Friday, March 11, 2016

பழனியில் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு டாக்டரான போலி ஆசாமிகள் கைது

மக்களை நோய்களில் இருந்து காப்பாற்றும் மருத்துவ துறையில் நுழைந்த இரு போலி மருத்துவர்கள் பழனியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என ஏமாற்றி வந்தவர்கள்.


 
 
பழனி, காவலர்பட்டியில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு, கோவையில் ஒரு தனியார் மெடிக்கல் அசோசியேசனில் டிப்ளமோ மட்டும் முடித்த செந்தில் என்பவர் தான் டாக்டர் என மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
 
ஊசி போடுவது, வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மாத்திரைகளையும் பரிந்துரை செய்து வந்துள்ளார்.
 
இதே போல் பழனி, நரிக்கல்பட்டியில் சுருளியாண்டி என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர். ஆனால் இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
 
இவர்கள் மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஊரக நலப்பணி துறை நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து இவர்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலாவுக்கு ஊரக நலப்பணிகள் துறை உத்தரவு பிறப்பித்தது.
 
இணை இயக்குனர் ரவிக்கலா நடத்திய அதிரடி சோதனையில் 2 பேரும் போலி டாக்டர்கள் என தெரியவர அவர்கள் கைது செய்யப்பட்ட்டு, அவர்களிடம் இருந்த கல்விச் சான்றுகள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

தேமுதிகவின் தனித்து போட்டி முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து.

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போடியிடும் என நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.


 
 
பல்வேறு கட்சிகள் விஜயகாந்த் தன் பக்கம் வர வேண்டும் என கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. நீண்டு நெடும் போராட்டத்துக்கு பின் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
வைகோ: தேமுதிக தனித்து போட்டியிடும் என்று மகளிர் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சியும் ஆட்சிக்கு வர கூடாது என்ற தேமுதிகவின் நிலைப்பாடு தமிழக அரசியலில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றார் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ.
 
அன்புமணி: தேமுதிக இதற்குமுன் பலமுறை மக்களுடன் தான் கூட்டணி, வேறு யாருடனும் கிடையாது என்று கூறி பின்னர் கூட்டணி வைத்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியிடுவதாக கூறினார்.
 
ஆனால் பின்னர் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருப்பாரா என்பது தான் எனது கேள்வி என்று தெரிவித்துள்ளார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.
 
தமிழிசை: தனித்து போட்டியிடுவோம் என்று விஜயகாந்த் அறிவித்தது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அவர்கள் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
எங்கள் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருந்தால் மகிழ்ந்து இருப்போம். அதே வேளையில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்ற யூகங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு ஊழல் கூட்டணிகளில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.
 
தனித்தனியாக நின்று அவரவர் பலங்களை நிரூபிப்பது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையே. கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தது வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மேலும் இந்த தேர்தல் பல சவால்களை சந்திக்க இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
 
ஜி.கே. வாசன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலன் சார்ந்து, தன் இயக்கம் நலன் சார்ந்து தனித்து போட்டி என்ற இறுதி முடிவை சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்து இருக்கிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

விஜயகாந்த் தனித்து களமிறங்க என்ன காரணம்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் என நேற்று அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி என பல கட்சிகள் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தவியாய் தவித்து வந்தன. விஜயகாந்த், திமுக அல்லது பாஜக கூட்டணிக்கு கட்டாயம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக பக்கம் தான் போவார் என அதிகம் பேசப்பட்டது.
 
ஆனால் அவர் யாருடனும் போகாமல் தனித்து களமிறங்குவோம் என விஜயகாந்த் அறிவித்தது திமுக தரப்பை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் ஏன் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் என பல தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் வலம் வருகின்றன.
 
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நடத்தப்பட்ட நேர்கணலின் போது அவர்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்கப்பட்டதாம். அதில் ஒருசிலர் திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என்றனர். பலர் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறியுள்ளனர்.
 
திமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிக சார்பில் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது, துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு, முக்கிய சில இலாக்காக்கள் போன்றவை. ஆனால் திமுக தரப்பு எதற்கும் இறங்கி வரவில்லை. தேமுதிக தரப்பில் முதலில் கேட்கப்பட்ட 104 தொகுதிகளில் 55 தொகுதிக்குதான் திமுக சம்மதித்தது. இது தேமுதிக தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தேமுதிகவின் முக்கியமான எந்த நிபந்தனைக்குமே திமுக தரப்பு இறங்கி வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் வடிவேலுவை களமிறக்கி விஜயகாந்தை கிண்டல் செய்ததையும், அதனை சன் தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பி விஜயகாந்தை அவமான படுத்தியதை பிரேமலதா இன்னமும் மறக்கவில்லையாம்.
 
