Saturday, May 28, 2016

'சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?'- மறந்துபோன மனப்பாடக் கல்வி!

''சார்... உங்க செல்போன் நம்பர் என்ன?''
-இப்படி யாராவது  என்னிடம் கேட்டால், உடனே என்னோட செல் நம்பரை ஒப்பிக்க முடியாது. என்னோட செல் நம்பர் மட்டுமல்ல..அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள்னு நெருக்கமானவர்கள் நம்பர் கூட நினைவில் இருப்பதில்லை. ஆனால், டெலிபோன் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில், வீடு, உறவினர்கள், நண்பர்கள், அரசு அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட 200 போன் நம்பர்களை மனப்பாடம் செய்துவைத்திருந்தேன். அதில் எஸ்.டி.டி.கோடும் அத்துப்படி.

சரி! விஷயத்துக்கு வருவோம்...
இன்றைய செல்போன் எண்களை எத்தனை முறை மனப்பாடம் செய்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?
எல்லாமே டெக்னாலஜிதான், வளர்ந்துவரும் டெக்னாலஜி நமது நினைவாற்றலை படிப்படியாக குறைத்துவருகிறது. மூளை செய்யவேண்டிய இது போன்ற பணிகளை மெமரி கார்டு செய்துவிடுகிறது. நாம் போன்செய்ய வேண்டிய நபரின் பெயரை 'டச்' செய்தாலே போதும் அடுத்த நொடியில் அவருடன் பேசமுடியும்.

ஒரு வேளை போன் ரிப்பேர் ஆனாலோ, தொலைந்துபோனாலோ நமதுபாடு அம்போதான். இப்படித்தான் ஒரு முறை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு இளைஞர் வேலை சம்பந்தமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு சந்திக்க வேண்டிய நபர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனது போனில் மட்டுமே பதிவு செய்திருந்தார்.

டெல்லி ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், தான் வந்ததை நண்பருக்கு தெரிவிக்க செல்போனை எடுத்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது செல்போன் முற்றிலும் செயல் இழந்து இருந்தது. டெல்லி நண்பர்களின் தொடர்பு மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் செல்போன் எண் கூட நினைவில் இல்லை. தேவைப்படும் எண்களை அவர் துண்டு சீட்டில் கூட குறித்து வைக்கவில்லை. எல்லாமே போனில் பதிவாயிருக்கிறது என்கிற நம்பிக்கைதான்.
 
அந்த நம்பிக்கை அவரை நடுரோட்டில் அலைய விட்டது. ஏறத்தாழ பல மணிநேரம் அலைந்து திரிந்து விசாரித்து, ஒருவழியாக நண்பரின் வீட்டுக்கு சென்று சேர்ந்துள்ளார். அங்கு இவர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? நண்பரின் தொடர்பு எண்ணை துண்டுச்சீட்டில் குறித்து, பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.

இது இவருக்கான அனுபவம் என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். என்னதான் டெக்கனாலஜி நமக்கு  துணைபுரிந்தாலும் அது யோசிக்க தெரியாத ஓர் இயந்திரம்தான் என்பதை நினைவில் வைத்து, இனிமேலாவது, முக்கிய விஷயங்களை தலைமை செயலகமான நம் மூளையிலும் பதிவு செய்வோம்.

வெளிநாட்டு எம்.பி.பி.எஸ். படிப்பை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?....VIKATAN

வெளிநாடு சென்று கல்வி பெற விரும்புபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்.

எந்த வயதில் வெளிநாட்டில் படிக்கச் செல்லலாம்?

17 முதல் 21 வயது வரை உள்ளவர்கள், படிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டாம். காரணம், இந்த வயதில் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய பக்குவம் இருக்காது. மாணவர்களை வழிநடத்தக்கூடிய சரியான ஆட்களும் அங்கு இல்லை. நாம் 'தவறு’ எனச் சொல்வதை வெளிநாட்டினர் 'சரி’ என்பர். இதனால், ஏதேனும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். ஆகவே முதுநிலை அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளைப் படிப்பதற்கு ஏற்ற வயதில் வெளிநாடு செல்வதே நல்லது. 

