Saturday, May 7, 2016

ஏமாற்று வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள்!

Return to frontpage
பெரும்பான்மை மக்கள் பொருளாதாரரீதியாக அடிமட்டத்தில் வாழும் ஒரு நாட்டில் இலவசங்கள், மானியங்களை மலினப் பார்வையில் பார்க்க முடியாது. என்றாலும், இலவசமாக அளிக்கப்படுபவையும் அவற்றுக்கான தேவையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளுமே இலவசங்கள் தொடர்பான கருத்துக்கு முழுமை தரும். இரு திராவிடக் கட்சிகளும் முன்பு மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள், மடிக்கணினிகள், ஏழைகள் திருமணத்துக்குத் தங்கம், விவசாயிகளுக்கு ஆடு - மாடுகள் என்று எவ்வளவோ அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு அர்த்தம் இருந்தது. டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என்று அந்த அறிவிப்புகள் மாற ஆரம்பித்தபோது, பாதை பெருமளவில் மாறியது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, ஆக்க பூர்வ அறிவிப்புகளில் கவனம் செலுத்தும்போது இரு பெரிய கட்சிகளும் மீண்டும் மக்களை மாயையில் தள்ளப் பார்க்கின்றன. அதிலும் திமுகவேனும் செல்பேசி அறிவிப்போடு நிறுத்திக்கொண்டது; அதிமுக செல்பேசி, பெண்களுக்கு மொபெட் வாங்குவதற்கு 50% மானியம் என்று வரிசை கட்டி வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட செல்பேசி இணைப்புகள் இருக்கின்றன. ட்ராய் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2013-லேயே தமிழ்நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான செல்பேசி இணைப்புகள் இருந்தன. நிலைமை இப்படியிருக்க, தமிழகத்தின் 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்பேசி அளிப்போம் எனும் அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்?

தமிழகத்தில் இன்றைய நாளில் 2 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், தனிநபர் போக்குவரத்தைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டிய ஒரு அரசு, மொபெட் வாங்க 50% மானியம் தருகிறேன் என்று மக்களின் நுகர்வைத் தூண்டிவிடுவதை எப்படிப் புரிந்துகொள்வது? தவிர, இந்தத் திட்டத்தால் பயனடையப்போகும் பயனாளிகள் யார்? ஏழை, எளியவர்களால் எப்படி 50% தொகையைச் செலுத்த முடியும்? இப்படிக் கிளப்பப்படும் நுகர்வு வெறி கடன் வாங்கும் நிலைக்குப் பல குடும்பங்களை இட்டுச் செல்லும். மாதச் செலவில் கூடுதல் பெட்ரோல் சுமையைக் கொண்டுவரும். இன்னும் என்னென்ன விளைவுகள் வரும் என்பதையெல்லாம் ஒரு அரசியல் இயக்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் பல கேள்விகளை எழுப்புகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். கடைசியில், இந்தத் திட்டத்தின் பாதகமான விளைவுகள் அனைத்தும் அதிமுக தலையில் அல்ல; பொதுமக்கள் தலையிலேயே விடியும்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு எனும் வாசகம் பெரும் நம்பிக்கையைத் தரலாம். ஆனால், அறிக்கையை விரிவாகப் படித்தால், அதில் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் தொடர்பாகத்தான் வாக்குறுதிகள் இருக்கின்றன. மேலோட்டமாகக் கவர்ந்திழுக்கும் இது போன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் காரியம் இல்லையா?

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பில் மாறுதலைச் செய்யாமல், இலவச அறிவிப்புகளை அள்ளித் தெளிப்பது மக்களின் மீதான அக்கறையின்மையைத்தான் காட்டுகிறது. இதுபோன்ற அரசியல் தந்திரங்கள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்விதத்திலும் உயர்த்தப்போவதில்லை. இலவசங்களாலும், நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளாலும் தங்களுக்குப் பயனேதும் இல்லை என்பதை அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் உணர்த்த வேண்டிய தருணம் இது!

தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதியில்லை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதியில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லாமல், ‘ரேங்க்’ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மருத்துவ கவுன்சில் ஆதரவு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில் தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘மாநில அரசுகள் தங்கள் நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதி அளிக்கலாம். ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்க கூடாது’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், ‘‘மாநில அரசுகளும் தேசிய நுழைவுத்தேர்வை ஏற்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி வருகிறார்கள். எனவே, இதுகுறித்தும் முதல்கட்ட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வை எழுத அனுமதி அளிப்பது குறித்தும் கருத்து தெரிவிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘தேசிய நுழைவுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை.

