Thursday, October 20, 2016

நன்றி குங்குமம் டாக்டர்

அவசரம் அவசியம்

நடராஜா சர்வீஸ் ப்ளீஸ்!


தொடர்ந்து பல மணிநேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய சிக்கல்கள் பற்றி சில ஆண்டுகளாக மிக அதிகமாகவே பேசிக்கொண்டிருக்கிறோம். உட்கார்ந்த இடத்திலேயே நீண்ட நேரம் வேலை செய்வதே, பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு மூல
காரணம் என்று கேள்விப்படுகிறோம்... அதற்கான மாற்று வழிகளாக அலுவலகத்திலேயே 1 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடப்பது, லிஃப்ட், எஸ்கலேட்டர்களை பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறுவது, அலுவலகத்திலேயே மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சிகள் என ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால்...

உடல் உழைப்பில்லாதவர்களால், சுகாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பாக ஆண்டுதோறும் உலக பொருளாதாரத்தில் 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகக் கணித்துள்ளனர். இவர்களின் உடல் உழைப்பின்மையால் ஏற்படும் நோய்க்கான செலவினங்கள் அரசாங்கத்துக்கு சுமையாகவும் மாறியிருக்கிறது. ‘அலுவலக டென்ஷனில் இதையெல்லாம் எங்க செய்றது’ என்று நொந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையே தவிர்ப்பவர்களும், கொறித்துக் கொண்டே டி.வி. முன் மணிக் கணக்கில் பொழுதைக் கழிப்பவர்கள் ஒரு புறம்... சில ஆயிரங்கள் கொடுத்து ஜிம்மில் சேர்ந்து, அதற்கான ஷூ, ஷார்ட்ஸ் எல்லாம் வாங்கி, ஒழுங்காக ஒருவாரம் கூட போகாமல் பாதியில் நிறுத்துபவர்கள் இன்னொரு புறம்.

இதுபோன்ற 'உடல் சார்ந்த செயல்பாடு இல்லாதவர்கள் தங்கள் பணத்தை வீணாக்குவதுடன் அரசு சுகாதார அமைப்புகளின் பொருளாதார நெருக்கடிக்கும்
காரணமாகிறார்கள்’ என நார்வே விளையாட்டு அறிவியல் பள்ளியின் ஆராய்ச்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆய்வாளரான எகுலுன்ட் கூறுகிறார்.
இவர்களுக்காக 30 நிமிட உடற்பயிற்சியை இதற்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இப்போதைய ஆய்வின்படி உடல் உழைப்பில்லாத வேலையில் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஈடாக, குறைந்தபட்சம் 60 75 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர்.

ஜிம் போக வேண்டாம், கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம். 1 மணி நேரம் முதல் ஒன்றேகால் மணிநேர வேகமான நடைப்பயிற்சி செய்தாலே போதும். என்ன? ரெடியா? உங்கள் பாக்கெட்டையும், அரசாங்கத்தின் பொருளாதாரத்தையும் காப்பாற்ற சாக்குப்போக்கு சொல்லாமல் காலையில் எழுந்து
நடக்க ஆரம்பியுங்கள்!

வந்தார்கள்... பார்த்தார்கள்... சென்றார்கள்... மல்லையா கோவா வில்லா ஏல முயற்சி தோல்வி