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது நல்லதா?
வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படுவது இல்லை என்பதால், அங்கு சென்று படிப்பதில் பெரிய அளவில் பயன் இல்லை. அங்கு படித்துவிட்டு வரும் மாணவர்கள் பலர், இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical council of India) நடத்தும் தேர்வில், குறைந்த விகிதத்திலேயே தேர்ச்சி அடைகிறார்கள்.
மேலும் அத்தகைய மாணவர்களில் பலருக்கு, நோயாளிகளைக் கையாளத் தெரிவது இல்லை. அதனால், அவர்களை இங்கு குறைந்த சம்பளத்திலேயே பணியில் அமர்த்துகிறார்கள். மேலும், வெளிநாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் பல, அதற்கான தகுதிகளுடன் இருப்பதில்லை. ஆகவே, வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்கும் மோகத்தைத் தவிர்த்து, நம் நாட்டிலேயே மருத்துவப் பயிற்சி பெறுவது சிறப்பு. (இது, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மட்டும் பொருந்தும்.)

வெளிநாட்டுக் கல்லூரிகளில் பணம் செலுத்திப் படிக்கலாமா?

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி,  அவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்கின்றன. போதுமான மதிப்பெண்கள் இருந்தால் முன்னணி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிடும். அந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் உரிய சலுகையும் வழங்கப்படும். மாறாக, மதிப்பெண்கள் குறைவாக இருக்கும்போது, ஒரு மாணவருக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் எதுவும் கிடைக்காது. அடுத்தடுத்த தரத்தில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கலாம். ஆனால், கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள தரமான பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தால் படிக்கலாம். இல்லையென்றால், அங்கு சென்று கட்டணம் செலுத்திப் படிப்பது வீண்தான். 

 
SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கான தகுதிகள் என்ன?

மாணவர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்து (Scholastic Aptitude Test ) SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். இதில் SAT - 1 தேர்வை எழுத, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி போதும். கணிதம், கிரிட்டிக்கல் ரீடிங், ஆங்கிலக் கட்டுரை போன்றவையே இந்த நுழைவுத்தேர்வின் வினாக்களாக இருக்கும். இதில் தேர்வானவர்கள் SAT - 2 நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். 

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள், SAT - 2 நுழைவுத்தேர்வை எழுதலாம். தேர்வு செய்யும் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். அதாவது கணிதம், வேதியியல் என எந்தத் துறையில் சேர விருப்பமோ, அந்தத் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்வானவர்கள் வெளிநாட்டில் ஆங்கிலம், வேதியியல், உயிரியல், கணிதம், இசை, சட்டம் போன்ற நாம் தேர்வுசெய்யும் பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். இந்த இரண்டு தகுதித்தேர்வுகளிலும் தேர்வாகும் மாணவர்கள்தான், வெளிநாட்டுக்குச் சென்று படிக்க முடியும். 

SAT தேர்வு, அனைத்து மெட்ரோ நகரங்களிலும் நடைபெறும். இந்தத் தேர்வை, இ.டி.எஸ் (Educational Testing Service) என்ற அமைப்பினர் நடத்துகின்றனர். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள், இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் இலவசமாக எழுதலாம். அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான மேலதிக தகவல்களை, ets.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

-பாசுமணி, கே.அபிநயா

ஆண்களை விட ஊதியத்தில் பெண்கள் திருப்தியாக உள்ளனர்



ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் மிக திருப்திகரமாக இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் சமீபத்தில் `இ ஒய் ரிவார்ட்ஸ் 2016’ என்ற ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் அதிக நன்மைகளை அடைகிறார்கள் என தெரியவந்துள்ளது. மேலும் நான்கில் ஒரு ஊழியர் நிறுவனங் கள் வழங்கும் வெகுமதிகள் குறித்து அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில் தெரியவந்திருப்பது: ஊதியத்தை பொறுத்தவரை 66 சதவீத பெண்கள் திருப்திகரமாக உள்ளனர். தங்கள் ஊதியம் குறித்து 50 சதவீதம் ஆண்களே திருப்திகரமாக இருக்கின்றனர்.

