Monday, July 18, 2016

'நர்சிங் கவுன்சலிங் கனவு நிறைவேறுமா?' -அகதிகளின் கண்ணீர் கோரிக்கை

vikatan news

நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க இருக்கிறது. 'பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி கொடுத்ததைப் போலவே, மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் அகதி மாணவர்கள் பங்கேற்பதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் இலங்கை அகதிகள்.

தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரையில், இலங்கை அகதிகளின் பிள்ளைகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர் நாகராஜின் கோரிக்கை மூலம்தான் அதற்கு விடிவு பிறந்தது. பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நாகராஜால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரத்தை முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் வழக்கறிஞர் சிவக்குமார். இதையடுத்து, பொறியியல் விண்ணப்பப் படிவத்தில் இலங்கை அகதிகளுக்கு என தனி இடத்தை உருவாக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இதனால், நாகராஜைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பொறியியல் கனவுகள் நிறைவேறின. ஆனால், மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, இந்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு உயர்கல்வி கனவுகளோடு 75-க்கும் மேற்பட்ட அகதி மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார், " தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் ஒன்றரை லட்சம் இலங்கை அகதிகள் வாழ்கின்றனர். இவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் முதல்வர். பிரதமர் மோடியை சந்தித்தபோது, ' இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பொறியியல் படிப்புகளில் அகதிகள் பங்கேற்க எவ்விதத் தடையுமில்லை. ஆனால், தற்போதுள்ள காலகட்டத்தில் பொறியியல் படிப்பை விடவும், மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்தால், நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

பொறியியல் படிப்புகளுக்கு சுமார் நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு வசதியுமில்லை. நர்சிங் பிரிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலே, அதன்மூலம் தனியார் கல்விக் கூடங்களில் அவர்கள் சேர்ந்து படிக்க முடியும். தற்போது மருத்துவக் கலந்தாய்வில் அரசுக்கான இடங்கள் பெருமளவில் நிரப்பப்பட்டுவிட்டன. வரும் நாட்களில் நர்சிங் கவுன்சலிங் நடக்க இருக்கிறது. அதற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் உயர்கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். நர்சிங் கலந்தாய்வு தொடங்குவதற்குள், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முகாம்களில் உள்ள அகதி மாணவர்கள் காத்திருக்கிறார்கள்" என்றார் கவலையோடு.

ஆந்திரா, கேரளாவில் பிளஸ் 2 முடித்துவிட்டு, தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து முடித்த அகதி மாணவர்கள், அரசின் கண்ணசைவுக்காக காத்திருக்கிறார்கள்.

'அ.தி.மு.க. பிரமுகரிடமிருந்து செத்துப் பிழைத்து வந்தேன்!' - ஒரு இன்ஸ்பெக்டரின் குமுறல்!

VIKATAN NEWS

வேலூர்: மணல் கடத்தல் லாரியை பிடிக்கப்போன சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளரை, லாரி உரிமையாளரான அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி, தனக்கு சொந்தமான கல்லூரியில் வைத்து தாக்கியதில் ஆய்வாளர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி. இவர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெருமுகை அருகே, ஒரு லாரி போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன் வேகமாக திரும்பிச் சென்றுள்ளது. அதனை தனது ஜீப்பில் விரட்டிப் பிடிக்க ஆய்வாளர் பாண்டி முயன்றுள்ளார். அந்த லாரி, பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஜி.ஜி. ஆர். பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறது.

அங்கு சென்ற காவல் துறை ஆய்வாளரை, உள்ளே விடாமல் அங்கிருந்தவர்கள் கேட்டை இழுத்துப் பூட்டி உள்ளனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளே நுழைந்த ஆய்வாளர், லாரி டிரைவரை தேடி உள்ளார். அப்போது, அங்கு வந்த கல்லூரி தலைவரும், அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகருமான ஜி.ஜி.ரவி, ஆய்வாளர் பாண்டியின் சட்டையைப் பிடித்து வெளியே போகுமாறு கூறி இருக்கிறார்.