மும்பை: மல்லையாவின் கோவா வில்லாவை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், ஏல முயற்சி தோல்வியில் முடிந்தது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. ஆனால், மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். வழக்கிற்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இவரிடம் இருந்து கடனை வசூலிக்க, கோவா கண்டோலிம் கடற்கரையில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி கடந்த மே மாதம் பறிமுதல் செய்தது. இதில் மூன்று பெரிய பெட்ரூம், பிரமாண்ட ஹால், கைவேலைப்பாடுகள் நிறைந்த தேக்கு மரத்தில் கடைந்து உருவாக்கிய பர்னிச்சர்கள், சுற்றிலும் 20 பெராரி சொகுசு கார்கள், நீச்சல் குளம், பிரமாண்ட திரையரங்கு இந்த வில்லாவில் உள்ளன. மல்லையாவின் ஆடம்பர சொத்துக்களின் ஒன்றான இந்த வில்லாவில் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 60வது பிறந்தநாளை மல்லையா கொண்டாடினார். அதன்பிறகு 5 மாதம் கழித்து இந்த வில்லா பறிமுதல் செய்யப்பட்டது. 12,350 சதுர அடியில் உள்ள இந்த வில்லா நேற்று ஏலம் விடப்படுவதாக இருந்தது. ஆரம்ப விலையாக 85.29 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. முன்னதாக ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இந்த வில்லாவை பார்வையிட செப்டம்பர் 26, 27 தேதிகளும், அக்டோபர் 5,6 தேதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. சுமார் 6 பேர் இதை வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனால் ஏலம் எடுக்க மட்டும் யாரும் முன்வராததால், ஏல முயற்சி தோல்வியில் முடிந்தது.
6.5 லட்சம் ஏ.டி.எம்., கார்டுகளுக்கு தடை :
மோசடியை தடுக்க எஸ்.பி.ஐ., அதிரடி


மோசடியை தடுத்து நிறுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள, 6.5 லட்சம் வாடிக்கையாளர் களின், 'டெபிட் கார்டு' எனும் வங்கி பரிவர்த் தனை அட்டைகளை, பாரத ஸ்டேட் வங்கி தடை செய்துள்ளது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வங்கி வட்டாரம் கூறியதாவது: சமீபத்தில், ருமானியா நாட்டை  சேர்ந்த சிலர், இங்குள்ள ஏ.டி.எம்., மையங்களில் இருந்து,பணத்தை திருடினர்.கேரளாவில், பெண் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை, வெளிநாட்டில் இருந்த படி  யாரோ எடுத்துள்ளனர். இது போன்ற மோசடிகள் தொடர்கின்றன. மோசடி நபர்கள், நுாதன மென் பொருளை பயன்படுத்து கின்றனர்; ரகசிய எண்ணை பிரதி எடுக்கும் வகையிலான, கண்ணுக்கு தெரியாத, 'ஸ்டிக்கரை' ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஒட்டி, மோசடி செய்கின்றனர்.

எனவே, மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட காலமாக, ரகசிய எண்ணை மாற்றாமல் இருக்கும், 6.5 லட்சம் பேரின் டெபிட் கார்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அதுபற்றி அவர்களுக்கும், அவர்களது கிளைகளுக் கும் கடிதம்எழுதப் பட்டுள் ளன; அவர்களுக்கு, புதிய கார்டு விரைவில் வழங்கப்படும். எனவே, இதுவரை ரகசிய எண்ணை மாற்றாதவர்கள்,உடனடியாக மாற்ற வேண்டும். இவ்வாறு வங்கி வட்டாரம் தெரிவித்தது.

எச்சரிக்கை! :

டெபிட் கார்டு ரகசிய எண்களை மாற்றும்படி,

பெரும்பாலான தேசிய வங்கிகள், வாடிக்கை யாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளன. ஏ.டி.எம்., மையங்களிலேயே, டெபிட் கார்டு
ரகசிய எண்ணை எளிதாக மாற்றலாம் என, அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வதில்லை.
- நமது நிருபர் -
துபாய், சிங்கப்பூர், மலேஷியாவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா துவக்கம்