ஆண்கள் தங்கள் ஊதியத் திலேயே கவனம் செலுத்துவ தாகவும் ஆனால் பெண்கள் ஊதியத்தோடு மற்ற சலுகை களிலும் கவனம் செலுத்து வதாகவும் தெரிவிக்கிறது.

24 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனங்கள் வழங்கும் வெகுமதி குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர். 20 சதவீத ஊழியர்கள் வெகுமதி குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளனர். 65 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனம் வழங்கும் வெகுமதி குறித்து திருப்திகரமாக இருக்கின் றனர். அதிலும் குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பிறகான ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைவாக இருக்கிறது, 30-35 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு சிறிது அதிகரிக்கிறது.

35-45 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைகிறது மேலும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வருமானம், மேனேஜர்களின் தரம் மற்றும் தலைமை பண்பு, நிறுவனத்தின் மதிப்பு, எளிதான நடைமுறைகள் ஆகிய காரணிகள்தான் வேலை செய்வதற்குரிய சிறந்த சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது என்று ஊழியர்கள் அந்த ஆய்வில் கூறியிருக்கின்றனர். மேலும் ஊழியர்கள் வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் வேலையில் முன்னேற்றத்திற்கும் முக்கியத் துவம் கொடுப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் உள்ள 12 நிறுவனங்களில் உள்ள 452 ஊழியர்கள், 128 நிறுவனர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 73 - காட்சி அமைப்பாளர்!

எம்ஜிஆர் 100 | 73 - காட்சி அமைப்பாளர்!



M.G.R. படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன. அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான். காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயா ரிப்பு. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா வீசிய அணு குண்டுகள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை உருக் குலைத்தன. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில், மனித குலத்துக்கே அச்சுறுத்த லாய் விளங்கும் அணுசக்தி பற்றிய ரகசிய குறிப்பை வில்லன் கோஷ்டியிடம் இருந்து அதே ஜப்பானிலேயே எம்.ஜி.ஆர். மீட்பதுபோல காட்சி. இதற்காகவே, எம்.ஜி.ஆருக்கு சபாஷ் போடலாம்.

முன்னதாக, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு எம்.ஜி.ஆர். செல்வார். அங்கே ‘துஸித் தானி’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான ஓட்டல். அந்த ஓட்டலில் படக்குழுவினர் தங்கியிருந் தனர். ஓட்டலின் அழகைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அங்கேயே காட்சிகளை படமாக்க முடிவு செய்தார். படம் வெளி யானது 1973-ம் ஆண்டு. அந்தக் காலகட்டத்தில், கிராமங்களை விடுங் கள்; சிறிய நகரங்களில் கூட ஓட்டல் என்றால் குண்டு பல்பின் மங்கிய ஒளியில் கால் உடைந்த ஸ்டூல்களும், ஈக்கள் மொய்க்கும் மேஜையும், நசுங்கிய டம்ளர்களும்தான் நினைவுக்கு வரும். அதைத் தகர்த்தெறிந்து இப்படியெல் லாம்கூட இருக்குமா என்று வியக்க வைத்தது ‘துஸித் தானி’ ஓட்டல்.