என்ன நடந்தது என்று ஆய்வாளர் பாண்டியிடம் கேட்டோம். "நேற்று இரவு நானும் ஒரு ஏட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு லாரி எங்கள் வண்டியை பார்த்துவிட்டு பின்வாங்கி வேகமாக திரும்பிப் போனது. அந்த லாரியை சந்தேகப்பட்டு விரட்டிச் சென்றோம். அது ஒரு பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்தது. முதலில் அந்தக் கல்லூரி யாருடையது என்று எனக்கு தெரியவில்லை.

அந்த கல்லூரிக்குள் நாங்கள் நுழைந்து லாரியை தேடினோம். மணல் லோடுடன் அந்த லாரி அங்கு நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ரவி 'யாரோட லாரியை பிடிக்க வர்ற. நாங்கதான் இப்ப கவர்மெண்ட். மரியாதையா வெளிய போ, இல்லைனா இங்கயே புதைச்சுடுவேன்னு' சொல்லி என்னை தள்ளினார். அதில் என் சட்டை 'நேம் பேட்ஜ்' உடைந்துவிட்டது. ஆனாலும் நான், 'போக முடியாது, லாரியையும் டிரைவரையும் அனுப்புங்க' ன்னு சொன்னேன்.

அவர் உடனே அடியாளுங்களுக்கு குரல் கொடுத்தார். இருபது, முப்பது அடியாட்கள் கட்டை, கம்போடு கல்லூரிக்குள்ளே இருந்து வந்து என்னை சூழ்ந்து கொண்டார்கள் . நானும் ஒரு போலீசும் மட்டும் போனதால அவங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம். ஆனாலும் வாக்கி டாக்கயில ஃபோர்ஸை அனுப்பச் சொன்னேன். வேலூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் ஃபோர்ஸ் வந்ததால, நான் உயிரோட வர முடிஞ்சது. ஒரு போலீசா இருந்துக்கிட்டு இப்படிச் சொல்றது எனக்கே அசிங்கமா இருக்கு. கட்சி பேரை இப்படி தப்பா பயன்படுத்திக் கொள்ளை அடிக்கிறாங்க" என்றார் குமுறலோடு.

ஜி.ஜி.ரவி மீது ஆய்வாளர் பாண்டி அளித்த புகார் குறித்து நேற்று மாலை வரை வழக்குப் பதியவில்லை. அதன் பிறகே கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ், ஜி.ஜி.ரவி மீது போலீசார் வழக்குப் போட்டு வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, ஜி.ஜி. ரவி தரப்பினரும் பதிலுக்கு ஆய்வாளர் பாண்டி மீது, குடித்துவிட்டு கல்லூரிக்குள் வந்து தகராறு செய்ததாக புகார் அளித்து இருக்கின்றனர்.

காவல்துறை அதிகாரி ஒருவரே அ.தி.மு.க. பிரமுகரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



- அ.அச்சணந்தி

உயர் நீதிமன்றம் உத்தரவு

மனநல காரணம் கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் மறுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மனநலம் சரியில்லை என்று கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க மறுக்கக்கூடாது எனஉயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு ரேவதி, நாங்குநேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் மனைவி மற்றும் மகனுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வரதராஜன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வரதராஜன் நெல்லை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனது மனைவிக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் ஜீவனாம்சம் வழங்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு மனநலம் சரியில்லை என்று கூறி அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ரேவதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றோ, மனநலம் சரியில்லை என்றோ சாதாரண ஒரு காரணத்தை கூறி ஜீவனாம்சம் வழங்க கணவன் மறுக்கக்கூடாது.
இந்த ஒரே காரணத்துக்காக மனைவியை, கணவர் கைவிட முடியாது. மனைவி நல்ல மனநலத்துடன் இருந்தாலும் சரி, மனநலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, திருமணம் முடிந்ததுமே கணவன் தனது மனைவியை பராமரிக்க வேண்டும் என்ற நடைமுறை நீண்டகாலமாகவே உள்ளது.
மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது கணவனின் கடமை. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் நியாயமான தொகையை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். மனநலம் சரியில்லை என்பதால் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்ற திருநெல்வேலி நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர், அவரது குழந்தை ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று நாங்குநேரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும என மறக்கடிக்கப்படுகிறது. இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளான 3.1.2014 முதல் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ அறிவிப்பு