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம், துபாய், மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு, சிறப்பு விமான சுற்றுலா பயண திட்டங்களை அறிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., என்கிற, இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம், ரயில்கள் மூலம் சிறப்பு சுற்றுலா பயண திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது, விமானம் மூலம், வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது.
 சென்னையிலிருந்து, துபாய், அபுதாபிக்கு, நான்கு நாட்கள் சுற்றுலா: விமானம், டிச., 7ல் புறப்படும். ஒருவருக்கு, 56 ஆயிரத்து, 300 ரூபாய் கட்டணம் மலேஷியா, சிங்கப்பூர், ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கான விமானம், நவ., 26ல், புறப்படும். ஒருவருக்கு, 71 ஆயிரத்து, 900 ரூபாய் கட்டணம் இலங்கையில், ராமாயணம் மற்றும் கதிர்காமம் யாத்திரை, ஏழு நாட்கள் சுற்றுலா: விமானம், நவ., 19ல் புறப்படும். ஒருவருக்கு, 47 ஆயிரத்து, 700 ரூபாய் கட்டணம். இக்கட்டணத்தில், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, நுழைவு கட்டணம், சுற்றுலா வழிகாட்டி மற்றும் விசா அடங்கும்

 மேலும் விபரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிறப்பு பிரிவை, 90031 40681 என்ற மொபைல் எண்ணிலும், www.irctctourism.com என்ற, இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
திருமலையில் முன்பணம் வசூல் ரத்து

திருப்பதி: திருப்பதி திருமலையில், பக்தர்கள், தங்குவதற்காக 7,000 வாடகை அறைகள் உள்ளன. கவுண்டரில் முன்பணம் செலுத்தி, அறையை பெறலாம். அறையை, மூன்று நாட்கள் வரை நீட்டித்து கொள்ளலாம். அறையை திரும்ப அளிக்கும் போது, வாடகையை எடுத்து கொண்டு, முன் பணம் திரும்ப அளிக்கப்படும். பக்தர்கள், முன் பணத்தை திரும்ப பெற, அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனால், முன் பணம் வசூலிக்கும் முறையை, தேவஸ்தானம், நேற்று முதல் ரத்து செய்தது.இனிமேல், வாடகை மட்டும் செலுத்தி, அறையை பெற்று கொள்ளலாம். 24 மணி நேரத்துக்குள் அறையை காலி செய்ய வேண்டும். தரிசனம் தாமதமானால், தரிசன டிக்கெட்டை ஆதாரமாக காட்டி, அறையை நீட்டித்துக் கொள்ள வேண்டும்.

Wednesday, October 19, 2016

ஆங்கிலத்தில் பேச தெரியாத விரக்தியில் ஏரியில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,


ஆங்கிலத்தில் பேச தெரியாத விரக்தியில் ஏரியில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.


மும்பை பவாயில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் சஞ்சிவ் ஜெயின் (வயது27).


மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் மூன்று மாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சிஞ்சிவ் ஜெயினுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச தெரியாது. இதனால் அலுவலகத்தில் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமலும், அவர்களுடன் ஆங்கிலத்தில் பேச தெரியாமலும் தவித்து வந்தார். என்ஜினீயரான தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லையே என்று அவருக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது.


இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் கூறி வேதனைப்பட்டு இருக்கிறார். எனவே அவர்களும் வேலையை விட்டு விட்டு வரும்படி கூறியுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது சகோதரிக்கு போன் செய்த சஞ்சிவ் ஜெயின் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவிப்பதாகவும், தனது வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாகவும் கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதை அறிந்த குடும்பத்தினர் உடனே தானேயில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பவாய் வந்து சஞ்சய் ஜெயினை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.


இதையடுத்து பவாய் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். இந்த நிலையில், பவாய் ஏரியில் வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் சஞ்சிவ் ஜெயின் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் எனும் பகடைக்காய்: மதிப்பிழந்துபோன பெண் உழைப்பு

பா.ஜீவசுந்தரி

வீட்டுப் பணிப்பெண்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாத பத்திரிகைகள் ஏதும் உண்டா? உண்மையில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வேலைக்கு வராவிட்டாலும்கூட அந்த வீடு வீடாக இருக்காது. வீட்டுப்பணி என்பது நச்சரிக்கும் பணி; அதற்கு முடிவென்பதே இல்லை. எவ்வளவு வேலைகள் வளர்ந்தால்தான் என்ன? வீட்டு ஆண்கள் உதவிடவா போகிறார்கள்? அந்த மனமாற்றம் இன்னமும் இங்கு வராதது ஆகப் பெரும் சோகம். விதிவிலக்குகள் எங்கும் உண்டு.