கடந்த காலங்களில் விஜயகாந்துக்கு எதிராக திமுக செய்தவற்றை தேமுதிக தரப்பு இன்னமும் மறக்கவில்லை என கூறப்படுகிறது. திமுக உடன் கூட்டணி அமைக்க முதல் தடையாக இருந்தது பிரேமலதா தானாம். அவர் தான் திமுக கூட்டணியை தவிர்க்க பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
ஆனால் பாஜக தரப்பிடமும் பல கோரிக்கைகளை வைத்துள்ளது தேமுதிக தரப்பு. 150 சீட்டுகள், ராஜ்யசபா எம்.பி., பிரேமலதாவுக்கு பொறுப்பு, முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் போன்றவை அந்த கோரிக்கைகள். ஆனால் பாஜக தரப்பு இதனை ஏற்கவில்லையாம்.
 
மேலும் பாஜக உடன் கூட்டணி வைத்து அது தோல்வியில் முடிந்தால் கட்சி காணாமல் போய்விடும். திமுகவை எந்த காலத்திலும் நம்ப முடியாது என்பது பிரேமலதாவின் கருத்து. எனவே தான் தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற அதிரடி முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-reason-behind-of-the-dmdk-election-alliance-issue-116031100020_1.html

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

First Published : 11 March 2016 12:54 PM IST
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும், போலியான தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், போலியான தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்நிலையத்தில் தெரிவிக்கும்படி சுஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியரான ராகுல் பாண்டேவுக்கு, சிங்கப்பூரில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், மத்திய அமைச்சகத்திடம் இருந்து பேசுவதாகவும், சிங்கப்பூரில் இருந்து வெளியேறுமாறு மிரட்டப்பட்டதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சுஷ்மா இந்த பதிவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Thursday, March 10, 2016

சில்லறை பிரச்சினைக்கு தீர்வு: மாணவர்களின் அசத்தல் 'ஆப்' முயற்சி

Return to frontpage
ஆர்.சுஜாதா

இரண்டு வெவ்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், தங்கள் கல்லூரி வளாகத்தில் நிலவிய சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான செயலியை உருவாக்கியுள்ளனர்.

நான்கு வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர், சில்லறைக் காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் பே- மிண்ட் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.

ராஜத் யாதவ் மற்றும் ஷுபம் ஜிந்தால் ஆகிய இரு மாணவர்களும் ஐஐடி சென்னையில், கட்டிடவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர். கவுசிக் மற்றும் ஆசிஷ் நோயல் இருவரும் பிஐடி ராஞ்சியில், கணிப்பொறி அறிவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர்.

யாதவ் மற்றும் ஜிந்தால் ஆகியோர், ஸ்டார்ட்-அப் தொகையாக 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய, கவுசிக் மற்றும் ஆசிஷ் தொழில்நுட்ப ரீதியாக பணிபுரிந்துள்ளனர். ஐஐடி சென்னை தொழில் முனைவோர் பிரிவு இதற்கு ஆதரவளித்துள்ளது.

இந்த எண்ணம் எப்படி வந்தது?

"எங்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு முக்கியப் பிரச்சனை இருந்தது. இங்கே இருக்கும் ஏழு கடைகளிலும் எப்போதும் சில்லறை தட்டுப்பாடு இருந்தது. கடை விற்பனையாளர்கள், சில்லறைக்கு பதிலாக சாக்லேட்டுகளையும், இன்ன பிற பொருட்களையும் கொடுத்து வந்தார்கள். அதை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசித்தோம். பே- மிண்டை உருவாக்கினோம்.

இந்த ஆப்பை சாரங் விழாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் சர்வர் உள்ளிட்டவைகளில் இருந்து அனுமதி கிடைக்க தாமதமானதால், இப்போதுதான் வெளியிட முடிந்தது.

இதைப் பயன்படுத்தி வரும் மாணவர்கள் ஏராளமான கருத்துக்களைச் சொல்கின்றனர். வாரம் ஒரு முறை, நான் 600 ரூபாயை அதில் போடுகிறேன். இதில் கேஷ் பேக் வசதியும் இருக்கிறது. சில சமயங்களில் சட்டை மற்றும் பேண்ட்களில் பணம் இருக்கிறதா என்று பார்க்காமலேயே அவற்றைத் துவைத்துவிடுவேன். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. சில்லறைக்காக நீண்ட வரிசையிலும் நிற்க வேண்டியதில்லை" என்கிறார் யாதவ்.