பலத்த மழை பெய்தாலும் திட்டமிட்டபடி மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 24-ம் தேதி நடக்கும்: சிபிஎஸ்இ அறிவிப்பு


பலத்த மழை பெய்தாலும் திட்ட மிட்டபடி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) வரும் 24-ம் தேதி நாடுமுழுவதும் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு நடத்துகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கேரளா மற்றும் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், திட்டமிட்டபடி தேர்வு நடக்குமா அல்லது தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 24-ம் தேதி நடக்கிறது. அப்போது பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். பலத்த மழை பெய் தாலும் தேர்வு திட்டமிட்டபடி நடை பெறும். அதனால் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முன்கூட்டியே சென்று தேர்வு மையம் எங்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வானிலை நிலவரம், போக்குவரத்து, தேர்வு மையத்தின் இடம் உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு மாணவர்கள் முன்கூட்டியே வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். வெளியூர்களை சேர்ந்த மாணவர் கள் எந்த பகுதியில் தேர்வு மையம் அமைந்திருக்கிறதோ, அந்த பகுதிக்கு முன்கூட்டியே சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத் திற்கு வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Sunday, July 17, 2016

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!


சென்னையின் சவுகார்பேட்டைக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுபவை அங்கேயிருக்கும் தெருவோர உணவுச் சந்தைகள். இவற்றை சென்னைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும், நம்ம ஊர் உணவுப் பிரியர்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு முயற்சி எடுத்திருக்கிறது ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ (Story Trails) நிறுவனம். அதன் விளைவுதான் இரண்டு மாதங்களாக அந்நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் ‘ஃபுட் டிரெயில்’ (Food Trail). அப்படியொரு சனிக்கிழமை மாலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘ஃபுட் டிரெயி’லில் கலந்துகொண்ட அனுபவம் சுவையானது மட்டுமல்ல; சுவாரஸ்யமானதும்கூட.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மின்ட் தெருவில் உள்ள சின்னக்கடை மாரியம்மன் கோயிலிலிருந்து ஏழு பேர் அடங்கிய குழுவுடன் தொடங்கியது அந்த உணவு உலா. இந்த உலாவின் ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மி ஒரு கதைசொல்லி. அதனால், எங்கள் அனைவருக்கும் முதலில் உணவின் வரலாற்றைச் சுவையாகச் சொன்னார். பின்னர்தான், உணவுகளைச் சுவைக்க அழைத்துச் சென்றார். சவுகார்பேட்டையின் தெருக்களில் எப்போதுமே மக்கள் சுறுசுறுப்பாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அந்தச் சத்தத்தில் உணவுக் கதைகளை நாம் ‘மிஸ்’ பண்ணிவிடக் கூடாது என்பதற்காக அவர் பேசுவதைக் கேட்பதற்கு ஆரம்பத்திலே நமக்கு ஒரு ‘இயர்பீஸ்’ கொடுத்துவிடுகிறார் லக்ஷ்மி.

ஜார்ஜ் டவுனின் வரலாறு, ராஜஸ்தான், குஜராத்திலிருந்து எப்படி மக்கள் இங்கே வந்து குடியேறினார்கள், சவுகார்பேட்டையின் பெயர்க் காரணம், அந்த மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றையும் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை லக்ஷ்மி கொடுத்த பின் தொடங்குகிறது உணவு உலா.