வேலைக்குப் போகும் இல்லத்தரசிகளின் இமாலயப் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்பவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டும்தான். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் இவை மூன்றும் மிக அவசியமான, கடினமான பணிகள். சில வீடுகளில் தேவை கருதி சமையலுக்கும் ஆட்களை அமர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் குழந்தையைக் கவனிப்பது, முதியோரைக் கவனிப்பது போன்றவையும் இதில் அடக்கம்.

இளக்காரமான பணி

இவ்வளவு பணிகளைச் செய்யும் பணிப்பெண்ணுக்கு ‘வேலைக்காரி’என்ற ஏளனமான ஒற்றைச் சொல் தவிர்த்து என்ன மதிப்பு இருக்கிறது? ஆண்டாண்டு காலமாக நம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள் மீது எந்த மதிப்பும் இல்லாததே இதற்கு மூல காரணம். ஊதியம் ஏதுமின்றித் தங்கள் உழைப்பை அவர்கள் செலுத்திக் கொண்டேயிருப்பதால், அது மதிப்பிழந்து போகிறது. அதனால்தான் நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைக் கவனித்துக்கொண்டே ‘சும்மா’ இருப்பதாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் மனநிலையை நோக்கி ‘இல்லத்தரசிகள்’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணியைத் தாங்களே மதிக்காத பெண்களால் பணிப்பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பீடு செய்ய இயலும்? அவர்கள் கனிவோடு அணுகப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.

கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சக மாணவியைப் பார்த்து ‘நீயெல்லாம் கரிச்சட்டி கழுவத்தான் லாயக்கு’ என்று ஆசிரியப் பெருந்தகை இட்ட சாபத்தைக் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான்! கரிச்சட்டி கழுவுதல் அவ்வளவு கேவலமா?

வீட்டுப் பணிப் பெண்கள் யார்?

பெரும்பாலும் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கள். கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள். ஆண்களின் வருமானம் முழுமையாகக் குடும்பத் தேவைகளுக்குச் சென்று சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத குடும்பங்களிலிருந்து வருபவர் கள். ஏனென்றால், வந்தால் வீட்டுக்கு லாபம், இல்லையேல் நாட்டுக்கு என்று ‘டாஸ்மாக்’ கடைக்குச் சென்று சேரும்.

எளிதானதா வீட்டுப் பணி?

விடியும் முன்பே தொடங்கும் இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை. கணவன், குழந்தைகளுக்கான உணவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஆறு, ஆறரை மணிக்குக் கிளம்பினால் நாலு அல்லது ஐந்து வீடுகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குப் பிற்பகல் 2 அல்லது 3 மணிகூட ஆகலாம். பணி செய்யும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு திக்கில் இருக்கும். அதற்கான போக்குவரத்து அல்லது நடை நேரம் பணி நேரமாகக் கணக்கில் வராது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பவும் முடியாது. கொசுறாக அவர்கள் சொல்லும் வேலைகளை முடித்துவிட்டுத்தான் செல்ல முடியும். மாலையிலும் சில வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மொத்தமாக வெளியில் 14 மணிநேரம், தனது வீட்டில் ஐந்து, ஆறு மணிநேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

பணிச் சுமையை மிஞ்சும் மன வலி

தனது நேர்மையை எப்போதுமே நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மை நிலைதான் அதற்கும் காரணம்! நம்பிக்கையின்மை, எப்போதும் சந்தேகக் கண் கொண்டு அணுகுவது, வேலைக்குதான் வந்துவிட்டார்களே என்பதற்காக மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது, அவர்களுக்காகவே ‘ஸ்பெஷலாக’ தயாரித்து அளிக்கப்படும் காபி, டீ, சில வீணாய்ப்போன, எஞ்சிப்போன உணவு வகைகள், ஓயாமல் வேலைகளை ஏவிக்கொண்டே இருப்பது, விடுமுறை அளிக்க மறுப்பது இப்படிப் பல.