எம்.ஜி.ஆரைப் பார்க்க தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டா ‘துஸித் தானி’ ஓட்டலுக்கு வருவார். ஓட்டலின் முன் அறை யில் இருந்து வாயிலை பார்க்கும் கேமரா கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப் பது போலிருக் கும். மேட்டா, நேராக தன்னை சந்திப்பது போல காட்சியை எம்.ஜி.ஆர். அமைத்திருக் கலாம். ஆனால், ஓட்டலின் அழகை ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி, (போலீஸ் அதிகாரி யாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் பெயர்) ஓட்டலின் முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் நடிகை மேட்டா ஓடி வரும்படி காட்சியை அமைத்திருப்பார். அப்போது ஓட்டலின் வேலைப்பாடுகள் மிக்க விதானத்துடன் கூடிய நீளமான வராண்டாவின் அழகை ரசிக்க முடியும்.

வராண்டாவை கடந்து வெளியே சென்றால் பரந்த இடம். அங்கே நடிகை சந்திரகலாவும் நாகேஷும் இருப்பார்கள். அங்கு மேட்டாவை எம்.ஜி.ஆர். அழைத்து வருவார். இவர் கள் நான்கு பேரும் இருக்கும் இடத்துக்கு பின்னே பச்சையும் நீலமுமாய் நீரில் மின் னும் நீச்சல் குளம். அதன் எதிர்க்கரையில் பீறிட்டு அடிக்கும் நீரூற்றுகள்.

லோ ஆங்கிளில் கேமராவை வைத்து படம்பிடித்திருப்பார்கள். இந் தக் காட்சியில்தான் ஓட்டல் ‘துஸித் தானி’யின் முழு பிரம்மாண்டமும் தெரியும். சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேகூட, 14 மாடிகளைக் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடம்தான் பிரம்மாண்டம். ஒரு படத்தில் கதாநாயகன் சென்னை வருவதாக காண்பிக்கப் பட்டால் அந்த கட்டிடத் தைத்தான் காட்டுவார் கள். அதற்கே தியேட் டரில் சலசலப்பு ஏற்படும். அதைவிட பல அடுக்கு மாடி களைக் கொண்ட, பலமடங்கு பிரம்மாண்ட மான ‘துஸித் தானி’யை திரை யிலே பார்த்த மக்கள் வியப்பில் வாய் பிளந்தனர்.

அந்த அள வுக்கு கட்டிடங் களைக் கூட, மிகத் திறமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்து வதில் எம்.ஜி.ஆர். வல்லவர். அதனால் தான் அவரது படங்களில் ஒவ்வொரு ஃபிரேமையும் இன்றும் ரசிக்க முடிகிறது.

தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம். ‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும். இந்தப் பாடல் காட்சியின் சில பகுதிகள் ஒகேனக்கலில் படமாக்கப்பட்டன. பாறைகள் நிறைந்த பகுதியில் பாய்ந்து வரும் தண்ணீரின் நடுவே எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பார். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். லாங் ஷாட்டில் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைச் சுற்றி சுமார் நூறடி தொலைவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

இதைவிட இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும். இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருப்பார். காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்.

‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில், இடம்பெற்ற ‘அழகெனும் ஓவியம் இங்கே...’ பாடல் தேவகானமாய் ஒலித்து நம்மை சொக்க வைக்கும். பாடலின் ஒரு காட்சியில் கதவை மூடியபடி, நம்மை நோக்கி எம்.ஜி.ஆர். வருவார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென நம்மிடமிருந்து எதிர்திசையில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை நோக்கிச் செல்வார். அப்போதுதான் நமக்கு புரியும்; முதலில் எம்.ஜி.ஆர். நம்மை நோக்கி வந்த காட்சி, கண்ணாடி யில் தெரிந்த அவரது பிம்பம் என்று. இதில் விசேஷம் என்னவென்றால், காட்சி யைப் படமாக்கிய அதே நேரம், அந்தப் பெரிய கண்ணாடியில் கேமரா தெரியாதபடி ஆங்கிளை அமைத்திருப்பார்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்று நிச்சயம். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்...’ பாடலில் வரும் வரிகளை, எம்.ஜி.ஆர். படங்களை பார்க்கும்போது அனு பவத்தில் நாம் உணர முடியும். அந்த வரிகள்...