# மன்சூக்லால் மிட்டாய்வாலா

உணவு உலாவில் நாங்கள் சென்ற முதல் இடம் ‘மன்சூக்லால் மிட்டாய்வாலா’ கடை. அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார் லக்ஷ்மி. “1946-லிருந்து செயல்படும் இந்தக் கடையின் இனிப்புகள் இங்கே ரொம்பப் பிரபலம். அதுவும் இந்தக் கடையில் தயாரிக்கும் ‘துதி அல்வா’வுக்கு (சுரைக்காய் அல்வா) நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்துடன், ‘மேதி பூரி’ (வெந்தயக்கீரை தட்டை), ஷக்கர் பாரா (சர்க்கரையும் மைதாவும் கலந்து செய்யப்படும் பதார்த்தம்) போன்ற இனிப்பு வகைகளும் இந்தக் கடையின் சிறப்பு” என்று சொல்லி நமக்கு அவற்றை வாங்கித் தருகிறார் அவர்.

# நோவல்டி டீ ஹவுஸ்

அங்கிருந்து நாம் சென்ற அடுத்த கடை ‘நோவல்டி டீ ஹவுஸ்’. இந்தக் கடையின் தேநீர் சிறப்பானது. ஆனால், இந்தக் கடையில் நமக்கு ‘பாவ் பாஜி’யைப் பரிந்துரைக்கிறார் லக்ஷ்மி. உண்மையிலேயே சுவையான ‘பாவ் பாஜி’தான். நம்ம ஊருக்கு ‘பாவ் பாஜி’யும், ‘வடா பாவ்’வும் எப்படி வந்தன என்று லக்ஷ்மி சொன்ன கதையைக் கேட்டுக்கொண்டே ‘பாவ் பாஜி’யை அனைவரும் சாப்பிட்டோம். அதற்குள் குழுவிலிருந்த ஒருவர் தேநீரைச் சுவைக்க ஆசைப்பட, அதை ஆர்டர் செய்தார் லக்ஷ்மி. தேநீர் வருவதற்குள் அதன் வரலாற்றைச் சொல்லிமுடித்தார்.



# ஜெய் ஸ்ரீ வைஸ்னவாஸ்

என்னதான் குஜராத்தி, ராஜஸ்தானி உணவு என்றாலும் நம்ம ஊர் இட்லியில்லாமல் ஓர் உணவு உலா இருக்க முடியுமா? அதுவும் சாதாரண இட்லி அல்ல. ‘தட்டு இட்லி!’ ஜெய்  வைஸ்னவாஸ் கடையிலிருந்து லக்ஷ்மி அதை வாங்கிவந்தவுடன் குழுவினர் அனைவரும் உற்சாகமாகிவிட்டனர். இட்லி பொடி தூவி, நெய்யில் மிதந்த அந்தத் தட்டு இட்லியை சாம்பார், சட்னியுடன் சுவைத்த எல்லோருக்கும் அப்படியொரு திருப்தி. நாங்கள் அனைவரும் இட்லியைச் சுவைப்பதில் பிஸியாக இருந்தாலும், விடாமல் எங்களுக்கு இந்தோனேஷியாவிலிருந்து இட்லி இங்கே பயணமாகிவந்த கதையையும், மராட்டிய மன்னர் சாம்பாஜியின் பெயரை சாம்பாருக்கு வைத்ததன் பின்னணியையும் சொல்லி முடித்தார் லக்ஷ்மி.

# ஜக்துஷா

தட்டு இட்லியைச் சுவைத்தபின் நாங்கள் அடுத்துச் சென்ற இடம் ஜக்துஷா. அங்கே நாங்கள் சுவை பார்ப்பதற்காகக் காத்திருந்தன ‘முறுக்கு சாண்ட்விச்’சும் குலாப் ஜாமூனும். “இப்போது அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சாட் உணவு வகைகளில் ‘முறுக்கு சாண்ட்விச்’சுக்கு முக்கிய இடமுண்டு. ஒரு தென்னிந்தியாவின் தின்பண்டத்தை வைத்து உருவாக்கியதால் நம்ம உள்ளூர் மக்களுக்கு இது பிடித்துவிட்டது. அத்துடன், கைமுறுக்கு என்பது நம்ம மக்களின் பாரம்பரியத் தின்பண்டங்களில் ஒன்று. திருமணமாகிச் செல்லும் பெண்ணுக்குச் சீதனமாகக் கொடுக்கப்படுபவை முறுக்குகள். அவற்றின் சுற்றுகளைப் பெருமையாகக் கருதிய காலமும் உண்டு. கிட்டத்தட்டப் பதினொரு சுற்றுகள் உள்ள கைமுறுக்குகள் இருக்கின்றன” என்று அவர் முறுக்குக் கதையைச் சொல்லி முடிக்கவும், நாங்கள் முறுக்கு சாண்ட்விச்சை சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