மாநில அரசுகள் தற்போது பின்பற்றி வரும் நடைமுறைப்படி, இந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படும். மத்திய அரசு பதில் தெரிவித்தபின் இதில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Thursday, May 5, 2016

‘பறக்கும் பாவை’ படத்தில் எம்.ஜி.ஆர்., காஞ்சனாவின் அசத்தும் ஆட்டம்.

எம்ஜிஆர் 100 | 58 - நடனக் கலைஞர்!


M.G.R. நடனக் காட்சிகளில் தூள் கிளப்புவார். அவரது ஆட்டத்தில் புயலின் வேகமும் தென்றலின் சுகமும் இருக்கும். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் ஆடவைப்பது அவரது ஆட்டத்தின் சிறப்பு.

‘மதுரை வீரன்’ படத்தில், ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?...’, ‘ராஜா தேசிங்கு’ படத்தில், ‘கானாங்குருவி காட்டுப் புறா...’ ஆகிய பாடல்களில் பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஆடும் நடனங்கள், ‘மன்னாதி மன்னன்’ படத்தில் பத்மினியுடன் ஆடும் போட்டி நடனம், ‘கலங்கரை விளக்கம்’ படத்தில், ‘பல்லவன் பல்லவி பாடட் டுமே…’ பாடலில் அவரது பரத நாட்டிய அபிநயங் கள், ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘பட்டத்து ராஜாவும்…’ பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாக, படங்களில் எம்.ஜி.ஆர். ஆடிய எல்லா நடனக் காட்சிகளுமே ‘டாப்’ என்று சொல்லிவிடலாம். என்றாலும், இரண்டு நடனக் காட்சிகள் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. ‘அன்பே வா’ படத்தில் ‘நாடோடி, நாடோடி…’ பாடலிலும், ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடலிலும் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய பலமே தனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கத்தோடு இருப் பதுதான். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை பத்மபிரியா, ‘‘உங்களை தாழ்த்திக் கொண்டே உயர்ந்து விடுகிறீர்கள்’’ என்று கூறுவார். இந்த வசனம் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் பொருந் தும். வழக்கம் போல, தனது இந்த அடக்க குணம் காரணமாக முதலில் ‘அன்பே வா’ படத்தின் பாடலுக்கு ஆட எம்.ஜி.ஆர். மறுத்துள்ளார்.

இயக்குநர் திருலோகசந்தரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘நாடோடி, நாடோடி… பாடலுக்கு நவீன ஆங்கில இந்திய ‘கதக்’ பாணி களில் நடன அசைவுகளை நடன இயக்குநர் சோப்ரா அமைத்துள்ளார். என் னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். யாராவது நடனக்காரப் பையனை ஆடச் சொல்லி படமாக்கிவிடுங்கள். என் ‘குளோஸ் அப்’களை அங் கங்கே சேர்த்துக் கொள்ள லாம்’’ என்றார்.

ஆனால், திருலோகசந்தருக்கு எம்.ஜி.ஆரின் திறமை தெரியும். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சொல்லும்போது உடனே மறுத்தால் மரியாதை இல்லை என்பதால் அப்போதைக்கு சரி என்றார். அவர் சொன்னபடியே, ஒரு இளைஞரை வைத்து நடனக் காட்சியில் சில ஷாட்களை எடுத்தார். அவர் மனதில் வேறொரு திட் டம் இருந்தது. பின்னர், பாடல் காட்சியை படமாக்க வேண்டிய நாள் வந்தது. திருலோகசந்தரிடம் எம்.ஜி.ஆர். ‘‘அந்த இளைஞர் ஆடிய நடனக் காட்சிகளைப் பார்க்கலாமா?’’ என்றார்.

திருலோகசந்தர் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ‘‘எடிட்டர் ஊரில் இல்லை. அந்த ஷாட்களை எங்கே வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் படமாக்கிய காட்சிகள் நினைவில் இருக்கின்றன. இப்போது உங்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுவோம்’’ என்றார்.