‘உள்ள மட்டும் அள்ளிக்கொள்ளும்

மனம் வேண்டும்,

அது சொல்லும் வண்ணம் துள்ளிச்செல்லும் உடல் வேண்டும்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.




ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘அடிமைப் பெண்’. இதற்கான விழாவில் கலந்து கொள்ள மும்பை சென்ற எம்.ஜி.ஆரிடம், ‘‘I am your fan’’ என்று கூறி பிரபல இந்தி நடிகரும் இயக்குனருமான ராஜ் கபூர் வாழ்த்தினார். ‘அடிமைப் பெண்’ கிளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். மோதும் சண்டைக் காட்சியை தன்னால் கூட அப்படி படமாக்க முடியாது என்று ராஜ் கபூர் பாராட்டினார்.

எம்ஜிஆர் 100 | 74 - குழந்தை உள்ளம்!


எம்ஜிஆர் 100 | 74 - குழந்தை உள்ளம்!

குழந்தையைக் கொஞ்சும் குழந்தை உள்ளம்.
M.G.R.இந்த நாட்டின் எதிர்காலச் செல்வங்களான குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்குச் சொல்வதோடு, தவறு செய்தாலும் அன்பால் அவர்களை திருத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது மானசீக குரு வாகக் கருதியவர்களின் திரை யுலக மேதை வி.சாந்தாராம் முக்கியமானவர். எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது, தமிழக அரசின் சார் பில் சென்னை கலைவாணர் அரங்கில் குழந்தைகள் திரைப்பட விழா கொண் டாடப்பட்டது. குழந்தைகள் படச் சங்கத் தின் தலைவராக அப்போது இருந்த சாந்தாராமும் விழாவில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கும்போது, ‘‘எனது மானசீக ஆசான் சாந்தாராம் அவர்களே!’’ என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

குழந்தைகளுக்கான படங்களின் தேவையைப் பற்றி எம்.ஜி.ஆர். அருமை யாக உரையாற்றினார். குழந்தைகள் மனதில் விபரீத எண்ணங்கள் தோன்றக் கூடாது என்றும் அதை விளக்க, தான் படித்த தமிழாக்கம் செய்யப்பட்ட வங்கமொழி சிறுகதையையும் கூறினார்.

கதையின் களம் வங்கத்திலே இந்து முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம். இரண்டு குழந்தைகள். ஒன்று இந்து, மற்றொன்று முஸ்லிம். இருவரும் நெருங்கிய நண்பர்கள். தினமும் விதவிதமாய் விளையாடி மகிழ்வார்கள். ஒருநாள் இன்று என்ன விளையாடுவது? என்று அவர்களுக்குள் விவாதம்.

‘‘அப்பா அம்மா விளையாட்டு’’ என்று யோசனை கூறியது ஒரு குழந்தை.

‘‘எத்தனை முறைதான் அதையே விளையாடுவது? அலுத்துவிட்டது’’ என்றது மற்றொரு குழந்தை.

‘‘சமையல் விளையாட்டு’’

‘‘ஊகூம், வேண்டாம்’’

பல விளையாட்டுக்களைப் பற்றி விவாதித்த பின்னர் இறுதியில் ஒரு குழந்தை கேட்டது, ‘‘கத்தி எடுத்து ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு விளையாடலாமா?’’.

அந்தக் குழந்தையின் கேள்வியோடு கதை முடிகிறது.