# காக்கடா ராம்பிரசாத்

சவுகார்பேட்டைக்குச் சாப்பிடச் சென்றவர்கள் யாரும் காக்கடா ராம்பிரசாத்தில் சாப்பிடாமல் வர மாட்டார்கள். இந்தக் கடையின் சிறப்பாகச் சூடான ஜிலேபிகளும், பாதாம் பாலும் இருக்கின்றன. லக்ஷ்மி எங்களுக்கு வாங்கிவந்த பாதாம் பாலைச் சுவைப்பதற்கு வயிற்றில் இடமில்லையென்றாலும் அதை வேண்டாம் என்று யாராலும் மறுக்க முடியவில்லை. பாதாம் பாலைக் குடித்து முடித்தவுடன் உணவு உலா நிறைவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தோம்.

ஆனால், ‘பான்’ இல்லாமல் உணவு உலா முழுமையாக நிறைவுபெறாது என்று சொல்லி, பாண்டே பான் ஹவுஸ்ஸில் எங்கள் அனைவருக்கும் பான் வாங்கிக் கொடுத்தார் லக்ஷ்மி. இந்த உணவு உலாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் சுவையான உணவைச் சாப்பிட்ட திருப்தியுடன் மட்டுமல்லாமல் உணவு வரலாற்றைத் தெரிந்துகொண்ட திருப்தியுடன் விடைபெற்றுச்சென்றனர்.

இந்தச் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.1,300 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ சார்பாகச் சென்னை, மதுரை, புதுச்சேரி போன்ற நகரங்களில் பல்வேறு உலாக்கள் (‘டிரெயில்ஸ்’) நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: http://www.storytrails.in/india/


யூடியூப் பகிர்வு: சுவையான முறையில் தயாராகும் காஞ்சிபுரம் டம்ளர் இட்லி


கோயில் நகரமான காஞ்சிபுரம், அதன் நெடிதுயர்ந்த கோபுரங்களுக்காகவும், பிரமிடுகளைப் போன்ற வாயில்களைக் கொண்ட வளைவுகளுக்காகவும் அதிகமாக அறியப்படுகிறது. நல்ல விஷயம். அதே நேரத்தில் சூடான கோபுரங்களை ஸ்டீல் டம்ளர்களில் அடைத்திருப்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

புரியவில்லையா, காஞ்சிபுரத்தில் சிறப்பாகத் தயாராகும் டம்ளர் இட்லிகள்தான் அவை. கோபுரத்தின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் கோயில் இட்லிக்கும், நிஜ கோபுரத்தின் வடிவத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இந்த இட்லியைத் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 4 - 5 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் அருகில் இருக்கும் தனியார் உணவு விடுதியில் இது அன்றாட மெனுவில் இடம்பெறுகிறது. இந்த கோவில் இட்லி வேறு வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டாலும், இட்லி பொடி மற்றும் புதினா சட்னியோடுதான் அதிகம் பரிமாறப்படுகிறது.

செய்முறை

கெட்டியாக அரைக்கப்பட்ட இட்லி மாவை, ஸ்டீல் பக்கெட்டில் ஊற்றுகின்றனர். புளிப்பதற்காக அதை இரவு முழுக்கவோ அல்லது குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்கோ அப்படியே வைக்கின்றனர். வழக்கமாக அரைக்கப் பயன்படுத்தும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றோடு தயிர், சோடா உப்பு, கறிவேப்பிலை, நெய், முந்திரி ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