பிரச்சினைகளிலேயே மிகவும் சிக்கலானது, வீட்டு எஜமானர்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். பெரும்பாலும் அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், உண்மை என்ன என்பது மனசாட்சிக்குத் தெரிந்தே இருந்தாலும் எந்த வீட்டு எஜமானியும் தங்கள் வீட்டு ஆணை அது கணவனோ, மகனோ, அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் விட்டுத்தரத் தயாராக இருப்பதில்லை. இங்கும் பணிப்பெண்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவாள். அவள் வேலை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.

பணிப்பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்றால், ஒரு சிலர் கைக்கு அகப்படும் எளிய பொருட்களை எடுத்துக்கொண்டு போவது, முன்னறி விப்பின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு காலை வாரி விடுதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

எத்தனை காலத்துக்கு இந்த வேலை?

சரி, ஒரு பெண் எத்தனை காலத்துக்கு வீட்டு வேலைகளைச் செய்து பிழைக்க முடியும்? மேலும் அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளால் ஏற்படும் உடல் பாதிப்புக்கு யார் பாதுகாப்பு? அனைத்து விதமான துணிகளையும் சலவை இயந்திரத்தில் துவைத்துவிட முடியாது. கால் மிதி, குழந்தைகளின் துணிகள், பள்ளிச் சீருடை, அதிலும் குறிப்பாக வெள்ளைத் துணிகள், சாக்ஸ் போன்றவை இவர்களின் ‘கைவண்ண’த்துக்காகவே காத்திருக்கும்.

சோப்புத் தூள், சோப்புக் கட்டிகள், பாத்திரம் துலக்கும் பவுடர், சோப்பு, சோப்பு நீர்க் கரைசல்கள் போன்ற வேதியியல் பொருட்களை நாள் முழுவதும் கையாள்வதால் அவை கைகளைப் பதம் பார்க்கின்றன. கைகள் எப்போதும் ஈரத்தில் ஊறியபடி இருப்பதால் எந்த நேரமும் வலி இருக்கிறது. சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுகிறது. இவ்வளவு கடினமான பணிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கேற்ப நல்ல சத்துள்ள உணவும் வேண்டுமல்லவா? அது இல்லாததனால் உடல்ரீதியாகவும் தளர்ந்து போகிறார்கள்.

எல்லா வீட்டிலும் எல்லா வேலைகளையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஏதாவது ஒரு வேலையை மட்டும் ஒவ்வொரு வீட்டில் ஏற்பது என்ற நிலையும் இருக்கிறது. அப்படியானால் எந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம்? வீட்டுப் பணிப்பெண்களுக்கான அமைப்புகள் இருந்தபோதும் அனைவரும் அதில் பங்கேற்பதில்லை. எத்தனையோ முறைசாராத் தொழில்களுக்கு அரசே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கிறது. அவர்களுக்கு வாரியம் அமைக்கிறது. ஈ.எஸ்.ஐ., காப்பீடு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பணிப்பெண்களுக்கு இது எதுவும் இல்லை. ஊதியத்தைப் பொறுத்தவரை குத்துமதிப்பாக ஏதோ கொடுக்கப்படுகிறது.

நடப்பிலுள்ள இந்த நிலையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பணிப்பெண் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார். அவர்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை இருக்கிறது.

கொசுறு



கடந்த 2009-ம் ஆண்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்றை அரசு நியமித்தது. வேலை செய்யக்கூடிய நகரங்களுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ. 25/- முதல் ரூ. 30/- வரை ஊதியமாக நிர்ணயிக்கலாம் என்று அந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், அரசு அதைச் செயல்படுத்தவில்லை. இப்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50/- ஊதியமாக அளிக்கப்பட வேண்டுமென்று தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்திருப்பதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வருமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

NEWS TODAY 25.12.2025