பிப்ரவரி மத்தியில் வெளியான இந்த ஆப்பை, வளாகத்தில் இருக்கும் சுமார் 1,200 மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த வாரம் பிஐடி ராஞ்சியில் நடக்கவிருக்கும் கலாச்சார விழாவில் ஆப் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எளிய வழியில் பரிமாற்றம்

* சில்லறையைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட பே-மிண்ட் ஆப்பைத் திறங்கள்.

* கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால் போதும்.

* எவ்வளவு தொகை என்பதை உள்ளிட்டு, பரிமாற்றத்தை நடத்த முடியும்.

இப்போதைக்கு கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படும் செயலியை, விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதாகக் கூறுகின்றனர் இந்த தொழில்நுட்ப மாணவர்கள்.

பே- மிண்ட் செயலிக்கான இணைப்பு பே-மிண்ட்

எம்ஜிஆர் 100 | 18 - ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!...தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

Return to frontpage

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின், ‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’ என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.

முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.

அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து ‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’ என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.

அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி, ‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’ என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.

அந்த இளைஞர் சென்ற பிறகு, ‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’ என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து ‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’ என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.

முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம் ‘சக்கவர்த்தி திருமகள்.’ அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.

எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்

‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’

என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.

அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.

விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.

அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.

அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....

‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.

இன்று ஒரு கல்லறையின் அருகில்...


DINAMALAR


சென்னை சாந்தோமில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறை அது. உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு உன்னத ஆத்மாவின் நினைவு நாள் இன்று(08/03/2016) என்றும் நீங்காத ராகங்களை மனதினுள் இசைத்துக்கொண்டு இருக்கும் அவரது கல்லறையில் முன் கலங்கிய கண்களுடன் நிற்கிறேன்அவரது கல்லறை பறவைகளின் எச்சங்கள் பட்டும், நுாலாம்படை சூழ்ந்தும், துாசு படிந்தும் மாசு நிறைந்தும் காணப்பட்டது

இப்போது கண்களுடன் சேர்ந்து மனமும் கலங்கியது

அந்தக் கல்லறைக்கு சொந்தக்காரர் நடிகர் சந்திரபாபு 'நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்ட சந்திரபாபு தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர்.





'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்பவர்.

“ஜோசப் பனிமயதாஸ் ” என்னும் இயற்பெயர்கொண்ட சந்திரபாபு அவர்கள், 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் தூத்துக்குடியில் பிறந்தவர்.பின்னாளில், சந்திரபாபு எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய தந்தை ரோட்டரிக்ஸ் ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி ஆவார்.

விடுதலைப் போரில் ஈடுபட்டதன் காரணமாக ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் ரோட்டரிக்சின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. இலங்கையில் சிறிதுகாலம் மட்டுமே வாழ்ந்த அவருடைய குடும்பம், மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். பல இன்னல்களுக்குப் 1947 ஆம் ஆண்டு 'தன அமாராவதி' என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாகக் கால்பதித்தார். அதன் பிறகு தனது திறமையால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.

1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

'சபாஷ் மீனா' திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் 'புதையல்', 'சகோதரி', 'நாடோடி மன்னன்', 'குலேபகாவலி', 'நீதி', 'ராஜா', 'பாதகாணிக்கை', 'நாடோடி மன்னன்', 'கவலை இல்லாத மனிதன்', 'அடிமைப்பெண்' போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழ் திரையுலக ரசிகர்களில், 'சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை' என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும் போது அழுகிறான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னை தெரியலையா இன்னும் புரியலையா' போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

'கவலை இல்லாத மனிதன்' மற்றும் 'குமாரராஜா' போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966 ஆம் ஆண்டு 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர்.

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

அவர்வெளி உலகுக்கு கலகலப்பாக இருக்க முயன்றார். ஆனால் தனிமை அவரை மெல்ல, மெல்லத் தின்றது -கொன்றது என்பதுதான் உண்மை.

சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

கல்லறையைவிட்டு வௌியேவரும் போது பக்கத்தில் இருந்த டீகடையின் ரேடியோவில் இருந்து சந்திரபாபுவின் குரல் காற்றில் கலந்து வருகிறது...

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

இந்தப்பாடல் அவர் அவருக்காக பாடியதா அல்லது நமக்காக பாடியதா தெரியாது? ஆனால் யாருமே எட்டிப்பார்க்காத அந்த உன்னத கலைஞனின் கல்லறையை தாலாட்டிக்கொண்டு இருந்தது மட்டும் நிஜம்...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

NEWS TODAY 31.01.2026