கவிழ்த்தி வைக்கப்பட்டுள்ள டம்ளர்களை எடுத்து அவற்றில் நெய் பூசுகின்றனர். பின்னர் தயார் நிலையிலுள்ள மாவை டம்ளர்களில் ஊற்றுகின்றனர். பின்னர் அவற்றை எடுத்து நீராவியில் வேக வைக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, மூடியைத் திறந்தால் சூடு பறக்க இட்லிகள் வெந்திருக்கின்றன. சூடான, பஞ்சு போன்ற கோபுரங்கள் தங்களைச் சாப்பிடச் சொல்லிக் காத்திருக்கின்றன. அந்த உணவு விடுதியில் தினந்தோறும் சுமார் 100 ப்ளேட் இட்லிகள் விற்பனையாகின்றன.

செய்வதைப் பார்த்தால் கடினமாகத் தோன்றுகிறதா? இருக்கலாம், ஆனால் இந்தக் காஞ்சிபுரம் இட்லியைத்தான் சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டவர்களும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். செய்வதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கண்ணுக்கும் வயிற்றுக்கும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது இந்த காஞ்சிபுரம் டம்ளர் இட்லி.

கண்ணுக்கு விருந்தாகும் காஞ்சிபுரம் இட்லியைக் காண

போலீஸிடம் ராம்குமார் வாக்குமூலம்: 'சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன்; வேறு யாருக்கும் தொடர்பில்லை' - 3 நாள் போலீஸ் காவல் முடிந்து புழல் சிறையில் அடைப்பு


Return to frontpage

சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று ராம்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட் டம் செங்கோட்டையை சேர்ந்த ராம் குமார்(24) கைது செய்யப்பட்டார்.

ராம்குமாரிடம் போலீஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. 13-ம் தேதி மாலை முதல் நேற்று மாலை வரை ராம்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 3 நாட்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. துணை ஆணையர் பெருமாள், ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயகுமார், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் தனிப்படையினர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர், அவரது கழுத்தில் உள்ள காயத்தை பரிசோதனை செய்தனர்.

நீதிபதி விசாரணை

நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் மூர் மார்க்கெட் அல்லிக்குளத்தில் செயல்படும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ராம்குமாரை போலீஸார் அழைத்து வந்தனர். நீதிபதி கோபிநாத் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி யிடம் போலீஸார் சமர்ப் பித்தனர். வாக்குமூலத்தை போலீ ஸார் வீடியோ எடுத்துள்ளனர். அதன் சிடியையும் சமர்ப்பித்தனர். பின்னர் ராம்குமாரிடம் சுமார் அரை மணி நேரம் நீதிபதி கோபிநாத் தனியாக விசாரணை நடத்தினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறை யில் ராம்குமார் அடைக்கப்பட்டார். ராம்குமாரை வருகிற 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் வாக்குமூலம்

போலீஸ் காவலில் ராம்குமாரிடம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். “எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடமும் போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். சுவாதியை பற்றிய நிறைய தகவல்கள் பிலாலுக்கு தெரிவதால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி ஏதாவது கூறியிருக்கிறாரா என்று போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

சுவாதி அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்திய லேப்டாப், பிரின்டர், செல்போன் ஆகியவற்றில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத் துக்கு போலீஸார் அனுப்பியுள்ள னர். அதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன என்பதை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. “சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து அவரது செல் போனையும் கொலையாளி எடுத்து சென்றார். எனவே, யாருக்கோ தேவையான ஒரு தகவல் சுவாதிக்கு தெரிந்துள்ளது. அதை அவர் தனது லேப்டாப்பில் வைத்து இருந்திருக்கலாம். அந்த தகவல் வெளியே தெரியாமல் இருக்க சுவாதியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு ராம்குமாரை பயன்படுத்தி இருக்கலாம்.

சுவாதியை கொலை செய்வதற்கு முன்பு 20, 21-ம் தேதிகளில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தில் ராம்குமார் ஒரு அம்பாக மட்டுமே செயல்பட்டு இருக்கிறார். அவரை எய்த வில் வேறு எங்கோ உள்ளது” என்று சிலர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்த தகவல் சமூக வலை தளங்களில் இப்போது அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...