்’ஆகிவிடுவீர்கள்.

நிறைய பெண்கள் ஆண்களின் காலணிகளை, ஷூக்களைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். பாலிஷ் செய்த ஷூக்களைப் போட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரே ஜோடி சாக்ஸை ஒரு வாரம் போடுபவரா நீங்கள்? என்றால் பெண்களிடமிருந்து பல கிலோ மீட்டர் விலகிச் செல்லுங்கள். ஆம், நாற்றமடிக்காத சாக்ஸை அணிந்திருக்க வேண்டும் என்று பெண்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். மால், பப் போன்ற இடங்களுக்குச் சாதாரண காலணிகளைப் போட்டு வரும் ஆண்களையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லையாம். பளபளா இடங்களில் பளபளா ஷூக்கள்தான் போட்டுவர வேண்டுமாம்.

அது மட்டுமா, உடல் துர்நாற்றம், வேர்வை நாற்றம், வாய் துர்நாற்றம் என்றாலே முகம் சுளிக்கிறார்கள். பாவம், பேருந்துகளில் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருப்பார்கள். இருந்தாலும் பெண்களுக்கு மோப்ப சக்தி அதிகம்தான், இல்லையா. ரொம்பவும் வேர்த்து வடியக் கூடாது, வேர்வையைத் துடைப்பதற்குக் கையில் எப்போதும் கர்ச்சீஃப் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கால்களைப் போலவே கைகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் பெண்கள். குறிப்பாக, அழுக்கு மியூசியமாக இருக்கும் நகங்களென்றாலே அவர்களுக்கு ரொம்பவும் அலர்ஜி.

இங்கிதமில்லாமல் ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ரோட்டில் எச்சில் துப்புவது, எக்குத்தப்பான இடங்களில் சொறிந்துகொள்வது போன்றவற்றையும் கவனித்து ஒதுக்குகிறார்கள்.

இப்படியாக சுத்தம் தொடர்பான விஷயங்கள் மட்டுமல்ல, ஆண்கள் நடந்துகொள்ளும் விதம், பாடி லாங்குவேஜ் போன்றவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஹோட்டல்களில் வெயிட்டர்களிடம் எப்படிப் பேசுகிறீர்கள், மற்றவர்களிடமும் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதையும் கவனிக்கிறார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பவரா நீங்கள், எல்லாப் பெண்களையும் பார்த்து அசடுவழிபவரா நீங்கள்? அப்படியென்றால், கடைசிவரை நீங்கள் அதையேதான் செய்துகொண்டிருக்க வேண்டும்.உங்களிடம் எந்தப் பெண்ணும் ஃப்ரெண்ட் ஆக மாட்டார்.

இங்கிதமில்லாமல் பேசினால் பிடிக்காது, பயமுறுத்தும்படி பேசினால் பிடிக்காது, ரொம்பவும் நேர்மையாக, வெளிப்படையாகக் காட்டிக்கொண்டால் பிடிக்காது, ரொம்ப நல்லவனாக இருந்தாலும் பிடிக்காது, கெட்டவனாக இருந்தாலும் பிடிக்காது, தப்புத்தப்பாக இங்கிலீஷ் பேசினால் பிடிக்காது, மோசமான ரசனைக்கும் நோ, ஆர்வக் கோளாறுக்கும் நோ, ஓவர் தன்னம்பிக்கைக்கும் நோ, ராமராஜன்மாதிரி கலர் காம்பினேஷன் டிரெஸ் போட்டாலும் நோ, முகத்தைப் பார்த்து, கண்களைப் பார்த்துப் பேச வேண்டும், கண்கள் வேறு எங்கேயும் அலைந்தால் ‘நோ’!

அப்பப்பா, மூச்சு முட்டுகிறதா?! அப்புறம் என்னதான் செய்ய வேண்டும் பாஸ் என்று பெருமூச்சுடன் கேட்கிறீர்களா? ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் இயல்புடன் இருங்கள், போதும்! இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதுதான் ஊத்திக் கொள்கிறது. கூடவே, சுத்தபத்தமாக இருங்கள். அப்போதுதான் அட்லீஸ்ட் பார்க்கவாவது செய்வார்கள்.

பெண்களெல்லாம் நம்மை அதிகம் பார்க்கவே மாட்டார்கள் என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன், இவ்வளவு தூரம் கவனித்திருக் கிறார்களே என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? பாவம் சார் நீங்கள், இன்னும் ஒரு மில்லினியம் ஆனாலும் பெண்களை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஆண்கள் எல்லாவற்றையும் பார்ப்பவர்கள், அதனால் எல்லாவற்றையும் தவறவிடுகிறார்கள். பெண்களோ குறிப்பாகப் பார்ப்பவர்கள், தேவையானவற்றை மட்டும் பார்ப்பவர்கள், பார்க்காததுபோல் பார்ப்பவர்கள்.

ஆகவே, அவர்களால் துல்லியமாக இருக்க முடிகிறது. ஆனாலும், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ‘ஆகா, பெண்களைப் புரிந்துகொண்டுவிட்டேன்’ என்று துள்ளிக் குதித்துவிட்டு ‘ஹோம் ஒர்க்’ செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களைப் பார்த்து ‘என்னா இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு’ என்றுதான் சொல்ல வேண்டும். அப்புறம் என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா? போங்க ப்ரோ, நீங்கள் நீங்களாகவே இருங்க ப்ரோ!

கொசுறாகச் சில கேள்விகள்: இதே கேள்வியைக் கிராமத்துப் பெண்களிடம் கேட்டால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? அவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?

வீடியோவுக்கான இணைப்பு: https://goo.gl/SKMzvw

NEWS TODAY 29.01.2026