திருலோகசந்தரும் நடன இயக்குநர் சோப்ரா வும் கேமராமேன் மாருதி ராவும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டபடி வேலையைத் தொடங் கினர். எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஆடினார். ‘ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்..’ என்று அந்தப் பாடலில் வரும் வரியின்போது அதற்கேற்ற மூவ்மென்ட்களை ஊதித் தள்ளினார். பாடலுக்கு ஆடிய நடனக் கலைஞர்கள் உட்பட யூனிட்டில் இருந்த எல்லோரும் அசந்து போய் நின்றனர்.

பின்னர், எம்.ஜி.ஆரிடம் திருலோகசந்தர் உண் மையைக் கூறி, ‘‘இளைஞர் ஆடிய ஷாட்களை பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டு போட்டுக் காட்டினார். எம்.ஜி.ஆர். ஆடியதில் பத்தில் ஒரு பங்கு கூட அந்த இளைஞர் ஆடவில்லை என்பது தெரிய வர, திருலோகசந்தரின் தோளைத் தட்டி, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். எழுந்துவிட்டார்.

இதேபோலத்தான், ‘குடியிருந்த கோயில்’ படத் தில், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாடலுக்கும் நடனமாட முதலில் எம்.ஜி.ஆர். மறுத்தார். பாடலில் அவருடன் கூட ஆடுபவர் எல்.விஜயலட்சுமி என்ற நடிகை. மிகப்பெரிய டான்ஸர். ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சி இடம் பெற்ற பாடல் அது. ‘‘மூவ் மென்ட் தவறினால் தப்பா இல்ல ஆயிடும்’’ என்று எம்.ஜி.ஆர். தயங்கினார். ‘‘அண்ணே, உங்க திறமை எனக்குத் தெரியும். டான்ஸ் மாஸ்டர் சொல்றதை அப்படியே நீங்க ஆடணும்னு இல்லை. உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறம் தூக்கிடுவோம்’’ என்றார் இயக்குநர் கே.சங்கர்.

நடனத்துக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக ஆடி முடித்தார் எம்.ஜி.ஆர்.! இன்றும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடல் காட்சி அது. அதன் பின்னர், பல படங்களிலும் ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றாலும், எம்.ஜி.ஆரின் நடனம் போல அமையவில்லை.

‘இதயக்கனி’ படத்தில் ‘அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி...’ என்று தொடங்கும் கவிஞர் நா.காமராசனின் அருமையான பாடல். கதைப் படி, போலீஸ் அதிகாரியான எம்.ஜி.ஆர்., மாறுவேடத்தில் வில்லன் கோஷ்டியினர் இடத்துக்குச் செல்வார். அங்கு அளிக்கப்படும் விருந்தின்போதுதான் இந்தப் பாடல் காட்சி.

இந்தப் பாடலிலும் நடிகைகள் ராதா சலூஜா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆகியோருக்கு ஈடு கொடுத்து ஆடி எம்.ஜி.ஆர். அசத்தியிருப்பார். பாடல் முடிந்ததும், வில்லியாக நடிக்கும் நடிகை ராஜசுலோசனாவும் அவரது கையாளாக வரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரும் எம்.ஜி.ஆரிடம் ‘‘பிரமாதமாக ஆடினீர்கள்’’ என்று பாராட்டுவார்கள்.

அதற்கு, வில்லன் கோஷ்டியை கிண்டல் செய்யும் வகையிலும் அப்போதைய சூழலில் தனது அரசியல் எதிரிகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் எம்.ஜி.ஆர். கூறும் பதிலால் தியேட்டரே அதிரும். தனது ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட வில்லன் கோஷ்டிக்கு எம்.ஜி.ஆரின் பதில் இது...

‘‘நீங்க போட்ட ஆட்டத்தை விடவா?’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்




நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேவலமாக பேசிய காலம் இருந்தது. நடிகர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூட யோசிப்பார்கள். அதை மாற்றி நடிகர்களுக்கு மரியாதையும் சமூக அந்தஸ்தும் கிடைக்க எம்.ஜி.ஆர்.காரணமாக இருந்தார். படங்களில் பாடி, ஆடி நடிக்க மட்டுமல்ல, நடிகனுக்கு நாடாளவும் தெரியும் என்பதை முதன்முதலில் உலகுக்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.!