இந்தக் கதையை எம்.ஜி.ஆர். குறிப் பிட்டு, குழந்தைகளுக்கு முன்மாதிரி களான நாம் எப்படி ஒற்றுமையாகவும் அன்போடும் இருக்க வேண்டும் என் பதையும் நல்ல சூழலில் குழந்தைகள் வளர வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார். ‘‘குழந்தை உள்ளத்தை நன்கு அறிந்தவர்கள் அவர்களுக்கான படம் எடுக்க வேண்டும். அதற்கு சாந்தாராம் பொருத்தமானவர்’’ என்று பாராட்டினார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி. மதுரையில் திமுக பிரமுகர் ஒருவருடைய மகளின் பரத நாட்டிய அரங்கேற்றம், சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத் தில் இருந்த எம்.ஜி.ஆர்., விழாவுக்கு வருவாரா என்று சந்தேகம். இரவு ஏழு மணி ஆகியும் எம்.ஜி.ஆர். வரவில்லை. நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங் கியது. கூட்டத்தினருக்கு ஏமாற்றம்.

சற்று நேரத்தில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து விரைவாக வந்த எம்.ஜி.ஆரின் கார், விழா நடந்த பள்ளி மைதான வளாகத்துக்குள் நுழைந்தது. இரவில் வந்த சூரியனைப் போல் வெளிச்ச மனிதராய் காரில் வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட கூட்டம் ஆர்ப்பரித்தது. பெரியவர் களே உற்சாகத்தின் உச்சிக்குச் சென்றபோது, சிறுவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா? திடீரென இரண்டு சிறுவர்கள் எம்.ஜி.ஆர். வந்த காரின் ஜன்னலில் கையை விட்டு தொங்கியபடி வந்தனர். சிறிது தூரம் சென்று மேடை அருகே கார் நின்றது.

காரில் இருந்து கோபத்துடன் வேக மாக இறங்கிய எம்.ஜி.ஆரைப் பார்த்து, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்கள் ஓட முயன்றனர். அந்த சிறுவர்களின் கைகளை சடாரென பிடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவர்களை ஓங்கி அறையப்போவதுபோல கையை ஓங்கினார். ஆனால், அடிக்கவில்லை. அந்த சிறுவர்களைப் பார்த்து, ‘‘ஏன் இப்படி காரில் தொங்கிக் கொண்டு வந்தீர்கள்? கொஞ்சம் தவறி யிருந்தால் விபரீதமாகி யிருக்குமே? உங்கள் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? இனிமேல் இப்படி செய்வீர்களா?’’ என்று அதட்டலாக கேட்டுக் கொண்டிருந்த போதே பயத்தில் சிறுவர்கள் அழ ஆரம்பித்துவிட்டனர்.

அதற்குள் கூட்டம் எம்.ஜி.ஆரை சுற்றி நெருக்கியது. அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று முன்வரிசையில் அமரவைத்தனர். நாட்டிய நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர். ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமி தன் தாயின் பிடியில் இருந்து விடுபட்டு எம்.ஜி.ஆரை நோக்கி வர முயற்சித்தாள். அருகில் இருந்தவர்கள் அந்த சிறுமியை தடுத்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த சிறுமியை அருகில் அழைத்தார். வெட்கத்துடன் வந்த சிறுமியை தன் மடியில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு நாட்டியத்தை பார்த்தார். அந்த சிறுமிக்கு மகிழ்ச்சி ஒருபுறம், எல்லோ ரும் தன்னையே பார்க்கிறார்களே என்ற வெட்கம் மறுபுறம். புகைப் படங்கள் எடுக்கப்பட்டபோதும் எம்.ஜி.ஆர். மடியில் அமர்ந்தபடி வெட்கத்துடன் நகம் கடித்தபடி இருந்தாள் சிறுமி.

நிகழ்ச்சி முடிந்தபின், நாட்டியம் ஆடிய திமுக பிரமுகரின் மகளை எம்.ஜி.ஆர். பாராட்டி பரிசளித்தார். அவர் பேசும்போது, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்களின் செயலைப் பற்றிக் கூறிவிட்டு, ‘‘குழந்தைகள் அக்கறையாக கவனமுடன் வளர்க்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். கார் வந்து கொண்டிருக்கும்போதே கையை விடச் சொல்லி சத்தம்போட்டால் பதற்றத்தில் சிறுவர்கள் கையை விட்டு சக்கரத்தில் மாட்டி விபரீதம் ஆகியிருக்கும் என்பதால்தான் காரில் இருந்து இறங்கிய பின் அவர்களைக் கண்டித்ததாக தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, பயத்துடன் கூட்டத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சிரித்தபடியே அவர்களின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு புறப்பட்டார். தங்களது தவறுக்கு மன்னிப்பு கிடைத்துவிட்ட நிம்மதியும் மகிழ்ச்சியும் சிறுவர்கள் முகத்தில் மின்னியது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் இடம்பெற்ற ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்…’ என்ற அருமையான தாலாட்டுப் பாடலில் வரும் வரிகள் இவை...

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே;

பின் நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்




‘தூங்காதே தம்பி தூங்காதே…’, ‘திருடாதே பாப்பா திரு டாதே…’, ‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா…’ என்பன போன்ற, குழந்தை களுக்கு அறிவுரை சொல் லும் திரைப்படப் பாடல்கள் எம்.ஜி.ஆர். படங் களில்தான் அதிகம் இடம் பெற்றன.

பதின் பருவம் புதிர் பருவமா? - நிம்மதியான தூக்கம் எப்படிக் கிடைக்கும்?


தரமான தூக்கம் இல்லாமல் இருப்பதும் மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று பார்த்தோம். அதற்கான தீர்வு என்ன? உடல் சுகாதாரத்தைப் பேணுவது மட்டுமில்லாமல் நல்ல தூக்கம் வேண்டுமானால், அதற்குச் சில சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்:

# தூங்கும் நேரத்துக்கு நிரந்தரமான ஒரு கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தவிர, மற்ற நேரங்களில் அதில் பெரிய மாற்றம் இருக்கக் கூடாது. உதாரணமாக இரவு 10 முதல் காலை 6 மணிவரை தூங்கும் பழக்கம் இருந்தால், அதில் பெரிய மாற்றம் செய்யக்கூடாது.

# மாலை வேளைக்கு மேல் உடற்பயிற்சி, ஜிம் பயிற்சி போன்ற வற்றைச் செய்வது தூக்கத்தைப் பாதிக்கும். காலையில் செய்தால் புத்துணர்வு கிடைக்கும்.

# மாலை 6 மணிக்கு மேல் காபி, டீ, கேஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள கேஃபின் (Caffeine) என்ற வேதிப்பொருள் தூக்கத்தைக் கெடுக்கும். ஆனால், பாலில் உள்ள செரடோனின் என்ற வேதிப்பொருள் தூக்கத்தைச் சீராக்க உதவுவதால் பால் குடிப்பது நல்லது.

# மதுபானங்கள் ஆரம்பத்தில் தூங்க உதவி செய்வதுபோலத் தோன்றினாலும், நாளடைவில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

# தூக்கத்தைத் தவிர மற்ற வேலைகளுக்குப் படுக்கை அறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

# அதேபோல் படுக்கை அறை தவிர, மற்ற இடங்களில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். டி.வி. பார்த்துக்கொண்டே சோபாவில் தூங்குவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் தூங்குவது போன்றவை கூடாது.

# தூங்கச் செல்லும் முன் டி.வி., உணவு போன்ற வற்றைக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்ன தாக முடித்துக்கொள்ள வேண்டும். இரவு உணவு எளிதில் செரிக்கக்கூடியதாக இருப்பது நல்லது.

# தூங்கச் செல்லும் முன் மெல்லிய இசையைக் கேட்பது, புத்தகம் வாசிப்பது நல்லது.

# மதிய நேரத்தில் தூங்குவது இரவு தூக்கத்தின் நேரத்தைப் பகிர்ந்துகொள்வதைப் போன்றது. அதையும் தவிர்க்கலாம்.

# கடைசியாகப் படுக்கைக்குச் சென்று அரை மணி நேரம் ஆகியும் தூக்கம் வரவில்லை என்றால், மேலும் போராட வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து வேறு வேலைகள் இருந்தால் செய்து முடித்துவிட்டு, மீண்டும் தூக்க உணர்வு வந்த பின் படுக்கைக்குச் செல்லலாம்.