முந்தைய தொடர்களை வாசிக்க: எம்ஜிஆர் 100

Wednesday, May 4, 2016

மனதுக்கு இல்லை வயது

மனதுக்கு இல்லை வயது

 
அந்தப் பெரியவரை மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அழைத்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புவரை நன்றாக இருந்தவர், திடீரென்று குழப்பமாகப் பேச ஆரம்பித்து விட்டார். ஆட்களைச் சரியாக அடையாளம் தெரியவில்லை.இடம், காலக் குழப்பம் என்று தடுமாறினார். குழந்தையைப்போல ‘நாளைக்கு இட்லி சாப்பிட்டேன்’, ‘நேற்றுக்கு வீட்டுக்கு போவேன்’ என்றார். இரவானால் இந்தத் தொந்தரவுகள் அதிகமாகின்றன. யாரோ வந்திருப்பதுபோலப் பேசுகிறார். சில சமயம் எழுந்து ஓடவும் செய்தார். என்ன காரணம் என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது. அவர் நான்கு நாட்களாக மருத்துவர் ஆலோசனை இன்றி இருமல் மருந்தைக் குடித்து வந்திருக்கிறார். அதிலுள்ள ஒரு மருந்தே அவரது திடீர் குழப்பத்துக்குக் காரணம்.

பெரும்பாலும் காய்ச்சல் வந்து குழப்பத்தில் புலம்புவதை ‘ஜன்னி’ என்கிறோம். இது டெலிரியம் (Delirium) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஜன்னி காய்ச்சலில் மட்டுமன்றி வேறு சில உடல் பாதிப்புகளிலும் ஏற்படும். குறிப்பாக, வயதானவர்களுக்கு இது எளிதில் ஏற்படும்.

வயதாகும்போது மூளையில் சில ரசாயனங்கள் குறையத் தொடங்கும். குறிப்பாக, அசிட்டைல்கோலின் (Acetylcholine) என்ற ரசாயனம் வெகுவாகக் குறைந்திருக்கும். லேசான காய்ச்சல் அல்லது ரத்தத்தில் சர்க்கரை , ரத்த அழுத்தம், யூரியா, சோடியம் போன்றவை லேசாகக் கூடிக் குறைந்தால்கூட மூளையின் அசிட்டைல்கோலின் அளவு குறைந்து வயதானவர்களுக்கு தாங்க முடியாத குழப்பம் ஏற்படக்கூடும்.

குறிப்பாக, இருமல் மருந்து, தூக்க மாத்திரைகள் போன்ற சில மருந்துகளாலும் அசிட்டைல்கோலின் அளவு குறைந்து குழப்பம் ஏற்படும். இந்தக் குழப்பம் வேறு உபாதைகளுக்காக மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் முதியவர்களில் 20 முதல் 30 சதவீதம் வரை காணப்படும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகள் ஏற்பட்டவர்களின் மூளைக்குச் சரியானபடி ரத்த ஓட்டம் இல்லாததால் இந்தக் குழப்பம் அதிகம் காணப்படும்.

இவர்களுக்கு எங்கு இருக்கிறோம் என்ற குழப்பம், சம்பந்தம் இல்லாமல் பேசுவது, மறதி, யாரோ இருப்பது, பேசுவது போன்ற மாயத்தோற்றங்கள் இருப்பதால் இவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்து வருவதுண்டு.

இந்த ஜன்னியின் அறிகுறிகள் நாம் ஏற்கெனவே பார்த்த டிமென்ஷியா போலவே இருக்கும். ஆனால் டிமென்ஷியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மறதி ஏற்படும். ஜன்னி திடீரென்று ஏற்படுவது. டிமென்ஷியாவில் மூளையின் செல்கள் மரிப்பதால் நிரந்தரமான பாதிப்பு ஏற்படுகிறது. ஜன்னி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வருவதால் அது தற்காலிகமானது.

எனவே, வயதானவர்களுக்கு உடலில் ஏற்படும் சிறு பிரச்சினைகளைக்கூட அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவ ஆலோசனை இன்றி சில மருந்துகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தாக முடியும். வயதானவர்களின் உடல் சீட்டுக்கட்டால் ஆன கோபுரம் போன்றது. எங்காவது ஒரு இடத்தில் சிறு பிரச்சினை வந்தாலும் மொத்த கோபுரமும் பாதிக்கப்படும்.

எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!

‘இதயக்கனி’ படத்தின் ரிசர்வேஷன் சாதனை விளம்பரம்

எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!


M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.

பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.

1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். ‘‘இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது’’ என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், ‘‘அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது’’ என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.

அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் ‘இதயக்கனி’. 1950-களில் தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.

‘இதயக்கனி’ திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.

உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி ‘இதயக்கனி’ படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது ‘இதயக்கனி’.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ‘தி இந்து’ தமிழ் நாளித ழில், ‘உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.

கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.

திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’’ என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.

எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது.

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!

பட பூஜை ஒன்றில் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் தர் (இடது ஓரம்), நடிகை லதா, அவர் அருகே இயக்குநர் கே.சங்கர்.

எம்ஜிஆர் 100 | 56 - கேட்காமலேயே கொடுத்தவர்!

M.G.R. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான ‘அடிமைப் பெண்’ படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.
‘நல்லவன் வாழ்வான்’ படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முத லாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ‘ஷாட்’களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.
ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடித்த ‘பணத்தோட்டம்’ படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது ‘பணத்தோட்டம்’ படம்.
‘‘எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய் தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுல கில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார்’’ என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். ‘பணத்தோட்டம்’ பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , ‘‘என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கி னீர்களே? இப்போது என்ன சொல்கிறீர் கள்?’’ என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், ‘‘என்னை மன்னித்து விடுங்கள்.’’
பின்னர், ‘கலங்கரை விளக்கம்’, ‘சந்தி ரோதயம்’, ‘குடி யிருந்த கோயில்’, ‘உழைக்கும் கரங் கள்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று இரு வர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் வந் தன. தனது சொந்தத் தயா ரிப்பான ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்கும் வாய்ப்பை சங்க ருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.
சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக் கும் எந்த குறையும் வைக்காமல் தாராள மாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் ‘கோக கோலா’ வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.
‘‘ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத் தால் சிறப்பாக இருக்கும்’’ என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுக மான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனை யில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.
‘கலங்கரை விளக்கம்’ படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷ யத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட் டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.
அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்த ரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.
சங்கர் நெகிழ்ந்து கூறினார்: ‘‘மகாபார தக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’
- தொடரும்...
படங்கள் உதவி : ஞானம்
பிறருக்கு உதவும் குணமும் மொழி, இன, மாநில எல்லைகளைத் தாண்டி மக்களின் துயரைத் துடைக்க உதவும் மனப்பான்மையும் எம்.ஜி.ஆரின் உடன்பிறந்தவை. ‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக அவர் ராஜஸ்தான் சென்றபோது, அங்கு கடும் வறட்சி. மாநில அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை எம்.ஜி.ஆர். அளித்தார்.

Tuesday, May 3, 2016

நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசி போட்டு தூங்கலாமா?


கோடைக் காலம் என்பதால் எல்லோரும் தங்களுடைய காரில் ஏசி உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். கார் ஓட்டும் போது ஏசி உபயோகிப்பது தவறல்ல. ஆனால் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசி போட்டு உறங்குவது ஆபத்தில் முடிந்து விடும்.


பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசி போட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கார் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது வரும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு ஃபயர் வால், காரின் அடிப்பகுதி வழியாக காரினுள் வர வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு உள்ளே வரும் கார்பன் மோனாக்ஸைடை நாம் சுவாசிக்கும் போது நம் ரத்தத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் குறைவாகக் கிடைத்து நமக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, காரினுள் ஏசியை போட்டு தூங்க நேர்ந்தால் காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய நிலையில் வைத்து உறங்குவது நல்லது. அதாவது வெளிக்காற்று உள்ளே வந்து செல்லும் வகையில் இருந்தால் நச்சு பாதிப்பு குறையும்.

நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசி பயன்படுத்தும் போது ரீ சர்குலேஷன் மோடில் (Recirculation mode) வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தகவல் உதவி: கே. ஸ்ரீனிவாசன், உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

வாசகர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை இ-மெயில் அல்லது கடிதம் மூலம் கேட்டால் அதற்கு இதே பகுதியில் பதில் அளிக்கப்படும்.

மின்னஞ்சல்: vanigaveedhi@thehindutamil.co.in

NEWS TODAY 31.01.2026