(அடுத்த வாரம்: இனி எல்லாம் சுகமே)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி: இனிமேல் பில் கிடையாது, எஸ்எம்எஸ் வரும்


நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவி பயன்பாட்டுக்கு வருகிறது.

ரேஷன் பொருள் விநியோகத் தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன. இதனை தடுக்கவும், பேப்பர் இல்லா பணியை ஊக்கப் படுத்தவும் புதிய கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற அந்த கருவியின் பயன்பாடு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் இந்த கருவி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த கருவியை சென்னையை சேர்ந்த ஓம்னே அகேட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் செயல்படுகிறது.

குடோனில் இருந்து குறிப்பிட்ட நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதும், இந்த கருவியில் அந்த விவரம் பதிவாகிவிடும். மேலும் ரேஷன் பொருட்கள் வந்து கொண்டிருக்கும் விவரம், வரும் வழியில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுதல் போன்ற விவரங்களும் பதிவாகும்.

எஸ்எம்எஸ் மூலம் விவரம்

இந்த கருவியில் சம்பந்தப் பட்ட நியாயவிலை கடையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளின் விவரங்களும் பதிவு செய்யப்படும். அத்துடன் குடும்ப அட்டைதாரரின் செல்பேசி, ஆதார் எண்களும் பதிவு செய்யப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும். இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விபரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் என்னென்ன பொருட்கள் வாங்காமல் பாக்கி யுள்ளது போன்ற விபரங்கள் உடனடியாக அவர்களது செல்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். பில் வழங்கப்படமாட்டாது. மேலும், இந்த கருவி மூலம் கடையின் கையிருப்பு, தினசரி விற்பனை போன்ற விவரங்களை உயரதி காரிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

குடோன்களில் சர்வர்

ஓம்னே அகேட் சிஸ்டம்ஸ் நிறுவன தூத்துக்குடி மாவட்ட மேலாளர் எஸ்.சிவசெல்வராஜன் கூறும்போது, ‘தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த கருவி தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாயவிலை கடைகளுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுவிட்டன. அதனை இயக்குவது குறித்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கருவிகளில் குடும்ப அட்டை விவரங்கள், ஆதார் எண், செல்பேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான குடும்ப அட்டைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் இந்த கருவியை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்து தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் இந்த கருவிகளின் செயல்பாட்டை கொண்டுவர திட்டமிட்டு பணி யாற்றி வருகிறோம்.

இந்த கருவி செயல்பாட்டுக்காக மாவட்டத்தில் உள்ள 9 குடோன்களிலும் சர்வர்கள் அமைத்துள்ளோம். மேலும், ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு பொறியாளரை பொறுப்பாளராக நியமித்துள்ளோம். இக்கருவி மூலம் விற்பனையாளர்களின் பணிச் சுமை குறையும். எந்த விவரங்களையும் பதிவேடுகளில் அவர்கள் பதிவு செய்ய தேவையில்லை. மொத்தத்தில் பேப்பர், பேனாவுக்கு இனி வேலை இல்லை’ என்றார் அவர்.

முறைகேடுகள் தடுக்கப்படும்

மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன் கூறும்போது, ‘மாவட் டத்தில் 4.81 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதுவரை 3.5 லட்சம் குடும்ப அட்டைகளின் விவரங்கள் கருவிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விற்பனை யாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதுவரை சோதனை அடிப்படை யில் நியாயவிலைக் கடைகளில் இந்த கருவிகள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். ஆதார் அட்டை விவரம் பதிவு செய்வதால் ஒருவரது பெயரில் ஒரு குடும்ப அட்டை மட்டுமே இருக்கும். மேலும், பொருட்கள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளும் தடுக்கப்படும்’ என்றார் அவர்.

NEWS TODAY 18.12.2025